வியாழன், அக்டோபர் 26, 2006

Vijayganth Dialogues - Cricket Betting - MP Gas Leak - Tourist Election Observers

பேசும் செய்தி - 4 (நன்றி: திண்ணை)


Do Aana1. "தேர்தலை சந்தித்தபோது எம்.ஜி.ஆர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி உள்ளார்": முன்னாள் அமைச்சரும், தே.மு.தி.க. அவை தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் "கருணாநிதி வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் தோல்வியை கண்டவர்தான். 1980-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை சந்தித்தபோது எம்.ஜி.ஆர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி உள்ளார். இதேபோல் ஜெயலலிதாவும், பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். நானும் கூட பணம் கொடுத்து தோல்வியை சந்தித்தவன் தான். இருக்கிறவர்கள் கொடுக்கிறார்கள். இல்லாதவர்கள் வாங்கி கொள்கிறார்கள். பணம் கொடுப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் சம்பந்தம் இருப்பது இல்லை."

என்னிடம் தனியே சொல்லியிருக்க வேண்டியதை அறிக்கையாகவே விட்டிருந்த பண்ருட்டியாருக்கு தொலைபேச எண்ணியவுடன், நேரிலேயே ஆஜரானார். "சும்மாத்தானே இருக்கிறேன். எதற்கு செல்பேசி செலவு? மதுரையில் தே.மு.தி.க.வுக்கு கூடுதலாக 5300 ஓட்டுகள் கிடைத்தது. விஜய்காந்த்தின் 'பேரரசு' வெற்றிதான் இதற்கு காரணம். அடுத்த படத்தில் சம்பளம் கூடுதலாகத் தருகிறார்கள். அதன் எதிரொலியை, கணிசமான அளவுக்கு, கவுன்சிலர்களையும், வார்டு உறுப்பினர்களையும் பணம் கொடுத்து பெற்றதன் மூலம் நிரூபித்திருக்கிறோம்" என்றார்.

பண்ருட்டியாரின் வேட்டிமுனையை பிடித்துக் கொண்டிருந்த விஜய்காந்த்தின் கண்கள் சிவந்தது. "இவருக்கும் இனிமேல் லியாகத் அலிகான் தான் வசனம் எழுதித் தரப் போகிறான். பழுத்த அரசியல்வாதியாச்சே என்று நினைத்தேன். ஆனால், கூட இருப்பவர்களுக்கு பழுத்து விடுவதால்தான் இந்தப் பெயர் வந்தது என்பது இவரின் அறிக்கைகளில் இருந்து எனக்குப் புலப்பட்டது. படம் கெட்டபின் திரை விமர்சனம்; கண் கெட்டபின் சூர்ய நமஸ்காரம் என்பார்கள்! தேர்தலில் தோற்றபின் உதயசூர்ய நமஸ்காரம் என்பது அரசியல் வாக்கு" என்று கடுப்பானார்.





Social Security2. இந்தியா-இங்கிலாந்து போட்டி: ரூ.80 லட்சத்துக்கு கிரிக்கெட் சூதாட்டம்: வெறும் எண்பது லட்சம்தானா என்னும் ஆச்சரியத்துடன் உள்ளூர் ஹவாலா ஏஜண்ட்களை அணுகினேன். விரிவாக தங்கள் குறைகளைப் பகிர ஆரம்பித்தார். "தம்பீ... உன் நினைப்பு சரிதான். முப்பது பேர் சம்பந்தப்பட்ட ஆட்டத்தில் ஆளுக்கு 6,000 டாலர் என்னும் ரேட்டு ரொம்ப கம்மி. இப்ப காலம் கெட்டுக் கெடக்கு. பாகிஸ்தானின் அப்துல் கான் அணுகுண்டு தயாரிச்சு மாட்டிண்ட்டான். நார்த் கொரியாவும் சக்ஸஸ்ஃபுல்லா குண்டு போட்டுப் பார்த்துடுச்சு. இப்போதைக்கு ஆஃப்ரிகா மட்டும்தான் ஹாட். மிச்ச மார்க்கெட்டெல்லாம் டல்லடிக்குது. 'ஹவாலா ஏஜெண்ட்ஸ் அசோசியேசன்' சார்பா சில கோரிக்கை வெச்சிருக்கோம்.

  • புதுப்படம் ரிலீஸான முதல் வாரம் எம்புட்டு வேணும்னா டிக்கெட் விலை வெச்சுக்கலாம்கிற மாதிரி, ஸ்டார் ப்ளேயர்ஸ் மேல் எவ்வளவு வேணும்னாலும் பெட்டு கட்டலாம்.
  • சுதான், சியரா லியோன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐ.நா. அமைதிப்படை ஒதுங்கிக் கொள்ளணும்.
  • போதை வர்த்தகத்தைப் பெருக்க பள்ளிக்கூடங்களின் கஃபேயிலேயே விற்பனை துவங்கணும்.
  • கென்னத் லே, என்ரான் மாதிரி காசு அடிக்கிறவங்களை அநியாயத்துக்கு, 65 கூட முடியாத சின்ன வயசுல போய் சேர்ந்துடறாங்க; அவங்க நல்லா இருக்க உடல்நல மற்றும் சேமநல திட்டங்கள் ஆரம்பிக்கணும்.

    குறைந்தபட்சமாக இவற்றை நிறைவேற்றாவிட்டால், தோனிக்கும் சேவாகுக்கும் சம்பளத்தை கட் பண்ணிடுவோம்" என்று மிரட்டினார்.




    Abandoned3. 6 கிராமங்களில் விஷவாயு வெளியேறியது எப்படி? விசாரணை நடத்த ம.பி. அரசு உத்தரவு: மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டம் உம்ராகஞ்ச் பகுதியில், திடீர் என்று விஷவாயு பரவியது. இந்தவிஷவாயு எங்கிருந்து வெளியேறியது என்பது மர்மமாக இருக்கிறது. இந்த விஷவாயு 6 கிராமங்களுக்கு பரவியதால் 1500 பேர் மூச்சுதிணறல், வாந்தி , மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் தகவல் அறிய களத்தில் இறங்கினேன். அப்பொழுதுதான் அச்சுக்கோர்ப்பில் பிழை இருப்பது எனக்குத் தெரியவந்தது. '6 கிராமங்களில் விஷவாயு வெளியேறிய செய்தி வெளியானது எப்படி? விசாரணை நடத்த ம.பி. அரசு உத்தரவு' என்பதே ஊடக வன்முறையாக திரித்து வெளியிடப்பட்டது தெரியவந்தது. மத்திய பிரதேச அரசைத் தொடர்பு கொண்டு விசாரணையை மேலும் முடுக்கினேன். "இருபத்தி இரண்டு வருடமாக நடத்தும் விசாரணையே முடிஞ்சபாடில்லை. எனவே, நீங்கள் அச்சுப்பிழையை பொருட்படுத்த வேண்டாம்" என்று என் கவலையை துடைத்தெறிந்தார்.

    தீவிர ஆராய்ச்சியின் முடிவில் கோகோ கோலா தொழிற்சாலையில் இருந்து கோக் வழிந்தோடியதால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றதாக அறியப் பெறுகிறேன். கோக் நிறுவனத்தின் மேலாளர், 'இனி இவ்வாறு தளும்பல்கள் நிகழாது. பாட்டிலுக்குள்ளேயே கோக் உறையும்!' என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.



    4. மத்திய தொகுதியில் வன்முறை நடந்தபோது தேக்கடிக்கு சுற்றுலா சென்ற தேர்தல் பார்வையாளர்கள்: பரபரப்பு தகவல்: தேர்தலை கண்காணிக்கவும், செலவு விபரங்களை கணக்கிடவும் சஞ்சீவ்குமார், மீனா ஆகிய இரண்டு பார்வையாளர்களை மத்திய தேர்தல் ஆணையம் மதுரைக்கு அனுப்பி வைத்தது. அடிதடி நடந்த தேதி சஞ்சீவ்குமார் தன் உதவியாளருடன் விடுமுறை எடுக்காமல் அலுவலக காரிலேயே கேரளாவில் உள்ள தேக்கடிக்கு சுற்றுலா சென்றதாக தெரிய வந்துள்ளது. தேர்தல் செலவு கணக்கை பார்வையிட வந்த மீனாவும் அதே நாளில் ராமேசுவரம் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர் செப்டம்பர் மாத இறுதியிலும் இதுபோல ராமேசுவரத்துக்கு சென்று வந்தார்.

    முதலில் சஞ்சீவ்குமாரைத் தொடர்பு கொண்டேன். "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவோம் என்று திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி பேசினார்கள். மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு கேரளாவில் ஆட்சி செய்கிறது. மார்க்சிஸ்ட்களுக்குள்ளே முரண்பாடு தரும் 'இத்தகைய போக்கை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது' என்று பா.ம.க. தலைவர் இராமதாஸ் அறிக்கை விட்டிருந்தார். இதன் தொடர்பாகத்தான் தேக்கடி சென்று 'இவர்கள் சொல்வதில் உண்மையுள்ளதா' என்று யானைகளிடமும் மரஞ்செடிகொடிகளிடமும் விசாரித்தேன்" என்றார்.

    தலைசுற்றினாலும், இரண்டு பாரசிடமாலை முழுங்கிக் கொண்டு மீனாவையும் பிடித்து விட்டேன். "நமச்சிவாய நாமம் வாழ்க; நாதன் தாள் புகழ் வளர்க!! அந்த செய்தித்தாள் முழுமையானத் தகவலைக் கொடுக்கவில்லை. செப்டம்பர் மாத இறுதியில் ராமேசுவரத்துக்கு சென்றது உண்மை. ஆனால், அங்கிருந்து நேரடியாக காசி விஸ்வநாதரை தரிசிக்க சென்றேன். காசிக்கு சென்றால் மீண்டும் ராமேசுவரத்துக்கு மீண்டும் ஷேத்ராடனம் செய்ய வேண்டும் என்பதை ஆன்மீக அன்பர்கள் அறிவார்கள். அதன்படியே அடுத்த விஸிட்டாக ராமேசுவரத்துக்கு வந்தேன். நடுவில் வாரணாசிக்கு சென்றதை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். இத்தனையும் நல்லபடியாக தேர்தல் நடக்க வேண்டும் என்னும் வேண்டுதலை முன்வைத்தே, சுயலாபநோக்கு ஏதுமின்றி பற்றற்ற முறையில் நிறைவேற்றினேன். தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!" என்று திருநீறு வழங்கினார்.


    | |

  • 4 கருத்துகள்:

    பாபா,
    கலக்கல் பதிவு...
    இந்த மாதிரி நீங்க கொடுக்கற நியுஸ் (With your comments) சூப்பரா இருக்கு...

    நல்ல பதிவு பாலா !!!

    //அப்பொழுதுதான் அச்சுக்கோர்ப்பில் பிழை இருப்பது எனக்குத் தெரியவந்தது. '6 கிராமங்களில் விஷவாயு வெளியேறிய செய்தி வெளியானது எப்படி? விசாரணை நடத்த ம.பி. அரசு உத்தரவு' என்பதே ஊடக வன்முறையாக திரித்து வெளியிடப்பட்டது தெரியவந்தது.//

    :-)))

    வி.பி, ஊசி & சோ.பை. __/\__

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு