பாலஸ்தீனம்
பா. ராகவன்: "1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது. அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு.
இஸ்ரேலை யூதர்கள் ஸ்தாபித்ததை விரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியப் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்தன. 1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் ஒவ்வொரு நாட்டுடனும் ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜோர்டன் படை முன்னேறி வந்த மேற்குக்கரையின் பெரும்பகுதி அந்நாட்டுக்கே சொந்தம் என்றானது. எகிப்துப் படைகள் நிலைகொண்ட காஸா பகுதி, எகிப்தின் சொந்தமானது. கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலை அதோடு முடிந்ததாகச் சொல்லி விலகிக்கொண்டது. பாலஸ்தீனிய அராபியர்கள் வேறுவழியின்றி, தனியே போராட்டத்தில் குதித்தார்கள். ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில் அவர்கள் எத்தனையோ வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தின் மறைவைக் காட்டிலும் ஒரு பெரிய வீழ்ச்சி அங்கே இதுகாறும் ஏற்பட்டதில்லை.
இஸ்ரேல் _ பாலஸ்தீன் பிரச்னையின் சுருக்கத்தை நான்கு வரியில் சொல்லுவதென்றால், அது மேலே உள்ளதுதான். ஆனால் இது நான்கு வரிகளில் முடிகிற விஷயம் இல்லை. நாலாயிரம் வருட சரித்திரச் சிக்கல்களை உள்ளடக்கியது.
தொட்டால் அல்ல; முகர்ந்து பார்த்தாலே கூடப் பற்றிக்கொள்ளக்கூடிய மிகத்தீவிரமான பிரச்னையின் மையப்புள்ளி இது. ஏனெனில் இதில் அரசியல் மட்டுமல்ல; மதமும் கலந்திருக்கிறது. மதமும் அரசியலும் இரண்டறக் கலந்த இடத்தில் பற்றிக்கொள்ள பெட்ரோல் இருந்துதான் ஆகவேண்டுமென்று அவசியமா என்ன?"
கருத்துரையிடுக