வியாழன், ஜூலை 13, 2006

Crash - Movie Review

க்ராஷ்

தமிழோவியத்திற்கு நன்றி.

9/11 முடிந்து ஒரிரு மாதம் கழிந்திருக்கும். உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கவும் வீட்டுக்குத் தேவையான சில பொருட்கள் வாங்கவும் நண்பர்களுடன் ஷாப்பிங் சென்றிருந்தோம். அனைவரும் பன்னாட்டு உணவை வாங்கிக் கொண்டு, சாப்பிட ஆரம்பித்தவுடன் தான் அந்த இருவரை கவனித்தோம். அழுக்கு அதிகம் தெரியாத பழுப்பு நிற குர்தா, பைஜாமா. தலையில் வெள்ளை நிற பருத்தியுடைத் தொப்பி. உட்கார்ந்திருந்த மேஜையில் உணவோ, குளிர்பானமோ எதுவும் கிடையாது. எதைக் குறித்தோ ஆர்வமாய் ஆனால் தங்களுக்கு மட்டுமே கேட்கும் சன்னமான குரலில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். எங்களில் ஒருவன், 'அடுத்து எங்கே என்று திட்டம் தீட்டுகிறார்களோ?' என்று சத்தமாக யோசித்தான்.

க்ராஷ் படம் முழுக்க 'பொலிடிகலி இன்கரெக்ட்' ஆக சிந்திப்பதை எதிராளியிடம் நேரடியாகத் தாக்குகிறார்கள். அதன் பிறகு, தங்கள் மனிதத்தை இயல்பாக நடப்பதன் மூலம் மனதில் ஊறிய மொழி, இன, வகுப்பு பிரிவினைகளை மேற்சென்று தாண்டியும் விடுகிறார்கள்.

சென்ற வருடத்திற்கான சிறந்த திரைப்பட விருதைப் பெற்ற படம். தொட்டுக் கொள்ள படத்தொகுப்பு, திரைக்கதை என்று மேலும் இரண்டு ஆஸ்கார்கள். நடித்தவர்களின் பட்டியலை பார்த்தால், ஹாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இருக்கிறார்கள். 21 கிராம்ஸ், ட்ரா·பிக் போன்ற சிதறலான காட்சிகளுடன், பராக்கு பார்த்து கவனம் சிதறவிடாமல் பார்க்க வேண்டிய படம்.

தேர்தலில் நிற்கும் வெள்ளை வேட்பாளரின் கார், கறுப்பர்கள் இருவரால் கொள்ளையடிக்கப் படுகிறது. அவரின் பணக்கார மனைவிக்கு பயத்தினாலும் தனிமையினாலும் எதைப் பார்த்தாலும் நம்பிக்கையின்மை தொற்றிக் கொள்கிறது. காரைத் திருடியவர்களில் ஒருவன், இரட்டை குதிரை சவாரியாக ஒரு புறம் குற்றவுணர்ச்சியும்; இன்னொரு புறம் பணத்தேவையுமாக, திருந்த யோசிப்பவன். இன்னொருவன், ஆதிக்க சமூகத்தை கடுமையாக சாடிக் கொண்டு, புத்திசாலித்தனமான வாதங்களினால், தன்னை மழுங்கடித்துக் கொள்பவன்.

லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறையை சுற்றி வரும் கதாமாந்தர்கள். அப்பாவிற்கான மருத்துவ செலவு செய்ய முடியாத இயலாமையை, வேறுவிதமாய் தீர்த்துக் கொள்கிறான் ஒருவன். இனத்துவேஷத்தை வெளிப்படுத்தும் அந்த அருவருக்கத்தக்க நிகழ்வை கண்டிக்கும் அவனுடைய கூட்டாளியே, பிறிதொரு சந்தர்ப்பத்தில், இன உணர்வை வெளிப்படுத்துகிறான்.

தொலைக்காட்சியில் உயர்பதவியில் இருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கரும் இனபேதத்தை சகித்துக் கொள்ள நேரிடுகிறது. படப்பிடிப்பில் வெள்ளையனைப் போல் நடிக்கும் சகாவை, கறுப்பினத்தவன் போல் உச்சரித்துப் பேச வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறான். வண்டியோட்டுகையில் எவ்விதக் குற்றமும் செய்யாத போதும் DWB என்று செல்லமாய் அழைக்கப்படும் செய்கைக்காக மனைவியினைத் தடவி சுகம் காணும் போலீஸ் அதிகாரியிடம் செயலற்று நிற்கிறான். அந்தக் கோபம் எல்லாம், தன்னிடம் திருட வருபவனுக்கு கடுமையாக அறிவுரை கூறுவதாக மாறுகிறது. வழிப்பறிக்காரனைப் போன்ற ஓரிரு விஷ விதைகளால், மொத்த சமூகமே எவ்வாறு சித்தரிப்புக்கு உள்ளாகிறது என்று புரிய வைக்கிறான்.

அமெரிக்காவை கலாச்சாரங்களை கலக்கியுருக்கும் கலயம் (melting pot) என்று சித்தரிப்பார்கள். இந்தப் படம் போதுமான அளவு வெள்ளையர், ஆப்பிரிக்க அமெரிக்கர், மெக்ஸிக்கர், பிற பழுப்பு நிறத்து ஸ்பானிய மொழியர், இரானியர், சீனர், என்று எவர் எப்படி அனுமாணிக்கப் படுகிறார்கள், எவ்வாறு உள்-சித்தரிப்பு நிகழ்கிறது என்பதை அணுகுகிறது. கூடவே, அமெரிக்காவுக்கு மட்டுமே உரித்தான குடியேறிகளுடன் நிறுத்தாமல், உலகத்துக்கே பொதுவான ஏழை - பணக்காரன்; காவலாளி - களவாணி; பதவி வகிப்பவன் - வகிக்காதவன் என்று ஏற்றத்தாழ்வுகள் நீக்கமற நிறைந்திருக்கும் இண்டு இடுக்குகளுக்கும் ஒளி பாய்ச்சுகிறது.

விவரணப் படங்களுக்கு உரிய தகவல்களான, எதிர்ப்பக்கத்தில் கறுப்பர் நடந்து வந்தால் சாலையைக் கடந்து, அந்தப் புறமாக ஒதுங்கி நடப்பது அல்லது பர்ஸைத் தொட்டுப் பார்த்து பத்திரப்படுத்துவது - போன்ற ஆராய்ச்சித் தகவல்களை சம்பவமாகக் கோர்த்திருக்கும் லாவகம்; பதவிக்கு போட்டியிடுவதால் நடுநிலையை பிரஸ்தாபிக்க, ஆப்பிரிக்க அமெரிக்க அதிகாரிக்கு பதக்கம் குத்தி பெயரை நிலை நாட்டத் துடிக்கும் அரசியல்வாதியின் சந்தர்ப்பவாதம்; வாயிற்கதவை மாற்ற பட்ஜெட் இடிப்பதால், கடையை பாதுகாக்க முடியாமல் 9/11 வெறுப்பிற்குள்ளான அப்பாவி நடுத்தர வர்க்க வர்த்தகரின் இயலாமை; தான் மெக்ஸிகன் அல்ல என்று இனத்தின் சினம் தலைக்கேறுபவர், அடுத்த காட்சியில் ஆசியரின் ஆங்கிலப் புலமையை எள்ளி நகையாடும் அமெரிக்கத்தனம்; என்று ஒவ்வொரு சம்பவமும் கதாபாத்திரங்களை எதார்த்தமாக நகர்த்துகிறது.

இவர் நல்லவர்; இவர் கெட்டவர்; இவர் உயர்ந்தவர்; இவர் மோசமானவர் - என்று மனிதன் வாழ்க்கையில் நடந்து கொள்வதில்லை. தவறிழைக்க வாய்ப்பு, அதிகார சந்தர்ப்பம், தப்பித்துக் கொள்ளும் சூழல், முன் நடந்த வாழ்க்கை சம்பவம், தனக்கு விதிவசத்தால் கிடைத்த அனுபவத்தினால் கிடைக்கும் நியாய மதிப்பீடு, போன்றவையே ஒவ்வொருவரையும் அவ்விதம் அந்தத் தருணத்தில் நடத்தி செல்கிறது. பிறர் பார்த்தால் மட்டுமே நியம அனுஷ்டானங்களை பின்பற்றுபவர்தான் இங்கே அதிகம். செல்லிடத்து சினம் காக்காமல் கோபத்தை பிரயோகிப்பதும், அதன் பலாபலன்கள் தன்னை வந்தடையும்போது பாதை மாறி செய்கையை மாற்றிக் கொள்வதை காட்டுகிறது.

இவ்வளவு சேரியமான படமாக இருந்த போதிலும் ஜனரஞ்சகமான விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. நொடி நேரம் வந்துபோகும் கதாபாத்திரங்களும் அழுத்தமான வசனங்களினாலும் நிதானமான கேமிரா கவனிப்பினாலும், நாவலில் ஏற்படக்கூடிய தாக்கத்தை திரையில் கொடுக்கிறார்கள்.

மிகை நாடும் கலை என்பதற்கு ஏற்ப, திரையில் மட்டுமே நடந்தேறக் கூடிய மன்னிப்பு கோரும் வாய்ப்புகளும், பிராயச்சித்தம் செய்து பாவமன்னிப்பு கேட்டுவிடும் அதிசய தற்செயல் காட்சியமைப்புகளும் பல இடங்களில் வாய் பிளக்க வைக்கிறது.

அமெரிக்காவில் வாழ்வது நரகத்தைப் போன்றதோ? எல்லாருமே மனதில் அழுக்கு கொண்டிருந்தாலும் புறப்பூச்சுகளில் மினுக்குபவர்களோ? நிஜம் ஒன்றாக இருக்க, வெளித்தோற்றத்தில் இன்முகம் பாராட்டுபவர்களோ?
என்று வெறுத்து வெதும்ப செய்யாமல், வாழ்க்கையில் விரியும் விநோதங்களைப் போல், இயற்கையில் நிகழும் பருவகாலங்களைப் போல், மக்கள் மனம் மாறிக் கொண்டே இருப்பதை சுட்டிக்காட்டி படம் முடிவடையாமல் தொடர்கிறது.



| |

9 கருத்துகள்:

பாபா நானும் எழுத ஆரம்பித்து பாதியில் நிற்கிறது இப்படத்தின் விமர்சனம். நான் சொல்ல வந்த நிறைய விடயங்களை நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

//இனத்துவேஷத்தை வெளிப்படுத்தும் அந்த அருவருக்கத்தக்க நிகழ்வை கண்டிக்கும் அவனுடைய கூட்டாளியே, பிறிதொரு சந்தர்ப்பத்தில், இன உணர்வை வெளிப்படுத்துகிறான்.//

அது ஒரு பிரமாதமான காட்சி. அந்த போலீஸ்காரன் ஒரு சந்தேக வினாடியில் துப்பாக்கி எடுத்து சுட்டதும், சுடப்பட்ட கறுப்பன் ஒரு பார்வை பார்ப்பானே - குழப்பமும், பிரமிப்பும், WTF என்ற கேள்வியும் நிறைந்த பார்வை...பார்ப்பவர் மனதைப் பதைக்க வைக்கும் காட்சி..

விரிவான விமரிசனத்துக்கு நன்றி.

டிசி பின்னூட்டர்களுக்கு __/\__

சமீபத்தில் புரட்ட ஆரம்பித்த அவாகியன் எழுத்தில் இருந்து...

Bob Avakian: "In a world marked by profound class divisions and social inequality, to talk about 'democracy' without talking about the class nature of that democracy and which class it serves - is meaningless, and worse. So long as society is divided into classes, there can be no "democracy for all": one class or another will rule, and it will uphold and promote that kind of democracy which serves its interests and goals. The question is: which class will rule and whether its rule, and its system of democracy, will serve the continuation, or the eventual abolition, of class divisions and the corresponding relations of exploitation, oppression and inequality.
- Bob Avakian"

பாலா,
இப்பத்தான் தூங்கி எந்திரிச்சு வந்தீங்களா? :-)) படம் வந்து ரொம்பநாள் கழிச்சு review போடுறீங்க.

இது மிக அருமையான படம்.

அது போல அமெரிக்க வாழ்க்கையின் மற்றொரு கோணத்தை சொல்லும் House of Sand and Fog சிறப்பான ஒன்று

House of Sand and Fog பார்த்தேன். வாழ்ந்து கெட்ட குடும்பத்தையும் மன அழுத்தத்தில் சில நாள் கவனமின்மையால் நேற்படுவதையும் பரிவுக்கும் காதலுக்கும் உள்ள மெல்லிய வித்தியாசத்தைத் தொட்டும் பயமுறுத்தியது. ஜெனிஃபர் கானலி குறித்து எழுதியிருக்கிறேனா என்று தேடியபோது... விமர்சனம் எழுத வேண்டிய ஹாலிவுட் படங்கள் | Mulholland Falls

என் பார்வையும் உங்கள் விமர்சனத்தை உள்ளடக்கியதே. எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் படத்தின் துவக்கத்தில் கொஞ்சம் குழப்பங்களை ஏற்படுத்தினாலும் சிறிது நேரத்திலேயே படத்துடன் ஒன்ற முடிகிறது.

முக்கியமாக எந்த அறிவுரையும் சொல்லாமல் இயல்பாக இருப்பதை இருப்பதாகப் படம் பிடித்ததுதான் சிறப்பு!

பிரதீப் __/\__

மிக இயல்பான பாத்திரப் படைப்பு...
அருமையான வசனங்கள், காட்சி அமைப்புகள்..

இரண்டு முறை திருட்டு டிவிடி வாங்கி இரண்டுமே பாதிக்கு மேல் ஓடாமல் நின்றுவிட அதே வாரமே தியேட்டர் சென்று முழு படத்தையும் பார்த்து முடித்தேன் :))

கப்பி ,

-----மிக இயல்பான பாத்திரப் படைப்பு-----

//மிகை நாடும் கலை என்பதற்கு ஏற்ப, திரையில் மட்டுமே நடந்தேறக் கூடிய மன்னிப்பு கோரும் வாய்ப்புகளும், பிராயச்சித்தம் செய்து பாவமன்னிப்பு கேட்டுவிடும் அதிசய தற்செயல் காட்சியமைப்புகளும் பல இடங்களில் வாய் பிளக்க வைக்கிறது.//

Conforming to the award movie syndrome, there were exaggerations; The characterization was more of 'what could be' rather 'what would be'?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு