வெள்ளி, ஜூலை 07, 2006

Othello - Omkara

பீடி ஜலாய் லே ஜிகர் ஸே பியா
ஜிகர் மா படி ஆக் ஹை

ஒத்தெல்லோ - நாடக சுருக்கம் :: என் சொக்கன்

நன்றி: நாடகமல்ல, வாழ்க்கை - நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு

வெனிஸ் நகரின் பணக்காரப் பிரபு ஒருவரின் மகளான டெஸ்டமெனோ, கறுப்பு வீரன் ஓதெல்லோவைக் காதலித்து மணந்துகொண்டாள். டெஸ்டமெனோவின் அப்பா இந்தத் திருமணத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஓதெல்லோ தன் மகளை ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான் என்று வழக்குத் தொடர்ந்தார் அவர். ஆனால், தீவிர விசாரணைக்குப்பின், ஓதெல்லோவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஓதெல்லோவும் டெஸ்டமெனோவும் தங்களின் சந்தோஷ வாழ்க்கையைத் தொடங்கியபோது, அவர்களுக்கு இடைஞ்சலாக ஒரு விஷயம் வந்தது - போர் வீரர்களின் பதவி உயர்வு தொடர்பான அரசியல், அவர்களுடைய வாழ்க்கையை பாதித்துவிட்டது.

காசியோ என்பவன், ஓதெல்லோவுக்கும் டெஸ்டமெனோவுக்கும் நெருங்கிய சிநேகிதன். அவனுக்குதான், ராணுவத்தில் பதவி உயர்வு கொடுத்தான் ஓதெல்லோ. ஆனால், இந்த அறிவிப்பைக் கேட்டதும், காசியோவுக்கு முன்பிருந்தே ராணுவத்தில் பணிபுரிந்துவரும் இயாகோ என்பவனுக்குப் பொறாமையும் எரிச்சலும் உண்டானது. ஏனெனில், இந்தப் பதவிக்குத் தகுதியானவன் தான்தான் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான்.

ஆகவே, தனக்கு வரவேண்டிய பதவியைப் பிடுங்கிக்கொண்டுவிட்ட காசியோவின்மீதும், தனக்கு உரிய மரியாதையைக் கொடுக்காத ஓதெல்லோவின்மீதும் பயங்கரமான கோபம் கொண்டான் இயகோ. அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் பழிவாங்குவதற்கு ஒரு திட்டம் தீட்டினான்.

அதன்படி, ஒருநாள் காசியோவுக்கு ஏகப்பட்ட மதுவை ஊற்றிக்கொடுத்தான் இயாகோ. பின்னர், அவனுக்கு நன்கு போதையேறியபின், வலுக்கட்டாயமாக அவனை ஒரு வம்புச் சண்டைக்குள் நுழைத்துவிட்டான்.

இதனால், போர் வீரர்களிடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது. ஆனால், இயாகோ அந்தச் சிறிய விஷயத்தை, ஊதிப் பெரிதாக்கிவிட்டான். அதுபற்றி விசாரிப்பதற்காக வந்த ஓதெல்லோவிடம், காசியோவுக்கு ஆதரவாகப் பேசுவதுபோல் பாசாங்கு செய்து, பணி நேரத்தில் அவன் மது அருந்தியதை விளக்கமாக விவரித்தான் இயாகோ. இதனால், ஓதெல்லோவின் கோபம் அதிகரித்தது.

எல்லாம் ஒழுங்கோடும் கட்டுப்பாட்டோடும் நடக்கவேண்டும் என்று நினைக்கிற ஓதெல்லோவால், இந்தத் தவறை சகித்துக்கொள்ளமுடியவில்லை. ஆகவே, அவன் உடனடியாக காசியோவின் பதவி உயர்வை ரத்து செய்துவிட்டான்.

இயாகோவின் சதித் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது!

போதை தெளிந்தபின், நடந்ததையெல்லாம் கேள்விப்பட்ட காசியோ, அழுது புலம்பினான். 'இனிமேல் நான் எப்படி ஓதெல்லோவிடம் நல்ல பெயர் வாங்கமுடியும்?', என்று அவன் வருந்த, மீண்டும் அவனுக்கு உதவுவதுபோல் குழி பறித்தான் இயாகோ.

'தன் மனைவி சொன்னால் ஓதெல்லோ கண்டிப்பாகக் கேட்பார், ஆகவே, அவருக்கு உன்மீது உள்ள கோபம் குறையவேண்டுமானால், நீ நேராக டெஸ்டமெனோவிடம் சென்று பேசு', என்று காசியோவுக்கு யோசனை சொன்னான் இயாகோ. அவன் சொல்வதில் உள்ள சூட்சுமம் புரியாமல், நேரடியாக டெஸ்டமெனோவைச் சந்திக்கச் சென்றான் காசியோ.

நடந்ததையெல்லாம் அறிந்துகொண்ட டெஸ்டமெனோ, கண்டிப்பாக காசியோவுக்கு ஆதரவாகப் பேசுவேன் என்று வாக்களித்தாள். அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு காசியோ புறப்பட்டபோது, அவன் டெஸ்டமெனோவின் அறையிலிருந்து வெளியேறுவதை ஓதெல்லோ பார்த்துவிட்டான்.

அப்போது ஓதெல்லோவுடன் இருந்த இயாகோ, அவன் மனத்தில் தவறான ஒரு சந்தேகத்தை விதைக்க முயன்றான்.

டெஸ்டமெனோவை மிகவும் பிரியமாக நேசித்த ஓதெல்லோவுக்கு, அவள்மீது எந்த சந்தேகமும் இல்லை, என்றாலும், தந்திரமாகவும் புத்திசாலித்தனமான வாதங்களுடனும் தொடர்ந்து பேசி, காசியோவுக்கும் டெஸ்டமெனோவுக்கும் ரகசியத் தொடர்பு இருக்கிறது என்று ஓதெல்லோவை நம்பச் செய்துவிட்டான் அவன்.

போதாக்குறைக்கு, அப்போது ஓதெல்லோவைச் சந்தித்த டெஸ்டமெனோவும் காசியோவை ஆதரித்துப் பேசினாள், அவன் செய்தது அப்படியன்றும் பெரிய தவறு இல்லை. ஆகவே, அவனுக்கு மீண்டும் பதவி உயர்வு தரவேண்டும் என்று வாதிட்டாள் அவள். இதனால் ஓதெல்லோவின் குழப்பம் மேலும் அதிகரித்தது. இவளுக்கு ஏன் காசியோமீது அவ்வளவு அக்கறை? தன் மனைவி தனக்கு துரோகம் செய்கிறாளா, இல்லையா என்றெல்லாம் நிச்சயமாகத் தீர்மானிக்கமுடியாமல் திணறினான்.

ஓதெல்லோவின் இந்தக் குழப்பத்தைத் தெரிந்துகொண்ட இயாகோ, இன்னொரு தந்திரம் செய்தான். ஓதெல்லோ டெஸ்டமெனோவுக்குப் பரிசாக அளித்த ஒரு கைக்குட்டையைத் திருடி, காசியோ செல்லும் வழியில் போட்டுவிட்டான் அவன். இந்த விஷயம் தெரியாத காசியோ, அந்தக் கைக்குட்டையை எடுத்துத் தன்னோடு வைத்திருக்க, அதைச் சுட்டிக்காட்டி, 'டெஸ்டமெனோதான் இதை காசியோவுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறாள்', என்று பொய் மூட்டினான் இயாகோ.

ஏற்கெனவே சந்தேகப் பேயின் வலையில் சிக்கியிருந்த ஓதெல்லோ, இந்தப் பொய்யைச் சுலபமாக நம்பிவிட்டான். தன் மனைவி தனக்கு துரோகம் செய்கிறாள் என்று நிச்சயமாகத் தீர்மானித்த அவன், இந்தத் தவறுக்கு தண்டனையாக, அவளைக் கொன்றுவிடுவதாக முடிவுசெய்தான்.

ஓதெல்லோ டெஸ்டமெனோவின் அறைக்குச் சென்றபோது, அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்படியே அவளை அழுத்திக் கொன்றுவிட்டான் ஓதெல்லொ.

அதேசமயம், அலறியபடி அங்கே ஓடிவந்தான் காசியோ, அவன் உடம்பெல்லாம் காயம். அவனைக் கொல்வதற்கு, இயாகோதான் ஆள் அனுப்பியிருந்தான். எப்படியோ அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்ட காசியோ, அந்த அடியாளின் சட்டைப் பையில், சில முக்கியமான கடிதங்களைக் கண்டுபிடித்திருந்தான்.

அந்தக் கடிதங்களைப் படித்தபின், காசியோ - டெஸ்டமெனோ இருவருமே நிரபராதிகள், நடந்ததெல்லாம் இயாகோவின் சூழ்ச்சிதான் என்னும் உண்மைகள் ஓதெல்லோவுக்குத் தாமதமாகப் புரிந்தது.

அநியாயமாகத் தன்னுடைய காதல் மனைவியின்மீது சந்தேகப்பட்டு, அவளைக் கொன்றுவிட்டோமே என்று வருந்திய ஓதெல்லோ, தன் தவறுக்கு தண்டனையாக, தன்னுடைய வாளின்மீது விழுந்து தற்கொலை செய்துகொண்டான்.
- என் சொக்கன்கொன்கொனா சென் (எமீலியா), நஸ்ரூதீன் ஷா (ஹே ராம் தோற்றத்தில் கட்டைக்குரலில் பேசுகிறார்), பிபாஷா பாசு என்று நட்சத்திரக் கலக்கலாக இருக்கும் 'ஓம்காரா' திரைப்படம் ஒத்தெல்லோ அடிப்படையாகக் கொண்டு வெளிவருகிறது.

அஜய் தேவ்கன் - ஓதெல்லோ

கரீனா கபூர் - டெஸ்டமெனோ

சாய்ஃப் அலி கான் - இயாகோ

காசியோ - விவேக் ஓபராய் (கம்பெனி-க்குப் பிறகு அடுத்த ஹிட் எப்ப கொடுக்கப் போறீங்க?)

திரை முன்னோட்டங்களைப் பார்க்க | குல்சாரின் வரிகளில் பாடல்களைக் கேட்க

பொடிக் குறிப்பு: பாடல் வரிகளைக் கேட்டவுடன், மத்திய அமைச்சர் மாண்புமிகு அன்புமணி ராமதாஸ் - 'புகை பிடிப்பதை ஊக்குவிப்பதாக' அறிவித்து, சென்ஸார் செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும்!
| |

4 கருத்துகள்:

இந்த கதையின் தலைப்பு மட்டும் தெரியும். இப்போது தான் கதை தெரிந்தது. பாலா ... நன்றி

கருத்து சொல்ல விரும்பியதால் ...

நட்பையும், காதலையும் மையப்படுத்தியிருக்கும் கதைகள் (இது நாடகமா ?) என்றுமே நிலைத்திருக்கும் என்பதற்கு ஒத்தல்லோ நல்ல எடுத்துக்காட்டு.

நட்பையும், காதலையும் மையப்படுத்தியிருக்கும் கதைகள் (தளபதி/நட்புக்காக :P) என்றுமே நிலைத்திருக்குமோ என்னவோ!

என்னுடைய கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் கரீனாவின் காதல் காட்சிகளும் பிபாஷாவின் அயிட்டம் நம்பரும்தான் சாரே...

//என்னுடைய கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் கரீனாவின் காதல் காட்சிகளும் பிபாஷாவின் அயிட்டம் நம்பரும்தான் சாரே...//
உங்கள் கண்கள் அர்ஜுனின் கண்கள் போலும் சரியான இலக்கை மட்டும் பார்க்கிறது :) அர்ஜுன்னன் ஒரு புறாவைத்தான் பார்தேன் ஆனால் நீங்கள் இரண்டை ஒரே நேரத்தில் பார்க்கிறீர்கள்... கரீனா, பிபாஷா பற்றி சொன்னேன் வேறு இரண்டும் இல்லை :)

I need some translation works

Pygmalion - GB Show
Animal farm - George Orwell


Plz sent a link

Luckybuvi@gmail.com

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு