புதன், செப்டம்பர் 27, 2006

What can I codemn today?

பாடலும் பகிஷ்கரிப்பும் - பகிரங்க பயங்கரம்

பரபரப்பாக எவரையாவது கண்டிக்க மனம் பதைபதைத்தது. கிடைத்ததை வன்மையாக நையப் புடைக்க விஷயம் தேடும்போது 'பேரரசு'வும் 'கேடி'யும் போட்டி போட்டனர். கடைசியில் வென்றது என்னவோ 'கேப்டன்' விஜய்காந்த்தான். இந்த முறை விமர்சிக்க 'பேரரசு'க்கு வாய்ப்பு கிடைத்தாலும், நாளைக்கு சமாசாரம் எதுவும் அகப்படாவிட்டால், 'கேடி'யையும் விடமாட்டேன் என்பதை அரங்கில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

முதலில் பாடலைக் கேட்க (Raaga.com)

பொண்டாட்டியா நீ கிடைச்சா
கொண்டாட்டம்தான் எனக்கு


மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியா? மணமுடித்த எவரைக் கேட்டாலும் 'பாய்ஸ்' படத்தில் வரும் 'காதில் வளையம் போட்டால் தப்பு...' பாடலைப் போல் மனமொடிந்து வருந்துவாரே! 'அலைபாயுதே' திரைகானமான 'செப்டம்பர் மாத'த்திற்கு எசப்பாட்டாகவும் இந்தப் பல்லவியை கருதி மன்னிக்கலாம்.

என்னை நீயும் கட்டிக்கிட
சம்மதமா உனக்கு


இந்த வரிகள் அப்படியே சமீபத்திய திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்பதை வாசகர்கள் உணர்ந்திருக்கலாம். 'சம்திங் சம்திங்' என்று நாமகரணமிட்டிருப்பதால் அரசியல்வாதிகளின் அலுவலைக் குறிப்பதால் கண்டிக்கப்பட்டு சம்திங் வாங்காமல் 'உனக்கும் எனக்கும்' என்று உருமாறிய டைட்டில் இங்கே கையாளப்பட்டிருப்பது கற்பனைப் பஞ்சத்தை சுட்டுகிறது.

புருசனாக நீ கெடைக்க
கொடுத்து வச்சிருக்கு


வரதட்சிணை வாங்குவதும் தருவதும் சட்டப்படி குற்றம் என்றறியாத பாடலாசிரியர் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகிறார். 'கொடுத்து வைத்திருக்கிறது' என்பது முன்பணம் போல் கையூட்டாக சொல்வது, சமூக சீரழிவை வாழ்த்தி வரவேற்பது கண்டிக்கத்தக்கது.

பத்து டஜன்
பிள்ளை கூட
பெத்து தாரேன் உனக்கு


தாங்கள் பாடல் எழுதும் திரைப்படங்களை பாடலாசிரியர்களே பார்ப்பதில்லை போலும். 'திருப்பதி'யில் (படிக்க :: திருப்பதியில் - பேரரசு சொன்ன தீர்வு) நாயகன் எவ்வளவோ அறிவுறுத்தியும் இன்னும் மருத்துவர்களை நோகடிக்க 120 மகவுகளை ஈன்றெடுப்பேன் என்று மிரட்டுவது சமுதாய விடிவெள்ளிக் கருத்துக்களை நசுக்குவதற்கு ஒப்பானது.

வெட்டவெளியில் உனக்கு
இந்த கெட்ட குறும்பு எதுக்கு


வெளியே தெரியாமல் வீட்டுக்குள்ளே செய்தால் 'கெடுதலும் நன்மை பயக்கும்' என்று பொருள்படுவது சொல்லொண்ணா வருத்தத்தில் ஆழ்த்துகிறது. 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்னும் இராமலிங்க வள்ளலாரின் மொழிக்கு மாற்றாக அமைந்துள்ள இந்த வரிகள் கண்களில் கண்ணீரை சொரிய வைக்கிறது.

கிட்ட நெருங்குன உனக்கு
பட்டம் கொடுக்கறேன் இருக்கு


பட்டம் வாங்குவது என்ன சுளுவான சமாச்சாரமா? நான்கு வருடம் கழிந்து விடும். 'கப்பு'கள் சேரும். 'முஸ்தபா முஸ்தபா'க்கள் பாடப்படும். திரையரங்குகள் நிறைக்கப்படும். இப்படி எவ்வளவோ இருக்க, எதோ, காதல் தேசத்தில் உரசினாலே பட்டம் கொடுத்து விடுவார்கள் என்பது போன்ற வெந்த புண்ணில் வேர்க்கடலை போட்டுக் குளிர் காய்வது, நெஞ்சத்தை வறுத்தெடுக்கிறது.

திருடித் தின்னா ருசி அதிகம்
தெரியாதா உனக்கு


இங்கு இரண்டு திரைப்படங்களை குறிப்பால் உணர்த்தி வாசகனை குழப்பத்தில் ஆழ்த்துகிறார். முதலில் 'அழகி'. சிறுவயது நாயகனும், அவனுடைய பள்ளித் தோழியும் திருடுவது பாடல் நடுவில் காட்டப்படும். மற்றொரு படம் சமீபத்திய 'திருட்டுப் பயலே'. அப்பாஸும் திருடி உண்கிறான். ஜீவனும் திருடியே சாப்பிடுகிறான். இருவரும் இறக்கிறார்கள். இந்த மாதிரி முடிவுகளைத்தான் விரும்புகிறதா இந்தப் பாடல்?

உன்னப் பெத்தவள பார்த்தா
கோயிலே கட்டுவேண்டி ஆத்தா


'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பதற்கேற்ப அமைந்த வரிகளைப் பாராட்ட நினைக்கும்போதே, உறுத்தும் சொற்களை நடுவில் ஊடாடவிட்டு மனம் வெதும்ப வைக்கிறார். ஹீரோயினுக்கு கோயில் எழுப்புவது தொன்று தொட்டு அமைந்த தமிழ் மரபு. த்ரிசாவுக்கு பாலாபிஷேகம் செய்து அழகு பார்ப்பது திராவிட நாகரிகம். நாயகியின் அம்மா அழகாகவே இருந்தாலும் அக்கா வேடத்தோடு நிறுத்திக் கொல்லும் கலாச்சாரத்தை, கட்டுடைத்தலாக அமைந்திருக்கும் வரிகள், தொன்று தொட்டு நிலவி வரும் பழக்க வழக்கங்களை சின்னாபின்னமாக்க அழைக்கிறது.

இதற்கு மேல் தட்டச்ச பலகை பதவிசாக அழைத்தாலும், பொறுமை சோதிக்கிறது. வாசகர்கள் தங்கள் மேலான கோபங்களைத் தொடர்ந்து மிச்ச சொச்ச வரிகளுக்கும் போட்டு விடுமாறு கடுமையாக எச்சரிக்கிறேன்.

எடுத்துக்காட்டாக இரண்டு:

1. இடுப்பு இறக்கத்திலே ஏற்றம் இறச்சிடவா?
உடம்ப உழுதுபோட்டு உசிரை அதில் விதச்சிடவா?


எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? அல்லது கழனி வாழ் உழவருக்கு நீ கஞ்சிக்கலையம் சுமந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானம் கெட்டவனே..

போரடித்து நெற்குவிக்கும் தமிழ் நாட்டு மறவர் கூட்டம் கவிஞர்களின் உடல்களை போரடித்து தலைகளை நெற்கதிர்களாய் குவித்து விடும்.. ஜாக்கிரதை!


2. கொஞ்சம் இடங்கொடுத்தா
குடித்தனம்தான் நடத்தறியே


பாட்டெழுதும் புலவர் பேச்சிலராக சென்னை மாநகரத்திலே வசித்ததுண்டா? 'வீடு' திரைப்படத்தை கண்ணுற்றதுண்டா? காதல் மணம் புரிந்தவர்கள், புலால உண்ணுபவர்கள், மது அருந்துபவர்கள், வலைப்பதிபவர்கள் என்று ஒரு கண்ணில் வெண்ணெய்.. ஒரு கண்ணில் சுண்ணாம்பு பார்க்கும் சமூக அவலத்தை நேரடியாக அனுபவித்த வலி அறிந்திருந்தால், இவ்வாறு கூப்பாடு போட்டிருக்க மாட்டார்.



முழுப் பாடலைப் படிக்க:

ஆண்:
பொண்டாட்டியா நீ கிடைச்சா
கொண்டாட்டம்தான் எனக்கு
என்னை நீயும் கட்டிக்கிட
சம்மதமா உனக்கு

பெண்:
புருசனாக நீ கெடைக்க
கொடுத்து வச்சிருக்கு
பத்து டஜன்
பிள்ளை கூட
பெத்து தாரேன் உனக்கு


ஆண்:
வெட்டவெளியில் உனக்கு
இந்த கெட்ட குறும்பு எதுக்கு

பெண்:
கிட்ட நெருங்குன உனக்கு
பட்டம் கொடுக்கறேன் இருக்கு

திருடித் தின்னா ருசி அதிகம்
தெரியாதா உனக்கு


ஆண்:
உன்னப் பெத்தவள பார்த்தா
கோயிலே கட்டுவேண்டி ஆத்தா



பெண்:
உடம்பு ரேகையெல்லாம் உதட்டால் எண்ணிடவா?
உச்சந்தலையிலேறி ஒத்தைக்காலில் நின்றிடவா?

ஆண்:
இடுப்பு இறக்கத்திலே ஏற்றம் இறச்சிடவா?
உடம்ப உழுதுபோட்டு உசிரை அதில் விதச்சிடவா?


பெண்:
நீ...
கள்வடியும் தென்னை
தினம் மயக்குறியே என்னை
நான் நம்புறேனே உன்னை
அட...
வேற என்ன பண்ண

ஆண்:
நீ...
தேன் வடியும் பூவு
நல்லா திரண்டு நிற்கிற தீவு
உன்னத் தின்னா தீரும் நோவு
நான் போடப் போறேன் காவு

ஆண்:
உன்னப் பெத்தவள பார்த்தா
கோயிலே கட்டுவேண்டி ஆத்தா



ஆண்:
செவ்வாழக் குருத்துப் போல
செவந்து நிக்கறியே

கொஞ்சம் இடங்கொடுத்தா
குடித்தனம்தான் நடத்தறியே

பெண்:
கருத்த உடம்புக்குள்ள
நெருப்ப வச்சிருக்கே

நானும் கண்ணசந்தா
எம்மடியில இறக்கி வப்ப


ஆண்:
முந்திரியப் போல கொஞ்சம் முட்டி முளைச்சதால
நீ சீண்டுறடி ஆள
வேணாம்...
பொறப்பட்டுடும் காள

பெண்:
நீ வாங்கிக் கொடு சேல
நான் கால் முளைச்ச சோல
நீ எழுதிக் கொடு ஓல
நான் புடிச்சி வுடறேன் கால

ஆண்:
உன்னப் பெத்தவள பார்த்தா
கோயிலே கட்டுவேண்டி ஆத்தா


இந்தப் பதிவில் குறித்த இன்னொரு இன்னிசையை (கேட்டு) கண்டிக்க: உன்னப் பெத்த ஆத்தா



| |

26 கருத்துகள்:

பாபா,

படிச்சு சிரிப்புத்தான் வந்திச்சு, எங்கே கண்டனத்தெ சொல்லுறது,

//உன்னப் பெத்தவள பார்த்தா
கோயிலே கட்டுவேண்டி ஆத்தா//

சரியான காமெடி வரிகள்

What abt the movie review???

அவுத்துப்போடு, ஆட்டம் போடு :-) படத்தை வெச்சி ஆளாளுக்கு கும்மி அடிக்கிறாங்களே அந்த Category பதிவா இது என்பதை விளக்கவும்.

ராம்
---படிச்சு சிரிப்புத்தான் வந்திச்சு, எங்கே கண்டனத்தெ சொல்லுறது, ---

பொங்கியெழு தமிழா! எம்.எல்.ஏ. இந்த மாதிரி சட்டசபையில் அம்மையாரைப் பார்த்து பாடுவாரா என்று எடுத்துக் கொடுக்கிறேன். நீங்க கண்டினியூ செய்யுங்க ;-))

வெட்டிப்பயல்

அடுத்து நியு ஜெர்சி சிந்தனை வட்டத்தில் திரையிட்ட குறும்படங்களை விமர்சிக்கலாம் என்று எண்ணம். அடிமடியிலேயே கையை வைக்கறீங்களே :-D

லக்கிலுக்

---அவுத்துப்போடு, ஆட்டம் போடு----

தூயதமிழ்ப் பெயரில் வைத்திருக்கும் தலைப்பா! நிச்சயம் வரிவிலக்கு உண்டு. ஆனால், சொல்லவும் முடியாது. (Name Changes in Tamil - Instructions and Ruling are not yet Clear to Officials: தமிழில் பெயர் மாற்றினால் கட்டணக் குறைப்பு: தெளிவில்லா ஆணையால் நடைமுறைக்கு வராத நிலை)

---அந்த Category பதிவா இது என்பதை விளக்கவும்.---

சரியான பாதையில் வந்தாலும், நான் திசை திருப்பிடுவேன் இல்ல ;-)

நிர்மல்
---கண்டிச்சே தீரணும்னு முடிவு பண்ணிடிங்க---

மரத்துப் போனவன் அல்ல மறத்தமிழன் என்று மறக்காமல் மெய்ப்பித்தேனா?!

பாலா,
ஆபீஸுல வேலை கம்மியா..விலாவாரியா பிரிச்சு மேஞ்சுருக்கீங்க :-)

எத்தனையோ பாடல்கள்..எத்தனையோ படங்கள் இருக்க..உள்நோக்கோடு கேப்டன் படப் பாடலைத் தேர்ந்தெடுத்துக் கண்டித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் ;)

பாட்டா இது நிப்பாட்டுன்னு சொல்ல வேண்டிய அளவுக்கு இருக்கு!

// வெட்டிப்பயல் said...
What abt the movie review??? //


இந்தப் படத்துக்கு மூவி ரிவியூ வேற கேக்குறீங்களே வெட்டிப் பயலே...பால மேல என்ன ஆத்திரம்? :-)

கஷ்டம்..இதுகளுக்கு எல்லாம் ஓட்டு போட்டு..

ஆனா பாலா சார்...

பெரிய thesis பண்ண மாதிரி இருக்கு

ஆனா கல்வெட்டு கேட்டமாதிரி எல்லாம் நான் கேட்கமாட்டேன்


மங்கை

பாலா,

இப்படி(எல்லாம்) யோசிக்கிறத்துக்கு தனி டீம் எதுவும் வச்சிருக்கீங்களா என்ன??

உண்மையான ஆர்வத்துடன்,
;)

//இந்தப் படத்துக்கு மூவி ரிவியூ வேற கேக்குறீங்களே வெட்டிப் பயலே...பால மேல என்ன ஆத்திரம்? :-) //
படம் செம்ம காமெடிங்க ;)
நீங்க பாக்கலியா??? தனியா போகாதீங்க!!! இது எச்சரிக்கையில்ல _______________;)

முக்கியமா பிரகாஷ்ராஜ் பேசற ஒரு டயலாக் "முன்னெல்லாம் பணக்காரனப் பாத்தா ரத்தம் கொதிக்கும். நான்கூட அத என்னுமோனு நெனச்சிட்டு இருந்தேன்... இப்பதான் தெரியுது அது பொறாமைனு"
(Prakash Raj's character has resemblence with our Arasiyal Chanakyar ;))

நிர்மல்

----தமிழனா 360' ஆன திருப்தி வரும்---
திருமாவளவனுக்கு உள்குத்து எதுவும் இல்லையே :P ;-)

கல்வெட்டு

---ஆபீஸுல வேலை கம்மியா..---

நான் என்ன ஆய்வு கட்டுரையா சமர்ப்பிக்கிறேன். இது ரெடிமேட் பகுதி.

பாட்டைக் கேட்டவுடன் தாளம் போட வைத்தது. ரசிப்பைத் தொடர்ந்து இன்னொரு பயம் பற்றிக் கொண்டது. நான் விரும்பும் பாடல்களை என் மகளும் ரசித்து முணுமுணுக்க ஆரம்பிக்கிறாள்.

இந்தப் பாட்டை அடிக்கடி கேட்பதால், விருந்தினர்கள் வரும்போது அகஸ்மாத்தாக அவள் பாடினால், கன்ஸர்வேடிவ் மனப்பான்மையில் நெளிவதா, தர்மசங்கடப்படாமல் தமிழ் கானங்களை சாடுவதா, அல்லது தமிழ்ப்பற்றின் சின்னங்களை மகிழ்வுடன் கைப்பற்றுவதா என்று சிந்தனை இறக்கை கட்ட பதிவு நொடியில் தயார் :D

---கோயிலே கட்டுவேண்டி ஆத்தா---

இந்த வரிகள்தான் ஸ்பார்க் கொடுத்தது.

கப்பி
----எத்தனையோ பாடல்கள்..எத்தனையோ படங்கள் இருக்க..---

அடுத்து யுகபாரதி எடுத்துக் கொண்டு சதாய்க்கலாம் :P


ஜிரா
---இந்தப் படத்துக்கு மூவி ரிவியூ வேற கேக்குறீங்களே---

சன் டிவி திரை விமர்சனத்தில் ரத்னா அவர்கள், பிரகாஷ்ராஜ் சிறப்பாக செய்திருப்பதாக படித்தார்கள். விஜய்காந்துக்கு இரட்டை வேடம் ஆயிற்றே...


மங்கை

---இதுகளுக்கு எல்லாம் ஓட்டு போட்டு..---

மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் (அதிமுக) எஸ்.வி.சண்முகம் போன்று எல்லாரையும் பட்டியல் போட்டு சேர்த்துக் கொள்ளலாம்.

விக்கி __/\__

வி.பி.
---Prakash Raj's character has resemblence with our Arasiyal Chanakyar---

அங்கே இங்கே பார்த்த ஓரிரு துண்டுக் காட்சிகளில் இது வெளிப்படவில்லை. தொலைக்காட்சிகளுக்குத் தரும் ஒளித்துண்டுகள்தான் திரைப்படத்தின் மிகச் சிறந்த (அவசியம் ரசிக்கக் கூடிய) பகுதிகளாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

[ஆங்கிலத்திற்கும் இது பொருந்தும். 'மீட் தி பேரண்ட்ஸ்' படத்தின் சிரிக்கக் கூடிய அனைத்து இடங்களையும் முன்னோட்டமாகவே ஒளிபரப்பி சுண்டியிழுத்தார்கள். வெள்ளித்திரைக்க சென்றபின் dejavu மட்டுமே மிஞ்சியது!]

ஃப்ளாஷ் பேக்னு ஒரு கொடுமை இருக்கு அதை பாத்தீங்களா???

மக்களுக்காக போராடுற அந்த பிரகாஷ் ராஜ், நம்ம இருவர் தமிழ்வாணனை நினைவுபடுத்தியது ;)

http://reallogic.org/thenthuli/?p=193

Please read this and contribute something...

பாபா பாபா பாபா
:-)))))))))))))))

அக்குவேறு ஆணிவேறுன்னு பிரிச்சு மேஞ்சுட்டீங்கப்பா!

நிறைய நேரமிருக்கிறது போல தெரிகிறது. நியுஜெர்ஸி வந்தீர்களா?

துளசி... :)

பத்மா, காலையில் கிளம்பி மதியம் வந்திருந்து, மாலையில் திரும்பக் கிளம்பி இரவில் மீண்டும் பாஸ்டனுக்கே வந்து சேர்ந்தேன் (சிந்தனை வட்டம் குறும்பட விழா)

விஜயகாந்த் படமே காமெடி, நீங்க பாட்டப் பத்தி மட்டும் பேசறீங்களே

What can I *codemn* today

-Spellchecker

Spellchecker ஓ...! :-( நன்றி.

வேந்தன் சிரிப்பு படத்திற்கு சிரிப்பு விமர்சனம் ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு