வெள்ளி, அக்டோபர் 13, 2006

பட்டுவாடா

கில்லியில் இணைக்கலாம். அங்கு ஃபார்முக்கு திரும்பிய டெண்டுல்கராக பிரகாஷ் ஒழுங்காக அடித்து ஆடி வாசகர்களை குஷிக்குள்ளாக்கும்போது, டிராவிட் மாதிரி சிங்கிள் எடுப்பது போஷாக்கு தரும்.

கோர்வையாக சேர்த்து ஒவ்வொன்றையும் தனிப் பதிவாக ஆக்கலாம். படிப்பவருக்கு பொறுமை போகலாம். எழுதுபவனோ அவசரக் குடுக்கை. அங்கும் எங்கும் தேடி தெளிந்து பதிவு எழுத முடியாத அவசரக் குடுக்கை.

எனவே, அவசர தபால்.

 1. இருவர்

  பிடித்திருக்க வேண்டிய 7:45-ஐ தவறவிட்ட ரயில் நிலையம். இருவர் கவனத்தை ஈர்த்தனர்.

  1. கண் பார்வையற்றவர்: என்னை மாதிரியே தோளில் கைப்பை. கழுத்துக்கு பட்டை கட்டியிருந்தார். வேலை முடித்து சோர்வுற்ற முகம். சிரிக்கும் பாவம். திடமான உறுதி முகத்தில் தெரிகிறது. நடைபாதையில் தடைகள் இருக்கிறதா என்று அறிய குச்சி ஒன்றை இடதும் வலதுமாக ஆட்டி விறுவிறு நடை. அவரின் வழியில் வந்தவர்கள் ஒதுங்கினார்கள். மூன்று மாடிகளை ஏற்றி அழைத்து செல்லும் எஸ்கலேட்டரில் தடுமாறாமல், தட்டிப் பிடித்து ஏறி நின்றார். இறங்க வேண்டிய இடத்தில் உதவி செய்தவர்களுக்கு நன்றி சொன்னார். அடுத்த வேலையை பார்க்கவோ, வீட்டுக்கோ துரிதமாக விரைந்து விட்டார்.

  சலிப்புற்ற இரவில், அனுதினச் சுழலில் மாட்டிக்கொண்டவர்களை, அவரிடம் தென்பட்ட உற்சாகமும், செயல்படுதிறனும் தொற்றிக் கொள்ள வைக்கிறார்.

  2. அனாமதேயமாக திட்டிக் கொண்டிருந்தவர்: அதே போர்ட்டர் சதுக்கம். புத்தகக் கடையில் ஏறி இறங்கி திரும்புகிறேன். மின்விளக்கு வேலை செய்யாத தெருமுக்கு. நடையை வேகப்படுத்துகிறேன். ஆங்கிலத்தின் நான்கெழுத்து சுடுசொற்கள் கொண்ட உரையாடல் காதில்படுகிறது. இரவலர்கள் இருப்பதை அப்போதுதான் பார்க்க நேரிடுகிறது. பயம் கலந்த பச்சாதபம் வருகிறது. எதையோ மோசமாக கடிந்துரைத்தார்கள். தொடர்ந்து விரக்தி மேலிட்ட கோப சம்பாஷணை சன்னமாக தொடர்கிறது.

  காதல் கவிதையில் எதிர்பாலாரின் கவர்ச்சியும் தாபமும் ஏக்கம் கலந்த உணர்வோடு வெளிவரும். தாடி வளர்த்த வீடற்றவர்களின் கோபத்தில் நேரவிரயமும் குறைபாடுகளும் பச்சாதாபம் கலந்த வெறுப்புடன் வெளிவருகிறது.


 2. NBC.com - Studio 60 on the Sunset Strip: ஸ்டூடியோ 60 ரசிக்க வைக்கிறது. நெடுந்தொடர் எழுதுபவர்களின் வாழ்க்கையை விளக்கும் புதிய தொலைக்காட்சித் தொடர். கிண்டல், கேலி செய்வதில் உள்ள சூட்சுமங்களை சொல்கிறார்கள். உள்ளர்த்தம் பார்வையாளனுக்கு விளங்காவிட்டால் எபிசோடின் தரத்தைக் குறைத்துக் கொள்ள நேரிடுகிறது. ஆட்சியாளரை நக்கலடித்தால், 'எதிர்க்கட்சி ஆதரவா' என்னும் நாமம் விழுகிறது.

  ஒரு வாரத்தில் அடுத்தவரை மட்டும் பகிடி செய்யாமல், தன்னை வைத்து நகைச்சுவை செய்தார்கள். மற்றொன்றில் ஏழு நாள் என்னும் கெடுபிடிக்குள் எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிப்போர், அரங்க நிபுணர், மேலாளர் என்று பலரின் பங்கை செவ்வனே திரையாக்கினார்கள். சென்ற வாரத்தில் எழுத்து திருட்டு கவனிக்கப்பட்டது.

 3. தமிழில் பழைய படங்களைத் திரும்ப எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றார் சுதர்சன். பிடித்த நட்சத்திரங்களை பழைய கதாபாத்திரங்களில் பொருத்திப் பார்க்க நினைக்கிறேன். மீண்டும் தூசி தட்டி வெளிவர ஆசைப்படும் பட்டியல்:

  1. தூறல் நின்னு போச்சு - இரண்டாம் பகுதியில் போதிய மாற்றங்கள் தேவை : பரத், அசின்; நண்பர்களாக மற்ற 'பாய்ஸ்'
  2. பொய்க்கால் குதிரைகள் - புதிய படத்திற்கு சுந்தர் சி இயக்குநர் : நந்தா (மௌனம் பேசியதே), பாவ்னா
  3. பட்டணத்தில் பூதம் : பிரசன்னா, மீரா ஜாஸ்மின்
  4. தூக்கு தூக்கி : சூர்யா, கோபிகா
  5. மூன்று முகம் : பசுபதி (விருமாண்டி 'கொத்தாளன்'), நவ்யா நாயர் (ராஜலஷ்மி வேடத்திற்கு), சினேஹா (ராதிகாவாக), சமிக்ஷா (சில்க் ஸ்மிதாவிற்கு) 4. Angelina Jolie sparks casting controversy - Race in America - MSNBC.com :: பெரியார் திரைப்படத்தில் குஷ்பு மணியம்மையாக நடிப்பது உள்ளூர் விவகாரம். இது ஹாலிவுட் பிரச்சினை.

  டேனியல் பேர்ல் பாகிஸ்தானில் அல்-க்வெய்தாவினால் கொல்லப்பட்டார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழின் செய்தியாளர். தீவிரவாதத்திற்கு பலியானார். கத்தி தூக்காமல் பேனா தூக்கியவர். கத்தியால் கொடூரமாக மரணமடைந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கர். இவரின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது.

  நிஜ வாழ்க்கையில் டேனியலின் மனைவி மரியான் பேர்ல் (Mariane Pearl) எழுதிய A Mighty Heart: The Brave Life and Death of My Husband Danny Pearl என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டி திரைப்படம் தயாராகிறது. மரியான் க்யூபாவை சேர்ந்த ஆப்பிரிக்கருக்கும் நெதர்லாண்டுக்காரருக்கும் பிறந்தவர். ஆஞ்சலினா ஜோலியோ அக்மார்க் வெள்ளை ரகம்.

  சலசலப்புக்கு அஞ்சாமல், ஆன்ஜலினா Daniel Pearl Foundationக்கு $100,000 நன்கொடை வழங்கியிருக்கிறார்.

  என்னுடைய சலசலப்பு கேள்வி: பெரியார் படத்தில் நடிப்பதற்காக குஷ்பு எந்த தொண்டு அமைப்பிற்காக நிதி தர்மம் செய்துள்ளார்?

 5. Chup Chup Ke (2006): தயவு செய்து நான் பட்ட கஷ்டத்தை நீங்களும் படவேண்டும் என்றால் மட்டும் பார்க்கலாம். ஹிந்தியில் கேவலமான படங்கள் வருவதில்லை என்று யாராவது சொன்னால், வாக்குவாதத்தில் பங்குபெற உபயோகமாகும் பொருள்.

 6. காலச்சுவடு

| |

15 கருத்துகள்:

"ஃபார்முக்கு திரும்பிய டெண்டுல்கராக பிரகாஷ்" - same thoughts here

பட்டணத்தில் பூதம் : பிரசன்னா, மீரா ஜாஸ்மின்
- ப்ரசன்னா, தெரியாது(இன்றும் ஜெய் இருந்தால் அவ்வேஷத்துக்குப் பொருத்தமானவர்)...ஆனால் மீரா?! பழைய படத்தில் கே. ஆர். விஜயா நீச்சல் உடையில் வந்து படுத்துவார். மீராவுக்கு அதெல்லாம் ஒத்து வராது :) (Patriots இன்று விளையாட வில்லை. அதனால் கே. ஆர். விஜயா நீச்சல் உடையில் போன்ற வாழ்க்கைக்கு முக்கியமான விஷயங்களைப் பேச முடிகிறது :) ).

கலக்கல் பதிவு , பாபா பாபா தான் :)

உலகம் சுற்றும் வாலிபன் - அஜித், அஸின், ரகுவரன்

மிஸ்டர் பாரத் - சிம்பு, சத்யராஜ்

பில்லா - விஜய் (மை நேம் இஸ் பில்லா மட்டும் நல்லா இருக்குமானு சந்தேகம்தான் ;))

16 வயதினிலே - சூர்யா, விக்ரம், ஸ்ரேயா

wa __/\__

ராஜேஷ்,
---Patriots இன்று விளையாட வில்லை. --

ரெட் சாக்ஸ் வரவில்லை. என்றாலும், பேஸ்பால் ப்ளே ஆஃப்ஸ் பார்க்கிறீரா. சனிக்கிழமை கலக்கல் ஆட்டம் என்றார்கள். இரவுதான் கொஞ்சமாய் செய்தித் தொகுப்பில் பார்த்தேன்!

சரி... பூதமாய் அன்று நடித்தவர் யார் தெரியுமா? இன்று யார் பொருத்தம்?

(என்னுடைய விருப்பம்: அரவிந்த்சாமி
; )

எ.எ.பாலா, வாங்க... தங்களின் பூஸ்ட்டும் பியரும் கலந்த வயிற்றில் பால் வார்க்கும் பசுமையான வார்த்தைக்கு __/\__

வெட்டி,
சுவாரசியமான தேர்வுகள். மிகக் குறிப்பாக
---16 வயதினிலே - சூர்யா, விக்ரம், ஸ்ரேயா---

அதிலும் ஷ்ரேயா வெகு பொருத்தம்.

உலகம் சுற்றும் வாலிபன்: நான் இன்னும் பார்க்கவில்லை :|

மிஸ்டர் பாரத்: சிம்பு, (சிபி)ராஜ்

பில்லா - இப்பத்தானே பேரன் பிறந்திருக்கார் ;)) இன்னும் இருபது வருஷம் போவட்டும் :P

//NBC.com - Studio 60 on the Sunset Strip://

என் உள்ளம்கவர் 'Chandler Bing' Mathew Perry -யின் நடிப்பு எப்படி? FRIENDS பாதிப்பிலிருந்து மீண்டு விட்டாரா, அல்லது...?

Replacing Javar Seetharaman(as a ghost), tough...Let me try, Rajnikanth? (no...seriously).

Also, for Nagesh? My choice is Vivek(if he constraints his exaggeration)

I like two baseball teams:
1) Red sox
2) Teams that beat Yankees, so Detroit is my favourite. I am also watching only the highlights.

---'Chandler Bing' Mathew Perry -யின் நடிப்பு எப்படி? FRIENDS பாதிப்பிலிருந்து மீண்டு விட்டாரா, ---
சர்வ நிச்சயமாய் மீனாக்ஸ். சிரிப்பார்களோ என்னும் பயத்தையும் புதுவேலையில் நிரூபிக்க வேண்டிய லட்சியத்தையும் கொண்டு வந்து 'தேர்ந்த எழுத்தாளராகவே' வருகிறார்.

---Replacing Javar Seetharaman(as a ghost), tough...Let me try, Rajnikanth---


பெயர் டக்கென்று நினைவுக்கு வர மறுத்துவிட்டது (ஜாவர் சீதாராமன்). ரஜினி நன்றாகத்தான் இருக்கும் ராஜேஷ். ஆனால், அவர் இன்னும் அமிதாப் அளவுக்கு இறங்கி சகஜமாக நடிப்பதில்லையே : )

--அவர் இன்னும் அமிதாப் அளவுக்கு இறங்கி சகஜமாக நடிப்பதில்லையே

உண்மை. நான் இன்னும் "16 வயதினிலே பரட்டை", "அவர்கள் இராமநாதன்" போன்ற பாத்திரங்களை எப்போது மீண்டும் தேர்வு செய்வார் என்று காத்திருக்கிறேன்.

ஒரே வழி, ஜால்ராக்களை ஒதுக்கி, சொந்தப் படம் எடுப்பதுதான். கமல் கூட 'பேர் சொல்லும் பிள்ளை' போன்ற கலைப் படங்களில் நடித்து விட்டுத் தானே சொந்தமாக 'குருதிப்புணல்' எடுத்தார்.

மொத்ததில், இந்தியைப் போன்று, புதிய இயக்குநர்கள் ரஜினியைத் துணிவுடன் அணுக வேண்டும். கே. எஸ். இரவிக்குமார் போன்ற உதவாக்கரை இயக்குனர்கள் இருக்கும் வரை ரஜினி, 25 வயதுப் பையனாக நடித்து, விசில்(மற்றும் கல்லாவை நிரப்பி) மட்டும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

அற்புதமான கலைஞனைப்(சிவாஜியையும் சேர்த்து) பாழாக்க தமிழ் சினிமாவில் மட்டுமே முடியும்.

while we are talking about Rajini... RajinifansDiscussions : Files

ARRinterview.pdf :: ARRahman's interview in Kumudam about Sivaji


ShankarInterview01.pdf :: Shankar's interview in Kumudam Magazine about Sivaji


Shankarinterview02.pdf :: Shankar's interview in Anandha Vikatan about Sivaji

பட்டணத்தில் பூதம் படத்தில் பூதமாக நடித்தவர், அந்நாளைய எழுத்தாளர்-நடிகர் ஜாவர் சீதாராமன்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு