புதன், ஜனவரி 19, 2005

லால்குடியின் 75ஆம் வயலின்

லால்குடியை நான் முதன் முதலாக கேட்டபோது எனக்கு இளையராஜாவும் அனு மாலிக்கும் மிகவும் பிடித்தமானவர்களாக இருந்தார்கள். (இப்போது வித்யாசாகரும் இஸ்மாயில் தர்பாரும் கோலோச்சுகிறார்கள் ;-) இலவச நிகழ்ச்சி என்ற ஒரே காரணத்திற்காகவும் கச்சேரி முடிந்தவுடன் மீரா பவன்வாசிகளுடன் காபி-கடலை போடப் போகலாம் என்னும் ஊக்கமும் 'தீர்த்தக் கரையினிலே' போன்று ஏதாவது சினிமாப் பாடலும் இடம்பெறும் என்று ஸ்பிக்-மகே (SPIC MACAY) உறுப்பினன் சொன்னதாலும் போய் உட்கார்ந்தோம்.

அதற்கு முன் என்னுடைய சாஸ்திரீய சபா அமர்வுகள் மிகவும் குறைவு. அம்மாவுடைய நண்பர் மகளின் திருமண வரவேற்பில் கண்ட 'சங்கராபரணம்' மஞ்சு பார்கவி நடனம் அமர்க்களமாகத்தான் இருந்தது. ஆனால், அரசவைக் கலைஞர் போல் உடம்பை வளைக்கிறாரா என்று எதிர்பார்த்தலிலும், ஒரு பாட்டுக்கும் அடுத்த பாட்டுக்கும் இடையே உள்ள இரண்டு நிமிடத்தில் எவ்வாறு ஆடை, அணிகலன் அனைத்தையும் பொருத்தமாக மாற்றிக் கொண்டு வந்துவிடுகிறார் என்று நினைத்ததிலும், பஃபே சாப்பாடா இலை சாப்பாடா என்று ஏவியெம் ராஜேஸ்வரி டைனிங் ஹாலை எட்டிப் பார்ப்பதிலுமே பெரிதும் கழிந்து போனது.

எப்பொழுதோ சென்னையில் கேட்ட மஹாராஜபுரம் சந்தானம் கச்சேரி பெரிதாக கவரவில்லை. கொட்டாவிதான் வந்தது. ஆனால், லால்குடியும் அவர்களின் மகன் மற்றும் மகளின் வாசிப்பு கவர்ச்சியான வேகத்துடன் துடிப்பாக இருந்தது. என்ன ராகம், தாளம் போன்ற டெக்னிகல் தகவல்களை ஒவ்வொரு பாட்டிற்கு முன் சொன்னாலும் புரிபடவில்லை. இருந்தாலும், ஓரத்து சீட்டில் உட்கார்ந்திருந்து விட்டு, அரை மணி நேரம் குசுகுசு உரையாடிவிட்டு பிச்சுக்கலாம் என்னும் எண்ணத்தில் மண். அனைவரும் ஆர்வத்துடன், விரும்பி, முழுவதும் கேட்டுவிட்டு அதிசயித்தோம்.

அதன்பின் ஸ்பிக்-மக்கே ஏற்பாடு செய்த பல நிகழ்வுகளும் அந்தந்த செவ்வியல் துறைகளில் எங்கள் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் கூட்டியது.


Lalgudi Jeyaraman - பிரம்மராஜன்: "மேற்கத்திய இசைக் கருவியான வயலினைக் கர்நாடக சங்கீதத்திற்குத் தகுந்தவாறு வாசிக்கும் முறையை மாற்றியமைத்து ஏறத்தாழ நம்மூர்க் கருவியைப் போல நாம் புழங்கிவருகிறோம். ஒரு கச்சேரியின் பிரதான பாடகருக்கான பக்க வாத்தியமாக (அ) துணை இசைக் கருவியாக இருந்த வயலின் 60களுக்குப் பிறகு கச்சேரியின் பிரதான வாத்தியமாக மாறியது. அப்படி மாற்றியவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் லால்குடி ஜெயராமன். இவருக்குச் சமமாக வயலின் இசையில் சாதனை படைத்தவர்கள் என்று சொல்லக்கூடிய இன்னும் இருவர் எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் டி.என். கிருஷ்ணன்.

லால்குடி பல மூத்த குரலிசைக் கலைஞர்களுக்கும் (அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்பிரமணிய அய்யர், ஜி.என். பாலசுப்பிரமணியன், மதுரை மணி அய்யர், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, எம்.டி. ராமநாதன், மதுரை சோமு, ராம்நாட் கிருஷ்ணன்) புல்லாங்குழல் இசைக் கலைஞர்களுக்கும் (டி. ஆர். மஹாலிங்கம். என். ரமணி) வீணை இசைக் கலைஞர்களுக்கும் (ஏமனி சங்கர சாஸ்திரி, மைசூர் தொரைசாமி ஐயங்கார், எஸ். பாலச்சந்தர்) பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார். ஆனால் பெண் குரலிசைக் கலைஞர்களுக்கு அவர் வாசிக்கவில்லை. பெண் குரலின் ஸ்தாயிக்கேற்ப வயலின் ஸ்ருதி சேர்க்கப்படும்போது வயலினுக்கே உரிய இனிமைச் செழுமையை இழந்துவிடுவதாக அவர் கருதியது இதற்கான காரணமாக இருக்க முடியும்.

சாகித்யம் கர்நாடக இசையில் மையப்பங்கு வகிப்பதாலும் மேலதிகமாகக் கச்சேரியே இசைப் பிரதியைச் சார்ந்திருப்பதாலும் ஒரு குரலிசைக் கலைஞர் குறிப்பிட்ட ராகத்திற்கான பாடல் (அ) கீர்த்தனையைக் கற்காது காதில் விழுந்த ஸ்வரங்களை வைத்து இசையை நிகழ்த்துகின்றனர். ஆனால் லால்குடி அப்படிப்பட்டவரல்லர். அவர் வாசிக்கும் எல்லா இசைப் பிரதிகளையும் குரலில் அவரால் பாட முடிந்த பிறகே அவர் அதை வாத்தியத்தில் வாசிக்கிறார். தொடக்கத்தில் பாடகராகக் கச்சேரிகள் செய்திருக்கிறார். அவருடைய வயலின் வார்த்தைகளை ஸ்பஷ்டமாக உச்சரிக்கும் திறன் மிக்கது. எடுத்துக்காட்டாக, "தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற ராகமாலிகையின் இரண்டாவது வரி மீண்டும் வாசிக்கப்படும் சமயம் இதை அவதானிக்கலாம். குரலிசையின் பாணியைப் பின்பற்றிக் கருவி இசையில் வாசிப்பதை ஹிந்துஸ்தானியில் "காயகி' என்கிறார்கள். அதுபோன்ற ஒரு சொல்லாக்கம் கர்நாடக இசையில் புழக்கத்தில் இல்லை. ஜெயராமனின் வாசிப்புப் பாணியில் பாதி குரல்அம்சமும் பாதி வாத்தியஅம்சமும் இருப்பதாக இசை விமர்சகர் டாக்டர் என். ராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயராமன் இசைப் படைப்பாளராகவும் பரிணமித்திருக்கிறார். குறிப்பிடத்தக்க "தில்லானாக்கள்' மற்றும் "வர்ணங்கள்' போன்ற இசை உருக்களை எழுதியிருக்கிறார். வர்ணங்கள் கச்சேரியின் தொடக்கத்திலும் தில்லானாக்கள் இறுதியிலும் பாடப்படுகின்றன. 29 தில்லானாக்களையும் 13 தான வர்ணங்களையும் 3 பத வர்ணங்களையும் எழுதியிருக்கிறார். வசந்தா ராகத்தில் ஜெயராமன் எழுதிய முதல் "தில்லானா' ஜி. என்.பியின் முழு ஆமோதிப்பைப் பெற்றது. அவர் ஒரு சிறந்த குருவும்கூட. அவரது சகோதரி ஸ்ரீமதிக்கும் மகன் கிருஷ்ணனுக்கும் மகள் விஜிக்கும் வயலின் கற்றுக்கொடுத்திருக்கிறார். பல இசைப் பள்ளிகளுக்கு ஆலோசனைகள் அளிக்கிறார்.

தீவிர இசை ரசிகரல்லாதோரும் அணுகும் விதமாக The Dance of Sound என்ற பெயரில் 1978ஆம் ஆண்டு ஓர் இசைத்தட்டு வெளிவந்தது. "தில்லானா' என்கிற இசை வடிவம் ஒரு நாட்டிய அரங்கேற்றத்தின்போது பாடப்படும் இன்றியமையாத இசை. கச்சேரியைப் பொருத்தவரை அது "லேசான' அயிட்டமாகக் கருதப்பட்டுக் கடைசியில் பாடப்படும். ஆனால் அவற்றைப் பிரதானப்படுத்தியது 8 தில்லானாக்கள் கொண்ட ஜெயராமனின் இந்த இசைத்தட்டு. அவற்றை இன்றைக்குக் கேட்டாலும் மனதில் மாயங்களை நிகழ்த்தும் திறன்கொண்டவை. இந்த எட்டில் எனக்குப் பிரியமானவை மோகன கல்யாணி, தேஷ், துவிஜாவந்தி மற்றும் பஹாடி. இத்தில்லானாக்களின் கடினமான தாளப் பிரயோகம் மற்றும் ஸ்வரங்களைக் கையாளும் முறை தேர்ச்சி மிக்கவை. ஆரம்பகாலப் பயிற்சியாளனுக்கு இவை சிரமம் தரக்கூடியவை. என்றாலும் ஒரு கூர்ந்த ரசிகனுக்குக் கலை ஞானத்தின் வேறு அனுபவச் சாளரங்களைத் திறந்துவிடக் கூடியவை. "ஆர்க்கெஸ்ட்ராவை' அவர் தன் துணைக்குச் சேர்த்துக்கொண்டது பற்றி அப்போது சில முணுமுணுத்த விமர்சனங்கள் இருந்தன - தீவிர இசையை அவர் நீர்த்துப்போக அனுமதித்து விட்டதாக. ஆனால் ஜெயராமனின் "தில்லானாக்களை' கேட்ட அனுபவத்தின் விளைவாய்க் கர்நாடக இசை ரசிகர்களாக மாறியவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கக்கூடும்.

1983இல் வெளிவந்த South Meets North (An enchanting hour with Lalgudi G. Jayaraman & Ustad Amjad Ali Khan) என்ற இசைத்தட்டின் வழியாக உஸ்தாத் அம்ஜத் அலிகானுடன் சேர்ந்து கர்நாடக இசையின் வயலினையும் ஹிந்துஸ்தானி இசையின் சரோடையும் கேட்க வழிவகுத்தார் லால்குடி. 1 மணி நேரத்திற்கான அந்த இசைத் தட்டில் மால்கோன்ஸும் (ஹிந்தோளம்) பூபாலியும் (மோஹனம்) இடம் பெற்றுள்ளன. வேலூர் ராமபத்ரன் மிருதங்கமும் ஷாபட் அகமத் கான் தப்லாவும் வாசித்திருக்கின்றனர். ஹிந்துஸ்தானி பாரம்பரியத்தில் இருந்த இரு ராகங்களும் இரவு நேரத்திற்குரியவை. "ஜுகல் பந்தி' என்றழைக்கப்படும் இந்த "இசை சந்திப்பில்' இரண்டு கலைஞர்களும் ஒரு ராகத்தில் தளம் அமைத்துக்கொண்டு தத்தமது பாணியில் தனிப்பட்ட திசையில் பயணப்பட்டு இறுதியில் ஒன்றிணைகிறார்கள். வடக்கும் தெற்கும் இதில் இணைகின்றன. ஆனால் பிணைவதில்லை. மூல அர்த்தப்படி "ஒரு ஜோடியைப் பிணைப்பது' தான் ஜுகல்பந்தி.

ஒரு எல்.பியின் 20 நிமிடப் பக்கத்தில் பல சிறிய துக்கடாக்களைக் கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் விரிவான ஆலாபனைகளும் ஸ்வரப் பிரஸ்தாரங்களும் கொண்ட இந்த இசைத்தட்டு, கேட்பவனின் நிறைவை நீட்டிக்கக் கூடியதாய் அமைந்தது. ஹெச்.எம். வி. கம்பெனி இந்த இசைத்தட்டின் ஒரு பக்கத்தை வழக்கமான 20 நிமிடத்திற்கு மாறாக 30 நிமிடத்திற்குப் பதிவுசெய்திருந்தது. அன்றைக்கு அது பெரிய விஷயம். ஹிந்துஸ்தானி இசை குறித்து ஜெயராமன் கொண்டிருந்த விசாலமான அணுகு முறையே இப்படிப்பட்ட ஓர் இசை சந்திப்பு சாத்தியமாகக் காரணமாக இருந்தது. ஹிந்துஸ்தானியில் பல வேறுபட்ட இசைக் கருவிகளுக்கிடையிலான ஜுகல் பந்திகள் சாத்தியமாகியுள்ளன. நான் கேட்டு அனுபவித்த முதல் ஜுகல்பந்தி அனுபவம் ஷிவ்குமார் ஷர்மாவும் (சந்த்தூர்) ஹிரபிரஸாத் சௌராஸியாவும் (புல்லாங்குழல்) இணைந்து கொடுத்த ஒரு எல்.பியைக் கேட்டதுதான்.

ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் அளவுக்கு கர்நாடக இசைக் கலைஞர்களின் "வாய்ஸ் கல்ச்சர்' இல்லை என்ற கருத்தும் ஜெயராமனுக்கு உண்டு. இசைக்கான மரியாதையைவிடப் பக்திக்கான மரியாதை கர்நாடக சங்கீதத்தில் அதிகம் உண்டென்ற கருத்தும் கொண்டவர் அவர். அதிகமும் பிரதியுடன் பிணைக்கப்பட்டுள்ள கர்நாடக சங்கீதத்தின் நிலைமையை விமர்சனம் செய்பவராகவுமிருக்கிறார். பக்தியிலிருந்து விடுதலையடைந்தால்தான் கர்நாடக சங்கீதம் நவீனமாக முடியும் என்று தமிழவன் குறிப்பிட்டதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்வது தவறில்லை."

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு