சனி, மார்ச் 06, 2004

நெடுந்தொடர் ரசிகன்

பவித்ராவின் இன்றைய கோலங்கள் பதிவுக்குத் தோன்றிய கொஞ்சம் பெரிய பின்னூட்டம். நாம் நெடுந்தொடர் பார்க்க ஆரம்பிப்பதுதான் கஷ்டம். தூர்தர்ஷன் 'மெட்ரோ' ஆரம்பித்த காலங்களில் ரயில் ஸ்னேஹம் விரும்பி பார்ப்பேன். 'இரவில் ஒரு பகல்' என்று ரேவதியும் சுரேஷ் மேனனும் செய்த ஸ்லோ த்ரில்லர் ஒன்றும் நினைவில் நிற்கிறது. இரண்டுக்குமே விழுந்தடித்து செய்யும் வேலையை அந்தரத்தில் விட்டுவிட்டு கவனிக்க செய்தன. கிருஷ்ணசாமியோ, சுப்பிரமணிய சுவாமியோ, வீணையை வைத்துக் கொண்டு இழுத்த ஒரு மகா கடி தொடர் (தலைப்பு தெரியுமா?) பதிமூன்று வாரங்களுக்கு வருகிறது என்பது மட்டும் தெரிந்து கொண்டு பாராமல் கழிப்போம்.

அதையும் ஒன்றிரண்டு வாரங்கள் கவனித்திருந்தால் வலையில் விழுந்திருப்பேன். கோலங்களை ஒன்றிரண்டு நாள் மட்டுமே பார்த்து வருவதால் அதில் வரும் சோகச்சுவை மட்டுமே கண்ணில் படுகிறது. நாத்தனார்களும், மாமியார்களும் படுத்துகிற ஜென்மங்கள்தான். ஆனால், மிகைப்படுத்தலை இங்கும் செய்கிறார்கள். உத்தமராக மாமனார்; அனால், கோழை அல்லது வாய்மூடி அங்கலாய்ப்பவர். வேலைக்கு செல்லும் ஹீரோயின் தேவயானி இவற்றை எல்லாம் மௌனியாக எதிர்க்கமாட்டார் என்பது 'ஆட்டோகிரா·பின்' இரண்டாம் காதலி திடீரென்று தமிழ் பேசுவது போல் நம்பமுடியவில்லை.

ஒவ்வொரு சீரியலிலும் சில கேரக்டர்கள் நன்றாக இருக்கும். நடிப்பாலோ அல்லது பாத்திர படைப்பாலோ அல்லது பிடித்த விஷயங்களை செய்வதாலோ அல்லது ஒருங்கிணைந்து கொள்வதினாலோ, எதனால் என்று சொல்லமுடியவில்லை. 'மெட்டி ஒலி'யில் மாப்பிள்ளை (இவர்தான் 'கோலங்கள்' இயக்குனர்; கோலங்களிலும் தேவயானிக்குக் காதல் கடிதம் கொடுத்தவர்; ஆனால், மெட்டி ஒலியில் ராயர்களின் நக்கல் போல் டயலாக் அமர்க்களமாக எவரையும் எகிறாமல் விடாது!), முன்பு வந்த விகடனின் 'அப்பா'வில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவனின் மகளாக நடித்த ஒரு தலைக் காதலி, கோலங்களில் தீபா வெங்கட் என்று அடுக்கலாம்.

பவித்ரா சொல்வது வாரத்தில் என்றாவது ஒரு நாள் ஒரு சீரியலை பார்த்தால் deja-vuவும், தலைவலியும் வராமல் நாட்டு நடப்பையும், தொலைக்காட்சிப் பிரியர்களின் ரசனையையும் அறிந்து வைத்துக் கொள்ளலாம். உறவுகள் விரிசலாவதையும் மரபுகள் மீறப்படுவதையும் மட்டுமே வித்தியாசமாக நினைத்து சீரியல் இயக்கும் பாலச்சந்தரை விட 'கோலங்களும்' 'மெட்டி ஒலி'களும் எவ்வளவோ மேல்...

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு