செவ்வாய், ஜூன் 20, 2006

Raj Gouthaman - State of Tamil Daliths

ராஜ் கௌதமன்

ஆங்கிலேயர் புகுத்திய பூர்ஷ்வா ஜனநாயகத்தில், பிரதிநிதித்துவ அரசியல், பெரும்பான்மையோரின் ஆதரவு அதிகாரத்தைக் கைப்பற்ற உதவியது. தமிழக மக்கள் தொகையில் இரு சதவிகிதத்தினராக இருந்த பார்ப்பனரை எதிர்க்க மீதி 98 சதவிகிதத்தினரைத் திராவிடர் என்ற ஒரு குடையின் கீழ் வேளாளர்கள் திரட்ட முனைந்தனர். வேளாளரின் சாதி அரசியலுக்குத் தமிழ் மொழியும் சைவ மதமும் ஆய்தங்களாயின.

தலித் மக்களைத் தீண்டாதவர்களாக ஆக்கியதில் பார்ப்பனரைப் போலவே வேளாளருக்கும் பங்குண்டு. ஆனால் தீண்டாமைக் குற்றத்திற்கு பார்ப்பனரையும், அவர்களுடைய சமஸ்கிருதப் பண்பாட்டையும் காரணங்களாக வேளாளர்கள் எடுத்துக் காட்டினார்கள். நீலாம்பிகை அம்மையார் போன்றவர்கள் பார்ப்பனரின் சமஸ்கிருதப் பண்பாட்டிற்குள் கால்களைப் பதித்துக் கொண்டே தீண்டாமைக்குப் பார்ப்பனர் மட்டுமே காரணம் என்றார்கள்.

வேளாளர் சத்திரியர் முதலான சாதியினரைத் திராவிடர் எனவும், எஞ்சிய பெரும்பான்மை தலித் மக்களை ஆதி திராவிடர் எனவும் ஒன்று திரட்டும் நோக்கில் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. இக்கட்சியின் தலைமை தெலுங்கு நிலவுடமையாளர்களிடமும் தமிழ் வேளாளர்களிடமும் இருந்தது. படித்த சிறுபான்மை ஆதிதிராவிடரும் இக்கட்சியில் அங்கம் வகித்தார்கள்.
....

படித்த ஆதிதிராவிடர்கள் நகரங்களில் கால்பதித்து வாழ்ந்த சிறுபான்மையோராவார். தோட்டி, சக்கிலியர், ஒட்டர், உப்பரவர் முதலான தெலுங்கு - தலித்களும், தேவேந்திரகுலம் என்று தங்களை சமஸ்கிருதமயப்படுத்தி மேற்சாதியாக மாற்ற முனந்த பள்ளரும், இவர்கட்கெல்லாம் புரோகித காரியங்களைப் பார்த்து மேற்சாதியாகப் பாவித்துக் கொண்ட வள்ளுவர்களும், மாடு தின்ற, தின்னாத பறையர்களும் ஒரு அரசியற் கொடியின் கீழ் இன்றும் வரமுடியாதிருக்கிற போது, அன்றைக்கு இதனை நினைத்துப் பார்க்கவே முடியாதுதான்.
....

சைவ உணவு, பசுவின் பால், நெய் ஆகியவை உயர்சாதி அடையாளத்தையும், அசைவ உணவு, குறிப்பாக மாடு, பன்றி இறைச்சி உணவு போன்றவை கீழ்ச்சாதி அடையாளத்தையும் சுட்டின. சாதி இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்பில் ஓரிரு வயது முதலாகவே எவை எவை தீட்டுக்கள், எவரெவர் தீண்டத்தகாதவர் ஆகியவை உணவு அடிப்படையில் சொல்லித் தரப்படுகின்றன.

பசுவோடு தொடர்புடையவை சுத்தமானவை என்றும், நாய், பன்றியோடு தொடர்புடையவை அசுத்தமானவை என்றும் உணர்த்தப்படுகின்றன.

'பசுவாலைப் பிடித்தபடியே நதியைக்
கடக்கலாம்; நாய்வாலைப் பிடித்தபடி
நதியைக் கடக்க முடியுமா ?'
என்று அறநெறிச்சாரம் என்ற நீதி நூலும்,
'எலும்பைத் தின்று செமிக்கிற நாய்க்குப்
பசுவின் நெய்யுண்டு செமிக்க முடியுமா ?'
என்று நீதி வெண்பா என்ற நீதி நூலும் கேட்கும் வினாக்கட்கு அடியில் பசு / நாய் என்ற ரீதியில் சுத்த / அசுத்தப் பாகுபாடு இருப்பது தெரியும். பழைய புறநானூறு போன்ற இலக்கியங்களிலும், பசு, பார்ப்பார், பத்தினிப் பெண் என்று பசுவின் வரிசையில் பார்ப்பனரையும், ஒருவனுக்கே உடலைத் தரும் பெண்டிரையும் சேர்த்திருப்பதைக் காணலாம். வேளாள / பார்ப்பன பக்தர்கள் இறைவனிடம் கசிந்துருகும்போது,
'சீலமில்லாத புலையன், நாயன்' என்றும்,
'நாயடியேன், புலையடியேன்' என்றும்
தங்களைத் தாழ்த்திக் கொள்ளுகிறபோது, தாழ்ச்சியின் இறுதி எல்லையாக நாயும், புலையன் என்ற தலித்தும்தான் வாய்த்தார்கள்.
....

எல்லாவித அதிகாரங்களும், குடும்ப அமைப்பில் தனிமனித அளவில் உளவியல் ரீதியாக உள்வாங்கப் படுவது பாலியல் அடிப்படையில்தான். தலித்கள் சாதி, பொருளாதார அதிகாரங்களைத் தகர்ப்பது போல, குடும்பத்தில் பாலியல் அதிகாரத்தையும் தகர்ப்பது கடமை.

ஆண் ஆதிக்கம் கொண்ட குடும்பத்தையும், அதன் வழியே உயர்சாதி ஆதிக்கம் கொண்ட சாதியமைப்பையும் இவை இரண்டையும் நிரந்தரப்படுத்துகின்ற மத நிறுவனத்தையும் உடைக்கின்றபோது தான் மொத்த சமுதாயத்தோடு தலித்களும் விடுதலை பெறுவது சாத்தியமாகும். எத்தனை அரசியல் - பொருளாதார மாற்றங்கள் நடந்தாலும் முழு விடுதலை என்பது சாதிய, பாலியல் ஒடுக்குமுறைச் சமுதாயத்தில் சாத்தியமில்லை.
...

வரலாறு தலித் மீது தொடுத்த, தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகட்கும், அவற்றைச் செய்து கொண்டிருக்கிற அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலைத் தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும். 'தலித்' ஒன்றுக்குத்தான் சாதி இல்லை, மதம் இல்லை எனக் கூறும் உரிமையும், தைரியமும், தேவையும், கடமையும் உண்டு. ஏனெனில் அதற்குக் கீழே ஒடுக்கப்படுவதற்குச் சாதிகள் இல்லை; இதனைக் கட்டிக்காக்க மதங்கள் இல்லை. சாதியையும் மதத்தையும் ஆண்மகனையும் மையமாகக் கொண்ட குடும்பத்தையும் தகர்ப்பதே தலித் இலக்கியத்தின் உள்ளடக்கமாக இருக்கும். இவ்விததில் கறுப்பர் இலக்கியமும், பெண்ணிய இலக்கியமும், நாட்டுப்புற இலக்கியமும் தலித் இலக்கியப் பரப்பிற்குரிய இன்றியமையாத கூறுகளை வழங்க முடியும்.
...

தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும்; முகம் சுளிக்க வேண்டும்; சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்ப்வர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, ம்தக் கருத்தியலைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அவர்கட்கு குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும் நாசூக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும். அது வரை?

நன்றி: தலித்திய விமர்சனக் கட்டுரைகள் :: ராஜ் கௌதமன் - காலச்சுவடு



| |

5 கருத்துகள்:

Thanks for the link Balaji!

தமிழ்நாட்டில் தலித் இலக்கியம் என்று அவர்கள் சொல்வதே - பிராமண எதிர்ப்பு பிரசாரம்தான் என்ற ஆகிவிட்ட துர்பாக்கிய நிலை.

வெறுப்பையும், எதிர்ப்பையும் உமிழ்வதால் மட்டுமே முன்னேற முடியாது. அவை பின் சந்ததிக்கும் விரோதம் என்னும் மாறா வடுவைத்தான் விட்டு வைக்கும்.

அன்றிலிருந்து இன்று வரை - சமுதாயத்தில் அங்கீகார மாற்றங்கள் ஏற்பட்டதற்கு காரணம் எதிர்ப்போ, வெறுப்போ அல்ல. நற்சிந்தனைகள்தான்.

எப்போது காழ்புணர்ச்சி மறைகிறதோ அப்போதுதான் நிஜமான முன்னேற்றம் இருக்கும்.

சுட்டிக்கு நன்றி.

1992ல் பேராசிரியர் இராஜ் கௌதமன் நிறப்பிரிகை பத்திரிகையில் எழுதிய விரிவான கட்டுரை ஒன்று எனக்குப் பல புதிய விசயங்களை புரிய வைத்தது. அதனை Soc.Culture.Tamil இணையக் குழுமத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் போட்ட பொழுது நடந்த விவாதம் இங்கே. அப்பொழுது இணையத்தில் தமிழைப் பயன் படுத்த முடியாததால் மொழி பெயர்க்க வேண்டியதாயிற்று, சில இடங்களில் எனது அன்றைய மொழி பெயர்ப்பு நன்றாக இல்லை என்று தெரிகிறது )-:

வேளாளச் சாதிகளின் பார்ப்பனியத்தனத்தை (அல்லது வேளாளத்தனத்தைப்) பற்றி பின்னூட்டங்களில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒருவேளை தனிப் பதிவு ஆரம்பித்தால், சாதியைப் பற்றிய என்னுடைய விவாதம் இதிலிருந்துதான் ஆரம்பித்திருக்கும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

நல்ல கட்டுரை....

யாத்திரீகன் & தங்கமணி... வருகைக்கும் மறுமொழிக்கும் __/\__

---காழ்புணர்ச்சி மறைகிறதோ ---

நன்றி ஜீவா.
---------
விரிவான பின்னணித் தகவல்களுக்கு மிக்க நன்றி சங்கரபாண்டி!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு