வியாழன், ஜூன் 22, 2006

Chat Meet - Peyarili

இலங்கை-ஈழம் குறித்த என்னுடைய கேள்விகளுக்கு பதிலளித்த பெயரிலிக்கு நன்றி.


இலங்கையை விட்டு நான் வெளியே வந்து பதினான்கு ஆண்டுகள். ஊருக்குப் போய் பத்தாண்டுகள். இந்நிலையிலே, ஈழம் குறித்த அண்மையநிகழ்வுகளின் நேரடி அனுபவம் என்னிடமில்லை. ஆக, அங்கே வாழ்ந்த கால உணர்தலும் தொடர்ந்து ஈழம் குறித்து அவதானிப்பதும் அங்கிருக்கும் நண்பர்களோடான தொடர்புமே கைவசமுள்ளவை. அதனால், இக்கேள்விகளுக்கு என்னைவிட இணையத்திலே பல ஈழ நண்பர்கள் மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் பதிலளிக்கலாம். இப்பதிவின் பின்னூட்டத்திலே பதில் தருவார்களென நம்புகிறேன்.

1. தற்போதைய ஈழப் பிரச்சினை எந்தப் பாதையில் செல்கிறது?

பொதுவிலே கண்காட்சிகளிற் கிணற்றுக்குள்ளே வண்டி ஓட்டுகின்ற பாதையிலேதானெனத் தோன்றுகின்றது. மேலும் கீழுமாக எந்நிலையிலும் சமனம் தப்பினாற் சரியுமென்ற ஆபத்தான பாதையின் கிணற்றைவிட்டு வெளிவராமல் ஓடிக்கொண்டிருக்கின்றதெனலாம். ஏதோவிதத்திலே பெயரளவிலே ஒப்பந்தமும் நடைமுறையிலே மறைமுகப்போருமான இந்தக்காலகட்டம் கடக்கப்படும். இவ்வாண்டுக்குள்ளே கடந்து ஒரு தெளிவான நிலை ஏற்படுமென்றே நினைக்கிறேன். தெளிவான நிலை என்றால், விரும்பப்படாத வெளிப்படையான போராகவே இப்போதைய காரணிகளை வைத்துப் பார்க்க எனக்குத் தோன்றுகிறது.

2. சூடான் போன்ற படுகொலைகளும் ஈராக் போர் அநியாயங்களும் கூட இந்திய மற்றும் மேற்கத்திய ஊடகங்களில் பரவலான கவனிப்பைப் பெற்று ஐ.நா. தீர்வை எதிர்நோக்குகிறது. ஈழத்தில் இவ்வாறு தார்மீகக் கோபமும் ஒப்பந்தத்தை நோக்கிய பயணமும் எவ்வித செயல்பாடுகளினால் நிகழக்கூடும்?

கவனிப்பு என்பது ஒவ்வொருவரினதும் ஈடுபாட்டினைப் பொறுத்துத் தோன்றுவது. இலங்கை குறித்து ஐநாவும் உலகவூடகங்களும் அறியாதனவல்ல. முதலிலே உலக அரங்கிலே இலங்கைப்பிரச்சனை குறித்த சரியான விளக்கம் உலக மக்களிடமும் முறையான அணுகுமுறை அரசாங்கங்களிடையேயும் ஏற்பட வேண்டும். மேற்கத்தைய ஊடகங்களுக்கு இலங்கை குறித்த ஈடுபாட்டுக்கான தேவை, சூடான், ஈராக் போல இல்லை. இந்திய ஊடகங்கள் - என்னைப் பொறுத்தமட்டிலே- இலங்கைப் பிரச்சனையிலே ஒரு சார்நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டு செயற்படுகின்றன. இச்சார்நிலைப்பாடுக்கு இந்திய அரசும் விடுதலைப்புலிகளும் ஒரு வகையிலே தூண்டுதலாக இருக்கின்றனர். இலங்கைப்பிரச்சனையின் தீர்விலே தமக்கு ஈடுபாடிருப்பதாகக் காட்டிக்கொள்ளும் உலக அரசுகள் பலவற்றுக்கு தம் இலாபம் கருதிய நிலைப்பாடுகள் உண்டு. நோர்வே, ஐஸ்லாந்து தவிர்ந்த மிகுதி நாடுகளின் அரசுகள் இங்கே அடக்கம். இவ்வகையான நிலைப்பாடின் விளைவே, இலங்கைப்பிரச்சனையின் இரு தரப்புகளையும் சமனாகக் கருதாமையும் நடத்தாமையுமாகும். கதிர்காமர்-எதிர்-பரராஜசிங்கம், கௌசல்யன்-எதிர்-பொன்சேகா, வங்காலை,பேசாலை,மட்டக்கிளப்பு, திருகோணமலை, அல்லைப்பிட்டி -எதிர்-கெப்பற்றிபொலாவ இப்பாதிப்புகளின்பின்னே உலக அரசுகளும் ஊடகங்களும் நடந்து கொண்ட முறைகளைப் பார்த்தீர்களானால், இப்பாரபட்சநடத்துதல் குறித்துத் தெளிவாகத் தெரியும். விடுதலைப்புலிகளுக்குத் தடைவிரித்த உலக அரசுகள் விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தையிலே ஈடுபட வற்புறுத்துதலும் தமது கண்காணிப்பாளர்களைச் சேவையாற்ற வைப்பதும் அபத்தத்தின் உச்சம். இவற்றினை இவ்வரசுகள் நிச்சயமாக அறியாதனவல்ல. இலங்கை அரசுக்கு ஆயுத உதவியினையும் பொருளாதார ரீதியிலான கடனையும் ஈழச்சிக்கலின்மீதான மனிதவுரிமைக்கேடுகள் குறித்து எக்கேள்வியுமின்றித் தரும் நாடுகளிருக்கின்றன.

இந்நிலையிலே அகில அரசுகள் கடந்து தம்மை மக்களிடையே நன்முகத்தோடு அறியச்செய்ய விடுதலைப்புலிகள் முயலவேண்டும். இதற்கு அவர்கள் தமது சிறிய தவறுகளையும் தம் ஆதரவாளர்கள் சிலரின் அடாவடித்தனமான செயற்பாடுகளையும் களைந்தெடுக்க முயலவேண்டும். இன்றைக்கு அவர்களுக்கு அவசியம் தேவையானது, தடைசெய்த ஐரோப்பிய ஒன்றியக்கண்காணிப்பாளர்களை அனுமதிக்கமாட்டோமென்ற தர்க்கம்பொருந்திய பதிலடி தரும் இராஜதந்திரமும் மிகவும் பசுத்தோல் போர்த்திய காருண்ய விளம்பரமுகமுமே. வெறும் முகத்திலடித்தாற்போன்ற பேச்சுகள் நெடுங்கால நோக்கிலே கெடுதலையே விளைவிக்கும். மேலாக, தற்போது நிகழ்ந்து வரும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் நல்லனவெனிலுங்கூட, அது எமக்குள்ளே கூடிப் பழங்கதை பேசுவதாக முடிவடைந்து விடுகின்றன. அதற்கு அப்பாலும், உலகநாடுகளிலே மக்களிடம் சென்றடைய, உலகநாடுகளிலே தம் நலனைக் காத்துத்தரக்கூடிய பலம் பொருந்திய தமிழரல்லாத நண்பர்களை ஈழத்தமிழர் தரப்பு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

3. 'வாட்டர்', 'நோ மேன்ஸ் லாண்ட்', 'ஹோட்டல் ருவாண்டா' போன்ற பல திரைப்படங்கள் தற்கால கொடூரங்களை சினிமா மூலமாக எளிதில் அணுகச் செய்கிறது. இலங்கை-ஈழம் நிலை குறித்த சினிமா இருக்கிறதா? ஏன் பரவலாக படைப்பாளிகளையோ பார்வையாளர்களையோ சென்றடையவில்லை?

In the name of Buddha ஞாபகத்துக்கு வருகின்றது. விதானகேயின் Pura Handa Kaluwara (Death on a Full Moon Day) இனையுஞ் சொல்லலாம். இன்னும் சில குறுந்திரைப்படங்களைக் கண்டிருக்கின்றேன். அப்பால்-தமிழ்.கொம் இலே கண்டவை. ஈழத்தமிழர்களின் உள்வட்டத்துள்ளே சுழலும் குடும்பம்-பாசம்-போர்-இழப்பு போன்றவை கலந்த உணர்வுமயப்பட்ட படங்கள் குறித்து வாசித்திருக்கின்றேன். தெனாலி, கண்ணுக்குள் முத்தமிட்டால், (நந்தா) போன்ற திரைப்படங்கள் தமிழகத்திலேயே வந்தாலுங்கூட, கதைமையப்படுத்தப்பட்ட புள்ளிகளையிட்டு ஈழப்பிரச்சனை கவனிப்புக்கு உள்ளாகாமற்போகிறன; அல்லது, எதிர்விளைவுகளையே ஏற்படுத்துகிறது. நேர்முகமானதல்லாத Terrorist, அமெரிக்காவிலே வரும் வாரம் தொலைக்காட்சியிலே வரவிருக்கும் "No more tears Sister" போன்ற விவரணம்சார் படங்களும் எதிர்விளைவினையே ஏற்படுத்துமென்றபோதிலுங்கூட, அவற்றினையும் காணவேவேண்டும். மூன்றாம் உலகநாடுகளின் துயரைப் படமாக்கினால், அவற்றோடு ஏதோவிதத்திலே சம்பந்தப்பட்ட முதலாமுலகநாடுகளிலே குற்றவுணர்வினைக் குறைக்கவும் விற்பனைக்கும் உதவும். ஈழம் குறித்து தெனாலி வந்த வேளையிலே, புகழேந்தி வெளியிட்ட "காற்றுக்கென்ன வேலி"யை உணர்வோடு சம்பந்தப்பட்ட தமிழகத்திலேயே தணிக்கைக்குழு அமுக்கிவிட்டது. விற்பனையை முன்னிறுத்தும் உலக அரங்கிலே என்னத்தை எதிர்பார்க்கலாம்?

('வாட்டர்' தற்காலக்கொடூரங்களைச் சொல்கிறதா? :-))

4. விடுதலை இயக்கங்கள், தமிழகத் தமிழர்கள் இலங்கைக்கு புலம் பெயர்ந்த வரலாறு, 1983, இராஜீவ் என்று செறிவாக, அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் எளிதாக அறிய விரும்புபவருக்கு தாங்கள் எந்தப் புத்தகங்களைப் பரிந்துரைப்பீர்கள்? இவற்றை எங்கு/எப்படி பெறலாம்?

போன ஆண்டு இரண்டு பக்கங்களையும் பார்த்துக்கொள்ளுங்களென ஒரு பட்டியல் தந்தேனே :-) தொலைந்துவிட்டதா?

Check for any book by Dr. Stanley Tambiah, Dr. Manoharan for contemporary histroy. However their writing mainly came from Tamil point of view. (Both are dead in the last five years)

There are number of other books. For ancient history, number of books are there. Let me check get a list soon. Gowever in the internet there are some interesting readings;

One by one Gunaratnam (on ancient history), and ther other by one T. Sabaratnam (still continues in Sangam.org, on Pirapakaran; His writing should be read along with Dr. Sankaan Krishna's books on Sri Lanka-India and Narayanaswamy's book on PirapAkaran, as they two have anti-LTTE stand). On Sri Lankan Refugees, there is a book by a Swedish/ Norwegian lady, who did her PhD on their plaight.


Sri Lanka: Witness to History - A Journalist's Memoirs, 1930-2004
by Subramaniam Sivanayagam ISBN 0-9549647-0-5 : hard cover, 700 pages
- published, 2005, by Sivayogam, 180-186, Upper Tooting Road,
London, SW17 7EJ
- UK£20, USA $40, Canada $50, Australia $50, Europe - euro 30
- for contact and book inquiries: info@orupaper.com
- you may buy this book online at: http://www.orupaper.com/witness/

Another film to be added: THE FORSAKEN LAND (it shows in ny this weekend)

5. இலங்கையில் சுமுகமான அமைதி திரும்ப (status quo) தமிழகத்
தமிழர்கள் என்ன செய்யலாம்?


தமிழகத்தமிழர்கள் என்ன செய்யலாமென்பது குறித்து என் விருப்பு வெறுப்பு கலந்து நான் கருத்துத் தெரிவிப்பின், அராஜகவாதி ஆகிவிடுவேனாதலால், இலங்கையிலே சுமுகமான அமைதி திரும்ப தமிழகத்தமிழர்கள் தமக்கும் இலங்கைக்கும் சரிப்படுமெனத் தோன்றுவதைச் செய்யலாமெனச் சொல்லிவிடுகிறேன் ;-)



| |

11 கருத்துகள்:

http://eelavali.blogspot.com/

http://en.wikipedia.org/wiki/Status_quo

//இலங்கையை விட்டு நான் வெளியே வந்து பதினான்கு ஆண்டுகள். ஊருக்குப் போய் பத்தாண்டுகள். இந்நிலையிலே, ஈழம் குறித்த அண்மையநிகழ்வுகளின் நேரடி அனுபவம் என்னிடமில்லை. ஆக, அங்கே வாழ்ந்த கால உணர்தலும் தொடர்ந்து ஈழம் குறித்து அவதானிப்பதும் அங்கிருக்கும் நண்பர்களோடான தொடர்புமே கைவசமுள்ளவை.//


20 வருஷத்துக்கு மேல் ஈழத்தை விட்டுப் போன ஒருசிலர் ஏதோ தங்கள் பக்கத்து வேலியால் பார்த்துச் சொல்லுவதைப் போல நடுநிலைவாதிகள் என்று நடித்தும், தமக்குக் கொலை அச்சுறுத்தல் வருவது போலக் காட்டி பச்சாதாபம் தேடிக்கொள்ளும் நடைமுறையில் பெயரிலி யதார்த்தவாதியாகத் தன் கருத்துக்களின் மூலம் தென்படுகின்றார். வெறும் புகழ்மாலை சூடுவதற்குச் சொல்லவில்லை (அவசியமும் எனக்கில்லை), மனதில் பட்டது சொல்கிறேன்.

//ஈழம் குறித்து தெனாலி வந்த வேளையிலே, புகழேந்தி வெளியிட்ட "காற்றுக்கென்ன வேலி"யை உணர்வோடு சம்பந்தப்பட்ட தமிழகத்திலேயே தணிக்கைக்குழு அமுக்கிவிட்டது.//

தெனாலி படம் ஈழத்தமிழை எப்படி நகைச்சுவையாகத் தமிழ்நாட்டுத் தமிழனிடம் விற்கலாம் என்ற நோக்கில் தான் வந்தது என நான் நினைக்கிறேன். ஒரு காட்சியில் கமல் காட்டும் சென்டிமென்ட் வசனம் தான் ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிச் சொல்லும் படம் என்ற கருத்தை விதைக்கும் என்றால் இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

காற்றுக்கென்ன வேலி எடுத்த புகழேந்தியின் கரிசனையை வேண்டுமானால் புகழ்ந்துகொள்ளலாம் ஆனால் படத்துக்குக் கிடைத்த விளம்பரத்திற்கும் எதிர்பார்ப்புக்கும், ஈழ ஆதரவாளர் குரலுக்கும் தீனி போடவில்லை. நன்றாக ஆய்வுசெய்யாமல் எடுத்த ஒரு சிறு முதலீட்டுப் படம். அவ்வளவே.

கன்னத்தில் முத்தமிட்டால், மணிரத்னம் என்ற அதிமேதாவியால் ஈழத்து நிலபுலன்கள் பற்றிய பூரணதெளிவில்லாமலும், அடிப்படைப் பிரச்சனையின் ஆழ அகலத்தை திரைக்கதை அமைப்பில் காட்டக்கூடிய வாய்ப்பிருந்தும் தவறவிட்ட படம்.

//இலங்கையிலே சுமுகமான அமைதி திரும்ப தமிழகத்தமிழர்கள் தமக்கும் இலங்கைக்கும் சரிப்படுமெனத் தோன்றுவதைச் செய்யலாமெனச் சொல்லிவிடுகிறேன் ;-)//

பரிபூரணமாக ஏற்றுக்கொள்கின்றேன்.

oru veeLai niinggaLthaan nijamaavee idly vadaiyoo!

oree topicaa irukkeennu keetteen

நன்றாகச் சொல்லியுள்ளார் பெயரிலி..

ஆனால் தமிழ்கத் தமிழரிடமான அவரது எதிர்பார்ப்பு பற்றி சற்று கூறியிருக்கலாம் எனத் தொன்றுகிறது..

ஆனால் இலங்கை யாழிலிருந்து பதிவிடும் நண்பர்களிடம் மேலதிக களநிலவரம் கிடைக்கலாம்..முயற்சிக்கலாமே!

சிறில்... பரஸ்பர அமைதியான முந்தைய நிலை என்பதற்கு அதை பயன்படுத்தினேன். அர்த்தம் வேறு மாதிரி ஆகிறது!

கானா பிரபா __/\__

பிரபு ராஜா... இட்லி-வடை மீதான் தனி நபர் தாக்குதலைத் தவிர்க்கவும் :-)

பெயரிலி ஈழப்பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்ட படங்களென்றால் தமிழிலே வந்த Script net ஆல் தயாரிக்கப்பட்ட ஏழு குறும்படங்கள்,விடுதலைப்புலிகளின் குறும்படங்கள்(முக்கியமாய் மறைந்த படைப்பாளி ஞானரதன் இயக்கியவை)பிரச்சாரத் தன்மை இருந்தாலும் தவிர்க்க முடியாதவை எனக் கருதும் அம்மா நலமா,ஈரத்தீ முழுநீளப்படங்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

உதிரிப்பூக்கள் மகேந்திரனதும் மகனதும் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படத்தைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

ஈழத்தமிழர்களின் பக்கத்திலிருந்து எதிர்பார்த்த அளவு திரைப்படங்கள் வெளிவரவில்லை என்பது, ஈழத்தமிழர்களிடமிருந்து போரின் கீறல்களுடன் பேசப்படக் கூடிய இலக்கியப் படைப்புகள் வரவில்லை(ஒன்றிரண்டைத் தவிர்த்து)என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை.போரை விடுங்கள் அகதி வாழ்க்கை கூட ஒழுங்காக படைப்பாக்கப்படவில்லை.

அப்படிப் படைப்பாக்கப்பட்டவை கூட எத்தனை பேரைச் சென்றடைந்திருக்கின்றன.உலக சினிமா என்று புத்தகமெழுதும் எஸ்.ரா எங்கெங்கோ இருக்கும் இலத்தீன் அமெரிக்கா,கொரியா,ஆப்பிரிக்காவெல்லாம் தேடி படங்களை ஆவணப்படுத்துகிறார் அந்தப் புத்தகத்திலை பக்கத்து நாட்டிலை தமிழிலை வேண்டாம் சிங்களத்திலை நாலைஞ்சு சீவன்கள் படமெடுக்குதுகள் என்றதையாவது சொல்ல மனமில்லை.

இலங்கையில் இருந்து ஏன் இப்படிப்பட்ட படங்கள்/படைப்புகள் வருவதில்லை என்பவர்கள் வருகிற ஒன்றிரண்டையாவது பார்க்க/படிக்க முயற்சி செய்யுங்கள்(பாபா தவறாக நினைக்கவேண்டாம் இது வேண்டுகோள் மட்டுமே)இலங்கையிலிருந்து ஒரு படம் எடுத்தால் இந்தியாவில் பார்ப்பார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது(இதைப் பற்றி தனியொரு பதிவிலை கதைக்கவேணும்-உனக்கு இதுவே வேலையாய்ப் போச்சு)

விமுக்தி ஜெயசுந்தரயவின் Forshaken land அண்மையில் இலங்கையில் தடை செய்யப்படவேண்டும் என்ற கூச்சலை எழுப்பிய படம் இன்றும் அந்தப் படம் திரையிடுவதற்கு அனுமதி இல்லை.பிரசன்ன விதானகேயின் புரகந்த களுவற(Dead on a fool moon day),இரா மதியம(August Sun) இரண்டுமே போரைப் பற்றிப் பேசும் படங்கள்.அசோக கந்தகமவின் மே மகே சந்திரய(இது என் நிலவு)போரைப் பற்றிப் பேசும் படம் அவரிடமிருந்து கிடைத்த இன்னொரு சிறந்த படைப்பு மே பாற என்ன(இவ்வழியால் வாருங்கள்)என்ற தொலைக் காட்சி நாடகம் போன்றவற்றை போரின் பாதிப்புகளை தாங்கி வந்த படைப்புகளுக்கு உதாரணம் சொல்லலாம்.

இன்னும் கொஞ்ச நாளில் தமிழீழ ஆதவன் திரைப்படக் கல்லூரியின் மாணவர்கள் படமெடுக்க ஆரம்பிப்பார்கள் அப்போது ஏதாவது நல்ல படங்கள் கிடைக்கலாம்.

ஈழத்து அரசியல் பற்றிக் கதைக்க அண்மையில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து ஏழிலையும் தொன்னூறிலையும் புலம்பெயர்ந்தவர்கள் இருக்க நான் கதைப்பது சரியாகப் படவில்லை

சிங்களப்படங்கள் குறித்து ரதன் 'வைகறை'யில் எழுதிவரும் தொடரை இங்கே சென்று வாசிக்கலாம்.....
http://www.vaikarai.com/94/issue-94%2020.pdf

//கவனிப்பு என்பது ஒவ்வொருவரினதும் ஈடுபாட்டினைப் பொறுத்துத் தோன்றுவது. //


சரியான வார்த்தைகள்.

உலகில் இன்றைய தினம் அரசாங்கள் முன்வைக்கும் நியாயங்களை வெகு ஜன ஊடகங்களில் வரும் செய்திகளை நுனிப்புல் மேய்ந்தால் கூட அறிந்து கொள்ள முடியும். ஆனால் அரசுகளின் (அல்லது ஆளும் வர்க்கத்தின்) அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மக்கள் போராட்டங்களைப் புரிந்து கொள்ள ஈடுபாடும் முனைப்பும் வேண்டும். அத்தகைய ஈடுபாடும், முனைப்பும் கூட ஏதோ ஒரு உந்துதலாலோ அல்லது நிகழ்வினாலோ தான் வருமே ஒழிய தன்னிச்சையாக வராது என்பது என்னுடைய கணிப்பு.

அங்கனம் ஈடுபாடு இல்லாத ஒருவர் ஐம்பது ஆண்டுகளுக்கான பிரச்னைக்குத் தீர்வாக "பேச்சுவார்த்தைகள் நடத்துங்கள், பிளவு படாத இலங்கைக்குள் தீர்வு காணுங்கள்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது எரிச்சலை உண்டாக்கினாலும் கூட என்னால் புரிந்து கொள்ள முடியும். இப்படி ஒரு வன்முறை வாழ்க்கையையும் இரத்தம் சிந்தலையும் ஈழத்தமிழர் தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமா என்று எண்ணும் சில நேரங்களில் எனக்கும் கூட அப்படித் தோன்றுவதுண்டு. "எதோ கிடைத்தது போதும்" என்று ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொள்ளலாமே என்று கூடத் தோன்றியிருக்கிறது. ஆனால் அதெல்லாம் வெறும் மாயை. இலங்கை அரசை அல்லது முக்கிய கட்சிகளை ஆட்டிப் படைக்கும் ஆளும் சுயனல வர்க்கமும், புத்த வெறி அமைப்புகளும் முழுமையாக தூக்கி எறியப் படாமல் எந்த விதமான சமரசமும் தற்காலிகமாகவே இருக்கும். பின்னால் சிங்கள அரசியலில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையடிப்படையில் சமரசம் செய்து பார்க்கலாமே என்று சொல்லத் தோன்றும். நம் நம்பிக்கைப் பொய்த்து பத்தாண்டுகளுக்குப் பிறகு இன்னொரு போராட்டத்தைத் தமிழர்களால் மறுபடியும் கட்டியெழுப்ப முடியுமா என்றால் இல்லை.

இப்படிப் பட்ட போலி அமைதிக்காக வக்காலத்து வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எல்லாம் சிங்கள அரசியலில் நல்ல ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்குமா என்றால் இல்லை. எல்லா நாடுகளும் தங்களது சுயநலத்துக்காக சிங்கள இனவெறி அரசுடன் இணக்கமாகச் செல்வதிலேதான் குறியாக இருக்கின்றனர். புலிகள் இயக்கம் பாசிஸ வழிகளிலும், பயங்கர வாதச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மை. அதனால் அவர்களை "legitimize" செய்வது நல்லதல்ல என்று நினைப்பது தவறல்ல. ஆனால் அதே நியாயத்தை பாசிஸ-மற்றும்-பயங்கரவாத சிங்கள அரசுகளின் மேல் ஏன் பொருத்திப் பார்ப்பதில்லை என்னும் போது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் போலித்தனமை அப்பட்டமாக விளங்கும்


உலக நாடுகளை விடுங்கள், ஏன் தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் கூட ஈழ மக்கள் ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து அனுபவித்து வரும் வலியைப் புரிந்து கொள்ளாமல் காயப் படுத்தி வருகின்றார்கள்? வெகுஜன ஊடகங்களைத் தாண்டி அப்பிரச்னையைப் பற்றி அறிந்து கொள்ள தமிழ் நாட்டுத் தமிழர்களின் முனைப்பின்மையே.

நன்றி - சொ. சங்கரபாண்டி

ஈழநாதன், டிசே, சங்கரபாண்டி நன்றி.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு