ஞாயிறு, ஜனவரி 16, 2005

இனிய வாழ்த்துக்கள் - சிவப்பிரபு

கண்கள் சிவக்க
கண்ணீர் வழிய
அம்மாவின் திட்டுக்களுடன்
எண்ணெய்க் குளியல்.

மொடமொடக்கும்
புதுத் துணியும்,
அதில் வைத்த
சந்தன வாசமும்.

நாக்கு சுட
மேலண்ணம் பொத்துப் போக
அவசர அவசரமாய்
சாமி கும்பிடும் முன்னே
திருடித் தின்னும்
எண்ணெய்ப் பலகாரங்கள்.

பலகாரக் கூடையுடன்
பெரிம்மா பெரிப்பா
சின்னம்மா சித்தப்பா
வீட்டுக்கெல்லாம் ஒரு நடை.

தின்று கழித்து
உண்டு மகிழ்ந்து
வெடித்து வலித்து
சத்தம் ஓய்ந்த
உச்சி வெயிலில்
உள்ளூர் டூரிங் டாகீசில்
ஒரு தரை டிக்கெட் சினிமா.

கையில் வெடி வெடித்துக் காந்த
கத்தும் அப்பாவுக்கு பயந்து
நான் மறைக்க நினைத்தாலும்
என்னையும் அறியாமல்
வலியால் தானாய்ச் சுரந்து
கொட்டும் கண்ணீர்.

தெருவோரக் குட்டிச் சுவற்றை
அதிர அதிர அடித்த வெங்காய வெடி.
அந்த வெங்காய வெடியை
எனக்கு அறிமுகம் செய்து வைத்து
அடுத்த வருசமே செத்துப் போன
செல்வராசு சித்தப்பா.

அவர் போலவே இப்போதெல்லாம்
தீபாவளியையும் காணோம்.

என்ன தான் மிச்சம்?

வழக்கம் போல அரக்க பரக்க
ஆபீஸ் கிளம்பி ஓடும் போது
'ஹேப்பி தீவாளி மாப்ஸ்' என்ற
சினேகிதனின் வாழ்த்தைத் தவிர???

- சிவப்பிரபு

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு