திங்கள், நவம்பர் 01, 2004

விடிந்தால் வே(ா)ட்டு

நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் வருடா வருடம் தேர்தல் நடைபெறும். இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல். யார் ஜெயிக்கப்ப்போகிறார்கள் என்று ஆருடம் சொல்லுபவர்கள் அகம்பாவியாகவோ தலை சிறந்த அறிவாளியாகவோ இருக்க வேண்டும். (சொன்னவர்: சுதந்திர கட்சியின் ஜிம் டஃப்பி) நான் இரண்டும் அல்ல ;-)

கெர்ரி ஜெயித்தால் நல்லது என்பதை ஊடகங்கள் பரவலாக விதைத்து வருகிறது. இதனாலேயே புஷ் ஆதரவாளர்கள் நன்கு உசுப்பிவிடப்பட்டிருக்கிறார்கள். ஆர்வமாக வாக்கு சேகரிக்கிறார்கள். மைக்கேல் மூர் ஆரம்பித்து Concerned Citizens for a Safer America வரை பலரும் பலவிதமாக பத்து நிமிட புஷ் கையாலாகத்தனத்தையோ / யோக அமர்தலையோ பரப்பி வருகிறார்கள். கெர்ரிக்காக வாக்கு சேகரிக்க க்ளிண்டன் பிரச்சாரத்தில் குதித்து பென்சில்வேனியாவில் ஆக்ஸிஜன் ஏற்றுகிறார். என்றோ தொலைந்துபோன ஈராக்கிய கிடங்கு தேர்தல் நெருங்கும்போதுதான் வெடிக்கிறது. அதற்காகவே காத்திருந்த கெர்ரியும் புஷ்ஷை விமர்சிக்கிறார். ஒஸாமாவின் பேச்சு கெர்ரி ஆண்டாலும், புஷ் ஆண்டாலும் தனக்கொரு கவலையும் இல்லை என்றாலும், ஈராக் போரை கண்டனம் செய்வதன் மூலம் புஷ்ஷ¤க்கு வாக்குசீட்டை குத்தவைக்கும்.

ஃப்ளோரிடாவில் ஏற்கனவே தேர்தல் ஆரம்பித்து வோட்டுகள் குவிய ஆரம்பித்து விட்டன. அணடை அயல்நாட்டில் இருக்கும் அமெரிக்கர்கள் தபால் வாக்களித்து வருகிறார்கள். இறந்தவர்கள் கூட வாக்களித்திருக்கிறார்கள். ·ப்ளோரிடாவில் தினந்தோறும் 455 பேர்கள் இறப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. கடந்த தேர்தலில் இரு வேட்பாளருக்குமிடையேயான வித்தியாசம் வெறும் 537 வோட்டுகள் மட்டுமே. கடைசி விநாடி வரை இமை மூடாத நிகழ்ச்சி நிரலுடன் அனைத்து அதிமுக்கியமான, இன்னமும் தாடையில் கைவைத்து யோசனை புரியும் வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

கென்னடி போல் மேற்கு வர்ஜீனியா மாகாணத்தை விலைக்கு வாங்கிவிடுவார்களோ என்று பிபிசி கவலை கொள்கிறது. தெற்கு டகோடா தேர்தல்களத்தில் எலி முக்கியத்துவம் பெறுகிறது. வயல்க¨ளை அழிக்கும் ப்ரெய்ரி நாய்களைக் கொல்லக் கூடாது என்று சட்டம் தீட்டியிருக்கிறார் உள்ளூர் சுதந்திர கட்சியான எம்.பி.யான டாம் டாஸ்ச்ல். குட்டி போட்டு, பல்கிப் பெருகி மாடுகள் மேயும் இடங்களில் எல்லாம் தங்களின் பொந்துகளை அமைத்து, டகோடாவின் விவசாயிகளின் அடிமடியில் கைவைத்திருக்கிறது இந்த சட்டம். இதன் பாதிப்பு கெர்ரியைப் பெரிதாக சென்றடையாவிட்டாலும், ஜனாதிபதியானதற்குப்பின் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

போன முறை நூலிழையில் ஆல் கோர் தோற்ற சூதாட்ட தலைநகரம் உள்ள நெவாடா இந்த முறையும் புஷ் பக்கம் சாய்வது சந்தேகத்துக்குரியதாகிறது. ஃப்ளோரிடாவின் நாடெர் போல இந்தமுறை மூன்றாவது அணியின் மைக் பெட்நாரிக் புஷ்ஷுக்கு தலைவலியாக விளங்குவதை பாஸ்டன் க்ளோப் அலசுகிறது. கெர்ரியின் தொழிலாளர் நலன் திட்டங்கள் முன்னெப்போதையும் விட இந்தமுறை அதிக கவனத்தைப் பெறுவதால் -- நெவாடா சுதந்திர கட்சி பக்கம் சாயலாம்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை வளர்க்கிறது என்பதை கெர்ரி உணர்ந்திருக்கிறார். ஜார்ஜ் புஷ்ஷோ வாய்ஜாலமாக 'பாகிஸ்தான் எனது தோழன்' என்று சொல்லிவிட்டு, அதே பாகிஸ்தான் ஆடை ஒப்பந்தத்தை நீட்டும்போது புறந்தள்ளுகிறார்.

இன்றைய தேதியில் ஒஹையோ மாகாணத்தின் க்ளார்க் மாவட்டம் மிக முக்கியமான தேர்தல் கவனிப்பைப் பெறுகிறது. பலரும் நையாண்டி செய்வது போல் அங்கிருக்கும் ஒருவரின் வோட்டுதான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகிறது போல் தீவிர வாக்கு வேட்டையும் நடைபெறுகிறது. அயல்நாடுகளில் தேர்தல் வைத்தால் கெர்ரி ஜெயிப்பது மிகவும் எளிது. லண்டனின் Guardian நாளிதழும் தன் பங்குக்கு வாக்காளர்களை கெர்ரி பக்கம் இழுக்க முயற்சித்தது.

இருவரில் ஒருவரைத் தேர்தெடுப்பதில் ஏன் இவ்வளவு கஷ்டம்? இருவரும் அடுத்தவரை கடுமையாக விமர்சிப்பதுதான் முக்கிய காரணமாக இருக்கலாம். இருவரின் குறைகளுமே பெரிதாக கண்ணுக்குப் படுவதால், 'யார் குறைவான குணப்பிழை கொண்டிருக்கிறார்கள்' என்பதை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதைவிட வாக்களரின் மனைவியை வைத்து ஜனாதிபதிக்கு வாக்களித்தல் சுலபம். சிறப்பான அலங்கார வார்த்தைகளைக் கொண்டு, நைச்சியமாக மனங்கவரும் விதமாகப் பேசாமல், நேரடியாக உள்ளத்தில் தோன்றியதை உடனே போட்டுடைக்கும் தெரஸா கெர்ரி சிலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். உகந்தது உரைக்கும் வழக்கமான ஜனாதிபதியின் மனைவிகளிடமிருந்து இவர் வித்தியாசமானவர். பேச்சோடு நிற்காமல் செய்கைகளிலும் தொடர்ந்து அமைதியாக அதிரடி நடத்துபவர். தன் மனதுக்கு நெருக்கமான சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி போன்ற திட்டங்களுக்கு மில்லியன்களை வழங்கி வருபவர். தென்னாப்பிரிக்காவில் வளர்ந்தபோதே கறுப்பின அடக்குமுறையை எதிர்த்து பேரணிகளில் கலந்துகொண்டவர். அவருக்காகவேனும் கெர்ரி ஜெயிக்க வேண்டும்.

ஆனால், புஷ்ஷையும் தெரஸா கெர்ரிக்கு ஈடாக சிலர் உவமிக்கிறார்கள். பாஸ்டன் க்ளோப் ட்ருமனையும் புஷ்ஷையும் ஒப்பிட்டு இந்தத் தேர்தலை அலசுகிறது. 1948 ஜனாதிபதித் தேர்தலில் ட்ரூமன் பின்தங்கியிருந்ததால் வென்றிருக்கிறார். 2004-இல் ஜான் கெர்ரி அதே போல் கொஞ்சமே கொஞ்சம் பிந்தியிருக்கிறார். யார் ஜெயிப்பார்கள் என்பது (போன தடவை மாதிரி இல்லாமல்), நிச்சயமாக நாளை இரவு தெரிந்து விடும் என்றே தோன்றுகிறது!

-பாஸ்டன் பாலாஜி

2 கருத்துகள்:

Bhush (Bhushkku?) counting starts?

:)) அப்படித்தான் தோன்றுகிறது. பார்க்கலாம்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு