திங்கள், ஜூன் 07, 2004

சனிக்கிழமை... சிந்தனை வட்டம்... சீரிய படங்கள்

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நாலு மணி நேரம் ஓட்டிச் சென்று பார்த்த நிகழ்ச்சி. நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததை தமிழில் அருணும், ஆங்கிலத்தில் சுதரும் எழுதியிருக்கிறார்கள். மிகமிஞ்சிய எதிர்ப்பார்ப்பில் வந்திருந்த என் போன்றோரையும் திருப்தி செய்த நிகழ்வு.

பதினைந்து ரூபாய் நுழைவு கட்டணம். ஒரு நாள் முழுக்க பலதரப்பட்ட விஷயங்களையும் சொல்லும் படங்கள். ஜாங்கிரி, அவியல், சென்னா என்று பஃபே போன்ற வீட்டுச் சாப்பாடு. அனைவருக்கும் பெயர்களைத் தாங்கிய அட்டைகள், உணவை ரெடியாகத் தட்டிலேயே போட்டு வைத்து பெரிய க்யூவை தவித்த லாவகம், தேவையான நேரத்தில் போதுமான இடைவேளைகள், கனகச்சிதமான பேச்சு, spoilers இல்லாத பட அறிமுகங்கள், BR(A)ILLIANT அருணின் தன்னடக்கத்துடன் கூடிய முன்னுரை, என்று பார்த்து பார்த்து ஏற்பாடு செய்திருந்தவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

(Disclaimer :-) இனி வரும் எண்ணங்கள் அனைத்தும் ஒரு வெகுஜன திரைப்பட ரசிகனாகிய எனக்குத் தோன்றியவை.

மனித நேயம்: ரொம்ப 'சத்தமாக' மனித நேயத்தை சொல்லியிருந்தார். கதைகளில் கூட சொல்லாதது முக்கியம் என்னும் கருத்து நிலவுகிறது. இங்கு எல்லாவற்றையும் உடைத்து காட்டியிருந்ததால், கொஞ்சம் அஜீரணம்.

The Untouchable Country: Crisp எடிட்டிங் இல்லாமல் தத்தளித்தது. நிறைய கருத்துக்களை சொல்லும் ஆசையில், ஒரு செய்தித்தாள் படிக்கும் உணர்வைக் கொடுத்தது. முதல் பக்கத்தில் பத்து தலைப்புகள் இருக்கும். ஆர்வமாக ஒன்றை ஆழ்ந்து படிக்கும்போது, எட்டாம் பக்கம், ஒன்பதாவது பத்தி பார்க்க என்பார்கள். அங்கே செல்லாமல், அடுத்த தலைப்புக்குத் தாவி விடுவோம். பாதிக்கப்பட்டவர்களின் பேச்சு முகத்தில் அறைவதால், மனதில் பதிகிறது.

ஜல்லிக்கட்டு: இந்த மாதிரி விவரணப் படங்கள் சன் டிவி 'பொங்கல் ஸ்பெஷல்' நிகழ்ச்சிகளில் இடம்பெற வேண்டும். வெகுஜன மக்களை ஈர்த்து, அவர்களின் சிந்தனைகளை மாற்றக் கூடிய படம்.

வாஸ்து மரபு: ரொம்ப சென்சிடிவான சப்ஜெக்ட். கடவுள் சிலைகளை கைகூப்பித் தொழ மட்டுமே மனம் செல்லும். அவை எவ்வாறு உயிர் பெறுகின்றன, செய்பவரின் சிரத்தை போன்றவற்றை, வெண்கல சிலைகள் முதல் கற்சிலைகள் வரை அனைத்தின் செய்முறைகளின் பிண்ணனியில் கொஞ்சம் ஆற அமர சொன்னார்கள். இளையராஜாவின் இசையில் திடீரென்று 'குனித்த புருவமும்' என்று தேவாரம் முதல் பிரபந்தம் வரை திரைப்படலில் ஊடாடும். இங்கு சம்ஸ்கிருத ஸ்லோகம் எல்லாம் நடுவே வந்தது, தேவையில்லாமல் அதை நினைவுக்குக் கொண்டு வந்தது. இன்னொரு முறை பார்த்தால் படத்தின் மற்ற கூறுகள் புலப்படலாம். முதல் பார்வையில் மயங்கடிக்க வைக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் நடையில் சுஜாதாவின் 'ஏன்... எதற்கு... எப்படி'யில் வரும் அளவு விஷயங்களை மண்டையில் ஏற்றிக் கொள்ளலாம்.

லன்ச்: மணி சுவாமிநாதன், 'பொன்னியின் செல்வன்' குழு நண்பர்கள் கமலக்கண்ணன், சத்யாவை பிகேஎஸ் அறிமுகம் செய்தார். போஸ்டர்களைப் படித்து பார்ப்பதற்குள் மதிய இடைவேளை முடிந்திருந்தது.

சைக்கிள்: இலங்கைத் தமிழ் என்றாலும் தெளிவான உச்சரிப்பினால் சென்ன பட்டணவாசிகளுக்கும் புரியும் வசனங்கள். நல்ல குறும்படம் இப்படித்தான் இருக்கும்.

ஒரு நாள்: பிண்ணனி இசை வசனத்தை மூழ்கடித்திருந்தது. அம்மாவாக நடித்தவர், தான் நடிப்புக்குப் புதுசு என்று காட்டியிருந்தார். இது போன்று வெற்றியடைந்த சில கம்ர்ஷியல் படங்களை பார்த்த நினைவும் வந்து போனது. லஞ்சம் வாங்காத மேஜர் சுந்தர்ராஜனுக்கு அலுவலகத்தின் கடைசி தினம். நாள் முழுக்க நடக்கும் நிகழ்வுகள்; லஞ்சம் வாங்குவதற்குத் தள்ளப்படும் நிலை. கடைசியில் தன் இருக்கையிலையே இறந்து போய்விடுவார் என்று நினைக்கிறேன்.

அப்பா: சீரியல் தலைப்பு என்று மட்டும் சந்தேகிக்காதீர்கள். தொலைக்காட்சி தொடர் போன்றே எடுத்தும் இருந்தார்கள். எவ்வளவு தூரம் எதிர்ப்பார்க்கக் கூடிய காட்சியமைப்புகள் நிறைந்திருந்தது என்பதை பக்கத்து இருக்கையில் இருந்த கணேஷ் சந்திரா, இவ்வொரு வசனத்தையும் முன்கூட்டியே சொல்லி சினிமாத்தனத்தை காட்டினார்.

தப்பு கட்டை: நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறே சொன்ன படம். முக்கிய வசனங்களை இன்னும் கொஞ்சம் தெளிவாக பதிவாக்கியிருக்கலாம். படிப்பது வேறு... பார்ப்பது வேறு... இங்கு சில இடங்களில் நிகழ்பவற்றை பார்ப்பதால் வரும் தாக்கமே தனி.

Shadow fight: நிறைய வசனம் புரிய வில்லை. புரிந்த வசனங்கள் படு ஜோர். காட்சியமைப்பு, எடிட்டிங், ஓளிப்பதிவு எல்லாமே ப்ரொபெஷனல் ரகம். இயக்குநர் அஜீவன் குறித்து அதிகம் அறியேன். ஆனால், நிச்சயம் நிறையப் பேசப்படுவார். கணவன் - மனைவி உறவில் ஓடும் மெல்லிய இழைகளை ஆர்பாட்டமில்லாமல் மனதில் தைக்கிறார்.

சென்னப் பட்டணம்: சென்னையில் ஒரு நாளாவது கால் பதித்த எவரும் ரசிப்பார்கள். எதார்த்தம்.

தேடல்: தூர்தர்ஷன் டிராமா வாசம். இருந்தாலும் எடித்துக் கொண்ட டாபிக் மனதிற்கு மிகவும் அருகில் இருப்பதால், தாக்கங்களை உண்டு செய்தது. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லலாமா, வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும் நம் அனைவரையும் சிந்திக்க வைக்கும்.

BR(A)ILLIANT: BRILLIANT & enjoyable :)

தேநீர் இடைவேளை: அதிரசம், முறுக்கு, இன்னும் கொஞ்சம் திண்ணை, தமிழோவியம் ஆசிரியர்கள், மரத்தடி நண்பர்கள், புது அறிமுகங்களுடன் அரட்டை.

ஒருத்தி: மாலை வரை காத்திருந்ததற்குக் கொடுக்கப்பட்ட பரிசு. ஆர்ட் ·பிலிம் என்று பயமுறுத்தாமல், ஆடல்/பாடல் எல்லாம் இல்லாமலும் வெகுஜன ரசிகனைக் கட்டிப் போடலாம் என்பதை நிரூபிக்கும் திரைப்படம்.

சில ஒட்டக்கூத்தர் பார்வைகள்:

  • பவர்பாயிண்ட் ஸ்லைடுகள் ஏன் தமிழில் எழுதப்படவில்லை?
  • ஒருத்தி 'செவனி'க்குக் கூட மேல்ஜாதி கணவன் என்பது மதிக்கத்தக்கதாக பட்டது. அது வேண்டுமென்றே irnoy-ஐ காண்பிப்பதற்காக பயன்படுத்தபட்டதா?
  • லேட்டாக வந்தவர்களுக்காக மறு-ஒளிபரப்பான 'மனித நேய'த்தை நிகழ்ச்சியின் இறுதியில் காண்பித்திருக்கலாம்.
  • பல படங்களில் சப்-டைட்டில் பயமுறுத்தியது. கன்னா-பின்னா பலுக்கப் பிழைகள், கருத்துப் பிழைகள். 'ஒருத்தி'யுடன் லயித்துவிட்டதால், அதில் மட்டும் என்னால் ஏனோ 'துணையெழுத்து' வந்ததா.... எப்படி இருந்தது என்பதை கவனிக்க முடியவில்லை. பிறிதொரு முறை வாய்ப்பு கிடைத்தால், அவற்றை மட்டும் மனதில் நிறுத்தி விமர்சிக்கிறேன். பிற மொழி மக்களை சென்றடைய பெரிது உதவுவது சப்-டைட்டில்களே. அவை ஒரிஜினல் வசனங்களைப் போல் (if not better )சிறப்பாக இருந்தால் குறும்படங்களை நிலைநாட்டும்.

  • 1 கருத்துகள்:

    அன்புடயீர்

    தங்களது விமர்சனத்துக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.

    பணிவன்புடன்
    AJeevan
    www.ajeevan.com
    http://ajeevan.blogspot.com/

    e-mail: info@ajeevan.com

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு