Chat Meet - Aruna Srinivasan
திசைகள் இணைய இதழின் நிர்வாக ஆசிரியர் அருணா ஸ்ரீனிவாசன்:
1. வலைப்பதிவர் பத்திரிகையாளராக என்ன முயற்சிகளை எப்படி எடுக்க வேண்டும்? டிப்ஸ் கொடுங்களேன்...
முதல் தேவை - ஆர்வம். ஆர்வம்; மேலும் ஆர்வம்; எண்ணம் முழுவதும் அதில் லயிக்கும் ஆர்வம் - passion.
அடுத்து, அந்த ஆர்வத்தை வகைப்படுத்துவது அல்லது குறிப்பாக என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது. எழுதுவது என்பதில் பலருக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால் சந்தைக்காக / பணம் ஈட்ட அல்லது தொழிலாக எழுத ஆசையா? ஏதாவது குறிகோளுக்காக எழுத ஆசையா? மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ள ஆசையா? எழுதி பெயர் / புகழ் பெற ஆசையா? .... என்று இப்படி ஏராளமாக எழுதும் ஆர்வத்தை வகைப்படுத்திக்கொண்டே போகலாம்.
ஏன் எழுதுகிறோம்? என்பதை நமக்குள் நாமே அடையாளம் கண்டுகொள்ளப் பழக வேண்டும். என்னிடம் வரும் பல இளைஞர்கள் முதலில் கேட்பது - 'நான் நிறைய எழுதுவேன். நிறையக் கதை எழுதியுள்ளேன்; கவிதை எழுதியுள்ளேன். எப்படி பிரசுரத்துக்கு அனுப்புவது என்று சொல்லுங்களேன் என்பார்கள். இவர்கள் ஆர்வத்தில் தவறில்லை. ஆனால் இது குல்லாய்க்கு ஏற்ற தலையைத் தேடும் ரகம். இன்று பெரும்பாலும் ஊடகங்களுக்கு எழுதுவது என்பது சந்தையில் விற்பது மாதிரிதான். சந்தைக்கேற்ற சாமான் விற்பது போல் சுயேச்சை பத்திரிகையாளர்கள் ஊடகச் சந்தைக்கு பண்டம் விற்பவர்கள். ஆங்கிலத்தில், வணிக மொழியில் சொன்னால் - Vendors. விதம் விதமான vendors செய்து கொடுக்கும் பாகங்கள் ஒருங்கிணைந்து நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பத்திரிகைகள் உற்பத்தியும் இப்படிதான். இன்னொரு விதத்தில் சொன்னால், சுயேச்சை பத்திரிகையாளர் ஒரு சுயேச்சை தையற்காரர் மாதிரி. யார் யாருக்கு எப்படி வேண்டுமோ அப்படி அளவெடுத்து அவர்களுக்கு ஏற்ற விதத்தில் உடையைத் தயாரித்து கொடுக்க வேண்டும்.
எழுத்தாளராக வேண்டுமா? இலக்கியவாதியாக வேண்டுமா அல்லது பத்திரிகையாளராக வேண்டுமா என்ற தெளிவு முதலில் வேண்டும். இவற்றுக்குள் இருக்கும் வித்தியாசம் புரிய வேண்டும்.
பத்திரிகையாளராகதான் என்று முடிவு செய்து விட்டால், அடுத்து என்ன துறையில் (அரசியல், வணிகம், பொழுதுபோக்கு, வாழ்க்கை / சமூக நிலவரம் - (Trends), சமூக மேம்பாட்டு விஷயங்கள், போன்றவை ) உங்கள் ஆர்வம் மற்றும் திறமை என்பதையும் சுய அலசல் செய்து அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் துறையைச் சார்ந்த பத்திரிகைகளை / ஊடகங்களை கவனமாக "படியுங்கள்" - பாடம் படிப்பதுபோல. ஒரு வாசகராகவும் ஒரு படைப்பாளராகவும் இரு கோணங்களிலிருந்தும் ஒவ்வொரு செய்திக் கட்டுரையையும் / செய்தியையும் அலசுங்கள். என்ன மாதிரி செய்திகள், எந்த விதத்தில் எழுதப்படுகின்றன என்பதைக் கூர்ந்து அலசுங்கள். ஆங்கிலத்தில் Reverse Engineering என்று சொல்வதுபோல் ஒரு செய்திக் கட்டுரையை எடுத்துக் கொண்டு அதை எப்படி அதன் ஆசிரியர் கட்டமைத்திருப்பார் என்று ஆராயுங்கள்.
இப்படி முன் ஆராய்ச்சிகள் முடிந்ததும் எந்தப் பத்திரிகைக்கு என்ன மாதிரி எழுத வேண்டும் என்று புரிந்திருக்கும். ஒரு நிகழ்வு அல்லது ஒரு செய்தி உங்களுக்கு கட்டுரை எழுத தோதானது என்று தோன்றும்போது - அடடே இதைப் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்று "அரிப்பு" ஏற்படும்போது, உடனே அதைப் பற்றி பலரிடம் பேசியோ அல்லது புத்தகங்கள் / கோப்புகள் படித்தோ பல இடங்களிலிருந்தும் தேவையான விவரங்களை சேகரிக்க முடியும் என்ற எண்ணம் வலுத்தவுடன் உடனுக்குடன் அதை ஒரு வரை திட்டமாக / குறிப்புகளாக எழுதிக்கொள்ளுங்கள்.
சிந்திக்க ஆரம்பித்த உடனேயே இப்படி பல ஐடியாக்கள் தினமும் வந்த வண்ணம் - சில சமயம் பொழிந்த வண்ணம் இருக்கும். கைக்கு எட்டும் இடங்களில் ஆங்காங்கே குட்டி நோட் புக் அல்லது தாள்கள் மற்றும் பேனாக்கள் வைத்திருங்கள்.
அடுத்து மிக முக்கியமான வேலை. ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் வேலை செய்ய தயாராக வேண்டும். உங்களுக்குத் தோன்றும் ஐடியாவை, எப்படி வாசகர்களுக்கு ஏற்ற விதத்தில், அந்தப் பத்திரிகையின் அடிப்படை வடிவமைப்புக்கு ( Format) ஏற்ற மாதிரி உங்களால் எழுத முடியும் என்பதை ஆசிரியரிடம் விளக்கிச் சொல்லுங்கள். ஒவ்வொரு பத்திரிகையிலும் தலைமை ஆசிரியர் தவிர ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஆசிரியர் இருப்பார். எந்தப் பகுதிக்கு உங்களுடைய ஐடியா பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து அந்தப் பகுதியின் ஆசிரியரை முன் அனுமதி பெற்று ( appointment) நேரில் சந்தித்து பேசுங்கள். இது ஆரம்ப கால நட்பிற்காக. பழகிவிட்டால் ஒருவருக்கொருவர் தொலைபேசியிலேயே கலந்துரையாடி, ஒப்புதல் பெற்றுக்கொண்டு வேலையை ஆரம்பிக்கலாம். அவர்களுக்கு ஆள் தேவைப்படும்போது உங்களையும் அவர்கள் தொடர்பு கொண்டு வேலைக் கொடுப்பார்கள்.
இங்கே முதல் பிரசுரம் வெளியாவதுதான் சற்று கடினம். ஒன்று வெளி வந்துவிட்டால் அதன் அஸ்திவாரத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டிக்கொண்டே போகலாம். ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் படைப்புகள் வெளி வர ஆரம்பித்ததும் ஒரு portfolio செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஆசிரியர்களை சந்தித்து உங்கள் யோசனைகளை "விற்கும்போது" உங்களுடைய முன் அனுபவம் கையில் இருந்தால் இன்னும் கூடுதல் பலம்.
அதன் பின் வானம்தான் எல்லை.
கடைசியில், ஆனால் கட்டாயம் தேவை - வேகம். ஊடகத்துறையில் அந்தச் சமயத்தில் நடக்கும் நடப்பு நிகழ்ச்சிகள்தாம் ( Topical news) முக்கியம். காலம் / நேரம் என்பது இங்கே விலைமதிப்பில்லாதது. கொஞ்சம் அசந்தாலும் ஆறின கஞ்சியாகிவிடும். விரைவாக முடிவெடுக்கும் / எழுதும் திறமை. குறிப்பாக நடப்பு செய்திகள் பற்றி கட்டுரை எழுதும்போது அதன் சரித்திரம், பின்ணனி போன்றவை ஓரளவு புரிந்திருக்க வேண்டும். இதற்கு சமயம் கிடைக்கும்போதெல்லாம், பின்ணனி / பின் புல விவரங்களை அவ்வப்போது படித்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும் - இது ஒரு தொடர்ந்த கல்வி போலதான். குறித்த காலத்தில் குறித்த வேலையை பாங்காக முடித்து ஆசிரியரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பு இருந்தால் ஆசிரியர் குழுவின் நம்பிக்கையை பெறலாம். கால வரையரை ஊடகங்களில் மிக முக்கியம்.
நேரம் என்று சொல்லும்போது உங்கள் கட்டுரையும் வாசகர்களின் நேரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று வேகமாக நகரும் வாழ்க்கையில் பலவிதமான போட்டிகளுக்கிடையே உங்கள் கட்டுரை வாசகரின் கவனத்தை ஈர்ப்பது முக்கிய விஷயம். ஈர்க்கும் வகையில் எழுதும் விஷயம், சொல்லும் விதம் அமைய வேண்டும். முதல் வரிகள் மிக முக்கியம். இரண்டு நிமிடத்திற்கு மேல் இன்றைய வாசகர் கவனம் நிலைக்காது என்ற எண்ணத்துடன் வடிவமையுங்கள். இன்றைய பத்திரிகையாளர் தொழில், சுருங்கச் சொல்லி விளக்கும் கலை.
பத்திரிகையில் எழுத முக்கிய தேவை, செய்தியை நுகரும் / மோப்பம் பிடிக்கும் திறமை :-) இது பழக்கத்தில் தானே வரும். எது செய்தி என்பது எப்போதுமே சர்ச்சைக்குள்ளாகும் விஷயம். இந்தத் தொழிலில் அடிக்கடி பரிமாறிக்கொள்ளப்படும் வாக்கியம் - It is no news if dog bites man; when Man bites dog, it is news. :-)
நீங்கள் என்ன புதிதாக சொல்கிறீர்கள் என்பது முக்கியம். இந்த சமயத்தில் மாறி வரும் ஊடக நிலவரத்தையும் புரிந்து கொள்ளுங்கள். டிவி, மற்றும் இணையம் மூலம் பெரும்பாலான breaking news செய்திகள் வாசகர்களுக்கு கிடைத்துவிடும். இதையெல்லாம் தாண்டி அச்சு ஊடகத்தில் நீங்கள் சொல்வது வாசகர்களுக்கு புதிதாக / informative ஆக இருக்க வேண்டும்.
இன்னொரு முக்கியமான தேவை பொறுமையும் விடாமுயற்சியும். ஆரம்ப நாட்களில் "பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்" கடிதங்கள் நிறைய வரலாம். (என்னிடம் இந்த ஆரம்பகால கடிதங்கள் இன்னும் உள்ளன. நடந்து வந்த பாதையை நினைத்து பார்க்க பின்னாளில் உதவும். :-)) இதற்கெல்லாம் மனம் தளராமல் ஆர்வம் குறையாமல் பல விதங்களில் நம் குறை நிறைகளை நாமே அவ்வப்போது சுய அலசல் செய்து கொண்டு முயற்சி செய்த வண்ணம் இருக்க வேண்டும்.
சந்தைக்கேற்ப பண்டங்கள் தயார் செய்து கொடுத்து பெயரையும் நிலை நாட்டலாம். ஒரு ஒழுங்குடன் ஒரு வாரத்தில் குறைந்தது இத்தனை கட்டுரைகள் எழுத வேண்டும் என்று ஒரு நியதியுடனும் ஒழுங்குடனும் (Discipline) திட்டமிட்டு செய்தால் சுயேச்சை பத்திரிகையாளராக சௌகரியமாக பொருள் ஈட்டவும் செய்யலாம்.
2. திசைகள் பொறுப்பு எப்படி இருக்கிறது? திசைகள் அச்சு ஊடகமாகவும் மாற்றும் எண்ணம் உண்டா? திசைகள் மின்னிதழுக்கு தங்களின் அடுத்த கட்ட திட்டங்கள் என்ன?
ஆசிரியர் பொறுப்பு எனக்கு புதிதுதான். 16 வருடத்திற்கும் மேலாக கொடுக்கும் பக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது பெற்றுக்கொள்ளும் / தயாரிக்கும் பக்கம் வந்துள்ளது ஆரம்பத்தில் சற்று வித்தியாசமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. மின்னிதழ் என்பதால் தயாரிப்பில் தொழில் நுட்ப விஷயங்கள் ஆரம்பத்தில் குழப்பின. அவையும் இப்போது ஓரளவு புரிகின்றன (என்று நினைக்கிறேன் :-)) ஆனாலும் தொழில் நுட்பம் காரணமாக இப்போதும் சில தவறுகள் ஏற்படுகின்றன. காலப்போக்கில் இவைகளையும் தாண்டி விடுவேன் என்று நம்புகிறேன். நல்ல அனுபவம். ரசித்து செய்து கொண்டிருக்கிறேன்.
திசைகள் அச்சு ஊடகமாக மாறுவது குறிக்கோள் அல்ல. இது ஒரு வணிக முயற்சியல்ல. வணிக விளம்பரங்கள் கூட தவிர்க்கப்படுகின்றன. சந்தா விளம்பரம் இல்லாமல் அச்சு ஊடகங்களை வெளியிடுவது சிரமமானது. நான்கு வருடங்கள் முன்பு திசைகள் ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய காரணம், இணையத்தில் தமிழின் பங்கு அதிகரிக்க வேண்டும், நிறைய விஷயங்கள் இணையத்தில் தமிழில் கிடைக்க வேண்டும் - தமிழ் இணையத்தில் நிறைய ஆக்கங்கள் புதிதாக உருவாக வேண்டும், அறியப்பட வேண்டும், அவை பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் - என்பதுதான். இன்னொரு அச்சு ஊடகமாக இல்லாமல், இணைய ஊடகமாக, யூனிக்கோட் குறியீட்டு முறையை உபயோகித்து திசைகள் உருவெடுத்ததன் காரணமும் அதுதான். தமிழில் யூனிகோட் குறியீட்டு முறையை உபயோகித்து வெளி வந்த முதல் மின்னிதழ் திசைகள்.
இதே நோக்கோடுதான் - தமிழ் இணையத்தில் நிறைய புழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடுதான், வலைப்பதிவுகள் பற்றி ஜூலை 2003 இதழில் ஒரு அறிமுகக் கட்டுரையைப் பிரசுரித்து, தமிழில் வலைப்பதிவுகளின் வரவை திசைகள் ஊக்குவித்தது. இன்று ஓரளவு திசைகளின் எண்ணம் நிறைவேறியுள்ளது - இணையத்தில் நிறைய யூனிக்கோடில் தமிழ் ஆக்கங்கள் உருவாகின்றன / பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. தவிர, திசைகள் பூகோள ரீதியாக எந்த ஒரு பிரதேசத்தையும் சேர்ந்தது இல்லை. தமிழ் இன்று நாடுகளைக் கடந்த ஒரு உலக மொழி. தமிழ் குரல் ஒலிக்கும் இடங்களிலிருந்தெல்லாம் தமிழுக்கு பங்களிப்பு ஏற்படச்செய்ய அச்சு ஊடகத்தைவிட ஒரு மின்னிதழில் அதிக சாத்தியம் உண்டு. அச்சு ஊடகங்களும் இன்று மின்னிதழ் பதிப்பில் வெளி வரும்போது ஒரு மின்னிதழ் அச்சு ஊடகத்திற்கு செல்ல அவசியம் இருப்பதாக தெரியவில்லை. அதைவிட, தமிழை வேறு தளங்களில் எதிர்காலத்தில் எப்படி எடுத்துச்செல்லலாம் என்பதே திசைகளின் அடுத்த கட்டத் திட்டம். எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கும் ஒரு தொலை நோக்கு இதழாகவே திசைகள் இருக்கும்.
மேலும், சிறுகதைகள், கவிதைகள் என்று இலக்கியம் இங்கே ஒரு அங்கம் மட்டுமே. ஆனால் இலக்கிய இதழ் அல்ல. முக்கியமாக சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் திசைகளின் குவியம். ஒவ்வொரு மாதமும் வெளி வரும் சிறப்புப் பகுதி ஒரு உதாரணம்.
3. தங்கள் வலைப்பதிவு பக்கம் அடிக்கடி தென்படுவதில்லையே... ஏன்?
எக்கச்சக்கமான வேலை பளுவினால் நேரம் கிடைக்கவில்லை....... - என்று சொல்ல ஆசைதான். ஆனால் உள்ளே "உண்மை பேசு" என்று ஒரு குரல் ஒலிக்கிறதே? :-) எத்தனை வேலை இருந்தாலும் ஆர்வமிருந்தால் நேரம், தானே முளைக்கும். அந்த ஆர்வம்தான் குறைந்து வருகிறது என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை வலைப்பதிவில் எனக்கிருந்த ஆரம்பகால புதுமை மங்குகிறது ஒரு காரணமாக இருக்கலாம். பதிவு என்றில்லை அச்சு ஊடகங்களிலும் முன் போல் எழுதும் ஆர்வம் குறைகிறது. எதன் மேல் இந்தப் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறேன் :-) ஆனால் இந்த அயற்சியும் ஆர்வக்குறைச்சலும் எழுதும் துறையில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது வந்து போகும் ஒரு சுழற்சிதான். சற்றுப் பொறுங்கள். மீண்டு /ம் வருவேன் :-)
4. அமெரிக்கா முதல் டான்ஜானியா வரை பல நாடுகளும், இந்தியா முழுக்க பல வசிப்பிடங்களிலும் வசித்தவர் நீங்கள். எந்த இடம் ரொம்ப பாதித்தது? எப்படி? மீண்டும் எங்கு செல்ல/வருகை புரிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
டான்ஜானியா !! முக்கிய காரணம் அந்த நாட்டில் வாழ்ந்திருந்தாலும் முழுக்க அறிந்திருக்கவில்லை. ( மற்ற இடங்களெல்லாம் அத்துப்படியா என்று கேட்காதீர்கள் - பதில் கிடையாது.) அங்கே இருந்தபோது குழந்தைகள் சிறியவர்களாக இருந்தார்கள். முழுக்க முழுக்க குழந்தைகள் / குடும்பம், அருகில் இருக்கும் நண்பர்கள் ( இந்தியர்கள்) என்று நான்கு வருடம் ஓடியே போய்விட்டது. பயணம் என்பது எல்லோரும் போல் Serangetti National park போன்ற பல்வேறு game parks மற்றும் இதர சுற்றுலா இடங்கள் மட்டுமே. ஒரு டுரிஸ்ட் போல்தான் வாழ்க்கை. ஆனால் இப்போது தோன்றுகிறது. இன்னும் ஆற அமர அங்கே உள்ளூர் மக்களுடன் பழகி, வித்தியாசமாக வேறு நிறையப் பயணங்கள் செய்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஓய்வு பெற்றவர்கள் பழைய இடங்களில் போய் வசிக்க ஏதாவது திட்டம் வரைய வேண்டும் :-)
5. திசைகள்.காம் போன்ற மின்னிதழ்களில் கத்திரிக்கு, கிட்டத்தட்ட உரிமை இல்லாதவாறு பங்களிப்பாளர்கள் ஆக்கங்களைத் தருகிறார்களா? அல்லது 'எடிட்' செய்தால் சுணங்குவார்கள் என்பதால், கச்சிதமில்லாத படைப்புகள் சில சமயம் வெளியாகிறதா? இணைய இதழில் நிர்வாக ஆசிரியரின் நடவடிக்கைகள் எவ்வாறு அச்சிதழ்களின் ஆசிரியரோடு வேறுபடுகிறது?
"...அல்லது 'எடிட்'
செய்தால் சுணங்குவார்கள் என்பதால்,...." -
திசைகளில் இதற்கு இடமேயில்லை. முன்பே கூறியபடி எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல் செயல்படும் ஒரு அமைப்பில் தனி மனிதர்களின் சுணங்கல்களுக்கு இடமிருக்காது. இங்கே பத்திரிகையின் குறிக்கோள்தான் முக்கியம். தமிழில் புதிய ஆக்கங்களை /திறமைகளை ஊக்குவிப்பது திசைகளின் நோக்கம். எப்படியாவது சர்குலேஷனை அதிகரிக்க வேண்டும் என்ற எந்த விதமான அழுத்தமும் இல்லை; பிரபலங்களின் எழுத்துக்கள் இல்லாவிட்டால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. தரம் என்பது பெரும்பாலும் தனி மனிதரின் பார்வையைப் பொறுத்தது - subjective. திசைகளுக்கு வரும் படைப்புகளைப் படிக்கும்போது மிகச் சுமாராக இருந்தாலொழியப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறோம். புதிய எழுத்தாளர்களை இது ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம். சுமாராக இருக்கும் படைப்புகளையும் சில சமயம் திசைகளுக்குத் தேவையான விதத்தில் மறுபடி எழுதித்தரவும் எழுத்தாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன் - அப்படி கேட்டுக்கொண்டவர்கள் அன்போடு சிரமம் பார்க்காமல் மீண்டும் எழுதிக் கொடுத்ததும் உண்டு. திருத்தி எழுத வாய்ப்பே இல்லாத சில படைப்புகள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் அப்படி நிராகரிக்கும் முன்னர், எழுதியவர் ஆரம்ப எழுத்தாளராக இருந்தால் எப்படி எழுதலாம் என்ற யோசனையையும் முன் வைத்துள்ளேன்.
மின்னிதழில் கத்தரிக்கு அதிகம் வேலை இல்லை - தவிர்க்கப்பட வேண்டிய வாசகங்கள் / ஆபாசங்கள் / தாக்குதல்கள் இருந்தாலொழிய. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எல்லா ஊடகங்களையும் போல் மின்னிதழிலும் கத்தரி / censor நிச்சயம் செயல்படுகிறது. எனக்குத் தெரிந்த வரையில் திசைகளில் அப்படி கத்தரிக்குத் தப்பி எந்த வாசகமும் வந்ததாகத் தெரியவில்லை. மற்றபடி அளவு வரையறை இணையத்தில் இல்லாததால் நீளத்தைக் குறைக்க கத்தரி தேவையில்லை. இது மின்னிதழின் சௌகரியம் :-) மற்றபடி கச்சிதமில்லாத படைப்பு என்பது subjective :-) அச்சு ஊடகத்தில் நான் எந்த ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கவில்லை. எப்போதுமே பங்களிப்பாளராகவே (contributor) இருந்துள்ளேன். ஆனால் அடிப்படையில் இரண்டு ஊடகங்களிலும் நிர்வாக ஆசிரியர் பொறுப்பு ஒரே மாதிரிதான் என்பது என் அனுமானம்.
என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அழைத்ததற்கு மிக்க நன்றி பாலா.
அருணா ஸ்ரீனிவாசனின் விரிவான பதில்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
Thisaigal | Aruna Srinivasan | Interview
அருணா ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளர்னு புரிஞ்சது. அருமையான பதில்களும் விளக்கங்களும் எழுத வர்றவங்களுக்கு ரொம்பப் பயன்படும்.
சொன்னது… 6/21/2006 09:03:00 PM
கேட்டவுடன் ஒப்புக் கொண்டு பதிலளித்த அருணாவின் எண்ணப் பகிர்வுகள் எனக்கும் உபயோகமானதாக இருக்கிறது. நன்றி துளசி.
சொன்னது… 6/22/2006 05:58:00 AM
"A good many young writers make the mistake of enclosing a stamped, self-addressed envelope, big enough for the manuscript to come back in. This is too much of a temptation to the editor."
- Ring Lardner
பெயரில்லா சொன்னது… 6/22/2006 09:36:00 AM
அருணா அவர்களின் விளக்கங்கள் உபயோகமாக இருக்கின்றன! முயன்று பார்த்துவிட வேண்டியதுதான்
சொன்னது… 6/23/2006 12:02:00 AM
தாணு... __/\__
சொன்னது… 6/23/2006 07:02:00 AM
கருத்துரையிடுக