பெண் வெளிப்பாடுகள் - யாழினியன்
ஆறாம்திணை:
'பெண் வெளிப்பாடுகள் 2001' எனும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கொன்றை 14.04.02 இல் 'கங்கு' அமைப்பினர் சென்னை சோழமண்டல ஓவியர் கிராமத்தில் நடத்தினர். இன்று பெண்ணியம் சமூக வெளிசார்ந்த கருத்தாக்கமாக, செயல்பாடு மற்றும் சிந்தனை மட்டங்களில் தொழிற்படுவது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வாகிவிட்டது. ஆனால் படைப்புத் தளங்களில் பெண் வெளிப்பாடுகள் அமையப் பெற்றிருப்பினும் அவை குறித்து பாராமுகம் காட்டும் போக்கை சுட்டிக்காட்டினார், அ. மங்கை.
ராஜம் கிருஷ்ணன் எழுதிய 'வனதேவியன் மைந்தர்கள்', பா. விசாலத்தின் 'உணர்வும் ஒளிர்கவென்று' என்று இரு நாவல்களை ஒருங்கே ஓர் கட்டுரையாக இரா. தமிழரசி படித்தார். இரு நூல்களை அறிமுகம் செய்யும் நோக்கு மையப்பட்டிருந்தது.
கிருஷாங்கினி தொகுத்த 'பறந்தல் அதன் சுதந்திரம்' எனும் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பை மதுசூதனன் விமரிசனம் செய்தார். இத்தொகுப்பில் உள்ள கவிதையாக்க முறைமை பற்றிய சிரத்தைக்கு போவதற்கு தடையாக தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் உள்ள தவறுகளை விரிவாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஈழத்துப் பெண்களின் கவிதைகளை மூலப் பனுவலுடன் ஒப்பிட்டு தொகுப்பில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்தினார். எழுத்துப்பிழை, வரிகள் பல இல்லாமை, கவிதையின் அரைவாசி இல்லாமை, கவிஞர்களின் ஆள்மாறாட்டம் என பல தவறுகளை சுட்டிக்காட்னார். ஓர் தொகுப்பாக இதனைப் பார்ப்பதில் உள்ள சிக்கல்களையும் தெளிவு படுத்தினார்.
வீ. அரசுவை தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த 'பெண்ணியமும் பாரதியும்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை அரங்க மல்லிகா விமரிசனம் செய்தார். தொகுப்பில் புதிதாக ஏதும் சிந்தனை வெளிப்படவில்லை. பலமுறை முன்பு கூறிய கருத்துக்கள் தான் கட்டுரைகளில் உள்ளன என்றார்.
அடுத்து அ. மங்கை எழுதிய 'பெண் - அரங்கம் - தமிழ்ச்சூழல்' எனும் நூலை அருணன் விமரிசனம் செய்தார். சில கட்டுரைகளில் கேள்விகளாக மட்டும் விரிந்து செல்லும் தன்மையை சுட்டி காட்டினார்.
நன்றி: சென்ற வார சென்னை (இப்பொழுது... போன வருட சென்னை?)
கருத்துரையிடுக