தமிழோவியம்.காம்
நையாண்டி -- திட்டாந்தப்பேச்சு
ராமதாஸும் திருமாவளவனும் தமிழ்ப் படங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். அவர்கள் போராட்டம் வெற்றி பெற்று விட்டால், தொடர்ந்து அறிக்கைப் போராட்டத்திற்கு உபயோகமாக சில எண்ணங்கள்.
* தமிழ்ப் படங்களில் நடிப்பவர்கள் சொந்தக் குரலிலேயே பேச வேண்டும். வேற்று மாநிலத்தில் இருந்து இறக்குமதியானாலும், வெளிநாட்டு குடிமகளாக இருந்தாலும், குரலுக்குப் பிண்ணனி கொடுப்பவர் கூடாது. தாற்காலிகமாக டப்பிங் பேசுபவர்களையே ஹீரோயினாக நடிக்கப் பரிந்துரைக்கும் போராட்டம்.
* தமிழ்ப் படங்களில் தமிழரின் சண்டை முறைகளே முன்னிறுத்த வேண்டும். சிலம்பம், களரி, இந்தியன் தாத்தா அடி போன்ற பழங்கால தமிழரின் போர்க்கலைகளே பயன்படுத்த வேண்டும். ஜூடோ, கங்·பூ, கராத்தே கூடவே கூடாது.
* ஆங்கிலப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்யப்பட்டு வெளிவந்தாலும், சன் டிவியில் சனி மதியம் காண்பிக்கப் படக் கூடாது. அவ்வாறு காண்பித்தாலும், அந்தப் படங்களின் முன்னோட்டங்களை நூற்றிமுப்பத்தெட்டு தடவை திரும்ப திரும்ப போட்டுக் காட்டி பிராணனைப் பிடுங்கக் கூடாது.
* தமிழ்ப் படங்களின் கனவுக் காட்சிகளுக்கு ஸ்விஸ், தெற்கு ஆப்பிரிக்கா எல்லாம் பறக்கக் கூடாது. தமிழ் நாட்டின் வளங்களையும் எழிலையும் காட்டுமாறு பாடல்கள் பதியவேண்டும்.
* தமிழ்ப் படங்களுக்கான கதைகளை செரண்டிப்பிட்டி, வாட் வுமன் வாண்ட் போன்ற ஆங்கிலப் படங்களை வைத்து உல்டா செய்யக் கூடாது. தமிழின் வழமையான இலக்கியங்களைத் தழுவியே எடுக்க வேண்டும்.
* டி ராஜேந்தர், திருநாவுக்கரசு போன்றவர்கள் பெயரை மாற்றிக் கொள்வது போல, இதுவரை வெளிவந்த ஆங்கிலம் கலந்த தமிழ்ப் பட பெயர்கள் அனைத்தும் திருத்தப் பட வேண்டும். 'சென்னையிலிருந்து பாண்டிச்சேரி', 'நகரப் பேருந்து' என்று அவர்களே கால்கோளிட வேண்டும்.
* படத்தின் ஆரம்பத்தில் வரும் நடிக நடிகையர் மற்றும் பங்குபெற்று உதவிய கலைஞர்களின் பெயர்கள் அனைத்தும் தமிழில் மட்டுமே காட்ட வேண்டும். மணிரத்னம் மாதிரி பெரிய இயக்குநர்கள் படமுடிவில் காட்டும் பட்டியல்களும் தமிழில் மட்டும் காண்பிக்க வேண்டும். 'திஸ் இஸ் எ மூவி பை பாலச்சந்தர்' போன்றவை கண்டிப்பாக மொழியாக்கம் பெற வேண்டும்.
* ஆங்கிலப் படங்களுக்கு வழங்கும் ஆஸ்கார், சூப்பர் குட் போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள் மாற்றப் பட வேண்டும். தயாரிப்பவர்கள் திருத்தப் பட வேண்டும்.
* மேற்கண்ட விதிமுறைகளில் இருந்து பிழற்பவர்களின் படங்கள், பெங்களூரில் வெளியிடப்பட்டதில் இருந்து, இரண்டு மாதம் கழித்தே தமிழ்நாட்டின் வெள்ளித்திரைகளில் காட்டப்படும். அதற்குள் இந்தப் படங்களின் விசிடி வெளியீடு போராட்டம் நடத்தப்பெறும்.
- பாஸ்டன் பாலாஜி
நியு இங்கிலாந்து தமிழ் சங்கம் -- அமெரிக்க மேட்டர்ஸ் : பொங்கல் விழா
நியு இங்கிலாந்து தமிழ் சங்கத்தின் 'பொங்கல் விழா'. ஐநூறு முதல் அறுநூறு பேர் வரை அமரக்கூடிய லிட்டில்டன் பள்ளியின் அரங்கு. பெப்ரவரி 19-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றைம்பது பேர் வந்திருப்பார்கள்.
உணவை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மூன்றரைக்கு நிகழ்ச்சி ஆரம்பம். வழக்கம் போல் நினைத்துச் சென்றதால் மூன்றே முக்காலுக்கு பாட ஆரம்பித்த 'நீராடுங்கடலுடுத்த'-வை தவறவிட்டேன். முதலில் தலைவரின் தலைமையுரை. சென்ற வருட நிகழ்வுகளைச் சொன்னார். சங்கத்தின் சாதனைகளைப் பகிர்ந்து கொண்டார். ஸ்க்ரீனில் பெரிதாகக் கட்டப்பட்டிருந்த வெள்ளை பேனரில் கவனம் சிதறியது. New England Tamil Sangam என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள்.
அமர்ந்திருந்த அரங்கத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 130 டாலர் வாடகை. கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் இட வாடகைக்கு மட்டுமே செலவு. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். பங்குபெறுவோர்களிடம் பண வசூல் கிடையாது. வாசலில் தமிழ் சங்கத்துக்காக ஒரு உண்டியலும், சுனாமி நிதிக்காக மற்றொரு உண்டியலும் வைத்திருந்தார்கள். சிறுவர்களுக்கான பழரசங்கள், பெரியவர்களுக்கான சோடாக்கள் விற்றார்கள். சமோசா, பஜ்ஜி, போண்டா, கைமுறுக்கு இருந்திருக்கலாம்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்மணி தூய தமிழில் பேசினார். வார்த்தைகளைத் தேடவில்லை. மைக் மக்கர் செய்தாலும் கணீர் குரல் நிவர்த்தி வழங்கியது. மைக் வேலைநிறுத்தம் செய்தபோதெல்லாம் கூட்டத்தில் பலர் 'மைக்... மைக்...' என்ரு குரல் கொடுத்தனர். கூட்டத்தில் ஒருவர் மட்டும் 'ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை' என்று சத்தமாக சிரித்துக் கொண்டே அறிவித்தார். மைக் வேறு, ஒலிபெருக்கியின் பயன் வேறு என்று அவரிடம் நான் விளக்க நினைத்தேன். இருட்டில் அடையாளம் காண இயலவில்லை.
கந்தன் புகழ் பாடும் பாட்டுக்கு ஒன்பது அல்லது பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியர் இருவர் நடமாடினார்கள். இடப்பக்க பெண்மணியிடம் நாட்டியத்துக்குத் தேவையான கம்பீரம். வலப்பக்க நடனமணியும் ஈடு கொடுத்தார்.
தொடர்ந்து பதின்மர் இருவரின் பாம்பு நடனம். தலைக்கு நாகத்தின் கிரீடம் மட்டும் இல்லை. சடை போட்ட நீண்ட கூந்தல் கூட இருந்தது. தலையைக் கால் தொடுவதற்கு ஐந்து இன்ச் இடைவெளி. இன்னொருவருக்கு ஒரு அடி இருக்கும். இருவருக்குமே நடனம் முடியுமட்டும் மாறாப் புன்னகை. இல்லையென்றால் சீறிய சீறல்களுக்குப் பலர் பயந்திருப்போம்.
சிஷ¤-பாரதி சிறுவர்களின் சேர்ந்திசை. பாரதிப் பாடல்களைப் பாப்பாக்கள் பாடினார்கள். ஓரத்தில் பச்சை சூரிதார் போட்ட சிறுமி மனதுக்குள்ளேயே முணுமுணுத்தாள். நாலு வயது குட்டிப் பாப்பா பாதி பாட்டில் மேடையை விட்டு அம்மாவிடம் ஓடிப்போனாள். இவற்றில் எல்லாம் கவனத்தை சிதறவிடாமல் கிட்டத்தட்ட இருபது பெண்களும் நாலைந்து பையன்களும் உணர்ச்சிகரமாக மூன்று பாடல்களைப் பாடினார்கள்.
தொடர்ந்து ஆறேழு வயதே மதிக்கத்தக்க சிறுமியின் அபார நடனம். பாடல் முடியும் தருவாயில் ஒலியில் தகராறு. இருந்தாலும் சமாளித்து வந்தனம் வழங்கிச் சென்றாள்.
அதே சிறுமியே இந்த ஊர் உச்சரிப்பில் ஔவையாகவும் கந்தனாக நாலைந்து வயது குட்டி ஒருத்தனும் சிறிய ஸ்கிட் ஒன்று நடத்தினார்கள்.
இடைவேளைக்குப் பின் அதே சிறுமி 'அவ்வை ஷண்முகி' தலைப்புப் பாடலுக்கு இன்னும் இருவருடன் ஆட்டம் கட்டியது.
இடைவேளைக்கு முன் 'ஜன கன மண' பாடப் போவதாக சொன்னார்கள். ஏ.ஆர். ரெஹ்மானின் புதியது அல்ல. தேசிய கீதம் பாடவும் இசைக்கவும் ஆரம்பித்து விட யோசித்துக் கொண்டே எழ வைத்தார்கள். ஆங்காங்கே இருக்கையின் மேல் தாவி குதித்தும் ஓடிப்பிடித்தும் விளையாடிய பார்வையாள சிறுவர்களும் அமைதி காத்திருப்பார்கள்.
'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' பாடலை காரியோகே (Karaoke) போல் பத்து பேர் பாடினார்கள். அர்த்தமுள்ள பாட்டு. தலைவர்கள் உண்டாக்கிய படம். இரண்டு வகையிலும் இளைஞர்களுக்கு சரியான தேர்வு.
இடைவேளை முடிந்தவுடன் வசூல் ராஜாவின் 'சீனா தானா'. ஆறு பெண்கள் வீணை அபிநயம். பிரபு போன்ற ஆண்பிள்ளைகள் இல்லை. ஒலிநாடாவில் பாடல். ஆடலிலும் ரகஸியாவின் கெட்ட ஆட்டம். பார்வையாளர்கள் விசிலடித்து வரவேற்றார்கள்.
பார்வையாளர்களைப் பங்கு பெற வைக்க சினிமா வினாடி வினா இருந்தது. 'மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்' (Mission Accomplished) என்னும் புஷ்ஷின் வாசகம் தமிழக இயக்குநரிடன் 'இண்டர்-மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்' ஆகும் என்னும் கடி இருந்தது. தமிழில் நூறு படங்கள் இயக்கியவர் யார்? தொட்டால் பூ மலரும் என்று அந்தக் காலத்தில் ம.கோ.ரா. பாடினார். எந்தப் படத்தில்? நேரமின்மை காரணமாக நாலு கேள்வி கூட கேட்க முடியவில்லை. ஒரு மணி நேரத்துக்கு 130 டாலர் கட்டப்படுகிறது.
அடுத்து மிருதங்க இசை ஆர்பாட்டமில்லாமல் ஒலித்தது. சுனாமிக்காக எம்.ஐ.டி. மாணவிகள் கொடுத்த நடனமும் இசையும் உணர்வுகளையும் பர்ஸ¤களையும் தட்டியெழுப்பியிருக்கும். எம்.ஐ.டி.யை சேர்ந்த நால்வர், மூன்று பாடலுக்கு முத்திரை பதித்தார்கள். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சிகரம் வைத்தது போன்ற நடன அமைப்பு. கன்னடப் பாடல்களின் அர்த்தம் மட்டும் புரியவில்லை.
மண் சட்டி மாமியாருக்கு ஐந்து படி அரிசி வடித்துக் கொட்டிய அந்தக்கால கதை நாடகமாக்கப் பட்டிருந்தது. கலந்து கொண்ட எல்லோருக்கும் செர்டி·பிகேட்கள் (சான்றிதழ்) வழங்கப் பட்டது. 'வாழிய செந்தமிழ்' என்று பொருத்தமான பாடலுடன் குழந்தைகளாலேயே நிறைவு பெற்றது.
நடுவே நிகழ்ந்த பார்வையாளர் போட்டியை சொல்ல விட்டு விட்டேன். தமிழில் எண்கள் எழுத வேண்டும். ஒன்று முதல் பத்து வரை எழுதத் தெரியுமா? (கூகிள் பார்ப்பதற்கு முன் சிறு துப்பு: ஈ-கலப்பை கொண்டு எழுத முடியாது.)
தேவையில்லாத பிற் சேர்க்கை: மேற்படி போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.
- பாஸ்டன் பாலாஜி
(விரிவான விவரங்கள் : http://www.lokvani.com)
கருத்துரையிடுக