புதன், ஜூன் 21, 2006

Montreal Visit

மாண்ட்ரியால், க்யூபெக் - கனடா பயணக் குறிப்புகள் & படங்கள்:

(படங்களை எலிக்குட்டி கொண்டு சுட்டினால், இன்னும் கொஞ்சம் பெரிய புகைப்படங்கள் ஃப்ளிக்கர் உபயத்தில் கிடைக்கும்)


  • திரும்பி வந்ததில் இருந்து ஆரம்பிக்கிறேன். சென்னையில் நாய், ஆடு, மாடு, கோழி பிராணிகளும், மனிதர்களும், உந்து வாகனங்களும் சாலையைப் பகிர்ந்து கொள்வார்கள்.. அமெரிக்காவில் சாந்த சொரூப விலங்குகளுடன் ஒட்டி உறவாட காசு கொடுத்து இந்த மாதிரி சஃபாரி செல்ல வேண்டும். வான்கோழி, லாமா, கலைமான் என்று எல்லாம் காருக்குள் தலை நீட்டி 'மம் மம்' சாப்பிடுகிறது.

    P1010096


  • கோட்டை நகரம் க்யூபெக் சிட்டி. தங்கள் ஹோட்டலுக்கு சாப்பிட வாங்க என்று வாயிலில் இருந்து கூவி அழைக்கிறார்கள். குட்டி அக்டோபஸ்கள் (Squids) முதல் வெண்ணெய்யை பூரணமாக அடக்கி, வெண்ணெயில் முக்கியெடுத்த ரவியோலி வரை எல்லாமே சூப்பர்.

    குதிரை சவாரியில் அக்ரஹாரம் போல் இருக்கும் நான்கே நான்கு முக்கிய வீதிகளை வலம் வந்துவிடலாம். எனக்கு வாய்த்த குதிரைக்காரன் 'இந்து மதம் - சிறு குறிப்பு வரைக' என்று வினவ, ரொம்ப சிரமப்பட்டு கொஞ்சமே கொஞ்சம்தான் விளக்க முடிந்தது.

    P1010084


  • உலகின் மிக உயரமான அருவி: மாண்ட்மாரன்சி நீர்வீழ்ச்சி. நயாகரா நயாகராதான். இதன் அருகே உள்ளே, காட்டுவழிப் பாதை வழியே இயற்கைப் பயணம் கொடுக்கும் 'கான்யான்', மாண்ட்மாரன்சியை விட இனிமையான, தவறவிடக் கூடாத தலம்.

    P1010077


  • இந்த பாலம் Sainte-Anne Canyon-இல் உள்ளது. பாலத்தின் மேல் என்னைப் போன்றவர்கள் நடந்தும், இளவட்டங்கள், கயிறு போட்டு சாகசமாகப் பறந்தும் அந்தப் பக்கத்தை அடைகிறார்கள்.

    P1010060


  • நதியைத் துரத்தும் கற்கள்

    P1010047


  • தூரத்துப் பச்சை: உச்சியில் ஏறிக் கொண்டு மாண்ட்ரியால் தரிசனம்

    P1010039

  • மாண்ட்ரியால் முழுக்க சொக்க வைக்கும் தேவாலயங்கள். பிரும்மாண்டமானப் புறத்தோற்றம். அமைதி கவழும் உட்புறம். பிரகாரங்கள் எங்கும் உள்ளூர் மற்றும் பைபிள் கதைகள். சாந்தமாக நோக்கும் சிற்பங்கள். கண்ணாடி ஓவியங்கள். ஒரு நாள் முழுக்க ஒரு சர்ச்சுக்கு ஒதுக்கினால், உங்கள் பயணத்தின் நோக்கம், நிச்சயம் வெற்றி!

    P1010034

  • ஒலிம்பிக் கடனை இன்னும் அடைத்தபாடில்லை என்று சோகமாகப் புலம்பினாலும், சிரத்தையாக பராமரித்து வருகிறார்கள். பூங்காக்கள், தோட்டங்கள், சுற்றுச்சூழல் நிலையம் என்று 1976 ஒலிம்பிக்ஸ் தளங்களை வருகையாளர்கள் ரசிக்குமாறு உருமாற்றி இருக்கிறார்கள்.

    P1010019


  • கொஞ்சம் இருட்டிடுச்சு. Notre-Dame Basilica (Basilique Notre-Dame)
    P1010005

    வாரந்தோறும் ஏதாவது திருவிழா கொண்டாடுகிறார்கள். நான் சென்றிருந்தபோது ஜாஸ் திருவிழா. ஒவ்வொரு தெருமுக்கிலும் கச்சேரி. ஃப்ரென்ச் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நலம்.

    நடுவே வண்டிக்கு சோறு போடும்போது, என்னுடைய கிரெடிட் கார்ட் பிரச்சினை செய்தது. சண்டைக்கோழியாக நான் ஆங்கிலத்தில் கத்த, பெட்ரோல் பங்க் காரர் ஃப்ரென்ச்சில் மட்டுமே பேசி அடம்பிடித்தார். மொழிபெயர்ப்பாளர் நடுவர் மன்றம் வரை சென்று புரிந்து கொண்டாலும், கிராமப்புறங்களில் 'எங்களுக்கு ஃப்ரென்ச்சு மட்டும்தான் தெரியும்' என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்.

    குதிரை சவாரி சென்றால், இந்து மதத்தை ஐந்து வரிகளுக்கு மிகாமல் மேற்கத்திய உலகுக்குப் புரியவைக்க தயாராக இருங்கள். எல்லா வகை உணவுகளும் கிடைக்கும் என்றாலும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய சாப்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் வைத்திருக்கும் பஃபே மஹாராஜா போன்ற இந்திய உணவகங்களையும் தவறவிட வேண்டாம்.

    குறைந்தது நான்கு நாளாவது மாண்ட்ரியால் மற்றும் க்யூபெக் மாகாணத்தை சுற்றிப் பார்க்க தேவை. தேவாலயங்கள் குறித்து முன்பே இணையம் மூலமாக போதிய பின்புலத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றிற்கு செல்லும்போது 'அரகரா' மட்டும் போட்டுக் கொள்ளாமல், எப்போது படம் எடுக்க முடியும், எந்த ஆக்கம் முக்கியம், என்ன சரித்திரம் என்று தெரிந்து நண்பர்களுடன் பகிர்ந்தால் காலரைத் தூக்கி விடுவார்கள்.

    கடந்த முறை சென்று மூன்று வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. டொரொண்டோவிற்கு மதுரைத் திட்டம் கல்யாணசுந்தரம் வருகிறாராம். செல்ல முடியுமா என்று திட்டமிட வேண்டும்.



    | |

  • 4 கருத்துகள்:

    கன்னடாவில பார்க்க இவ்வளவு விஷயம் இருக்குதா.. வெறும் டொரோண்டோ நயகரா பாத்துட்டு வந்துட்டோம்.

    நயகரா காசினோவில $500 வெற்றி பெற்ற இனிய நியாபகம் வருது.

    ---காசினோவில $500 வெற்றி ---

    அநியாய மச்சம்! பரவாயில்லை... லாபத்தோடு வெளியேறி இருக்கிறீரே!

    கனடாவில் மாண்ட்ரியால் (மற்றும் தேசிய பூங்காக்கள்) வித்தியாசமான சூழலுக்கு கொண்டு செல்லும். நோவா ஸ்காட்டியா பக்கம் கடல்/கப்பல் பயணம் என்று எட்டிப் பார்த்து (என்னைப் போல்) ஏமாற வேண்டாம்.

    // உலகின் மிக உயரமான அருவி: மாண்ட்மாரன்சி நீர்வீழ்ச்சி. //
    தவறான செய்தி.

    கன்னா பின்னான்னு பதிவு போட்டு நயாகராவை வயாகரான்னு குழம்பிக்கிட்டு இது உயரமான அருவின்னு சொல்லிட்டீங்களா? :-))

    உயரமான அருவி வெனிசூலாவின் ஏஞ்சல் அருவி என்று கேள்வி.

    பெரிய அருவி என்று எடுத்துக்கொண்டால் அது காங்கோவின் இங்கா அருவி.

    Montmorency Falls: Information From Answers.com: "The falls, at 83 meters (272 ft.) high, are the highest in the province of Quebec and 30 m (98 ft.) higher than Niagara Falls."

    ---கன்னா பின்னான்னு பதிவு போட்டு நயாகராவை வயாகரான்னு ---

    :-))) அந்த நெனப்பில நயாகராவை விடப் பெருசுன்னு மார்க்கெட்டிங் செஞ்சது மனதில் ஆழமாகப் பதிந்து விட, கோட்டை விட்டுட்டேன்.

    திருத்ததிற்கு __/\__

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு