வெள்ளி, ஆகஸ்ட் 20, 2004

'ஜோர்' ஆன அமெரிக்கத் தேர்தல்

சத்யராஜின் நக்கல் எனக்கு மிகவும் பிடிக்கும். நகைச்சுவைப் படங்களில் கமலை பார்ப்பதும், ஸ்டைல் செய்வதில் ரஜினியும். கையை ஆட்டுவதில் சிம்புவும், இடுப்பை ஒடிப்பதில் சிம்ரனும், வில்லத்தனத்தில் பிரகாஷ்ராஜும் அலுத்துப் போகலாம். ஆனால், மணிவண்ணன், விவேக் போன்றோர் அலுப்பதே இல்லை என்பது என்னுடைய கற்பனை.

மிக சமீபத்தில்தான் இலக்கவிழி தட்டுக்கு (டிவிடி-தான் சார்) 'ஜோர்' வந்து சேர தமிழ் சினிமா மனநிலையில் புகுந்துகொண்டு 'ஜோரை' ரசித்தேன். அப்பொழுது தோன்றிய உலகளாவிய தத்துவங்கள் சில:

* கல்லூரி தேர்தலில் சிபி நிற்கிறார். அவருக்கு வாக்குப் போடுவதற்கு சொல்லும் காரணம்: "எதிராளி சரியில்லை. அதிகாரவர்க்கத்தில் இருப்பவரின் மகன். அவர் உங்களுக்காக நல்லது செய்யப் போவதில்லை. எனவே, உங்கள் பொன்னான ஓட்டை..." - அமெரிக்காவில் கெர்ரி கூட தன் பிரச்சாரத்தை இப்படித்தான் துவக்கினார்.

* சத்யராஜ் வீட்டிலேயே வலம்வரும் பானுப்ரியாவை சேர்த்துக் கொண்டிருக்கும் இயக்குநரை -- தெற்கத்திக்காரர்களின் வோட்டுக்காக எட்வர்ட்ஸை இணைத்துக் கொண்ட கெர்ரி நினைவுறுத்தினார்.

* சிபியைப் பிரதானப்படுத்துவதற்காக அடக்கி வாசிக்கும், ஆனால் அனைத்தையும் வழிநடத்தும் சத்யராஜ் -- பெரியவர் டிக் சேனியின் பார்வையில் செயல்படும் புஷ்ஷுக்கு இணையாக சொல்லலாம்.

* தந்தை பாலாசிங் போலவே இங்கு அப்பா புஷ் சொல்லைத் தட்டாமல் மகன் புஷ் நடக்கிறார்.

* சம்பந்தமில்லாமல் வந்துபோகும் வடிவேலுவைப் போலவே பென் அஃப்லெக் (Gigli ஞாபகமிருக்கிறதா) காமெடியாக எதையாவது உதிர்த்துக் கொண்டிருக்கிறார்.

* எதிர்ப்புகளை மீறி வில்லனின் மகள் சிபியை விரும்புவது போல், செனியின் மகள் -- மேரி செனி, லெஸ்பியனாக வலம்வருகிறார்.

* பள்ளிக்கூடத்தின் மேல் பொய்வழக்கு போட்டது போல், ஈராக் மீது போர்தொடுப்பு.

* புத்திசாலித்தனமான அணுகுமுறை எதுவும் இல்லாமல் காலங்காலமாக சொல்லப்பட்டுவரும் வித்தைகளை வைத்தே சிபி ஜெயிப்பதாக சொல்லப்படுவதால், கெர்ரியும் எந்தவித ஜிகினா திட்டங்களும் பரிந்துரைக்காமல், எளிமையான தாக்குதல்களிலேயே சென்றுவிடலாம் என்று அறிவுறுத்துகிறார்.

* வில்லன் தந்தையைக் கொல்லும் மகனின் முடிவைப் போல், அமெரிக்கத் தேர்தலில் தங்களின் கொள்கைகளினால் புஷ்-செனி தோற்பார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் முடிவு.

இவ்வளவு சப்-டெக்ஸ்ட், மெட்டாஃபோர், அமெரிக்க அரசியலின் அலசல்கள், யார் எப்போது எந்த அரசியல்வாதி என்று அறிய முடியா கதாபாத்திர சித்தரிப்புகள் அடங்கிய படத்தை, நான் பார்த்ததேயில்லை!

-பாஸ்டன் பாலாஜி

1 கருத்துகள்:

ஜோர்!

dyno

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு