கதை விட வாங்க - 4 (பா. ராகவன்)
பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத
ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின்
முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது
பாயிண்டுகள் எழுதிவைத்தேன்.
இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை
இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட்
என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு
அல்லது திரட்டு அல்லது திருட்டு.
1. கையெழுத்துப்பிரதியாக 5 பக்கங்களுக்கு மேல் ஒரு சிறுகதை
வளராமல் பார்த்துக்கொள்.(பெரும்பாலான
சப் எடிட்டர்களுக்கு இது விஷயத்தில் பொறுமை இருப்பதில்லை)
2. தன்மை ஒருமையில் ஒரு டிரா·ப்ட் எழுதிக்கொண்டு பிறகு
அதை தேர்ட் பர்சனுக்கு மாற்றி எழுதுவது நல்லது. நான் என்று
தொடங்கி எழுதும்போது தான் கதையில் ஒரு உயிர்ப்பு வருகிறது.
ஆனால் கதைக்கு நான் கூடாது என்பதால் எழுதிவிட்டு அவனாக்கிக்
கொள்வது பெட்டர்.
3. ஒரு செண்டன்ஸில் நாலைந்து சொற்களுக்கு மேல் கூடாது.
4. நாலு பேராவுக்கு ஒரு வர்ணனை வை. பெண்ணையோ, பேயையோ
உன்னையோ எதையாவது ரெண்டு வரி
வருணிப்பதன் மூலம் கொஞ்சம் வாசனை கூடுகிறது.
5. கதாபாத்திரம் ஒரு அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது
நீ குறுக்கே மூக்கு நுழைக்காதே. கதாபாத்திரத்தின் கருத்துடன்
உன்னுடையது ஒத்துப்போகாவிட்டால் ஒன்றும் கொலைபாதகம் இல்லை.
6. கூடியவரை சிறுகதையில் காலம் காட்டாதே. அதாவது
மணி, நாள், மாதம், வருஷமெல்லாம் வேண்டாம்.
உணர்ச்சிகளை முக்கியப்படுத்து. தேவையானபோது மட்டும் சம்பவங்கள்.
7. செகண்ட் பர்சனில் கதை எழுதிப்பழகு. அது தொழில்நுட்பத் தேர்ச்சி தரும்.
8. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா., இவர்களெல்லாம்
சிறுகதையில் மிகவும் சாதித்தவர்கள் என்பார்கள். ஆனால்
உனக்கு உதவாது. ஆரம்பத்தில் நீ பின்பற்றவேண்டியவர்கள்
ஜானகிராமன், சுஜாதா, ஆதவன், சுப்ரமணியராஜு, சுந்தரராமசாமி
ஆகியோர் மட்டுமே.
9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத்
தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு
மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.
10.சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில்
ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம்,கோபம்,
புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை,
பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும்.
11. வசனங்கள் கூடியவரை குறைவாக இருக்கவேண்டும். வசனம்
என்பது நாடகத்தின் கருவி. சிறுகதைக்கு மௌனமே சிறப்பு.
12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு
உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின்
கருப்பாக, உயரமாக..., லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில்
தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.
13. எழுதி முடித்ததும் கடைசியிலிருந்து வெட்டிக்கொண்டு வா.(வரிவரியாக.)
14. மிரட்டும் சொற்கள் வெண்டாம். எளிமையே ஆபரணம்.
15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.
பி.கு: இவையெல்லாம் என்க்கு நானே சொல்லிக்கொண்டவை.
இன்றுவரை, அநேகமாக அனைத்து ரூல்களையும்
பின்பற்றுகிறேன்.யாருக்காவது உபயோகப்படுமானால் சந்தோஷம்.
நன்றி: புத்தகப் புழு மடலாடற் குழு
கருத்துரையிடுக