செவ்வாய், அக்டோபர் 19, 2004

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? - ஜெயமோகன்

பகுதி 1 | பகுதி 2

  • எதன் மீதும் நான் விட இயலாத பிடிப்பு கொண்டிருக்கவில்லை. அந்தரங்கமாகச் சொல்லப்போனால் என் சொந்த படைப்புகள், இன்னும் குறிப்பாக 'விஷ்ணுபுரம்' 'பின்தொடரும்நிழலின் குரல்' என்ற இருநாவல்கள் ஆகியவற்றைச் சார்ந்தே எனக்கு அப்படி ஒரு பிடிப்பு உள்ளது. அது அசட்டுத்தனமானது என நான் அறிவேன். ஆனால் மனம் அதை ஏற்க மறுக்கிறது. இன்னும் சற்று வயதாகும்போது அப்பிடிப்பும் என்னிடமிருந்து போய் நான் மேலும் சுதந்திரம் அடையலாம். அது ஒரு நம்பிக்கை.

  • புத்தர் நம்பும்படி ஆணையிட்டவரல்ல , சிந்திக்கும்படி அறைகூவினவர்.

  • பைபிளையோ ,குர் ஆனையோ, தம்ம பதத்தையோ , கிரந்த் சாகிப்பையோ ஆழமான மனநெகிழ்வும் கனிவும் இன்றி என்னால் வாசிக்க இயன்றதில்லை. ஆனால் ஞானத்தேடல் கொண்ட ஒருவனை ஒருபோதும் ஒரு மூல நூலும் திருப்தி செய்யாது. அவனது ஞானம் அவனே அறிந்துகொண்ட ஒன்றாகவே இருக்கும். நூல்கள் அவனது பாதை ஒளிகளே ஒழிய அவன் சென்று சேரும் இறுதி வெளிச்சம் அல்ல. ஒரு நூல் பிரபஞ்ச இயக்கத்தை விளக்குமளவு பிரபஞ்சம் சிறியதோ எளியதோ அல்ல. ஒரு மனிதனுக்கு தன் ரகசியத்தை முற்றாகச் சொல்லிவிடுமளவுக்கு அப்பிரபஞ்சத்தின் மனம் சிறுமைகொண்டதுமல்ல. ஒரு நூலை இறைவனின் சொற்களாகக் காண்பதும், அதை எக்காலத்துக்கும் எல்லாருக்கும் உரியதாக நம்புவதும்தான் மூடநம்பிக்கைகளில் தலையாயது என ஒரு ஞானத்தேடல்கொண்ட மனிதன் ஆழமாக அறிவான் என்றே நான் நினைக்கிறேன்.

  • ஒரு நம்பிக்கையாளனிடம் ஞானத்தேடல்கொண்டவன் விவாதிக்க இயலாது. அவர்கள் இயங்கும் தளங்கள் வேறு. அவர்கள் உரையாட எதுவுமே இல்லை. அதிகபட்சம் ஒரு புன்னகையுடன் தேடல் கொண்டவன் நம்பிக்கையாளனிடமிருந்து விலகி நகர்ந்துவிடவேண்டும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

  • ''நான்கு வருணம் என் ஆக்கம். இயல்பு செயல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப்பட்டது'' [சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஸ] என்று வகுத்துரைக்கிறது. கடந்த அரை நூற்றாண்டாக இச்சூத்திரத்தின் முதல் வரி மட்டுமே இங்கு மேடைமேடையாக முழங்கப்பட்டு கீதையில் கிருஷ்ணன் சாதிகளை அவரே உருவாக்கியதாகச் சொல்கிறார் என்று காட்டப்பட்டுள்ளது. 'தமிழ் காட்டுமிராண்டி பாஷை' என்று ஈ.வே.ரா சொன்னாரே என்று கேட்டால் அவர் சொன்ன நோக்கம், தருணம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அதைப் பார்க்கவேண்டும்.

  • மனிதர்கள் தங்கள் இயல்பிலேயே பன்மைத்தன்மை கொண்டவர்கள் என்பதும், எந்த ஒரு விஷயமும் ஒருவருக்கு சரியாக இருப்பது பிறருக்கு சரியாக இருக்காது என்பதும் இந்துஞான மரபின் எல்லா கிளைகளுக்கும் எல்லா அறிவியல் கோட்பாடுகளுக்கும் பொதுவாக உள்ள கருத்து. கீதை மட்டுமல்ல பிரம்மசூத்திரமும் உபநிடதங்களும் கூட அப்படித்தான். 'எல்லா ஆறுகளும் கடலையே சேர்கின்றன எல்லா அறிதல்களும் பிரம்மத்தை' என்ற சாந்தோக்ய உபநிடத தரிசனம் நாம் அறிந்ததே.

  • இவற்றில் ஒருவர் தனக்கு பொருந்துவதை எடுத்துக் கொள்ளலாம். பிறிதை நிராகரிக்கலாம். ஒட்டுமொத்தமாகக் கூட நிராகரிக்கலாம். ஆனால் வாசித்து ஆராய்ந்து அறிந்தபிறகு அதைச்செய்யவேண்டும் அவ்வளவுதான். கீதைக்கும் , பாதராயணரின் பிரம்மசூத்திரத்துக்கும், ஆதிசங்கரரின் விவேகசிந்தாமணிக்கும், உபநிடதங்களுக்கும் உரைகள் எழுதிய நித்ய சைதன்ய யதி கணிசமான இடங்களில் மூல ஆசிரியர்களை மறுத்து வாதாடுவதையும் சில கருத்துக்களை முற்றாக நிராகரிப்பதையும் காணலாம்.

  • மகாபாரதத்தில் கீதைபோலவே பீஷ்மகீதை, விதுர நீதி போல பத்துக்கும் மேற்பட்ட தனித்தனி தத்துவ நூல் இணைப்புகள் உள்ளன. அவற்றில் சௌனகன் சொல்லும் நாத்திக நூலும் அடக்கம்.

  • ஒரு விழியிழந்தவனுக்கு ஒரு சொல்வல்லுநன் உருவாக்கிய 'சொல்நிலக்காட்சி' யே கீதை என்பதே அதன் முக்கியமான கவித்துவம். இருபக்கமும் விரியும் கோபம் கொண்டு கொந்தளிக்கும் பெரும்படைகளின் சந்திப்பு எல்லைக்கோட்டில் அது சொல்லப்படுகிறது என்பது இன்னொரு முக்கிய படிமம். அந்த ரதம் [அதை ஓட்டுபவன் எதிலும் எப்போதும் ஈடுபடாதவன், செயலாற்றுபவனுக்கோ ரதம் மீது கட்டுப்பாடே இல்லை] இன்னொரு படிமம். இப்படிமங்கள் அந்நூலின் மையமான நோக்குக்கு எந்த வகையில் ஆழத்தை அளிக்கின்றன என்பது சிறிதளவு இலக்கிய ரசனை இருந்தால்கூட அறிய முடியும்.

  • ''நீங்கள் உணரும் அர்த்தமின்மை எளிய உலகியல் தளத்தில் நீங்கள் உருவாக்கியுள்ள விதிகள் மற்றும் காரண காரிய ஒழுங்குகள் ஆகியவை சிதறுவதன்மூலம் தெரியவரும் அர்த்தமின்மையே. அதற்குமேல் இன்னொரு பெருவிதியும் பேரொழுங்கும் ஏன் இருக்கக் கூடாது? அதை நீங்கள் உணர்ந்தால் அதன் அடிப்படையில் இவ்வுலகியல் தளத்தை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியுமா?''.

  • நான் நாவல் எழுதுகிறேன். அதை ஒரு சாதனையாக எண்ணுகிறேன். அதை பிறர் பாராட்டுகையில் மகிழ்கிறேன். அதில் மேலும் வெற்றிகளுக்கு திட்டமிட்டு முயல்கிறேன். பெரும் கனவுகளுடன் என் உதிரத்தை ஆவியாக்கி உழைக்கிறேன். ஆனால் ஒரு கணம் விலகி இப்பிரபஞ்சப் பெருவெளியை, அதன் ஒரு கொப்புளத்துளியான பூமியை, அதில் குமுறும் உயிர்வாழ்க்கையை, அதன் பிரக்ஞை என்னும் பெரும் பிரவாகத்தை காண்பேன் என்றால் என் செயல் அபத்தமாக, மாயையாகவே தெரியும். அதன் பிறகு நான் எதுவுமே எழுத இயலாது. இந்த உத்வேகம் இல்லாமலாகும். இதுவே உயர்தத்துவ நோக்கு எப்போதும் நிகழ்த்தும் மனநிலையாகும்.

  • கீதையின் நாடக அமைப்பும் குறியீடும் இவ்வகையில்தான் முக்கியமானவை. அதைத்தான் முன்பே சொன்னேன். அர்ச்சுனன் உறவினரைக் கொல்வது தவறு என்று உணர்வது அறியாமை அல்ல. உலகியல் நோக்கில் அது ஒரு விவேகம். அவன் சொல்வது ஒரு பொது உண்மை. அதற்கு எதிராக சிறப்புண்மையை முன்வைக்கிறது கீதையின் மையம். இருவகை உண்மைகளின் உரையாடல் அது. உலகியல் உண்மையை முன்வைப்பவனை ஒரு பெருவீரனாக காட்டுவது கவித்துவமானது மட்டுமல்ல கீதை உருவான காலகட்டத்தின் விழுமியத்துக்கு ஏற்றதுமாகும். அதில் ''செயலாற்றுக! செயலாற்றுக! '' என்று ஊக்கும் பார்த்தசாரதி ஒரு செயலையும் ஆற்றுவதில்லை, செயலாற்றுபவனின் ரதத்தை ஓட்டுவதைத்தவிர. இதுதான் கீதையின் குறியீட்டமைப்பு. சிறப்புண்மையை அறியும்போது தான் அத்தளத்தில் மட்டும்தான் பொது உண்மை உண்மையல்லாததாக ஆகிறது.

  • ஒரு நுனியில் பிற அனைத்தையுமே அபத்தமாகக் காணும் அளவுக்கு நுட்பமான உயர்தத்துவ தரிசனத்தைக் கொண்டிருக்கிறது அது. மறு நுனியில் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை திறம்படச்செய்வதெப்படி என்ற தளத்தில் நிற்கிறது. இரு எல்லைகளையும் அது இணைக்கிறது.

    நன்றி: திண்ணை.காம்

  • 1 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு