செவ்வாய், ஜனவரி 18, 2005

அவளை நினைப்பதும் உரலை இடிப்பதும்

தமிழ்மணம் - உரல் என்ற பதம் சரிதானா?



Yahoo! Groups : tamil-ulagam Messages : Message 7141: இராம.கி.

நீங்கள் குறித்துள்ள

Font - எழுத்துரு
driver - இயக்குநிரல்
matrix - கணம் / அணி
update - மேற்திருத்தம்
built-in - உள்ளமை
non-profit organization - ஆதாயம் கருதா நிறுவனம்
URL (Uniform Resource Locator) - சீர்வளத் தகவல் காட்டி
Information Interchange - தகவல் பரிமாற்றம்
Binary Number - இரும எண்

என்ற கலைச் சொற்கள் பற்றி ஒரு சில கருத்துக்கள்.

முதலில் இந்த font. இது கணினி வருவதற்கு முன்னே அச்சுத் தொழிலில் இருந்ததுதான். இதற்கு வார்ப்பு என்று முன்னேயே சொல் இருக்கிறது. வார்ப்புப் பட்டறை என்பது casting ஒட்டிக் கொல்லன் பட்டறையில் உள்ள சொல் தான். வார்ப்படம் என்பது ஒரு casting. அந்தக் காலத்தில் ஒவ்வொருவகை எழுத்தும் அச்சுத் தொழிலில் ஓரொரு வார்ப்புத்தான். இன்றைக்குக் கணினி வந்த காரணத்தால் இந்த "எழுத்துருவை"க் கட்டிக் கொண்டு இல்லாததைக் கண்டது போல் சொல்லிக் கொண்டிருக்கிறோம் (நானும் சில பொழுது இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.) நமக்கு அறிவியல் நோக்கு வரவேண்டும் என்று எண்ணினால், இப்படி ஒவ்வொரு இயலும் கட்டம் கட்டிக் கொண்டு " இது எங்களுக்கு ஆன சொல்" என்று பட்டாப் போடாமல் இருக்கவேண்டுமானால், மேலே சொன்னது போல் பொதுமை பார்க்க வேண்டுமானால், " வார்ப்பு" என்பது நல்ல சொல்; ஏற்கனவே 350 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் சொல், எழுத்துருவை விடுத்து அதைப் பயன்படுத்தலாம் என்பது என் வேண்டுகோள்.

அடுத்தது driver. இந்த இயக்கம் என்ற சொல்லை வைத்துக் கொண்டு, processing, operation, movement, என நுணுகிய வேறுபாடு கொண்ட ஒவ்வொரு செயலுக்கும் முன்னொட்டு பின்னொட்டு சேர்த்து கலைச்சொல் படைத்தால் நமக்குக் காணாது. அதற்குப் பதிலாக மஞ்சிவிரட்டில் மாட்டின் கொம்பை நேரே பிடித்தால் தான் அதை அடக்க முடியும் என்பது போல், இந்த driver என்ற சொல்லின் ஆழம் காண வேண்டும். driver என்பது ஏதாவது ஒன்றைச் செலுத்துவது. இது கணினித் துறையில் மட்டுமல்ல. இந்தச் சொல் மின்னியலில் பயன்படும், எந்திரவியலில் பயன்படும்; மருத்துவ இயலில் கூடப் பயன்படும். நீங்கள் உங்கள் துறைக்கு மட்டும் சொல் கண்டு, இது போல ஒவ்வொரு துறையினரும் இப்படிச் சொல் கண்டால் என்னாவது? அவர் துரத்தினார் என்னும் பொழுது மாடோ, குதிரையோ எதோ ஒன்றை அவர் விரும்பும் போக்குக்குச் செலுத்தினார் என்று பொருள். துரப்பது என்றாலே செல்லுவது தான். அதனால் தான், சென்ற தொலைவு தூரம் ஆயிற்று. இவையெல்லாம் நமக்குத் தெரிந்த சொற்கள் தான். துரவுதல் என்பது drive என்பதற்குச் சரியான, இணையான வினை. இது தெரிந்தால் drive என்ற சொல்லில் இருந்து கிளைத்த மற்ற சொற்களுக்கும் எல்லாத் துறைகளுக்கும் பொதுவான முறையில் வழிச் சொற்கள் உருவாக்குவது எளிது.

drive - துரவு
driver - (உயர் திணையைக் குறித்தால்) துரவர், (அஃறிணையைக் குறித்தால்) துரவி. துரவி என்ற சொல் துறைக்கும் ஒத்துவரும். மாறுபடாது.

அடுத்தது matrix. இது மடித்து மடித்து எழுதப் பட்ட எண் தொகுதி. matrix என்பது இலத்தீனில் அம்மாவின் கருவறை. தமிழில் மடி என்பது வயிற்று மடிப்பு, வயிறு, அரை (இடுப்பு), மடித்த தொடையின் மேற்பாகம் எல்லாவற்றையும் குறிக்கும். அரையில் வயிற்றுக்குக் கீழே தானே தாயின் கருவறையும் இருக்கிறது. இந்தப் பொருள் மட்டும் இன்றையத் தமிழில் அருகிவிட்டது.

"என்னப்பா இது, மடியிலே வச்சுக்கிட்டா இல்லைங்கிறேன்?" - இங்கே இடுப்பு என்ற பொருள்.

"புள்ளையைக் கொஞ்சம் மடியிலே போட்டு தூங்க வையம்மா" - இங்கே தொடையின் மேற்பாகம்.

"என்ன பொம்பிளை அவ, மடி தெரியிற மாதிரி சேலையைக் கட்டிக்கிட்டு" - இங்கே வயிறு மற்றும் வயிற்று மடிப்பு.

தமிழ் நாட்டுப் பார்ப்பனர் விட்டுப் பெண்களின் "மடி கட்டுதல்" என்பது ஒன்றைப் பல பகுதிகளாக மடித்த முறையில், கிட்டத்தட்ட மராட்டிய நாட்டுப் புறப் பெண்கள் நடையில் சேலை கட்டும் முறை. தமிழ் நாட்டுப் பெண்களைக் காட்டிலும் இந்த முறையில் மடிப்புக் கூட. தீட்டில்லாத நிலையையும் மடி என்றே பார்ப்பனர் குறிப்பர். அதனால் தான் தீட்டில்லாத காலங்களில் அணியும் உடை மடி = ஆசார உடை என்று கருதப் பட்டது. இது காலகாலமாக அவர்கள் கட்டும் முறை.

மாட்டின் முலையும் மடி தான் மடியோடு தொடர்புடைய இன்னொரு சொல்லான மடு என்பது குழிவான குளத்தைக் குறிக்கும். மடுவங் கரை என்பது குளத்தங்கரையைக் குறிக்கும்.

மேலே நமக்கு உதவியாக இருக்கும் பொருள் மடித்து வரும் எண் தொகுதிதான். கணம் என்ற சொல்லில் துல்லியம் கிடையாது. அது வெறும் சேர்க்கை; கூட்டம்; ஒழுங்கு இல்லாத நிலை. அதே போல அணி என்பது வரிசை. அது ஒரு-பரிமாணப் பட்டது.

ஒரு மடிக்கைக்குள் அணி அணியாக எண்கள் இருக்கும். "மாணவர்கள் அணிவகுத்து நின்றனர்" என்னும் போது வரிசையாக நின்றனர் என்று பொருள் வருமே ஒழிய மடிக்கையாக நின்றனர் என்று வராது.

மடிக்கை (matrix) என்னும் போது நம்மை அறியாமலே மடங்கி மடங்கி வரிசையாக எண்கள் இருப்பது புலப்படும்.

அடுத்தது update. இங்கே திருத்தம் என்பது பிழை இருந்து திருத்தியதாகத் தோன்ற வைக்கும். எத்தனையோ காரணங்களுக்காக update செய்ய முடியும். எனவே மேற்தருகை என்பது சிறப்பாக இருக்கும்.

built-in என்பதற்கு உள்ளமை என்பது நன்றாகவே உள்ளது.

அடுத்தது profit. ஆதாயம் என்பது வருமானம். சிலர் profit என்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். சில அகர முதலிகளிலும் இந்தப் பொருள் ஏறிவிட்டது உண்மைதான். (நானும் சில பொழுது பயன்படுத்தியுள்ளேன்.) ஆதல் என்ற வினையில் இருந்து எழுந்த சொல் ஆதாயம். ஆதலுக்கு, நிகழ்தல், அமைதல், முடிதல் என்ற பொருள்கள் உள்ளன. அதிகரித்ததால் வந்த பொருள் அதற்கு இல்லை. ஆனால் profit என்பது, செலவிற்கு மேல் வருமானம் அதிகரித்ததால் வந்த சொல். ஏற்கனவே, கல்வெட்டுக்களில் பழகிய சொல்லையும், வேளாண் துறையில் பழகிய சொல்லையும் "கொன்றையும் பொன்னும்" என்ற தொடர்மடலில் குறிப்பிட்டிருந்தேன். இங்கே அதைக் கீழே வெட்டி ஒட்டியுள்ளேன்.

----------------------------------------------------------------------
பொல்> பொலி = தூற்றாத நெற்குவியல், தூற்றிய நெல், களத்தில் நெல் அளக்கும் போது முதல் மரக்காலுக்கு மங்கலமாக வழங்கும் பெயர். முன்னாடிச் சொன்ன மாதிரி, பொலி, ரெண்டு, மூணுன்னு களத்துமேட்டுலெ நெல்லு அளக்குற போது எண்ணுறதும் ஒரு பழக்கம் தான். நாட்டுப் பொறத்துலே, வளம் ஏற்படுறதுக்கு பல இடங்கள்லெ, கல்யாணம், காட்சின்னா, சொல்ற சொலவம் "பொலியோ பொலி"

பொலி> பொலிப்பாட்டு, மேலே சொன்ன 'பொலியோ பொலி"ங்குற சொலவம்

பொலி> பொலிக்கொடி = மஞ்சள் நிற வைக்கோல்

பொல்> பொலியை> பொலிசை = விளைச்சல்லே ஆதாயமா வர்றது பொலிசை. ஒரு முதல் போட்டு அதுலெ வர்ற வட்டியும் பொலிசைதான், வட்டி என்ற சொல்லும் நெல்லை, கடகம் (ஓலைக் கூடை; எங்கூர்ப் பக்கத்து வட்டாரச் சொல்) போல வட்டி (வட்டமான தட்டு) லெ அளந்து போடுறது தான். இது தான் வெள்ளைக்காரன் சொல்ற interest. வட்டிச்சு வர்றதுன்னாத் திரும்பித் திரும்பிப் பெருகி ஒவ்வொரு ஆண்டும் வர்றது.

பொலிசை> பலிசை; இதுவும் கல்வெட்டுலே நெடுக வர்ற சொல். ஒவ்வொரு மண்டகப்படிக்காரரும், கோயில் பண்டாரத்துலே குறிப்பிட்ட பணம் செலுத்தி, அதுலெ வர்ற பொலிசை/பலிசையிலேந்து, அரிசி, உளுந்து, நெய், மிளகு, உப்பு, கறி(காய்), வெத்திலை, அடைப்பக்காய் (அதாங்க கொட்டைப்பாக்கு), சந்தனக் காப்பு, இன்னும் பலது வாங்குறதுக்கு பயன்படுத்தி கொள்வதாகக் கல்வெட்டுலே பதிச்சிருக்காங்க.

இந்தக் கல்வெட்டெல்லாம் நம்மள்லெ எத்தனை பேரு படிக்கிறோம்? ஆனா, தமிழ் பிழைக்கோணும்னு நீங்க நினைச்சீங்கன்னா கல்வெட்டெல்லாம் யாராவது படிச்சு, இந்தக்காலத்துத் தமிழ்லெ மாத்திச் சொல்லோணும் அண்ணாச்சி. இது ஒரு பெரிய வேலை; செய்யுற ஆளத்தான் விரலை விட்டு எண்ணிறலாம் போலேருக்கு.

பொல்> பொலியூட்டு = பொலிசை கிடைக்க வைக்குற முதல் = அதாவது capital. தமிழ்லே மூலதனம்னு ஒரே ஒரு சொல் மட்டும்தான் இருக்குன்னு நினச்சுக்குறோம். இன்னோண்ணு இந்தா இருக்கு அண்ணாச்சி, மூல தனத்திலேயும் தனம்குறது தங்கம் தான். பொலியூட்டுலெயும், பொலிகுறது தங்கம் தான்.

பொலி>பொலிவிடு>பொலிவீடு>பொலுவீடு = இதுதான் அண்ணாச்சி, வெள்ளைக்காரன் சொல்ற புரோவிடு = profit
---------------------------------------------------------


என்னைக் கேட்டால், இந்தக் கல்வெட்டுச் சொல்லையே (பொலுவு) profit என்பதற்குப் பயன்படுத்தலாம். இது போன்ற தமிழ்க் கல்வெட்டு திருப்பதிக் கோயிலில் இருப்பதை நூல் வழி படித்திருக்கிறேன்.

எனவே, non-profit organization - பொலுவில்லா நிறுவனம் என்று ஆகும். வலுவைப் போலப் பொலுவைப் பயன்படுத்தமுடியும். இதுச் சொற்சுருக்கத்தைக் கூட்டும். "நீங்கள் சொல்லுவது பொலுவுள்ளதாக இருக்கும் போல் இருக்கிறதே! - It appears "what you say may be profitable"

அடுத்தது கொஞ்சம் சரவலானது. uniform என்பதற்கு ஒருங்கே என்ற சொல் ஏற்கனவே இருக்கிறது. சீரிய என்பது சிறந்தது என்ற சொல்லின் இன்னொரு வடிவம். "அந்தப் பொருள்கள் ஒருங்கே இருந்தன" என்னும் பொழுது ஒரே மாதிரியாக ஒழுங்காக வைக்கப் பட்டிருந்தன என்று பொருள். பலரும் ஒருங்கே என்ற இடத்தில் சீரிய என்ற சொல்லை பயனாக்குகின்றனர். இது துல்லியம் பாராத தன்மை. தமிழில் அறிவியல் வளரவேண்டும் என்றால் கவிதைப் பழக்கம் இங்கே வரக்கூடாது. கவிதையில் இந்த நீக்குப் போக்கு இருந்தால் அது சிறப்பு. அங்கே அழகுணர்ச்சியும், மெய்ப்பாடும், மிகுவது காரணமாக, உண்மை நிலைக்குப் பிறழ்ந்திருந்தாலும் சரியெனத் தோன்றும். இது அறிவியலில் சரிப்பட்டு வராது.

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு"

என்று ஒரு அருமையான குறள் (1108) காமத்துப்பாலில் உண்டு. காற்றாலும் போழ முடியாத முயக்கு (வள்ளுவரின் மிகச் சிறப்பான தொடர்களில் இதுவும் ஒன்று; பல பொழுதுகளில் வியந்து போயிருக்கிறேன்; பாட்டென்றால் இதுவொன்றோ பாட்டு?) என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளுமோ? கவிதை ஒத்துக் கொள்ளும். இந்தப் பாடலை, தலைவன் தலைவியின் உடம்புகளை அவற்றின் முப்பரிமாண அளவுகளைச் சிதைத்து நவீன ஓவியம் ஒன்றைப் பார்த்தேன். அதுவல்லவா ஓவியம் என்று தோன்றியது? இதை ஒருகாலத்திலும் இரவி வர்மாவின் ஓவியப் பாணியில் பார்க்க இயலாது.

எதற்குச் சொல்ல வருகிறேன்? கூடிய மட்டும் ஒரு கருத்துக்கு ஒரு சொல்லே அறிவியலில் பயன்படவேண்டும்.

ஒருங்கு என்பதன் வினைச் சொல் ஒருவுதல்/ஒருமுதல் என்பது. அதாவது ஒரே போல இருத்தல். சொல்லுவதற்கு எளிதாக uniform என்பதற்கு "ஒருமித்த" என்ற பெயரெச்சத்தை உருவாக்க முடியும்.

அது போல resource; தமிழில் ஊற்று என்ற சொல் இருக்கிறது அய்யா! ஆங்கில மூலம் கண்டாலும் அங்கே ஊற்றுத்தான் வருகிறது. ஊற்றுப் போல் தான் resource. அது வற்றினால் எல்லாம் போயிற்று. "உங்களிடம் உள்ள ஊற்றுகள் (resource) எத்தனை?" "அவர் ஊற்றுள்ளவர் (resourceful)." இந்தச் சொல்லைப் பயன்படுத்தினால் ஆற்றொழுக்குப் போல கருத்து ஓடிவரும்.

location என்பது நடைமுறைத் தமிழில் இலக்குத்தானே! பின் அதையே பயன்படுத்தலாமே! எங்கள் ஊர்ப் பக்கம் "(இ)(¦)லக்குத் தெரியாம அலையாதே" என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்.

URL (Uniform Resource Locator) - ஒருமித்த ஊற்றிலக்கு


information என்பதற்கு தகவல் என்ற உருதுச் சொல்லை எத்தனை நாள் பயன்படுத்திக் கொண்டிருப்போம்? "எனக்கு நீ தெரிவி" என்னும் பொழுது you inform me என்பதுதானே புலப்படுகிறது. இது ஏதோ தமிழில் முடியாதது போல தகவல் தொழில்நுட்பவியல் என்று ஏன் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறோம்? இப்படிச் சொல்வது உறுப்பியல் என்பதை அங்ககவியல் என்பதுபோல எனக்குத் தோற்றம் அளிக்கிறது. "தெரிப்ப நுட்பியல் - information technology" என்று சொன்னால் நாம் குறைந்து போய் விடுவோமா? (பொம்பளை சிரிச்சாப் போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு என்று ஆகிவிடுமோ? :-)) தெரிப்பம் = information

அடுத்தது interchange இதுவும் பழக்கத்தால் வரும் ஒரு நிலை. பரி என்ற முன்னொட்டுக்கு விளக்கம் எனக்கு யாராவது தந்தால் நல்லது. அதற்கு மாறாக இடை மாற்றம் என்பது பொதுமைப் பட்டதாக எனக்குத் தெரிகிறது. இடை என்ற முன்னொட்டைக் கொண்டு இடை முகம் (interface), இடைவேளை (interval), இடை நாசம் (internecine) என அடுத்தடுத்து ஒரே போல inter எனத் தொடங்கும் சொற்களுக்கு எல்லாம் நம்மால் சொல்ல முடியும். இந்த பரி என்னும் முன்னொட்டு நான் அறிந்த வரை இவ்வளவு பரந்த முறையில் அதற்கு உதவவில்லை.

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அதன் கண் விடல்"


என்று மாந்தனுக்குச் சொன்னது சரியான சொற்களுக்கும் அமையும் போலத் தெரிகிறது.

முடிவாக என் முன்னீட்டை இங்கு வைக்கிறேன். கொள்வதும் விடுப்பதும் உங்கள் கையில்

Font - வார்ப்பு
driver - துரவி
matrix - மடிக்கை
update - மேற்தருகை
built-in - உள்ளமை
non-profit organization - பொலுவிலா நிறுவனம்
URL (Uniform Resource Locator) - ஒருமித்த ஊற்றிலக்கு
Information Interchange - தெரிப்பு இடைமாற்றம்
Binary Number - இரும எண்


இராம.கி.




Yahoo! Groups : kalaichol Messages : Message 70: மணி மு. மணிவண்ணன்

இணையத் தொடர்பான கருத்துக்களை தமிழிலேயே அறிஞர்கள் எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. செந்தரப்படுத்தப்பட்ட தமிழ்க்கலைச் சொற்கள் எளிதில் கிடைக்காமல் இருந்தாலும், தமிழில் கலைச்சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துவது எதிர்பார்க்கக்கூடியதே. இருந்தாலும், அகத்திய அறிஞர்களின் சொல்லாக்கங்கள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதால் அவர்கள் பொறுப்புணர்வோடு சொற்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும்.

Uniform Resource Locator - URL - yu aar el
என்பதற்குத் தமிழ் இணையத்தில் நண்பர் ஒருவர் உருவாக்கிய சொல் "உரல்." இது பின்விளைவை எண்ணிப் பாராமல், ஆங்கிலம் தெரிந்த ஒருவர் அச்சொல்லைத் தமிழ் வடிவில் தனது வசதிக்காகவோ, சோம்பலினாலோ உருவாக்கிய சொல். இதை முதல் முதல் காணும் தமிழ் மட்டும் அறிந்த (அல்லது ஆங்கிலப் புலமை குறைந்த) தமிழன் இதே உச்சரிப்பை ஆங்கிலத்திலும் கையாளக்கூடும். தமிழர்களில் பலர் ஆங்கிலச் சொற்களைத் தமிழ்போலவே தவறாக உச்சரித்து ஆங்கிலப்புலமை மிக்கவர்களால் எள்ளி நகையாடப்படுகிறார்கள். இது போன்ற சொற்கள் அது போன்ற குழப்பத்தை உண்டாக்குகின்றன.

அது மட்டுமல்லாமல், இந்தச் சொல்லாக்கத்தினால் இதன் பின்புலமோ, பொருளோ ஆங்கிலப் புலமை குன்றிய தமிழனுக்குப் புரியவும் வாய்ப்பில்லை. இதே சொல் வேறொரு பொருளில் தமிழில் இருப்பதால், தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

URL என்பது ஒரு கலைச்சொல். தொழில்நுட்ப மொழிபெயர்ப்புகளுக்கு வேண்டுமானால் இதன் சரியான மொழிபெயர்ப்பை உருவாக்கலாம். பொதுமக்களின் பயனுக்கு எளிய பொருள் தரும் சொல்லொன்றையே பயன்படுத்தலாமே?

இங்கே "வலைப்பக்க முகவரி" என்பதைக் குறிக்க "முகவரி" என்று சொன்னால் போதுமே!

இதே போல் Home Page என்ற சொல்லும் பலவேறு சொற்களால் குறிப்பிடப் பட்டு வந்திருக்கிறது. இந்தச் சொல்லை இப்போது அடிக்கடி யாரும் பயன்படுத்துவதில்லை. இதை சுஜாதா அவர்கள் 'இல் பக்கம்' என்று குறிப்பிடுகிறார் என்று நினைவு. அமெரிக்க எண்ணப்படி, ஊரெல்லாம் மேய்ந்து விட்டு வீட்டுக்குப் போக வேண்டுமென்றால் திரும்பிப் போகும் பக்கமே இது. ஆனால் உண்மையில் இது ஒரு முகவாயில் பக்கம் மட்டுமே. இதை வேராகக் கொண்டு, பல பக்கங்கள் பின்னிப் பிணைகின்றன.

பொதுவாக "வலைப்புலம்" என்ற சொல்லை நாங்கள் சிலர் பயன்படுத்தி வந்துள்ளோம். மதுரைத் திட்டத்தின் வலைப்புலம் என்றால் மதுரைத்திட்டத்தின் எல்லாப் பக்கங்களும் குடிகொண்டிருக்கும் இடம் என்பது மட்டுமல்லாமல், அதன் முகவாயிற்பக்கத்தையும் இதே சொல்லால் குறிப்பிடலாம்.

தளம் என்ற சொல்லைப் பொதுவாக system என்ற சொல்லின் அடிப்படையில் பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள். அதனால் வலைத்தளம் என்ற சொல் குழப்பத்தை உண்டாக்கலாம்.

மணி மு. மணிவண்ணன்



என் கருத்து: 'சுட்டி' நல்ல இருக்கிறதே!

6 கருத்துகள்:

/சுட்டி/
அப்படித்தான் தமிழ்.இணையம் காலத்திலிருந்து வழங்கிவருகிறோம்
(உம்:) http://groups.yahoo.com/group/kalaichol/message/76

எதோ குழுமத்தில் 'உரல்' பரிந்துரைக்கப்பட்டதைப் படித்தேன். இப்போது மறந்துவிட்டது.

என்ன, URL = சுட்டி ன்னு வெச்சுக்கலாமா? தமிழ்மணம் பட்டியல் படிவத்தில் மாற்றிவிடுகிறேன்.

Link (hyperlink) = தொடுப்பு சரியா? தொடர்பு, இணைப்பு இப்படி பலது இருக்கே. அதுக்கும் ஒரு தொடுப்பு;-) கொடுத்தா நல்லா இருக்கும்.

எனக்கும் 'சுட்டி'(தான்) பிடித்திருக்கிறது.

பாலா, அவலை அவளை ஆக்கி விட்டீர்கள்.

- சத்யராஜ்குமார்

ராஜ்,
எல்லா பழமொழியும் 'அப்படி சொல்லக் கூடாது... இப்படித்தான் சொல்ல வேண்டும்!' என்று திருத்துவார்களே;

அப்படி 'அவல்', அவளாக இருக்கும், என்று 'ஏ'த்தனமாய் நினைத்து விட்டேன் ;-)

//'அவல்', அவளாக இருக்கும், என்று 'ஏ'த்தனமாய் நினைத்து விட்டேன் ;-) ///

:) :) ;)

"உரல்" எனக்கும் பிடிக்கவில்லை. நானும் "சுட்டி" என்று தான் பலகாலம் பாவித்து வந்தேன். சமீபத்தில் தமிழ்மணத்திலேயே உரல் என்றிருக்கவே, சரி அப்படிப் பயன்படுத்தலாம் போலிருக்கிறதே என்று எண்ண ஆரம்பித்தேன். சத்யராஜ்குமார் சரியான சமயத்தில் கேள்வி எழுப்பியது நல்லதாகப் போய்விட்டது. இனி மீண்டும் சுட்டிக்கே போய்விடுகிறேன்.

hyper என்பதற்கு 'மித'(?) என்கிற வேர் பொருந்துமா என்று இராம.கி போன்றவர்கள் தான் சொல்லவேண்டும். hypertext என்பதற்கு மீயுரை என்று பார்த்திருக்கிறேன். hyper=மிதமிஞ்சிய?=மீ?. hyperpressure = மீயழுத்தம், hyperlink=மீச்சுட்டி? ஹிஹி...கற்றுக்குட்டி... தவறானால் திருத்துங்கள்.

இராம.கி, மணிவண்ணன் எழுதியவற்றின் "சுட்டி"களுக்கு பா.பாலாஜிக்கு நன்றி.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு