Journeys
இரயில் பயணங்களில்
நான் ஸ்டேஷனை அடையும்போது இரயில் கிளம்ப நாலு நிமிடங்கள் தான் இருக்கும். அன்றோ, பதினான்கு மணித்துளிகள் பாக்கி வைத்திருந்தேன். மேகமூட்டம் உள்ள இரவில் ஓரிரு நட்சத்திரங்கள் மட்டும் மேகங்களுக்கு நடுவில் மின்னுவது போல், காத்திருப்போர் அமர்ந்திருக்கும் இருக்கைகளில், எனக்கொரு இடம் கண்டுபிடித்தேன். கையில் அன்றைய செய்தித்தாள். பராக்கு பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
பிச்சைக்காரத் தோற்றம். தலையில் சடை முடிச்சுகள். முதுகில் துர்நாற்றம் வீசும் பொதிமூட்டை. கிட்ட நெருங்கியவுடனே பலரும், தான் அமர்ந்திருந்த இருக்கையை காலி செய்து தூரப் போயினர்.
'I wanna make a call. Can you spare me some change?'
கேட்ட தொனிக்கு பயந்தே கையில் கிடைத்ததை இட்டேன். இடாதவர்களை வாய்க்கு வந்தவாறு ஏசினான். சில்லறை தேறியவுடன், முக்கில் இருக்கும் தொலைபேசியை அழுத்தி, பைசாக்களை தானியங்கியில் இட்டு 'ஹலோ' ஆரம்பித்தான்.
எதிர்முனையில் கூட அந்த வீச்சமும், மட்ட சரக்கு கமழும் பேச்சும் எட்டியிருக்கலாம். துண்டித்து விட்டார்கள். இரண்டு, மூன்று முறை ரிசீவரை அழுத்தியும், மற்ற சாகசங்கள் செய்தும், பேசாத பேச்சுக்கு, காசைக் கறந்து விட்டிருந்தனர். வஞ்சிக்கப்பட்ட கோபம் முகத்தில் தெரிந்தது.
தொலைபேசி நிறுவனத்தின் 'சேவை மைய'த்திற்கான இலவச எண் 800-ஐ அடுத்து அழைத்தான். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை முறையிட்டு, பைசாவைத் திரும்பத் தருமாறு வேண்டினான். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் முறையீடு மையம் எங்கிருக்கிறதோ?
இந்தியாவிலா? அல்லது அமெரிக்காவின் ஒதுக்குப்புறமான கிராமத்திலா? அல்லது நிஜமுகங்களைத் தவிர்த்து கணினி மட்டுமே பேசும் மையமோ... தெரியவில்லை. கொடுத்த காசைத் திருப்பித் தரும் பழக்கம் தமக்கு இல்லாததை சொல்லியிருப்பார்கள். அவர்களின் பிறப்பு குறித்து ஐயமுற்று, அம்மா, அப்பாவையும் சேர்த்து வைது கொண்டிருந்தான்.
கேட்கக் கூசும் சொற்களைத் தவிர்க்க நினைத்த பலரும் இடத்தை காலி செய்து, வேறு இடங்களுக்கு நகர்ந்தனர்.
அப்பொழுதுதான் அந்த வாலிபன் அவனை நெருங்கினான். முதுகில் பெரிய பை. அமெரிக்கா முழுக்க பேக்-பாக் கட்டிக் கொண்டே சுற்றுப் பயணம் செய்பவன் போல் இருந்தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபது வயதுதான் இருக்கும். திடகாத்திரமான தேகம்.
"மிஸ்டர்... நீங்கள் பேசும் மொழி பொது இடங்களில் பேசத் தகாதது!"
கண்டிப்பான தொனி இருந்தாலும் கனிவான நம்பிக்கை தரும் முகத்துடன் கண் பார்த்து பேசினான். கோட் அணிந்தவர்களும், திரண்ட புஜபலம் உடையவர்களும் கூட 'உனக்கேன் தேவையற்ற வேலை? விருது பட்டி சனியனை விலை கொடுத்து வாங்கலாமா?' என்று புருவம் உயர்த்தி ஏளன முறுவலித்தார்கள்.
இரத்த நாளங்கள் வெடித்து விட்டது போன்ற கண்களுடன், "டேய்... (அர்ச்சனைகள்) உனக்கு என்ன தெரியும் (மேலும் அர்ச்சனைகள்) எனக்கு என்ன நடந்தது என்று..." குழற்கிறார் நிலைதடுமாறுகிறவர்.
'எது நடந்தாலும், இப்படி துர்வார்த்தைகளை பயன்படுத்தாமல், பண்போடு நடக்கலாமே?'
'எனக்கு இருக்கும் கோபத்துக்கு, உன்னை நொறுக்கிடுவேன்!'
பாதிக்கப்பட்ட வயோதிகனுக்கு மிக அருகில் நெருங்கி, 'வாங்க... வெளியில் போய் நமது சண்டையை வைத்துக் கொள்ளலாம்'
நேரடியாக சண்டைக் காட்சியைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு மிகுந்தது. நிச்சயம் இளைஞன் தான் ஜெயிப்பான். உடற்பயிற்சியில் கட்டுமஸ்தான் வளைவுகள். 'மென்ஸ் ஹெல்த்' போன்ற புத்தகங்களில் அட்டைப்படங்களில் வருவது போன்ற நாயக பாவம். வீடற்ற முதியவரோ, போதை உட்கொண்ட களைப்புடன் பசி மயக்கத்தில் பூஞ்சையாய் இருந்தார்.
ரயிலுக்கு இன்னும் எட்டு நிமிடங்கள் இருந்தது. ட்ரெயின் கிளம்புவதற்கு ஒரு நிமிடம் வரை இவர்கள் இருவரின் குஸ்தியை வேடிக்கை பார்க்கலாம். நிலைமை எல்லை மீறினால், 911 மூலம் காவல் துறையைக் கூப்பிட்டு, எனக்கு ட்ரெயின் பிடிக்கும் அவசரத்தை சொல்லி, சாட்சி கூட சொல்லாமல் சமூக சேவகனாகி தப்பித்தும் விடலாம்.
ஆசையுடன் பின் தொடர்ந்தேன்.
ஸ்டேசன் வாயிலில், அந்த back-pack இளைஞன், சடாரென்று முதியவன் தோளில் கை போட்டான்.
'உனக்கு யாரைக் கூப்பிடணும்? இந்தா என் செல் ·போன்'
'அவங்க ·போனை எடுக்க மாட்டேங்கிறாங்க! எனக்கு காசு வேணும்'
'எதுக்கு உனக்கு காசு வேணும்? டிக்கெட்டுக்கு பணம் வேண்டுமா? எங்கே போகணும்? நானே எடுத்துத் தரேன்.'
'பசிக்குது... சாப்பிடணும்'
அங்கே இருந்த உணவகத்தில் சாண்ட்விச் வாங்கித் தருகிறான். மழை பெய்யாத கோடை நாளில் எறும்பு வெளிவந்து தன் துணுக்கான உணவைக் கண்டது போல் அவனும் கண்கள் மிளிர சாப்பிட ஆரம்பித்தான்.
எனக்கு ட்ரெயினுக்கு நேரமாவது உரைத்தது. அவசரமாக மீதத்தைப் பார்க்க முடியாமல் கிளம்பி விட்டேன்.
என்னுடைய வண்டிக்கு சிக்னல் போட்டு கிளப்பும்போது, ஓடிவந்து ஏறிக் கொள்கிறான் அதே இளைஞன். நிஜ நாயகர்களிடம் கையெழுத்து வாங்க மனம் ஏனோ அலைமோதுவதில்லை.
நன்றி: தமிழோவியம்
Train | Heroes | தமிழ்ப்பதிவுகள்
இதை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.
http://www.desipundit.com/2006/06/30/rayilpayanam/
பெயரில்லா சொன்னது… 6/30/2006 02:47:00 AM
Thank you Dubukku :-)
சொன்னது… 6/30/2006 06:20:00 AM
//என்னுடைய அம்மா ஆர் பொன்னம்மாளு க்கு ஒரு அறிமுகம் + தொலை //
அந்த பின்னூட்ட பெட்டி மூடியிருப்பதால் இங்கு இடுகிறேன்.
பாலா ... அம்மாவின் ஆடியோ கேட்டேன் ... உங்கள் குடும்பம் இலக்கிய குடும்பம் + இளகிய குடும்பம் என்று தெரியவந்தது. பாலா இப்படி அடிச்சி ஆடுறாரே எப்படி என்ற ரகசியம் தெரியாமல் இருந்தது ... அலுப்பின் காரணமாக வலைப்பதிவாளர்களின் பின்புலன்களை ஆராய்வதில்ல என்பதும் உண்மை. உங்கள் அம்மாவின் இலக்கிய மற்றும் ஆன்மீக சேவை வியக்கவைக்கிறது.
பொன்னம்மாள் வீட்டு சின்னப் பையனும் சிறுகதை எழுதுவார் என்பதை நிறுபித்துவிட்டீர்கள் :)
சொன்னது… 6/30/2006 09:30:00 AM
கோவி... தங்கள் கனிவான மறுமொழிக்கு நன்றி :-)
சொன்னது… 6/30/2006 10:38:00 AM
"நிஜ நாயகர்களிடம் கையெழுத்து வாங்க மனம் ஏனோ அலைமோதுவதில்லை" - so true
பெயரில்லா சொன்னது… 6/30/2006 06:08:00 PM
I use to refer your blog to amateurs about good blog writing.
A lot of variation in presentation !!!
surprised
Chameleon
சொன்னது… 7/01/2006 11:36:00 AM
wa, சமீலி... __/\__
சொன்னது… 7/02/2006 08:10:00 PM
கருத்துரையிடுக