திங்கள், ஜூலை 24, 2006

Train, Sun, Big Dig, Wiki

கிழிமுறி உதிர் ஏடல்கள்

சன் டிவியில் 'லஷ்மி' ஆரம்பித்திருக்கிறது. ஹிந்தி சூப்பர்மேன் 'கிர்ரிஷ்' போல் மதங்கொண்ட யானையை நிறுத்தாமல், அறிவியல்பூர்வமாகக் கையாண்டதாக காண்பித்தார்கள். குஷ்புவை சின்னத்திரையில் 'குங்குமம்' சீரியல் மூலம் அறிமுகப்படுத்திய சுஜாதா விஜயகுமார் தயாரிப்பு. தற்போதைய வேலையை விட பெரிய வேலை கிடைத்தால், நிறைய சம்பளத்துக்கு ஜாகை மாறுவது போல் 'செல்வி' சீரியலை இயக்கி வந்த சுந்தர் கே விஜயன் இங்கே குதித்து விட்டார்.

தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் ஆரம்பம் விறுவிறுப்பாய் இருக்கும். புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆவார்கள். அவசரம் காட்டாத நிதானமாக படப்பிடிப்பு. தொழில் சிரத்தையோடு கூடிய பயம். புதுமுக எழுத்தாளராக தேவிபாலா இல்லாவிட்டாலும், டி.ஆர்.பி. ரேட்டிங் குதிரையில் முந்த வேண்டிய அவசியம்.

ரஜினி குதிரையைப் பற்றி சொன்னவுடன், எந்த ஒப்புமைக்கும் ரேக்ளா ரேஸ் நினைவுக்கு வருகிறது. 'எனக்குப் பிடித்த பாடலில்' ராஜப்பா வந்திருந்தார். முதல் பாடல்: 'பொதுவாக என் மனசு தங்கம்'

'பிறந்த ஊருக்கு புகழைத் தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செஞ்சா'
துள்ளல்

சாந்தோம் பள்ளிக்கும் செயிண்ட் பீட்ஸ் பள்ளிக்கும், சென்னையில் எப்போதும் போட்டி நிலவும். பக்கத்து பேட்டை செயிண்ட் ஆண்டனி முதல் லேடி சிவசாமி வரை பாதுகாத்து வீட்டில் சேர்த்து விடுவதில் ஆரம்பித்து, ஷூட்டிங் நடப்பது வரை எதிரும் புதிரும் அக்னி நட்சத்திரங்கள். 'அன்புள்ள ரஜினிகாந்த்' ரஜினி அங்கிள் எடுத்தது எங்க ஏரியா என்றால், 'படிக்காதவ'னின் 'ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி'யில் வருவது செயிண்ட் பீட்ஸ். அந்தப் பள்ளியில் படித்தவர்கள் ரஜினியை முதுகில் குத்தியவர்கள் (ரஜினியின் தம்பி வீட்டோடு மாப்பிள்ளை ஆக சென்று விடுவார்) என்று சண்டைக்கு சென்றோம்.

இரவு வீட்டுக்குத் திரும்பும் இரயிலில் மீண்டும் ஏசி ரிப்பேர். இந்தியாவாக இருந்தால், 'இது மட்டும் அமெரிக்காவாக இருந்தால்' என்று புலம்பி தீர்த்திருக்கலாம். பாஸ்டனிலும் ஊழல் அதிகம். பாலம் கட்டுவதில் காசு பார்ப்பது போல் பில்லியன் டாலர் சாலை அமைப்பதில் சரிவர முடிக்காமல், கட்டி முடித்த சில வருடங்களுக்குள் மழைத் தண்ணீர் உள்புகுவதும், ஆங்காங்கே இடிந்து விழுவதுமாக லஞ்சத்தைக் காட்டிக் கொடுக்கிறது. விசாரணை கமிஷன் போட்டிருப்பதாக செய்தித்தாள் தலைப்பு. 'நான் பொறுப்பில்லை' என்று கவர்னருக்கு நிற்கும் இருவரும் பொதுவாக ஒருவரை நோக்கி குற்றஞ்சாட்டுகிறார்கள். அரசியல்வாதிகள் எங்கும் கூட்டுக் களவாணிகள் என்னும் அக்மார்க் நடுத்தர வர்க்க ஓட்டம் வருகிறது.

காசு வாங்கியும் குளிர்சாதனத்தை பழுது பார்க்காத கருமி ஊர். தூக்கம் வரவில்லை. மாற்றுக் கருத்து, எதிர் சிந்தனை, என்று ஏட்டிக்குப் போட்டியாக பேசி பகை வளர்த்து விரோதிகளை வளர்ப்பதுதான் நான் இணையத்தில் மறுமொழியாக செய்து வருகிறேனோ என்று இருவுள் வாயில் பயணத்தில் யோசித்து வந்தேன். அதன் பிறகு, வலையின் மூலம் புதிய நண்பர்களை சந்தித்தோம். அவர்களுடன் தானே மோதி வருகிறோம். நிஜ உலகத்தில் இருக்கின்ற பிற தொடர்புகளுக்கு எதுவும் பாதகமில்லையே என்று தேற்றிக் கொண்டேன்.

மாலன் முன்பொரு கட்டுரையில் என்னைக் குறித்து எழுதியிருந்தது போல், எந்த ஏடலுக்கும் ஒரு மாற்றுப் பார்வை வைத்துக் கொண்டு விவாதிக்கும் அன்பர் என்னும் பிம்பத்துக்குள் விழாமல் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த போது இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது.

'தேவர் மகனை' மீண்டும் பார்க்க வேண்டும். அப்பாவுக்கும் மகனுக்கு நடக்கும் உரையாடலில், 'போயிடறேன்பா' என்று தப்பிக்க பார்க்கும் கமலைப் பார்த்து சிவாஜி, 'அய்யா, விதைச்சவன் என்னிக்காவது மரம் வளர்ந்து பயனை அனுபவிக்கிறானா? எங்க பாட்டன் வெதைச்சத நான் பழமா சாப்பிடறேன்... இங்கே நெல் விளைவிச்சு, உன்னை லண்டனில் படிக்க வச்சதுக்கு எதுக்காக?' என்பார்.

ரொம்ப யோசிக்காமல் தோன்றியதில் விக்கிப்பீடியா என்பது விதை. உடனடியாக பலன் கிடைக்காது. ஆனால், சிந்தாமல் சிதறாமல், பூத்துக் குலுங்கும் தோட்டம்.

தகவல் உதவி: சீரியலுக்கு வருகிறார் மீனா :: மு.மணி:



| |

2 கருத்துகள்:

எல்லாம் சரி... தலைப்பை மட்டும் ஏன் இங்கிலிபீஸ்லயே வெக்கறீங்க.. தமிழ்ல வெச்சா எங்கேயாவது (technorati?) சரியா தெரியமாட்டேங்குதா?

அதே (தேடுபொறிகளுக்காகவும், ப்ளாகரில் இருந்து தொலையாமல் இருப்பதற்காகவும்)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு