திங்கள், மார்ச் 21, 2005

Junior Vikadan

சாந்தினி முன்னா -- படுக்கையை பகிர்ந்து கொண்டால் சினிமா சான்ஸ்! :: ''என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டால், கதாநாயகி ஆகலாம். இப்படி இந்தி சினிமா உலகில் கதாநாயகி ஆனவர்கள் லிஸ்ட்டில் ஐஸ்வர்யா ராய், ராணி முகர்ஜி, ப்ரீத்தி ஜிந்தா என எத்தனையோ பேர் இருக்கிறார்கள்." - இந்தி நடிகரான சக்தி கபூர்

'தோஃபா' என்ற இந்திப் படத்தின் மூலம் வில்லனாகப் பிரபலமான சக்தி கபூர், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் 'வீக்' என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு விட்ட 'இண்டியா டி.வி'-க்காரர்கள் அவரை மடக்க வலையை விரித்திருக்கிறார்கள். அதற்காக, தங்கள் டி.வி-யின் பெண் நிருபர் ஒருவரை தயார்படுத்தி, சக்தி கபூரிடம் சினிமா சான்ஸ் கேட்க அனுப்பி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அந்த நிருபர் அலைந்திருக்கிறார். மொபைலில் பேசியும், எஸ்.எம்.எஸ். கொடுத்தும் பாலிவுட்டில் சான்ஸ் கேட்டு அந்தப் பெண் நிருபர் நச்சரித்துக் கொண்டே இருந்திருக்கிறார். ஒருவழியாக, மும்பையின் பிரபல ஸ்டார் ஓட்டல் ஒன்றின் அறையில் சக்தி கபூரைச் சந்தித்திருக்கிறார் நிருபர். அங்கு மது அருந்தியபடி படு குஜாலாக இருந்த சக்தி கபூர், ‘நான் டயர்டாகி விட்டால், நீ எனக்கு மசாஜ் பண்ணி விடு. நீ டயர்டாகி விட்டால், நான் உனக்கு மசாஜ் செய்கிறேன்' என்று ஆரம்பித்து, கிளுகிளு வசனங்கள் நிறைந்த ஒரு நீண்ட பேச்சை படரவிட்டிருக்கிறார். இவை அத்தனையும் பெண் நிருபரின் ரகசியக் கேமராவில் பதிவாகி விட்டது.

சக்தி கபூர் அந்தப் பேச்சோடு நின்றிருந்தால் பரவாயில்லை. தனது பேச்சில் ப்ரீத்தி ஜிந்தா, ஐஸ்வர்யா ராய், ராணி முகர்ஜி என்று முன்னணிக் கதாநாயகிகளையும், முன்னணித் தயாரிப்பாளர்களான சுபாஷ் கய், சோப்ரா, எஸ்.ஜோஹர் ஆகியோரையும் வம்பிக்கிழுக்க... அவர்கள் எல்லோருமே இப்போது சக்தி கபூருக்கு எதிராக அனல் கக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது கண்டன அறிக்கையில், ‘சக்தி கபூர் மிகவும் கேவலமான ஆசையில் எல்லை மீறிப் பேசியிருக்கிறார். எவர் மீதும் அவருக்கு மதிப்பு, மரியாதை இல்லை என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது. சினிமாவில் வில்லனாக நடித்தவர், நிஜத்திலும் வில்லனாகவே இருக்கிறார். பாலிவுட் படங்களில் நடிக்க இவருக்கு உடனே தடை விதிக்க வேண்டும்' என்று குமுறியிருக்கிறார். டி.வி. மற்றும் சினிமா படத் தயாரிப்பாளர் சங்கத்தினரும் சக்தி கபூரைக் காய்ச்சி எடுத்திருப்பதோடு, ''அவரை இனி எந்தத் தயாரிப்பாளரும் 'புக்' செய்யக் கூடாது" என்றும் கறாராகச் சொல்லி விட்டார்கள்.

‘'நடந்த விஷயத்துக்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். ஹார்ட் அட்டாக்கில் சிக்கிய நோயாளி போல் வேதனைப் படுகிறேன். உயிரையே விட்டுவிடலாம் போல் இருக்கிறது. என்னுடைய நல்ல நண்பர்களான ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி, ஐஸ்வர்யா ராய் ஆகியோரிடம் என் இருகரம் கூப்பி மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் சுபாஷ் கய்ஜி, சோப்ராஜி, ஜோஹர்ஜி ஆகியோரிடம் எனது நண்பர்கள் மூலமாகவும் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். அவர்களை நான் இன்னும் நேரில் சந்திக்கவில்லை. இருகரம் கூப்பி இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவர்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன்'' என்றவரின் குரலில் அழுகை தோய்ந்திருப்பதை உணர முடிந்தது.

‘'அந்தப் பெண் நிருபரின் அழைப்பை ஏற்று நீங்கள் ஏன் போனீர்கள்? அவரை உங்கள் வலையில் வீழ்த்தலாம் என்கிற ஆசையில்தானே?" என்ற கேள்விக்கு,

'‘ஒட்டலில்தான் அந்தப் பெண் நிருபரை முதன்முதலாக நேரில் பார்த்தேன். போனில் அவருடன் அடிக்கடிப் பேசியிருக்கிறேன். அவர் அழைத்ததுமே நான் ஓட்டலுக்குப் போகவில்லை. கண்டிப்பாக மறுத்த என்னிடம், ‘ப்ளீஸ் சார்... நீங்கள் வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்' என்று மிரட்டியதால்தான் வேறு வழியின்றி போனேன். மற்றபடி, வேறு எந்த ஆசையுடனும் போகவில்லை.

சினிமாவில் கதாநாயகிகள் அனைவரும் தங்களது கடின உழைப்பால்தான் முன்னுக்கு வருகிறார்களே தவிர, படுக்கையைப் பகிர்ந்துகொண்டு அல்ல. அதுபோல் செய்பவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்பதெல்லாம் உண்மையல்ல'' என்றவர் புது விளக்கம் ஒன்றையும் எடுத்துவிட்டார்.

'‘பாழாய்ப்போன அரசியல்தான் இப்போதைய சிக்கலுக்குக் காரணம். கடந்த எம்.பி. தேர்தலில் காங்கிரஸுக்காக நான் பிரசாரம் செய்தேன். அதை மனதில் வைத்துக்கொண்டு எனது எதிரிகள் பழிவாங்கி விட்டனர். அந்த 'இண்டியா டி.வி'-யை நான் சும்மாவிடப் போவதில்லை. மானநஷ்ட வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு இழுப்பேன். டெல்லியில் எனது அரசியல் நண்பர்களிடம் பேசினேன். இதுபோன்ற 'டர்ட்டி ஜர்னலிச'த்தை ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவதாக அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த மும்பை படவுலகமே இந்த விவகாரத்தில் எனக்கு எதிராகத் திரும்பிவிட்டது போல் செய்திகள் பரப்பப்படுகின்றன. அதில் உண்மை இல்லை. சஞ்சய் தத், கோவிந்தா போன்றோர் போன் செய்து எனக்கு ஆதரவாகவே பேசினார்கள். தமிழ் ரசிகர்களும், தமிழ்ப்பட உலகமும் இந்த விஷயத்தில் என்னை வில்லனாகக் கருதிவிடக் கூடாது என இந்தத் தருணத்தில் வேண்டுகோள் வைக்கிறேன்" என்று சொல்லி முடித்தார் சக்தி கபூர்.

மும்பை செய்தியாளர்களிடம் இது பற்றிக் கேட்டால், ‘'சக்தி கபூர் குறிப்பிட்டுப் பேசிய நட்சத்திரங்களும், தயாரிப்பாளர்களும் மிகவும் பிரபலமானவர்கள். அதனால் சக்தி கபூரின் மன்னிப்பு இப்போதைக்கு ஏற்கப்பட வாய்ப்பில்லை. தவறாகப் பேசியதன் பலனை அவர் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது அனுபவிக்க வேண்டியிருக்கும்'' என்கிறார்கள்.



'இண்டியா டி.வி.' காங்கிரஸுக்கு எதிராக இருக்கிறது என்று சக்தி கபூர் குற்றம்சாட்ட ஒரு காரணம் இருக்கிறது. இந்த டி.வி-யின் பங்குதாரர்களில் பலரும் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, மேனகா காந்தியும் ஒரு பங்குதாரராம். 'ஸ்டார் நியூஸ்' சேனலில் நியூஸ் வாசிப்பவராக இருந்த ரஜத் சர்மாதான் இந்த டி.வி-யின் தலைவர்.

'சக்தி கபூர் விஷயம் மிகவும் பர்சனலான ஒன்று. இதை வெளிப்படுத்தியது ஜர்னலிஸத்தை கேவலப்படுத்துவது போல் இருக்கிறது' என்று சொல்லி, இந்த டி.வி-யை மூட வைக்கும் முயற்சிகளில் காங்கிரஸ் இறங்கியிருக்கிறதாம்.

இந்த விவகாரம் பற்றி 'தெஹல்கா' ஆசிரியரான தருண் தேஜ்பாலிடம் கேட்டபோது, ''பொதுமக்களின் பணம் எங்கெல்லாம் விரயமாக்கப்படுகிறதோ... கொள்ளையடிக்கப்படுகிறதோ... அங்கெல்லாம் ரகசிய கேமராக்களை வைத்து அம்பலப்படுத்துவதுதான் புலனாய்வு ஜர்னலிஸத்தின் வேலையாக இருக்க வேண்டும். ஆனால், சக்தி கபூர் விஷயம் முழுக்க முழுக்க தனிமனிதனைப் பற்றியது. இதில் எல்லாம் இந்த அளவுக்கு முயற்சி எடுத்து செய்தி வெளியிடுவது உள்நோக்கத்துடன் செய்ததாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும்" என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்.



காங்கிரஸுக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர்கள் என்கிற வகையில் நடிகை நக்மா, வில்லன் நடிகர் சக்தி கபூர் இருவர் மீதும் மும்பை பி.ஜே.பி-யினர் காட்டமாக இருக்கிறார்கள். தாவூத்துடன் நக்மாவுக்கு தொடர்பு இருப்பதாக பரவிய செய்தி மற்றும் சக்தி கபூர் விவகாரம் இரண்டையும் கையிலெடுத்து காங்கிரஸுக்கு எதிராகப் போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறது பி.ஜே.பி. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அனந்த் சர்மா, ''காங்கிரஸுக்காகப் பிரசாரம் செய்தவர்கள் எல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் அல்ல. பி.ஜே.பி. குற்றம்சாட்டும் இருவரும் காங்கிரஸில் சாதாரண உறுப்பினர்களாகக் கூட இல்லை'' என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.



சமீபத்தில் ‘ஆஜ்தக்' என்கிற செய்திச் சேனல், டெல்லியின் விற்பனை வரி அலுவலகத்தில் அதன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அதைக் கையும் களவுமாக கேமராவில் படம் பிடித்துவிட்டது. இது ஒளிபரப்பாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. செய்தி வெளியான அன்றில் தொடங்கி இது வரை உயர் அதிகாரிகள் உள்பட 83 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

2 கருத்துகள்:

பாலாஜி,

தமிழிலும் இது நடந்து வருவது தானே. எத்தனையோ முன்னணி இயக்குனர்களும், இன்ன பிற டெக்னீஷியன்களுக்கும் அட்ஜஸ்மெண்ட் செய்ய பல புதுமுக நடிகைகளும் தொந்தரவு செய்யப்படுவதாக எவ்வளவோ வெளியாகி இருக்கிறதே. தற்போது கூட நெற்றிக்கண் இதழில் விஜயகாந்தைப் பற்றிய தொடரும், குமுதத்தில் ஒரு நடிகையின் கதை, தொடரில் பல நடிகர்களின் பின்னணியும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்பட்டதே.

- அலெக்ஸ்

நன்றி அலெக்ஸ். சக்தி கபூருக்கு பரிந்து கொண்டு வரும் சல்மான், கோவிந்தா; டெஹல்காவின் நியாயப்படுத்தல்; காங்கிரஸிடம் சரணாகதி போன்றவைதான் குழப்புகிறது.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு