வெள்ளி, ஜனவரி 14, 2005

வேல்பேசி

வடிவடி வேலு... வெடிவேலு!

வடிவேலின் விகடன் தொடர் எதார்த்தமாக, மனதுக்கு மென்மையாக இருக்கிறது. படிக்கும்போதே feel-good feeling வருகிறது. அமெரிக்காவில் செல்பேசி வைத்துக் கொண்டு உதார் விடுவது சாதாரணம்.

உதாரணத்திற்கு கடந்த கிறிஸ்துமஸில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பின்போது நான் செய்ததை நினைவுகூறலாம். என்னுடைய வீட்டில் இருந்து (பார்வை) மெய்யப்பனின் வீடு பத்து நிமிஷம்தான் இருக்கும்.

6:55: 'வணக்கம் மெய்யப்பன். இன்னும் அஞ்சு நிமிஷத்தில் நாங்க கிளம்பிடுவோம். உங்க வீட்டுக்கு எப்படி வருவது...'

7:02: 'ஹலோ மெய்யப்பன். பாலாஜி பேசறேன். கிளம்பிட்டோம்.'

7:08: 'நான்தான் பாலாஜி. எக்ஸிட் எடுத்துட்டோம். பின் தொடர்கிற மற்றவர்களும் தொலைந்து போகாமல் வராங்க!'

7:11: 'இன்னும் வீடு வரலியே.... நாங்க சரியாத்தான் வந்துட்டு இருக்கோமா?'

7:13: 'உங்க தெருவில் திரும்பிட்டோம்.'

7:15: 'அட வீட்டு வாசலிலேயே நிற்கறீங்களே!'

குறைந்தது ஆறு போன் கால் நடந்திருக்கும். வாரயிறுதிகளில் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் என்னும் சலுகை வேறு.

அன்னிக்கு ஒரு பயல, மவுண்ட் ரோட்லயிருந்து சாலிகிராமத்துலயிருக்கற நம்ம ஆபீஸ§க்கு வரச் சொன்னேன். கௌம்பி வாற அர மணி நேரத்துல அஞ்சு போன் பண்ணிட்டான். ‘அண்ணே ஜெமினிகிட்ட வந்துக்கிருக்கேன். இப்ப வந்துருவேன்'னு மொத போன் அடிச்சான். ‘வள்ளுவர் கோட்டம் சிக்னல்ல நிக்கிறேண்ணே'னு அடுத்த போனு. ‘கோடம்பாக்கம் பாலத்துமேல ட்ராஃபிக் ஜாஸ்தியாயிருக்கு'னு மூணாவது போனு. ‘வடபழனி பஸ் ஸ்டாண்டைக் கிராஸ் பண்றேன்'னு மறுக்கா ஒண்ணு. ‘அண்ணே, நிமுந்து பாருங்க'னு போனுல சொல்லிக்கிட்டே வாசல்ல எதுத்தாப்ல நின்னு இளிக்கிறான். அவன அப்பிடியேக் கோத்துப் புடிச்சு ‘எலே என்னவோ ‘டெல்லியிலயிருந்து பிரதமரு கௌம்பிட்டாரு... வந்துக்கிருக்காரு... இப்ப வந்துருவாரு'ங்கற மாதிரி இங்ஙன இருக்கற மவுண்ட் ரோட்லயிருந்து வர அஞ்சு போனு அடிக்கிறியே...'னு மண்டையில கொட்டுனா, ‘அட விடுங்கண்ணே... ஐநூத்தியரு ரூபா போனு'னு சிரிக்கறான்.

செல்பேசி இந்தியாவில் துவங்கிய புதிதில் வெளிவந்த விளம்பரம் இது. அதி பணக்காரர்கள் நிறைந்த ரம்மியமான ஐந்து நட்சத்திர உணவகம். கோட்டு சூட்டு மாட்டிக் கொண்ட சிப்பந்திகள். சாயங்காலமும் இல்லாமல் இரவும் இல்லாத நேரம். டேபிளில் தனியாக அம்மையார் உட்கார்ந்திருக்கிறார். பக்கத்து டேபிளிலும் தன்னந்தனியாக ஐம்பது வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் பிஸினஸ்மேன்.

பெண்மனிதான் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்கிறார். நளினமான சிரிப்புடன், மெல்லிய குரலில் முதல் அஸிதிரம் வருகிறது....

"உங்கள் தோற்றம் என்னை வசீகரிக்கிறது!"
"நீங்க இன்னிக்கு நைட் ஃப்ரீயா?"
"என் கூட உணவருந்த வர முடியுமா?"

பக்கத்து டேபிள் நடுத்தர வயது கண்ணியவான் 'சரி' என்று சொல்ல ரெடியாக கிட்டே நெருங்கும்போது உள்ளங்கைக்குள் காணாமல் போன செல்பேசி எட்டிப்பார்த்து, அணைக்கப்பட்டு, அலட்சியமான லுக்குடன், கறுப்பு ஈவினிங் கவுன் பேசுகிறார்:

"ஒரு கப் காப்பி!"

அன்றில் இருந்து தனியாகப் பேசுபவர்கள் மேல் மரியாதையே வந்துவிட்டது. (அதன் பரிணாம வளர்ச்சிதான் தனி வலைப்பதிவுகளா என்று எல்லாம் தெரியாது!)

அன்னிக்கு கார்ல சிக்னல்ல நின்னுக்கிருக்கேன். பக்கத்துல நின்ன ஒரு பைக்காரன் திடுதிப்புனு அவம் பாட்டுக்கு ‘என்னா பேசற... மூஞ்சி மொகறையெல்லாம் பேத்துப்புடுவேன் தெரியும்ல'னு சவுண்டு வுடறான். அவம் பக்கத்துல நின்ன ஆட்டோ டிரைவரு, தன்னத்தான் திட்றாம்னு நெனச்சிக்கிட்டு ‘ஒழுங்காத்தான நிக்கிறேன். இப்ப எதுக்குடா திட்டுனே?'னு அவன அடிக்க வர, கலவரமாயிருச்சு. அப்புறந்தேன் தெரிஞ்சுது. பைக்காரன் என்னமோ இயர்போனாம்ல, அதக் காதுல மாட்டிக்கிட்டு யார்கூடயோ செல்போன்ல பேசிட்டிருந்திருக்காம். விஞ்ஞான வெவரம் புரியாம வெவகாரமாகி வெட்டுக்குத்து ரேஞ்சுக்கு போயிக்கிருக்குண்ணே. பட்டணத்துல இப்ப பாதிப்பயக இப்பிடி தனக்குத்தானே பேசிக்கிட்டு ரோட்ல திரியறாய்ங்க. புதுசா யாராச்சும் பாத்தா, 'ஆத்தி இது என்னா ஊர்ல பாதிப்பேரு கிறுக்கு புடிச்சு அலையறானுகளே?'னு பயந்துருவாய்ங்க.


இவ்வளவு சொல்லிட்டு, போனுக்காகவே உருவாக்கப்பட்டவர்களை விவரிக்காவிட்டால், அவரின் குறிப்புகளுக்கு முழுமை கிட்டியிருக்காது.

இதை விடுங்கய்யா. செல்போன வெச்சுகிட்டு இந்த பொண்டு புள்ளைக அடிக்கிற கூத்து இன்னும் ஜாஸ்தி. பொது எடம் அது இதுனு எதையும் பாக்கிற தில்ல... எங்க பாத்தாலும் ‘கெக்கே பிக்கே'னு செல்போனும் சிரிப்புமா நிக்குதுங்க. அப்பிடி இந்தப் பிள்ளைக என்னதான் பேசுதுகன்னு கேட்டா ‘ஹேய் இல்லப்பா... ச்சீய், ஓகே, ஒத வாங்குவே, ஸாரிடா, போப்பா... ம் ம் ம்...'' இப்பிடி துண்டு துண்டாவே ரெண்டு மணி நேரத்துக்குப் பேசிக்கிருக்குதுங்க.

‘இந்தப் புள்ளைக இம்புட்டு நேரம் பேசிக் கிருக்குதுங்களே. எப்புடிய்யா காசு கட்டும்?'னு ஒரு யூத்து அஜிஸ்டெண்ட்டுகிட்ட கேட்டேன். ‘அண்ணே பொண்ணுங்க ரொம்பத் தெளிவு! பயகளுக்கு ‘மிஸ்டு கால்' குடுப்பாளுங்க. அவிங்கதேன் அடிச்சிப் புடிச்சிக்கிட்டு லைனுக்கு வருவாய்ங்க. அவிங்க காசுலதேன் இவளுக அரட்டையடிக் கிறதே'ன்னாரு. இப்ப இந்த காதல், கத்திரிக்கா, முள்ளங்கி கீரையெல்லாம் செல்போனுலயே தேன் நடக்குதாம்ல.


த்ரிஷா குளிச்ச மேட்டரையும் விடவில்லை. அடுத்து விமான நிலையம் சென்றால் ஜோதிகாவை நினைவு கூர்வாரோ? (எல்லாரும் ஜோதிகா விமான நிலைய புகைப்படங்களைப் பார்த்து கண்டனம் சொல்லியாச்சா?)

வெரசாப் பேசிக் கிறதுக்குக் கண்டுபுடிச்சத இப்பிடி சைஸா பயன்படுத் தறாய்ங்களேண்ணே. இப்போ அதுலயே போட்டோ எடுக் கிறாய்ங்களாமே, பாத்ரூம்ல குளிக்கிறதுகூட படமா வந்துருதாம்ல. ஆத்தி, என்னய இப்பிடி எவனாச்சும் படம் புடிச்சுட்டா என்ன பண்றதுங்கற பயத்துல, இப்பல்லாம் புது இடத்துல குளிக்கப் போனாலே ஒடம்பு கூசிப் போகுதுண்ணே!

நன்றி: Vadivelu Articles - Ananda Vikadan

4 கருத்துகள்:

ரொம்ப நல்ல மூடில் எழுதியிருக்கீங்க போல இருக்கு. மெய்யப்பன் வீட்டுக்கு போன கதையை நினைத்தால் சிரிப்பு வருகிறது :). இதுவாவது பரவாயில்லை, இரவு 10:30 அல்லது 11.00 மணிக்குள்
வந்து விடுவிடுவேன் என்று சொல்லிவிட்டு மறுநாள் அதிகாலை 2:30 மணிக்கு வலைப்பதிவர் வீட்டு கதவை தட்டும் ஜந்துக்களும் இந்த பூலோகத்தில் ஜீவிக்கின்றனவே!

கிருஸ்துமஸ் சந்திப்பு சுனாமியோடே அடித்துச் சென்றுவிட்டது, யாரும் ,நானும் ஏதும் எழுதவில்லை. :-(

///(எல்லாரும் ஜோதிகா விமான நிலைய புகைப்படங்களைப் பார்த்து கண்டனம் சொல்லியாச்சா?)///

பாலாஜி,
இது என்ன..? இது பற்றி நான் ஒன்றும் கேள்விப்படவே இல்லையே.. கொஞ்சம் விளக்கமாய்ச் சொன்னால் உதவியாய் இருக்கும்.. :)

நான்கூட, இரண்டொருமுறை, என் பக்கத்திலிருப்பவர், 'ஹலோ' சொல்லக்கேட்டு, என்னைத்தான் விளிக்கிறார் என்று நானும் 'ஹலோ' சொல்லிக்கொண்டே திரும்பினால், அவர் கையில் செல்போன் :).

பிரபு, அடுத்த வாரம் முடிந்தால் சந்திப்போம். தற்போதைக்கு நியு யார்க் பக்கம் வருவதாகத்தான் திட்டம். bsubra@யாஹூ.காம் என்னும் முகவரிக்கு தங்கள் தொடர்பு எண்களை அனுப்ப முடியுமா?

முத்து... அது ரொம்ப பழைய சங்கதியாம். வலைப் பதியும் நல்லுலகில் பலரும் அறிந்திருக்கிறார்கள். நாம்தான் லேட். கூட்டத்தில், பஸ்சில் இடிபடுவதைப் போல ஜோதிகாவையும் எசகு பிசகாக இடித்திருக்கிறார்கள். இப்பொழுதுதான் நான் பிஹைண்ட்வுட்ஸ்.காம் மூலம் தெரிந்து கொண்டேன்.

இந்தச் சுட்டியை பார்க்கவும்:
Lost in Media: Jothika follows Trisha

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு