புதன், ஆகஸ்ட் 09, 2006

Pets - Cat Experiences

நல்ல கதையைப் படித்தவுடன், புத்தகத்தை மூடிவைத்துவிட்டு யோசனை செய்யத் தோன்றும். வலையில் கதை படித்தால், குளம்பி அருந்தவோ, அலுவல் வேலையை தொடரவோ வைக்கும். சிமுலேசனின் பூனைக்குட்டிகள் கதையை படித்தவுடன் என்னுடைய பூனை மஹாத்மியங்கள் எழுத வைத்தது.

கரப்பான் பூச்சியை சாப்பிடும் என்றுதான் எனக்கு பூனை அறிமுகம் ஆனது. கரப்புகளுக்கு பாகுபாடு தெரியாது. குத்திட்டு உட்கார்ந்து மோட்டுவளையை அண்ணாந்து நோக்கி எண்ணிக்கை போடும் இடத்திலும் மீசையை ஆட்டும். ஸ்லோக புஸ்தகங்களிலும் குடியிருக்கும்.

அஃபிஷியலாக வீட்டுக்குள் நுழைய, ஜூ.வி.யில் உலாவிய கிளுகிளு ராத்திரி ரவுண்ட-அப் போகும் ஆந்தையாருக்கும் சினிமா கிசுகிசுக்கும் மிஸ்டர் மியாவுக்கும் மட்டுமே அனுமதி உண்டு. ஆனால், கரப்புகள் இரவு நேரங்களில் சமீபத்திய Barnyard: The Original Party Animals திரைப்படம் போல் என்ன குசுகுசுக்குமோ? பாத்ரூமில் அரட்டை கச்சேரி நடந்தேறும். பயம் கலந்த அறுவருப்புடன் விளக்கைப் போட்டு, ஐக்கிய கரப்புகள் சபை கூட்டத்தை கலைப்பேன்.

கிளி பறந்து வந்து தோளில் உட்கார்ந்தால் அழகு. இரு தோளில் உட்கார கரப்புகளுக்குள் பறக்கும் போட்டி நடந்தால்? வேற்று கிரகவாசிகள் தங்கும் 'Men in Black' தோற்றங்களுடன், கனவில் 'War of the Worlds' பூதாகரத்துடன் மிரட்டியதால், பூனையார் தருவிக்கப்பட்டார்.

தம்பி, தங்கை இல்லாதவனுக்கு அடக்கி ஆள, சொன்னதை அடியொற்ற, தோற்றத்தில் சிறிய தோழி கிடைத்தது. கிட்டத்தட்ட 'Meet the Parents' மிஸ்டர் ஜின்க்ஸ் (Mr. Jinx) பழக்கவழக்கம். வேறு யாராவது வேடிக்கை பார்த்தால் மலஜலம் கழிக்காது. கதவை சார்த்திக் கொள்ளாத வருத்தத்துடன் காலைக்கடனை கரெக்டாக முடிக்க வேண்டிய இடத்தில் புத்திசாலித்தனமாக முடிக்கும்.

எது உடைந்தாலும், எவ்வளவு சிதிலமடைந்தாலும் தூக்கிப் போடாமல் பாதுகாப்பது, மத்தியவர்க்க குடும்பங்களின் முக்கிய அடையாளம். அமெரிக்காவில் பூப்பூக்கும் காலத்திற்கு ஒரு முறை, இலையுதிர் காலத்திற்கு இன்னொரு முறை என்று 'காராஜ் ஸேல்' (Garage sale) போட்டு பழையன கழிதலை நிறைவேற்றுகிறார்கள். அவ்வாறு புதியன புகாத எங்கள் வீட்டு சிதிலமடைந்த கிணற்றுக் கம்பியில் தவறி தண்ணீருக்குள் விழுந்தார் 'பூனை'.

நாமகரணமிடாத பூனைகள்தான் எனக்குப் பழக்கம். அமெரிக்கா வந்தவுடன் ஆர்வக் கோளாறினாலும், தனிமை வாட்டியதாலும், வாடகை வீடாக இருந்தாலும் செல்லப் பிராணி வளர்க்க அனுமதி இருந்ததனாலும், இரு 'அனாதரவான பூனைகளுக்கு அடைக்கலம் கொடுப்போர் தேவை' அறிவிப்பில் தடுக்கி விழுந்ததனாலும், ஒரே சமயத்தில் இருவர் வந்து சேர்ந்தனர். ஒரு பூனையையும் இன்னொன்றையும் வேறுபடுத்த பெயர் வைத்தே ஆக வேண்டிய கட்டாயம்.

காதலியின் பெயரை குழந்தைக்கு வைத்து அழகு பார்ப்பது சினிமா தாத்பர்யம். வீட்டுக்கு அடிக்கடி வருகை புரியும் நண்பனின் காதலியின் பெயரை, பூனைக்கு சூட்டுவது, தமிழ் சினிமா ரசிகனின் அடையாளம். தோழனின் சந்தியா (படிக்க: சவுண்ட் பார்ட்டி: நிஜமல்ல, கதை-3!) நினைவாக 'சாண்டி' ஆனாள்.

செல்லங்களுக்கான உணவு மூன்று வகைப்படும்:
* உயர் உயர் உயர் உணவு
* உயர் உயர் உணவு
* மிச்சம் மீதி கழிசடை.

நான் தயாரித்த தக்காளி ரசம், முழு மிளகுடன் நெய்முந்திரி கூடிய வெண்பொங்கல் வகையறா ருசிக்காததால், வாரந்தோறும் வாங்கும் மளிகைப் பட்டியலில் உயர் உயர் உணவு கூடிக் கொண்டது.

சென்னையில் காற்றோட்டமாக குப்பைத் தொட்டி, மரஞ்செடி பக்கம் ஒதுங்கிய தங்களின் ஒன்று விட்ட அண்ணாக்கள் போல் இல்லாமல், வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி தங்கள் ரகசியத்தைப் பதுக்க 'சிறப்பு மலமணல்' அமைக்க வேண்டும். ஒரு முறை சென்ற பிறகு 'சொர்க்கம் என்பது நமக்கு புத்தம்புதிய மலமணல்தான்' என்று விடாப்பிடியாக 'மியாவ் மியாவ்' தொண்டை கிழிய, மாற்ற வைக்கும். மலஜல மணல் மாற்றுவது, குழந்தைக்கு டயாபர் மாற்றுவதற்கு முன்னோட்டமாக அமையும்.

மேற்கத்திய உலகில் பிராணி வளர்ப்பது நச்சுப்பிடித்த வேலை. உரிமம் பெற வேண்டும். கருத்தடை முடிக்க வேண்டும். நகம் வெட்ட வெண்டும்; மீறி எழும் நக அரிப்புக்கு ஏற்ற உபகரணங்களை வீட்டிற்கு வாங்க வேண்டும். முடியை சீராக்க வேண்டும்; அதையும் தாண்டி உதிரும் ரோமங்களை சுத்தமாக்க பொறுமை வேண்டும். பல்வலி, மூட்டு டாக்டர், வயதானவை, குண்டு உடம்பு என்று சிறப்பு மருத்துவ வசதி கவனிக்க வேண்டும். நான் நீள் விடுமுறையில் பதினைந்து நாள் பயணித்தாலும் பூனையை ஒழுங்காக பராமரிக்கா விட்டால், எஸ்.பி.சி.ஏ முதல் அனிமல் ப்ளானெட் டிவி வரை ஜீவகாருண்யம் இல்லாமல் முட்டிக்கு முட்டி தட்டி விடுவார்கள்.

குடும்பம் குட்டி என்று ஆன பிறகு, தற்போது 'பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே, பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே' என்று எம்.எஸ் ராஜேஸ்வரியின் குரலில் களத்தூர் கமல் பாடும்போது நெஞ்சம் குறுகுறுப்பதில்லை.
| |

3 கருத்துகள்:

சொன்னதெல்லாம் மெத்தச் சரி.

இதோ கிளம்பிக்கிட்டு இருக்கேன், உயர் உயர் உயர் உணவு வகைகள் வாங்க.


நம்ம 'ஆள்'க்கு சக்கரை அதிகம்.
பல்லெல்லாம் கொட்டிப் போச்சு.

பாபா,

கரப்பு வேட்டை குறித்து, "ஜாலியன்வாலாபாக்" என்ற தலைப்பில், ம.வே.சிவகுமார் எழுதிய சிறுகதை படித்ததுண்டா? தினமணிக் கதிரில் வந்தது என்று நினைக்கிறேன்.

படித்தவர்கள் யாரேனும் விமர்சிக்கலாம்.

- சிமுலேஷன்.

அட... பூனையுடனே போஸ் கொடுக்கும் உங்களிடம் கேட்காமலா! உங்கள் பழைய சுட்டிகளையும் (நேரம் கிடைக்கும்போது) கொடுங்களேன்...

----"ஜாலியன்வாலாபாக்" என்ற தலைப்பில், ம.வே.சிவகுமார்----

இல்லையே...

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு