ஞாயிறு, பிப்ரவரி 13, 2005

தமிழ்பௌல்

அமெரிக்காவில் சூப்பர்பௌல் பலராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. தொலைக்காட்சியின் நம்பர் 1 நிகழ்ச்சியாக இருக்கிறது. நடுவே வரும் விளம்பரங்களுக்கும் பெரிய அளவில் சிரத்தை எடுத்து காண்பிக்கிறார்கள். சூப்பர் பௌலுக்காகவே சிறப்பாக புத்தம்புதிய விளம்பரங்கள் தயாரித்து வெளியிடுகிறார்கள். கால்-செண்டர்கள் மிகுந்திருக்கும் தமிழகத்திலும் சூப்பர் பௌலை கண்டு புரிந்து கொள்ளுமாறு அமெரிக்க முதலாளிகள் கட்டளையிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் சொல்கிறது. தமிழர்களுக்காக ஸ்பெஷல் விளம்பரங்களும் ரெடி.

அந்த விளம்பரங்களில் சிலவற்றின் முன்னேட்டத்தை உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

சென்னையில் ஏற்கனவே பல்லாண்டு காலமாய் கடை வைத்திருப்பதால் 'பழம்பட்டு' என்னும் புதிய பட்டு வகையை அறிமுகம் செய்கிறார்கள் 'ரோத்தீஸ்'. 'ராத்திரியிலும் ரோதனையில்லாமல் ஷாப்பிங் செய்ய வரூவீர் ரோத்தீஸ்' என்னும் வார்த்தைகள் விளம்பரம் முழுக்க வருகிறது. இந்த விளம்பரத்தில் பழம்பட்டு வகையை அறிமுகம் செய்பவர் அஞ்சு எலி தேவி. 'என்னுடைய காலத்தில் இந்தப் பட்டை காண்பித்தார்கள். அன்று இருந்த அதே காவியப் பட்டை பத்திரம் இல்லாமல் வைத்ததால், என்னால் கிழிக்க முடிந்தது. ஆங்காங்கே பொத்தல் எல்லாம் வந்திருக்கிறது. இது இந்தக் காலத்துக்கு ஏற்ற ·பேஷன். கிழிசல் ஜீன்ஸ் போல் இருக்கிறது. பழமை என்றாலே பெருமை! அதிலும் கிழிந்த பழம் பட்டின் பெருமை அறியாமல் வாங்கிக் கொள்வது கொடுமை' என்று முடிக்கிறார் அஞ்சு எலி தேவி.

இதற்கு அடுத்த விளம்பரம் கார்ட்டூன் மூலமாக கார் பாட்டரியின் அருமையை காட்டுகிறது. விளம்பரத்தின் ஆரம்பத்தில் சிறுமியருத்தி ஓடி வருகிறாள். கையில் தண்டத்துடன் காவியுடையுடன் சிறுவன் அவளைத் துரத்த ஆரம்பிக்கிறான். சைக்கிளில் செல்கிறாள். குட்டி சாமியும் விடாமல் காரில் தொடர்கிறான். சைக்கிள் பன்சராகி பஜாஜ் ஸ்கூட்டிக்கு மாறுகிறாள். சாமியாரின் கார் நிற்காமல் ஓடுகிறது. ஸ்கூட்டியில் இருந்து ரயிலுக்குத் தாவுகிறாள். சாமியின் கார் அதையும் பின்தொடர்கிறது. ரயில் தடம்புரள, ஏர்-இந்தியாவில் ஏறுகிறாள். இதற்குள் நேபாளம் வந்துவிட, பெருமூச்சுடன் காரை நிறுத்தி இளைப்பாறி 'எங்கேயும், எப்போதும், தோன்ற வைக்கும் பத்தாயிரம் ஆண்டுகள் இருக்கும், இறவா வரம் கொண்ட பாபா பாட்டரிகள்' என்று முடிக்கிறார்கள்.

அடுத்ததாக செல்பேசி விளம்பரம். கிட்டத்தட்ட சென்ற விளம்பரம் விட்ட இடத்தில் தொடர்கிறது. விமானத்தின் உள்ளே இருக்கும் பாட்டி செல்பேச ஆரம்பிக்கிறாள். 'நானும் ஐம்பது வருஷமா ட்ரை செய்கிறேன்! இப்பத்தான் லைன் கிடைக்கிறது' என்கிறாள். 'உங்களுக்கும் இந்த நிலை ஏற்படாமல் இருக்க உபயோகிப்பீர் "காக்கா செல்". ஆசாமிகள் ஆகட்டும் சாமியார்கள் ஆகட்டும்... தப்பித்து ஓடும்போதெல்லாம் உங்களை நாங்களும் விடாது தொடர்வோம்... கா... கா... கா...' என்று காகங்கள் கரைந்து கொண்டிருக்கின்றன.

சுமா பாரதியும் ரெட் ராம் சாவ்தானியும் காரில் வந்து இறங்குவதில் அடுத்த விளம்பரம் ஆரம்பிக்கிறது. உள்ளே போனவுடன் கை தட்டும் ஓசை கேட்கிறது. அடுத்து சுவற்றில் அடிக்கும் சத்தம். தொடர்ந்து இன்னும் கைகலப்பு குரல்கள். வெளியே இருக்கும் வாட்ச்மேனுக்கு உறக்கமே இல்லை. இந்த சத்தங்களையேக் கேட்டு வியந்து கொண்டிருக்கிறார். அவர்களின் அறைக்கு தன்னுடைய டார்டாய்ஸ் கொசுவத்திச் சுருளை எடுத்துக் கொண்டு செல்ல ஆரம்பிக்கும்போது 'இந்த இரவுக்கு முடிவேயில்லை' என்னும் உணர்ச்சிகரமான குரல் பிண்ணனியில் ஒலிக்கிறது.

கோக்கும் பெப்ஸியும் ஒருவரையருவர் தாக்கிக் கொள்வது நாம் அறிந்ததே. லிஃப்டில் அதி தத்ரூபமான குரங்கு பொம்மையுடன் சிப்பந்தி காத்திருக்கிறார். பத்தாவது மாடியில் கோக் வைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார் லல்லூ ப்ரசாத் யாதவ். பதினோராவது மாடியில் கையில் பெப்ஸியுடன் இளைய சேனாபதி சிஜய் லிஃப்டுக்குள் வருகிறார். திடீரென்று கரண்ட் போய்விட 'கரக் முரக்' சத்தங்கள். இரண்டே விநாடிகளில் மின்சாரம் வந்து விடுகிறது. இப்பொழுது பார்த்தால் குரங்கு பொம்மை காணோம். அதற்கு பதிலாக லல்லூவின் பொம்மை இருக்கிறது. குரங்கு உயிர் பெற்று 'திரு திரு' பாய்ச்சுகிறது. சிஜய் கையில் இருந்த பெப்ஸி காலி. 'பெப்ஸி குடியுங்கள்... உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் குரங்கை எழுப்புங்கள்' என்று ஒரு குரலும், 'கோக் குடியுங்கள்... உங்களின் மூளையை உடல் முழுக்க பரவ விடுங்கள்' என்று இன்னொரு குரலும் ஒலிக்கும்.

அந்த இடம் மெல்லிய விளக்குகளால் நிறைந்திருக்கிறது. 'நான் சிரித்தால் தீபாவளி'க்கு முன்னாள் முன்னணி நடிகன் ஜின்ரம் நடனம் பயில்கிறார். அப்பொழுதுதான் காமத்திபுராவிற்கு வந்தது போன்ற இளம் மாணாக்கன்கள் குருவைப் பின்பற்றி ஆட முயற்சிக்கின்றார்கள். அங்கே காதலனை பார்க்க வரும் தொப்பை நடிகை கிளாஸுடன் உதிக்கிறார். 'சரக்கை அடிச்சுக்கோ... சரிஞ்சு படுத்துக்கோ' என்று திடீரென்று பாடல் மாறி தொப்புள் நடனம் ஆட ஆரம்பிக்கிறார். ஜின்ரம் வெட்கப்பட்டுக் கொண்டு கொண்டு வந்த தண்ணியை அடிக்கும் போது 'கிங்ஃபிஷர் குடிச்சுக்கோ... ஊத்திக்கோ' என்று மாணவர்களின் போதையுடன் முடிக்கிறார்கள்.

சூப்பர் பௌல் ஒளிபரப்பும் நிறுவனமே வலைபத்திரிகையும் நடத்தி வருகிறது. அந்த வலையிதழுக்காக மூன்று விதமான விளம்பரங்கள் காட்டப்படுகிறது. 'மங்காத்தா கண்ணு மங்காத்தா' என்று தொடங்கும் முதல் விளம்பரத்தில் டஹிதி முதல் தாம்பரம் வரை உள்ள பல்வேறு ஊர்கள் காட்டப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் மங்காத்தா ஆடுகிறார்கள். இணையத்தில் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டேயிருப்பதாகக் காட்டப்படுகிறது. 'மூணுசீட்டு கண்ணா மூணுசீட்டு' என்று இதேபோல் இன்னொரு விளம்பரமும் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கும். 'செம்மொழியில் முதன்முறையாக மங்காத்தா' என்று ஆரம்பிக்கும் மூன்றாவது விளம்பரத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.

உங்களுடைய முதலிரவைக் கொண்டாட அழைக்கும் ஜி.எம். மகிழுந்துகள், 'சலிக்குது... சலி சலிக்குது' என்று சல்லடையுன் அழைக்கும் புடைவைகள், புதிய சாயம் பூசியதால் வென்ச்சர் காபிடலிஸ்ட்களிடம் இருந்து பணம் கிடைத்த வித்தையை சொல்லும் அமிதாப் என்று நீங்கள் பார்த்த விளம்பரங்களையும் சொல்லுங்கள்.

-பாலாஜி / Tamiloviam

3 கருத்துகள்:

பாலா, Again சுட்ட Bloga?

How did you miss the half time show :)-Probably like 2004 half time show by Janet Jackson and Justin :). Thinking who would do this in our place :D.

அடேங்கப்பா: இது சுட்ட ஒரிஜினல்களை (இந்திய விளம்பரங்களைத்) திருப்பிப் போட்ட ஒரிஜினல் அல்வா.

ராஜ்: ஐந்து நொடி தாமதம் என்று எல்லாம் ஏக முன்னெச்சரிக்கையுடன் நிகழ்த்துகிறார்கள்... என்ன வெளிப்படப் போகிறது! அது சரி ஸ்னூப் டாக் விருந்தில் 'தாரா ரீட்' போஸ் கொடுத்தாங்களாமே ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு