புதன், அக்டோபர் 06, 2004

கவுண்டர் கல்ச்சர் அன்லிமிட்டெட் - வளர்மதி

(பிரமிள் நினைவாக)

அருகில் வாவென அழைத்து
எதிரில் வாகாய் நிறுத்தி
காறியுமிழ்ந்தேன் அவன் முகத்தில்
உமிழ்நீர் வழிய
உறைந்து அதிர்ந்து விழித்து
(வேறு வரிசையாகவும் இருக்கலாம்)
நின்றவன் கன்னத்தில்
ஓங்கி விட்டேனொரு அறையும்
திக்கெட்டும் கூவியழைத்து ஓலமிட்டு ஒப்பாரிவைத்து
(சந்தேகமில்லை, சாட்சாத் இதே வரிசைதான்)
அழுகிறானவன்
வேடிக்கை பார்க்க கூடியதொரு கூட்டம்
அவன் வித்தைகளை விளக்கு பிடித்துக் காட்டி
வசூலும் செய்தான்
அழுக்கைத் தேய்த்து உருட்டி
பொட்டலம் கட்டி விற்கும் சமர்த்தனொருவன்
"அறம் பிறழ்ந்தவன்"
என்று சுட்டுவிரல் நீட்டினான்
எப்போதும் கைவிலங்கை இடுப்பில்
கட்டித்திரியும் கலாச்சாரக் காவல்காரன்
காட்டிக்கொடுப்பவனை
கூட்டிக்கொடுப்பவனை
கூழைக்கும்பிடுபோடுபவனை
கூட இருந்தோரை குழிக்குள் தள்ளி மண்ணள்ளிப் போட்டு
காததூரம் ஓடி காதொளித்து நின்றவனை
செவிட்டிலறைவதில் அறமென்ன பிறழ்ந்துவிட்டது!
"உன் ஆவேசத்தை எழுத்தில் காட்டு"
கரிசனம் கொண்டவர் சொன்ன புத்தியிது
ஒருவேளை
அன்று சாட்சியாய் நின்றிருந்துவிட்டு
இங்கு
வேறொரு 'கவிதையைக்' கழித்திருக்கவேண்டுமோ?

வெளி வந்த இதழ்: கவிதாசரண் மே-ஜூன், 2003

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு