புதன், ஆகஸ்ட் 16, 2006

Art Appreciation Series - PA Krishnan : Part III

பகுதி ஒன்று | இரண்டு தொடரைப் பகிர்ந்து கொண்ட பிஏ கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி

பேரழிவினால் பிழைத்த ஓவியங்கள்

1

ஓவியத்திற்கும் சொல்லிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்று என்னை ஒருவர் சமீபத்தில் கேட்டார். இரண்டுக்கும் இடையே மிக முக்கியான ஒரு வேறுபாடு எனக்கு இதுதான் என்று தோன்றுகிறது. சொல்லின் எல்லைகள் பரந்தவை. நமது எண்ணங்கள் போல. எழுதிக் கொண்டே போகலாம் - மகாபாரதம் போல. ஆனால் ஓவியத்திற்கு எல்லைகள் அவ்வளவு பரந்தவை அல்ல. பார்வைக்கு உள்ள எல்லைகள் அனைத்தும் அதற்கு உண்டு. ஒரு சட்டத்திற்குள், அல்லது ஒரு சுவருக்குள், கட்டுப்பட வேண்டிய கட்டாயம் அதற்கு உண்டு. ஆனால் எழுத்தும் ஓவியமும் வெளிப்படுத்துபவை எல்லைகளைக் கடந்தவை. ஒரு சிறிய, சிறந்த கவிதை இந்த உலகையே அடைத்து வைத்துக் கொண்டு நம்மிடம் அதை காட்ட முற்படுவது போல ஒரு சிறந்த ஓவியமும் தான் காட்டுவது தனது எல்லைகளை மீறியது என்பதை வெளிப்படுத்த முயல்கிறது.

ஓவியம் எல்லைகளைக் கடந்தது என்பதை அறிந்து கொள்ள மனிதன் பல நூற்றாண்டுகளை கடந்து வர வேண்டியதாக இருந்தது. இடைப்பட்ட நூற்றாண்டுகளில் அவன் இரண்டு அடிகள் முன் வைத்தால் ஒரு அடி பின் வைக்க வேண்டிய கட்டாயத்தை பல முறைகள் எதிர் நோக்கினான். இலத்தீன் மொழியில் ஒரு பழமொழி உண்டு: quod legendibus scriptura,..hoc idiotis ..pictura - ஓவியம் கடவுளின் சொற்களை முட்டாள்களுக்கு (படிக்காதவர்களுக்கு) விளக்க முற்படுகிறது. இந்தப் பழமொழியில் கடவுள் என்ற சொல்லை எடுத்து விட்டு அரசு, அரசன், ஆண்மகன், ஆண்டை, ஆசிரியன், போன்ற பல சொற்களைப் போட்டுக் கொள்ளலாம். அவை ஓவியம் எவ்வாறு பல்வேறு கால கட்டங்களில் நோக்கப் பட்டது என்பதை ஒருவாறு விளக்கும். ஓர் ஓவியத்தைப் பார்த்து அதை விளக்க முயல்பவனுக்கு ‘கலை விமரிசகன்’ என்ற பதவி கிடைத்தது சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான்.


2

ஜாடி ஓவியங்களைப் பற்றி நான் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன். இந்த ஓவியங்களில் இரு வண்ணங்கள்தான் பெரும்பாலும் பயன் படுத்தப் படுகின்றன. ஒன்று கறுப்பு. மற்றது சிவப்பு. முதலில் சிவப்பு ஜாடிகள் மீது கறுப்பு வண்ணத்தின் ஓவியங்கள் வரையப் பட்டன. பின்னால் பின்புலம் கறுப்பில் தீட்டப் பட்டு ஜாடியின் வண்ணமே ஓவியத்தின் வண்ணமானது. கிரேக்க ஓவியங்களில் எவ்வாறு பல ஜாடி ஓவியங்களோ அதே போன்று ரோமாபுரி ஓவியங்களில் பல fresco என்ற சுவரோவியங்கள். Fresco என்ற சொல் buon fresco என்ற இத்தாலிய சொல்லிலிருந்து வந்தது. “உண்மையாகவே புதிது” என்ற பொருள் கொண்டது. இந்த முறையில் காயாத சுவரில் வண்ணங்களைக் கொண்டு ஓவியங்கள் தீட்டப் படுகின்றன. இதனால் சுவர் காயக் காய வண்ணங்களும் சுவரின் மேற்பூச்சின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றன. பல வருடங்கள் அழியாமல் இந்த ஓவியங்கள் இருப்பதற்கு fresco முறை ஒரு முக்கியமான காரணம்.

Fresco ஓவியங்களில் மிகப் புகழ் பெற்ற ஓவியங்கள் பாம்பெய் (Pompeii) நகரத்தைச் சேர்ந்தவை. கி.பி. முதல் நூற்றாண்டில் ரோமப் பேரரசின் ஒரு முக்கியமான நகரமாக பாம்பெய் இருந்தது. இந்த நகரில் பணம் படைத்தவர் பலர் வீடுகளின் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. ரோமப் பேரரசின் மற்றைய நகரங்களின் வீடுகளிலும் இத்தகைய ஓவியங்கள் தீட்டப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இவற்றில் பிழைத்தவை அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். பாம்பெய் நகர ஓவியங்கள் பிழைத்த ஓவியங்கள். பேரழிவினால் பிழைத்த ஓவியங்கள்.


3

பாம்பெய் வெஸுவியஸ் மலையின் அடிவாரத்தில் இருந்த ஒரு நகரம். வெஸுவியஸ் மிக உயரமான மலை இல்லை என்று பாம்பெய் நகரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும். அமைதியான மலை என்றும் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கி. பி. 79 ம் ஆண்டு அந்த மலையில் உள்ளிருந்து தீக்குழம்புகள் பீரிட்டுக் கிளம்பின. பாம்பெய் நகர மக்கள் அவர்கள் தினமும் பார்த்துக் கொண்டிருந்த மலை எரிமலை என்பதை அறியும் முன்பே எரிமலைக் குழம்பும் அதிலிருந்து வெடித்துக் கிளம்பிய கற்களும் அவர்களைப் புதைத்து விட்டன. ஒரு முழு நகரமே எரிமலைச் சாம்பலில் புதையுண்டு அழிந்து விட்டது.

புதைந்த நகரம் மக்கள் மனங்களில் பல நூற்றாண்டுகள் இருந்து, தேய்ந்து, மறையத் தொடங்கியது. முழுவதுமாக மறைந்தும் இருக்கும். மறையாததின் காரணம்1748 ம் வருடம் இந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கலாம் என்று ஒரு தொல் பொருள் ஆராய்ச்சியாளர் நினைத்தது. ஆனால் அவரே ஒரு முழு நகரமே சாம்பலுக்குக் கீழ் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. முதலில் தோண்டியவர்கள் சாம்பலுக்கு கீழே இருக்கும் கலைப் பொருள்களுக்காகத்தான் தோண்டினார்கள். அவர்கள் தோண்டிய முறை அவ்வளவு அறிவியற்பூர்வமாக இல்லாததால் பல கட்டிடங்களும் அவற்றின் சுவர்களில் இருந்த ஓவியங்களும் அழிக்கப் பட்டன. சில சுவர்கள் அழிந்தன. ஆனால் அவற்றின் மீது தீட்டப் பட்ட ஓவியங்கள் மீட்டெடுக்கப் பட்ட்டு அருகில் இருந்த நேப்பிள்ஸ் அருங்காட்சியகத்தை அடைந்தன.

நெப்போலியனும் பிரெஞ்சுக்காரர்களும் நேப்பிள்ஸ் நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் (1805-1815) தோண்டும் முறை சீரடைந்தது. இதற்கு பின்பு Fiorelli, Spinazzola போன்ற அகழ்வாளர்களில் முயற்சியால் இன்று பாம்பெய் நகர கட்டிடங்களில் பல அன்றிருந்தபடி இன்றும் இருக்கின்றன. அவற்றின் சுவரோவியங்களும் பிழைத்து விட்டன. பிழைத்த ஓவியங்கள் எல்லாம் பிழைக்க வேண்டிய ஓவியங்கள் என்று சொல்ல முடியாது என்று கலை வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆனால் ஒரு நகரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வாறு இயங்கியது என்பது பாம்பெய் நகரத்திற்குச் சென்றால் தெரியும். நமது தமிழ் நகரத்தில் சுவரொட்டிகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த நகரத்தில் சுவரோவியங்கள்.

இன்று ரோம் நகரத்திலிருந்து காலையில் புறப்பட்டால் பாம்பெய் நகரத்தைப் பார்த்து விட்டு இரவில் திரும்பி விடலாம். ஒரு நாளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நகரத்திற்கு சென்று வருவதற்கு ஈடானது இந்தப் பயணம். ஆனால் செல்பவர்களில் பெரும்பாலானவர் இதை உணர்ந்து செயல்படுவதில்லை என்பது வருத்தப் பட வைக்கும் உண்மை.


4

ரோமப் பேரரசின் கலை கிரேக்கக் கலையை முழுவதும் சார்ந்தது என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ரோம எழுத்தாளரான பிளினி தனது நூலில் கிரேக்க ஓவியங்கள் பலவற்றை அவர் காலத்து ஓவியர்கள் மறு பதிவு செய்திருப்பதைக் குறிப்பிடுகிறார். இவற்றில் ஒரு ஓவியத்தை நான் நியூ யார்க் அருங்காட்சியகத்தில் பார்த்தேன். பாம்பெய் சுவரோவியம் அப்படியே பேர்த்தெடுக்கப் பட்டு நியூ யார்க்கில் வைக்கப் பட்டிருக்கிறது. சிறுவயதில் நான் பார்த்த நாடக அரங்குகளின் திரைகளை நினைவு படுத்திய இந்த ஓவியம் ஒரு முக்கியமான ஒன்று என்பது எனக்கு இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக Janson எழுதிய ‘கலையின் வரலாறு’ புத்தகத்தைப் படிக்கும்போது தெரிய வந்தது. இந்த ஓவியத்தை வரைந்தவன் ஒரு பரப்பின் கட்டமைதியைப் (texture) பற்றி நன்கு அறிந்தவன் என்று அவர் குறிப்பிடுகிறார். மூன்றாவது பரிமாணத்தைப் பற்றிய ஒரு புரிதலும் அவனுக்கு இருந்திருக்கிறது. ஆனால் ஓவியத்தில் கதவுகளும் தூண்களும் சாளரங்களும், சுவர்களும் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொள்கின்றன. கலைஞன் இன்னும் வெளியின் ஆழத்தை (spatial depth) சித்தரிப்பதில் வெற்றி பெறவில்லை என்பதை இந்த ஓவியம் உணர்த்துகிறது.

ரோமக் கலைஞர்களுக்கு கை வராத மற்றொரு ஒத்தி ஒளியால் ஏற்படும் நிழல் விளைவுகளை வரைவது. இதற்குச் சான்று நேப்பிள்ஸ் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு சுவரோவியம். இந்த ஒவியத்தில் பீச் பழங்களும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி ஜாடியும் தீட்டப் பட்டிருக்கின்றன. பழங்களின் வழுவழுப்பு அற்புதமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஜாடியில் இருக்கும் தண்ணீர் அதற்கு ஒளி ஊடுருவும் தன்மை இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒளி எந்தப் பக்கத்திலிருந்து வருகிறது, அது பொருட்களின் மீது பதிக்கும் மாற்றம் என்பவற்றையெல்லாம் இந்த ஓவியத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியாது. பார்க்கும் உலகத்தை ஒரு நிலைப்பாங்கோடு (consistence) பார்ப்பதற்கு ஓவியன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடக்க வேண்டியிருந்தது.


5

ரோமச் சுவரோவியங்களில் என்னைக் கவர்ந்த ஓவியங்களில் சில பாம்பெய் நகரத்தில் வரையப் படாதவை. கன்னி ஒருத்தி மலர் கொய்வது என்ற ஓவியம். நேப்பிள்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பது. காலத்தை கன்னி உருவகப் படுத்துகிறாள். நமக்குத் தெரிவது அவளது பின்புறமும் முகத்தின் ஒரு பகுதியும்தான். புருவத்தின் மேடு தெரிகிறது. அழகிய கழுத்தின் சரிவு தெரிகிறதுஅவள் தன்னைச் சுற்றியிருக்கும் எளிய உடை அவள் நடப்பதால் சலனமுறுவது தெரிகிறது. நடந்து கொண்டே செடியிலிருந்து பூக்கொய்யும் நளினம் தெரிகிறது. முகம் சரியாகத் தெரியாக விட்டாலும் இவள் பேரழகியாக இருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரிகிறது. ஒரு கலைஞன் உத்திகளை ஒரே பாய்ச்சலில் தாண்டி அழியா நிலையை அடைய முடியும் என்பதை இந்த ஓவியம் உணர்த்துகிறது.

மற்றொரு ஓவியம் Faun என்ற கொம்பும் வாலும் உள்ள கிராம தேவதை. இந்தத் தேவதை ஒரு குழந்தைத் தேவதை. கண்களைச் சாய்த்துக் கொண்டு கள்ளமற்று சிரிக்கும் தேவதை. இந்த ஓவியத்தில் அதன் தலை மட்டும் தெரிவதால் வால் தெரிய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் அதன் கொம்புகளும் தெரியவில்லை. அது தனது தலையில் அணிந்திருக்கும் பசிய ஆலிவ் இலைகள் தெரிகின்றன. முன்பற்கள் தெரிகின்றன. கலைந்திருக்கும் தலை மயிர். சிறிது வளைந்திருக்கும் காது. பார்ப்பவருக்கு இது குறும்பு மிக்க குழந்தை என்பது உடனே தெரியும். மனிதக் குழந்தையா என்ற ஐயத்தையும் உடனே வரவழைக்கும்.


6

பாம்பெய் பற்றிக் குறிப்பிடும்போது அதன் மொசைக் சித்திரங்களைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. The house of Faunல் இருக்கும் அலெக்ஸாண்டருக்கும் பாரசீக மன்னன் டரயஸிற்கும் நடந்த போரைப் பற்றிய மொசைக் சித்திரம் சுமார் பத்து லட்சம் வண்ணக்கற்களைக் கொண்டு படைக்கப் பட்டது. சுமார்19 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட இந்தச் சித்திரத்தில் அலெக்சாண்டர் பரட்டைத் தலையோடு இருக்கிறான். பிதுங்கி வெளி வந்து விடும் போன்ற கண்கள். கவசத்தில் மெடூஸா - பார்ப்பவர்களைக் கல்லாக்கி விடுபவள். குல்லாயைப் போன்ற தலைக் கவசம் அணிந்திருக்கும் டரயஸ் கண்களில் பயம் ஒளிர்கிறது. அவன் முன்னால் அண்ணனுக்காக தனது உயிரைக் கொடுக்க முற்படும் ஆக்ஸியத்ரெஸ். ஈட்டிகள் சித்திரத்தின் மேற்புறத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஓடும், இறக்கும், உறையும் குதிரைகளும் பின் வாங்குவோமா என்று எண்ணும் பாரசீக வீரர்களும் மற்ற பகுதிகளில் நிரம்பி வழிகிறார்கள்.

மற்றொரு மறக்க முடியாத் மொசைக்கைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ரோம் நகரத்தில் ஒரு அருங்காட்சியகத்தில் இருக்கும் (Terme Museum?) இந்த சித்திரத்தில் நடுவில் மெடூஸாவின் தலை தெரிகிறது. காற்றில் பறக்கும் தலை மயிர். கண்களில் பதற்றம். அவள் இருப்பது ஒரு வட்டத்தில். அந்த வட்டத்தைச் சுற்றி ஒரு பெரு வட்டம். அந்த வட்டத்தை நிரப்புவது வரைவியல் வடிவங்கள். முதலில் முக்கோணங்களோ என்று தோன்றுகிறது. கூர்ந்து பார்த்தால் கறுப்பு ஒரு பாதி வெள்ளை ஒரு பாதி கொண்ட சதுரங்கள். மெடுஸா பக்கம் குறுகி, பின் பெருகி விரியும் இந்தச் சதுரங்கள் ஒரு சுழலும் வட்டத்தைப் பார்த்தால் ஏற்படும் அனுவத்தைக் கொடுக்கின்றன. Duchamp போன்ற கலைஞர்கள் பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் படைக்கப் பட்ட மொசைக் இது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பி.ஏ.கிருஷ்ணன்



| |

3 கருத்துகள்:

பாலா,

அந்தப் பூப்பறிக்கும் பெண்ணின் ஓவியம் அப்படியே இழுத்துப் பிடித்து விட்டது. ஓவியங்களைப் பார்த்துப் புரிந்து கொள்வது என்பதெல்லாம் எட்டாத தூரமாய், ரவி வர்மாவின் சாமிப் படங்களை மட்டுமே பார்த்திருந்த எனக்கு இத்தகைய விளக்கங்களும், பல உணர்ச்சிக் குவியல்களை வடித்து வைத்திருக்கும் படைப்புகளும் ஏதோ புதிய உலகை அறிமுகப்படுத்துவதாக உள்ளன. நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

சிவா, 'புலிநகக் கொன்றை' (ஆங்கிலத்தில் 'Tiger Claw Tree') எழுதிய பி.ஏ. கிருஷ்ணன் உயிர்மையில் எழுதி வருவதை, வலைப்பதிவர்களின் வாசிப்புக்காக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

அவரிடம் தங்களின் பதிலை தருவேன். பல கால வாசிப்பௌ குறுக்கி, செறிவுக்கும் பாதகமில்லாமல் விவரிக்கும் பி.ஏ.கே.வுக்கு நன்றிகள் பல.

மனித மனதின் உணர்வுகளை தடையின்றி வெளிப்படுத்தும் வடிவங்களில்
மிகச் சிறந்ததும், பழமையானதுமானது, ஓவியம்.
வண்ணங்களும்,வடிவங்களும்,கோடுகளும்,வெளிப்படுத்தும் முறைகளும்
கலையத்தாண்டி,காலங்களைத் தாண்டி மக்களின் வாழ்க்கை முறைகளைத் தாண்டி நம் "Primitive Self" ஜ உணர வழி வகுக்கிறது.

இந்த வகையில் கிருஷ்ணன் தொடர் சிறப்பாக வருகிறது.இந்தத்
தொடர் விரிவாகவும் , பல ஓவிய முறைகளையும்,ஓவியர்களையும்
உள்ளடக்கி இருக்குமென்று நம்புகிறேன்.

பாபாவுக்கு நன்றி.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு