Koratala Satyanarayana
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் கொரதாலா சத்யநாராயணா அஞ்சலி
தமிழோவியத்திற்கு நன்றி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முண்ணனித் தலைவர்களுள் ஒருவரான கொரதாலா சத்யநாராயணா, தன்னுடைய 83ஆம் வயதில் ஜூலை 1, சனிக்கிழமை இயற்கை எய்தினார். கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தவர், பலனில்லாமல் காலை 8:30க்கு மறைந்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல எழுச்சிகளுக்குத் தலைமை வகித்தவர். ஆந்திராவில் கம்யூனிஸ சித்தாந்தத்தை பரவலாக வித்திட்டதில் முக்கிய பங்கு சத்யநாராயணாவைச் சாரும்.
குண்டூர் மாவட்டத்தில் இருக்கும் ரேபாலே (Repalle) தொகுதியில் இருந்து 1962இல் முதன் முறையாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் இருந்து 1978இலும் சட்டசபைக்கு சென்றார்.
ஆந்திர மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக 1991 முதல் 1997 வரை பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக 2002 to 2005 வரை செயல்பட்டார். ஆந்திர விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வியல் சிக்கல்களைத் தீர்க்கவும் உழவர் முன்னேற்ற திட்டங்களை உருவாக்குவதிலும் பெரும் அக்கறையுடன் ஈடுபட்டவர்.
விவசாயத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்பு அமைப்பதிலும், அமைப்பு சாராதவர்களை கிசான் சபைகள் மூலம் யூனியன் உறுப்பினர்களாக ஆக்குவதிலும் தீவிரம் காட்டியவர். மார்க்சிஸ்ட்-லெனின் கோட்பாடுகளைப் பரப்புவதில் முனைந்ததால், மூன்றாண்டுகள் சிறைவாசமும் நான்கரை வருடங்கள் தலைமறைவாகவும் செயல்பட்டவர்.
மனைவி சுசீலாவும், இரு மகன்களும், ஒரு மகளும் சத்யநாராயணாவுக்கு இருக்கின்றனர்.
சத்யநாராயணா தெலுங்கானாப் போராட்டத்திலும் பங்கு கொண்டவர். பணக்கார நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், ஆந்திர பிரதேஷ் ரைது சங்கம் அமைப்பை நிறுவி, உழவர்களின் சக்தியை பிணைத்து, நிலக்கடன், விவசாயிகளின் தற்கொலைகள் போன்ற பல சோதனைகளில் இருந்து மீள வகை கண்டவர்.
பிரஜாசக்தி சஹிதி சமஸ்தா அமைப்பின் தலைவராக இருந்தபோது தீவிரவாதத்தை தீர்வாக எண்ணும் நக்ஸல்பாரிகளை ஜனநாயகத்தின் வழி திரும்ப பெரும் தூண்டுதலாக விளங்கினார். மொன்சாண்டோ ஒப்பந்தத்தின் படி, சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடிய மாறுபட்ட பருத்தி விதைகளை பயன்படுத்துவதை எதிர்த்தவர்.
செய்தி & தகவல்: யூ.என்.ஐ. | தொடர்புள்ள பக்கம்: விக்கி
tamiloviam | Koratala Sathyanarayana | CPI(M)
கருத்துரையிடுக