செவ்வாய், செப்டம்பர் 26, 2006

Art Appreciation Series - PA Krishnan : Part IV

பகுதி ஒன்று | இரண்டு | மூன்று.
தொடரைப் பகிர்ந்து கொண்ட பிஏ கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி


உயிருண்ட ஓவியங்கள் :: பி.ஏ.கிருஷ்ணன்


1

எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று அனடோல் பிரான்ஸ் எழுதிய The Procurator of Judea. இந்தக் கதை ஏசுநாதர் சிலுவையில் அறையப் பட்ட போது எருசெலத்தில் இருந்த இரு ரோமாபுரி படைத் தலைவர்களைப் பற்றியது. பல வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். ஒருவர் மற்றொருவரிடம் கேட்கிறார்: “உனக்கு நினைவு இருக்கிறதா? நாசரத்தின் ஜீஸஸை? சிலுவையில் அறையப் பட்டாரே.”

“எனக்கு நினைவு இல்லை.”

ஏசுநாதர் அவர் காலத்திற்கு அருகாமையில் வாழ்ந்தவர்களுக்கு அதிகம் தெரிந்திராதவர். கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவில் ஊன்ற ஆரம்பித்தது ஏசுவின் மறைவிற்கு முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு. பேரரசர் கான்ஸ்டன்டைன் தனது மிலன் அறிக்கையில் கிறித்தவ மதத்திற்கு அங்கீகாரம் அளித்த பின்.

கிறித்தவ மதம் வளரத் தொடங்கிய உடனேயே ஓவியங்களில் அந்த மதத்தின் தாக்கம் வளரத் தொடங்கி விட்டது. முதல் கிறித்தவர்களுக்கு ஓவியங்களின் மீது அவ்வளவு நாட்டம் இல்லை. மேலாக ஒரு வெறுப்பு இருந்தது. யூத மதத்தின் தாக்கம் அது. ஆனாலும் ஒரு ஓவியம் அசையாது, இருந்த இடத்தில் இருந்து கொண்டு எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் செய்தி படிக்காத மக்களை எளிதாகச் சென்றடையும் என்பதையும் முதற் கிறித்தவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே ஓர் இரட்டை மனப்பான்மையோடு அவர்கள் ஓவியத்தை அணுகினார்கள். கிரேக்க ரோம ஓவியங்களில் இருந்த துடிப்பு அவர்களது ஓவியங்களிலும் மொசைக் சித்திரங்களிலும்-சில விதி விலக்குகளைத் தவிர- அநேகமாக இல்லை. நளினமும், இயற்கையும், மூன்றாவது பரிமாணத்தின் ஆழத்தைக் காட்ட வேண்டும் என்ற தவிப்பும் இந்த ஒவியங்களில் மறைந்து போயின. ஓவியங்கள் உடலைச் சித்தரிப்பதை விட உடலுள் இருக்கும் ஆன்மாவைச் சித்தரிக்க முயல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.

ரவெனா என்ற இத்தாலிய நகரத்து தேவாலயத்தில் இருக்கும் ஒரு மொசைக் சித்திரம் ஒரு விதி விலக்கு. பைபிளில் வரும் ஒரு அற்புதத்தைக் கூற முயல்கிறது. ஏசு பிரான் ஐந்து ரொட்டிகளையும், இரு மீன்களையும் வைத்துக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் அற்புதம் அது. பின் புலம் தங்க நிறத்தில் இருக்கிறது. ஏசு பிரான் தலையைச் சுற்றிய ஒளிவட்டம் தெளிவாகத் தெரிகிறது. ஒளி வட்டம் கிரேக்க ரோமக் கடவுளர்களின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தது. ஏசு பிரானுக்கு பின்னால் இப்போது வந்து விட்டது. இந்த ஏசு தாடி வைத்த ஏசு அல்ல. பெரிய கண்களையுடைய ஒரு முப்பதாண்டு இளைஞர். கைகளை விரித்துக் கொண்டு ஆசி அளிக்கிறார். ஊதா மேலாடை அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இரு புறமும் வெள்ளை ஆடை அணிந்த அப்போஸ்தலர்கள் அவரிடம் ரொட்டிகளையும் மீன்களையும் கொடுக்க முற்படுகிறார்கள்- துணியால் கைகளை மறைத்து வைத்துக் கொண்டு ஒரு அரசரிடம் காணிக்கை செலுத்துபவர்கள் போல. ஏசுபிரானின் முதன்மையும், உறுதியும், பெருமிதமும் இந்த ஓவியத்தில் தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கலைஞன் தேர்ந்தவன். அவனுக்கு கற்களின் வண்ண வேறுபாடுகள் மூலம் மனித முகத் தோலின் மென்மையைக் காட்ட முடிந்திருக்கிறது.. நிழல்களைக் கொணர முடிந்திருக்கிறது. ஓவியத்தின் இருபுறங்களிலும் பாறைகளில் முளைத்திருக்கும் பசிய செடிகள். இந்தச் செடிகளே அன்றைய ஓவியக் கலையின் உருவகமோ என்று நம்மை நினக்க வைக்கிறது இந்த மகத்தான மொசைக் சித்திரம்.



2

இது ஒரு எளிய அறிமுகம் என்பதால் பைசாண்டிய ஓவியங்களைப் பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை. பைசாண்டிய ஓவியங்கள், தங்களுக்குள் கிரேக்க உத்திகளைப் பொதிந்து வைத்துக் கொண்டு, மேற்கத்திய ஓவியங்களுக்கு முன்னோடிகளாக இருந்தன என்று கலை விமரிசகர்கள் கருதுகிறார்கள். நிழல்-ஒளியின் விளையாட்டு, முன்குறுக்கம் போன்ற உத்திகள் பைசாண்டிய ஓவியங்களில் மறைந்து இருந்து கொண்டு ஒரு மேதையின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்று நினைத்துப் பார்க்கும் போது இந்தக் காத்திருப்பு நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால் அன்றைய கலைஞர்களிடம் நீங்கள் புதிதாக ஏன் எதுவும் வரையவில்லை என்ற கேள்வி கேட்கப் பட்டிருந்தால் அவர்களுக்கு கேள்வி புரிந்திருக்காது. இன்று பாடும் இசைக் கலைஞர்களிடம் நீங்கள் ஏன் பழைய ராகங்களையே பாடிக் கொண்டிருக்கிறீர்கள், ஏன் புது ராகங்களைக் கண்டு பிடித்துப் பாடக் கூடாது என்ற கேள்வி கேட்கப் பட்டாலும் அவர்களுக்கு அந்தக் கேள்வி புரியாது. தமது மூதாதையர்கள் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்த இந்த ஓவியர்கள் மாற்றங்களை நாடவேயில்லை என்று கூற முடியாது. ஆனால் மாற்றங்கள் மெதுவாக நிகழ்ந்தன. ஒரு தேர்ந்த விமரிசகன் மட்டுமே புரிந்துக் கொள்ளக் கூடிய மாற்றங்கள். உதாரணமாக நமது கோவில்களின் தூண்களைப் பார்த்த உடனேயே அந்தத் தூண்கள் தாங்கி நிற்கும் கட்டிடம் பல்லவர் காலத்ததா, சோழர் காலத்ததா, அல்லது நாயக்கர் காலத்ததா என்பதை நிர்ணயித்து விடலாம். ஆனால் தேர்ச்சி பெறாத ஒருவருக்கு எல்லா கட்டிடங்களும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.

போன இதழில் ஓவியம் கடவுளின் சொற்களைப் படிக்காதவர்களுக்கு விளக்க முயல்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கூற்றின் சொந்தக்காரராக அறியப்படும் Pope Gregory the Great ஓவியத்தின் துணை நின்றார். ஓவியங்கள் தேவாலயங்களுக்குள் அனுமதிக்கப் பட்டது எளிய மக்களிடம் மதத்தைப் பரப்ப எவ்வளவு உதவியாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம் இந்த மத்திய கால பிரெஞ்சுக் கவிதை:

நான் ஒரு பெண், ஏழை, வயதால் முதிர்ந்தவள்
ஒன்றும் தெரியாது, படிக்கவோ முடியாது.
எங்கள் கிராமத்தில் ஓர் எளிய தேவாலயம்
அங்கே ஓர் அழகிய ஓவியம்.

அது காட்டுவது-
இசையால் மயங்கும் இனிய சொர்க்கம்
பாவிகள் வேகும் பயங்கர நரகம்

ஒன்று தரும் என்றும் நிறைவு
மற்றது என்றும் மனதைக் கலக்கும்.

ஓவியங்கள் எளிய மக்களிடம் மட்டும் அல்ல அனைவரிடம் பேசக் கூடும், வெவ்வேறு குரல்களில், வெவ்வேறு அளவைகளில் என்பதை அறிய ஒரு மேதைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.


3

புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞன் ஒருவன் கிராமப்புறத்திற்குச் செல்ல நேர்ந்தது. அவன் செல்லும் வழியை ஆடுகள் மறைத்துக் கொண்டிருந்தன. ஆடுகளை மேய்க்கும் சிறுவன் அருகே உள்ள பாறையில் ஏதோ வரைந்து கொண்டிருந்தான். இந்தக் கலைஞன் அருகில் சென்று பார்த்தான். வரையப் பட்டது ஒரு ஆட்டின் சித்திரம். . ஒரு தேர்ந்த ஓவியனுக்குக் கூட எளிதில் கிட்டி வராத நேர்த்தி இந்தச் சிறுவனிடம் மண்டியிட்டு கிடப்பதைப் பார்த்து அவன் வியப்பில் ஆழ்ந்து போனான். உடனே அந்தச் சிறுவனின் தந்தையிடம் சென்று சிறுவனை தனது மாணவனாகச் சேர்த்துக் கொள்கிறேன் என்று சொன்னான். சிறுவனின் தந்தை சம்மதித்திருக்காவிட்டால் மேற்கத்திய ஓவியத்தின் வளர்ச்சி இன்னும் சில காலம் பின் தங்கியிருக்கலாம். தந்தை சம்மதித்து விட்டான்.

‘எனது காலத்தின் ஒப்பற்ற கலைஞன்’ என்று தாந்தே தனது Divine Comedy நூலில் ஜியோட்டோவைப் பற்றி எழுதினான். அது வரை நடந்திராத அதிசயம் அது. ஜியோட்டோவின் மேதைமைக்குக் கிடைத்த பரிசு.

ஜியோட்டோ 1267ம் ஆண்டு பிறந்தான். 60 ஆண்டுகள் வாழ்ந்த அவன் சென்ற இடம் எல்லாம் சிறப்பைப் பெற்றவன்.. ஃப்ளாரன்ஸ் நகரில் பயிற்சி பெற்ற அவன் அனேகமாக இத்தாலிய நகரங்கள் எல்லாவற்றிலும் தனது ஓவியச் சொத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறான். அவனது மிகப் புகழ் பெற்ற சுவர் சித்திரங்கள் பாடுவா நகரின் அரீனா தேவாலயத்தில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று இரங்கல் (The Lamentation).

புனித மேரி மடியில் இறந்த ஏசுபிரான் கிடக்கிறார். ஒளியிழந்த கண்கள். அவரது தலையை தன் கைகளில் தாங்கிக் கொண்டு தாய் தனது கண்களின் ஒளியைத் தர முயல்கிறார். முடியாது என்பதும் அவருக்குத் தெரிகிறது. அழுகை பீறிட்டுக் கொண்டு வருகிறது. புனித ஜான் சற்று தொலைவில் நிற்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு குனிந்து ஏசுபிரானைப் பார்க்கிறார் அவரது கைகள் இறக்கைகள். ஏசு இல்லாத இடத்தை விட்டு பறந்து போய் விடலாமா என்று தோள்களுக்குப் பின்னால் செல்கின்றன. ‘ஓவியம் சிற்பத்தை விட மிக உயர்ந்தது’ என்று சொன்ன கலைஞன் அவன். ஏன் என்பது இந்த ஓவியத்தைப் பார்த்தால் விளங்கும். இறப்பிற்கு உயிர் கொடுக்கும் சித்திரம் இது.

இந்த ஓவியத்தின் முக்கிய நிகழ்ச்சி ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் நடக்கிறது. நமது கண்கள் முதலில் செல்லும் பகுதி. மேற்பகுதியில் எங்களையும் அண்ணாந்து பார் என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் தேவதைகள். அவர்கள் முகங்களைப் பார்த்தால் துயரத்தின் பல வடிவங்கள் தெரிகின்றன. கீழே துயரத்தின் கனம் கண்களிலும் வாய்களின் கோணங்களிலும் வெளிப்பட்டால் மேலே அது தேவதைகளின் சிறகடிப்பில் தெரிகிறது. அவர்களை சில கணங்களில் தரையில் இறக்கி விடுமோ என்று நினைக்கத் தோன்றும் கனம். இன்னும் கூர்ந்து பார்த்தால் மரங்களற்ற மலைச்சரிவும் இலையற்ற மரமும் துக்கத்தைத் பெரிதாக்குகின்றன. இலையற்றது ‘அறிவு மரம்’ என்று குறிப்பிடபடும் மரத்தின் சின்னம். ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால் தனது இலைகளை இழந்த மரம். ஏசுபிரானின் ஈடில்லாத் தியாகத்தால் தனது பசுமையைப் பெறப் போகும் மரம்.

ஜியோட்டோவிற்கு முன்னால் எந்த ஓவியனும் இத்தகைய முயற்சியில் ஈடுபடவில்லை. எனவே அவனது புகழ் மிக எளிதாகப் பரவியது. அவனுக்கும் தனது திறமை மீது அசாத்திய நம்பிக்கை. ஒரு முறை போப் பெனிடிக்ட் XI புனித பீட்டர் தேவாலயச் சுவர்களில் சில சித்திரங்களை வரைய ஏற்பாடு செய்ய நினைத்தார். அவரிடம் யாரோ ஜியோட்டோவின் பெயரைச் சொல்லியிருந்தார்கள். அவன் எப்படிப் பட்டவன் என்பதை அறிய அவனிடமிருந்து அவன் வரைந்த ஓவியம் ஒன்றை வாங்கி வர ஒருவரை போப் அனுப்பினார். ஜியோட்டோவிடம் அவர் தான் வந்த காரணத்தைச் சொன்னதும் அவன் ஒரு தாளை எடுத்து தூரிகையால் கணத்தில் ஒரு வட்டத்தை வரைந்தான். ‘இதை எடுத்துச் செல்லுங்கள்’ என்று சொன்னான். வந்தவருக்குத் தயக்கம். ‘தயங்காமல் செல்லுங்கள்’ என்று ஜியோட்டோ சொன்னான். போப் அந்தத் தாளைப் பார்த்ததும் என்று தெரிந்து கொண்டார் - ஒரு கையால் ஒரு கணத்தில் அவ்வளவு செம்மையாக வட்டம் ஒன்றை ஒரு அசாதாரணமான கலைஞனால்தான் வரைய முடியும் என்று.

அரீனா தேவாலயத்தில் இருக்கும் மற்றொரு சித்திரம்
‘ஏசு காட்டிக் கொடுக்கப் பட்டது’- The Betrayal of Christ. ஏசுபிரானின் சிலுவைப் பயணத்தின் முதல் கட்டம் இங்கு சித்தரிக்கப் படுகிறது. யூதாஸ் ஏசுபிரானின் கன்னத்தில் முத்தம் கொடுப்பதற்கு முந்தைய தருணம். தான் செய்யப் போவது என்ன என்பது ஏசுபிரானுக்குத் தெரியும் என்று அவன் அறியும் தருணம். ஏசுபிரான் அவனை அமைதியாகப் பார்க்கிறார். தனது செயலின் சிறுமையை அவன் உணர்ந்து கொண்டான் என்பதை யூதாஸின் கண்கள் காட்டுகின்றன. முகம் அவன் மனிதத் தன்மையை இழந்து விட்டான் என்பதை வெளிப் படுத்துகிறது.புனித பீட்டர் கோபத்தில் கத்தியை எடுத்து யூத குருவின் சீடனான மால்சஸின் காதை அறுக்க விழைகிறார். காது போகப் போவதைத் தெரியாத அவன் நடப்பதைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். பீட்டரை தடுக்க ஒருவன் முயல்கிறான். சித்திரத்தின் மேற்புறம் உயர்த்திய ஆயுதங்களாலும் தீப்பந்தகளாலும் நிறைந்திருக்கிறது. ஜியோட்ட்டோவின் சித்திரங்களில் அனேகமாக ஆடைகள் உடல்களை இறுக்கமாகச் சுற்றியிருக்கும். வரையப்படுபவரின் உடல் அமைப்பை சுற்றியிருக்கும் ஆடை வரையறுக்க முயலும். இந்தச் சித்திரத்திலும் இது மிக அருமையாக அமைந்திருக்கிறது.

ஜியோட்டோவின் ஓவியங்கள் அவன் காலத்தவரை ஏன் கவர்ந்தன என்பது நமக்கு எளிதாகப் புரிகின்றது. அவனுக்கு முன்னால் வரைந்தவர்கள் மனித உணர்ச்சிகளை வரையவில்லை. மர மனிதர்களை வரைந்தார்கள். ஒரு நிகழ்ச்சியின் ஆழம், அதன் சிக்கல் முதலியற்றை ஓவியத்தில் காட்டலாம் என்பதை அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஜியாட்டோ உணர்ச்சிகளை வரைய முயன்றவர்களில் முதலில் இருக்கிறான். மனித வாழ்க்கையின் ஓட்டங்கள், அதிர்வுகள், ஆசைகள், துக்கங்கள், இன்பங்கள் இவையெல்லாவற்றையும் ஓவியம் காட்ட முடியும் என்று நமக்கு முதலில் சொன்னவன் அவன். மூன்றாவது பரிமாணத்தை வெல்ல முதலில் முயன்றவன் அவன்.


4

ஜியோட்டோவைப் போலவே மிகப் புகழ் பெற்ற புனிதர் ஒருவர் பன்னீரெண்டாம் நூற்றாண்டின் முதல் ஆண்டுகளில் இருந்தார்.. கிறிஸ்து போலவே தானும் வாழ வேண்டும் என்று உறுதியாக நினத்தவர் அவர். அஸிஸியின் புனித பிரான்ஸிஸ் இன்றும் உலக முழுவதும் போற்றப் படுபவர். இவருடைய கிறிஸ்து நோயுற்றவர்களுக்கு மருந்தளிப்பவர். ஏழைகளுக்கு உதவுபவர். பணம் கையில் வைத்துக் கொள்ளாதவர். சொத்து என்ற சொல்லையே வெறுப்பவர். கடவுளால் படைக்கப் பட்ட எல்லா உயிர்களுக்கும் கடவுளின் செய்தி சென்றடைய வேண்டும் என்று நினைத்தவர்.

பெரிய தேவாலயங்களும், பணம் படைத்த பாதிரிமார்களும் பெருகியிருந்த காலம் அது. எனவே மக்கள் புனித பிரான்ஸிஸ் பக்கம் திரும்பியதில் ஆச்சரியம் இல்லை. எங்கு சென்றாலும் அவருக்கு வரவேற்பு. கடைசி வரை எளிமையாக வாழ்ந்து மறைந்த அவரை அவருக்கு பின்னால் அந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் பல வகைகளில் கொண்டாடினார்கள். அஸிஸியில் அவர் நினைவாகக் கட்டப் பட்ட தேவாலயத்தின் சுவரில் சித்திரங்கள் வரைய அன்றிருந்த ஓவியர்கள் பலர் போட்டி போட்டார்கள்.ஜியோட்டோ 28 சுவர்ச்சித்திரங்கள் வரைந்தான். பிரான்ஸிஸின் வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகளைச் விளக்கும் இந்தச் சித்திரங்கள் இன்றும் பலரை அஸிஸி நகருக்கு ஈர்க்கின்றன.

எனக்கு பிடித்த ஜியோட்டோவின் (http://www.abcgallery.com/G/giotto/giotto121.html) மற்றொரு சித்திரம் The Adoration of the Magi. கிழக்கேயிருந்து வந்த பெரியவர்கள் குழந்தை ஏசுவை வணங்குவது. மூவரில் ஒருவர் ஏசுவை மண்டியிட்டு வணங்க மற்றைய இருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீலக் கண்களுடைய ஒட்டகம் போன்ற ஒன்று நடப்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. பெருந்தாடி வைத்த ஜோஸப். குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பெரியவரைக் கனிவோடு பார்க்கும் மேரி. வானத்தில் வால் நட்சத்திரம். இந்த நட்சத்திரம் Halley’s Comet எனப்படும் நட்சத்திரம். 1301ம் ஆண்டு தோன்றியது. ஹாலி வால் நட்சத்திரத்தை பதிவு செய்யவே ஜியோட்டோ இந்தச் சித்திரத்தை வரைந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. தன்னை சுற்றியிருக்கும் உலகைக் கூர்மையாகக் கவனித்தவன் அவன் என்பது இந்தச் சித்திரத்திலிருந்து தெளிவாகிறது.

ஃப்ளாரன்ஸ் நகரில் ஜியோட்டோவின் கல்லறை இருக்கிறது. அதில் எழுதியிருக்கும் வாசகம் இது:

நான் ஓவியத்திற்கு உயிர் கொடுத்த மனிதன். இயற்கையில் காணும் எல்லாவற்றையும் என் கலையில் காண முடியும்.

பி ஏ கிருஷ்ணன்


Betrayal.jpg | Lamentation.jpg | Detail of Christ and Judas



| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு