செவ்வாய், ஜூலை 20, 2004

ஜெயமோகனுக்கு இணை யாருமில்லை

பதிவுகள் - கடிதங்கள்

- மனுஷ்யபுத்திரன் -

இலக்கிய உலகில் தாம் சாதனையாளராக நினைக்கிறவர் யாரென்று கவிஞர் மனுஷ்ய புத்திரனிடம் கேட்டோம்.

இலக்கிய உலகில் சாதனைகளை ஒரு ஓட்டப்பந்தயத்தில் முடிவு செய்வதுபோல நம்மால் முடிவு செய்ய முடிவதில்லை. ஒரு கடலில் அதன் பிரம்மாண்டமான அலைகளும் சின்னஞ்சிறு மீன்களும் சேர்ந்துதான் கடலாக இருப்பதுபோல, ஒரேயொரு மகத்தான கவிதையை எழுதியவனும் ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதியவனும் இலக்கிய நீரோட்டத்தில் முக்கியமான இடத்தையே வகிக்கின்றனர்.

ஆனால் தன்னளவில் ஓர் இயக்கமாகச் செயல்படும் படைப்பாளிகள் இலக்கியத்தில் ஒரு தீர்மானமான இடத்தை வகிக்கிறார்கள். அவ்வாறு தானே இயக்கமாக மாறி செயல்பட்ட படைப்பாளிகளாக முந்தைய தலைமுறையில் பாரதி ,பாரதிதாசன் ,ஜெயகாந்தன், சுஜாதா, சுந்தரமசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களது படைப்பாளுமையும் வெளிபாட்டுக் களன்களும் முற்றிலும் வேறுவேறானவை. மாறுபட்ட மதிப்பீடுகளை சார்ந்தவை. ஆனால் தாங்கள் இயங்கிய களன்களில் எண்ணற்ற சாத்தியங்களுடன் அழுத்தமான பாதிப்புகளை இவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

என்னுடைய தலைமுறையில் அவ்வாறு தன்னையே இயக்கமாக மாற்றிக் கொண்டு உக்கிரமாகச் செயல்படும் படைப்பாளி யார் என்று யோசித்தால் முதலில் நினைவுக்கு வரும் பெயர் ஜெயமோகன்தான். கடந்த பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக நவீனத்தமிழிலக்கியத்தின் பல்வேறு சாதனைகளோடும் சர்ச்சைகளோடும் ஜெயமோகனின் பெயர் சம்பந்தப்பட்டிருக்கிறது.

ரப்பர் நாவல் வெளிவந்த போதே ஜெயமோகனின் உக்கிரமான தனித்த படைப்பாளுமை தமிழ் வாசகப்பரப்பால் கவனிக்கப்பட்டது. அதன்பிறகு திசைகளின் நடுவே சிறுகதைதொகுப்பு வெளிவந்தது.தமிழ் கதையுலகில் பல புதிய சாத்தியங்களை அந்த தொகுப்பு திறந்துவிட்டது. பல்வேறு விதமான கதைகளை பிரக்ஞைபூர்வமாக அத்தொகுப்பில் ஜெயமோகன் முயற்சித்திருந்தார். விஷ்ணுபுரம் நாவலில் ஜெயமோகனின் படைப்புநிலை தன் உச்ச கட்டங்களை நோக்கி பயணம் செய்தது எனலாம்.தமிழ் நாவலின் எல்லைகளை விஷ்ணுபுரம் ஒரே பாய்ச்சலில் தாண்டிக் கடந்து சென்றது . குடும்பக் கதைகளால் நசித்துப்போன தமிழ் நாவல் இலக்கியத்தில் விஷ்ணுபுரம் ஏற்படுத்திய உடைப்பு மிகத் தீவிரமானது. இந்திய தத்துவ மரபின் மாபெரும் கருத்துப்போராட்டங்களை விஷ்ணுபுரம் காவியத்தன்மையுடனும் நவீன பிரக்ஞையுடனும் எதிர்கொண்டது. பின்னர் வெளிவந்த பின் தொடரும் நிழலின் குரல் நாவல் மார்க்சியத்தின் பெயரால் இழைக்கப்பட்ட குற்றங்களை மனிதாறம் என்ற நோக்கில் கடுமையாக விமரிசித்தது. தமிழ்ச் சூழலில் அந்த நாவல் பல்வேறு மனோநிலைகளில் விமரிச்சனங்களைச் சந்தித்தது.

இலக்கிய விமரிசகராக ஜெயமோகனின் கருத்துக்கள் முரண்பாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் நவீன இலக்கியம் குறித்த கருத்துருவாக்கங்களில் ஜெயமோகன் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். 90களில் அரசியல்வாதிகளும் தொழில்முறைகோட்பாட்டாளர்களும் மோஸ்தர்களைப் பின்தொடர்ந்து செல்பவர்களுமே தமிழில் இலக்கிய விமரிசனத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டு படைப்பாளிகளையும் வாசகர்களையும் மிரட்டி வந்தனர். இந்தக் காலத்தில் படைப்பின் அழகியல் மற்றும் தத்துவார்த்தத்தை படைப்பியல் நோக்கில் பேசிய ஜெயமோகனின் விமரிசனங்கள் பலவிதங்களிலும் முக்கியமானவை. ஜெயமோகனின் விமரிசனங்களை தனிப்பட்ட உறவுநிலைகள் பாதித்து வந்திருப்பதுதான் அவரது மிகப்பெரிய பலவீனம்.எனினும் இப்பலவீனம் ஏற்படுத்தும் முரண்பாடுகளைத்தாண்டி இலக்கியத்தின் அடிப்படைப்பிரச்சினைகளைப்பற்றி ஜெயமோகன் பல்வேறு விதங்களிலும் உரையாடிக் கொண்டிருக்கிறார்.இவ்வளவு பரந்த தளத்தில் இவ்வுரையாடலை நடத்தக் கூடியப அவருக்கு இணையான இன்னொருவர் தமிழ் இலக்கியத்தின் இன்றைய காலகட்டத்தில் இல்லை.

ஏக்ஜி

குறிப்பு
கல்கி வார இதழில் [3.8.03 சாதனை மலர்] இக்கட்டுரை வெளிவந்தது. - சிவம் கந்தராஜா

2 கருத்துகள்:

மொட்டையா எடுத்துப் போட்டா என்ன அர்த்தம். ஒரு 'கருத்து கந்தசாமி' போடலாம்ல? என்னமோ போங்க :)

:)) Ask the author போது தெரிந்திருந்தால், ஒரு கேள்வி போட்டிருக்கலாம். எது எப்படியோ...

>>>ஒரேயொரு மகத்தான கவிதையை எழுதியவனும் ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதியவனும் இலக்கிய நீரோட்டத்தில் முக்கியமான இடத்தையே வகிக்கின்றனர்.<<< என்றவுடன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு