வெள்ளி, ஏப்ரல் 15, 2005

கல்கி தலையங்கம்

Kalki Weekly :: போப் இரண்டாம் ஜான் பால் மறைவு மத எல்லைகளையும் தாண்டி, துயரத்தையும் இழப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. புஷ், பிளேர் தொடங்கி கார்பசெவ், காஸ்ட்ரோ வரை (சீனா உட்பட) உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இத்தனைக்கும் போப் ஆண்டவர் இந்தத் தலைவர்களுடன் எல்லா நேரங்களிலும் உடன்பட்டார் என்று கூற முடியாது. மனித உரிமைப் பண்பாளர் என்ற போதிலும், கத்தோலிக்க கிறிஸ்தவ மதக் கோட்பாடுகள் அனுமதியாத கர்ப்பத்தடை முறைகள், விவாகரத்து போன்றவற்றை இறுதிவரை கடுமையாக எதிர்த்தார். ஓரினச் சேர்க்கையையும் கருக்கலைப்பையும்கூட அடிப்படை உரிமைகளாகக் கோரி வருகின்ற மேற்கத்திய உலகில், போப் ஆண்டவரின் நிலை பழைமை வாதம்தான்!

கம்யூனிஸத்தை மிக வெளிப்படையாகவும் கடுமையாகவும் நிராகரித்தார் போப். அவ்வாறாயினும் அவரால் இத்தனை தலைவர்களின் மதிப்பை எவ்வாறு பெற முடிந்தது ?... அதுவும் ஏதோ மரியாதை நிமித்தம் இரங்கல் செய்தி வெளியிடாமல், ஒவ்வொருத்தரையும் உணர்ச்சிப் பெருக்குடன் பேச வைத்துள்ளது போப் ஆண்டவரின் மரணம்.

இந்த அரிய உணர்ச்சிப் பெருக்குக்குக் காரணம் போப் ஜான் பாலின் மனித நேயம்தான். கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதிலும் கத்தோலிக்கப் பழைமைவாதத்தைக் காப்பதிலும் எவ்வளவுக்கெவ்வளவு உறுதியாக இருந்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு தம்மோடு முரண்பட்டவர்கள் மீதும் அன்பு செலுத்தினார்.

முரண்படுவோரையும் நேசிக்கும் இந்தப் பேரன்புதான் கிறிஸ்தவ மதத்துக்கு மட்டுமின்றி, அனைத்து மதங்களுக்கும் ஆணிவேர். இந்தப் பேரன்பு காரணமாகத்தான் தம்மைச் சுட்டுக் கொல்ல முயன்ற மெஹ்மட் அலி அக்(g)கா(ca)வையும் மன்னித்து, அன்போடு அரவணைத்து ஏற்றார் ஆண்டவர்.

துருக்கி நாட்டுச் சிறையில் உள்ள அக்(g)கா(ca), போப்பாண்டவரின் மரணச் செய்தி அறிந்ததும் இறுதிச் சடங்குக்கு வரவேண்டும் என்று துடித்திருக்கிறான். தனக்கு அனுமதி கிடைக்காவிடில், தனது குடும்பத்தினர் யாரேனும் இறுதிச்சடங்குக்குச் சென்றே ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறான்.

கிறிஸ்துவ மதக் கொள்கையைப் பின்பற்றி இங்கே அம்மதத்தின் மதபோதகர்கள் பலர் நுழைந்து, ஹிந்துக்களை மதமாற்றம் செய்து வருவது குறித்து பெரும் சர்ச்சை நிலவிக் கொண்டுதானிருக்கிறது. இந்த முறைகேடுகளுக்குக் கத்தோலிக்க கிறிஸ்துவத் தலைமை துணை போவது குறித்துப் பெருங்கோபமும் தார்மிக எழுச்சியும் நாட்டில் எங்கும் காணக் கிடைக்கிறது. ஆனால், இந்த எதிர்ப்புணர்வையும் மீறி, போப் ஆண்டவருக்குப் பல ஹிந்துக்களும் மனம் கசிந்து அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து, சுனாமி போன்ற சோக நிகழ்வுகளின்போது வாடிகன் ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறதே என்று பலர் மகிழ்கின்றனர். 'பல்லாயிரம் ஆண்டுகளாக அமலில் இருக்கும் கத்தோலிக்க அமைப்பு இழைத்திருக்கக்கூடிய தவறுகள், அநீதிகளுக்கு போப் இரண்டாம் ஜான் பால் பொது மன்னிப்புக் கேட்டாரே!' என்று நெகிழ்கின்றனர்.

ஆனால், மக்களின் உணர்வுகளை மதித்து, இந்திய அரசு மூன்று நாள் அரசுமுறை இரங்கல் அறிவித்திருக்கிறது என்று நாம் கருதுவதற்கில்லை. அப்படி மக்களின் ஏகோபித்த ஆதரவு இந்த அறிவிப்புக்கு இருப்பதாகவும் தோன்றவில்லை. மத்திய அரசின் இந்தத் திடீர் அறிவிப்பு, மக்கள் உணர்வுகளின் அடிப்படையில் எழுந்ததல்ல. கிறிஸ்துவ மதத்தினரைத் திருப்திப்படுத்த, அரசியல் கண்ணோட்டத்தில் எழுந்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. ஒரு மனிதாபிமானிக்குச் செலுத்தப்படும் மரியாதை எனில், அன்னை தெரஸாவுக்கு இப்படி ஓர் அறிவிப்பு இல்லையே!

இதுநாள்வரை எந்த மதத்தின் எந்தவொரு (தேசிய அல்லது சர்வதேச) தலைவருக்கும் அறிவிக்கப்படாத அரசுமுறை இரங்கலை அறிவித்ததன்மூலம், சர்ச்சைக்குரிய ஒரு முன்னுதாரணத்தை வகுத்துவிட்டது மத்திய அரசு. மதச்சார்பின்மையின் கொடியைத் தூக்கிப் பிடிப்பதாக இதற்கு மத்திய அரசு விளக்கம் தரக்கூடும்... ஆனால் சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த ஹிந்து மதத் தலைவர் ஒருவருக்குத் தரப்படாத கௌரவம், போப் ஆண்டவருக்கு மட்டும் தரப்படுவது ஏன் என்கிற கேள்விக்கு, நியாயமான பதில் இல்லை.

அந்த பதில் இல்லாத காரணத்தால், இந்த அரசிடம் மெய்யான மதச்சார்பின்மையும் இல்லை.

போப் ஆண்டவரின் உயர்வை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மை என்பது சிறுபான்மையினரைத் திருப்திப் படுத்துவது என்ற போலித் தனமாகிவிடக் கூடாதே என்றுதான் நியாயமாகக் கவலை கொள்கிறோம்.

7 கருத்துகள்:

//இதுநாள்வரை எந்த மதத்தின் எந்தவொரு (தேசிய அல்லது சர்வதேச) தலைவருக்கும் அறிவிக்கப்படாத அரசுமுறை இரங்கலை அறிவித்ததன்மூலம், சர்ச்சைக்குரிய ஒரு முன்னுதாரணத்தை வகுத்துவிட்டது மத்திய அரசு.//

இது நாள் வரை அப்படியில்லையென்றால் என்ன ? இப்பொழுது முதல் புதிதாய் தொடங்கியிருக்கிறார்கள். அதில் தவறென்ன ?

நீ / உங்கள் கட்சி அன்று செய்யவில்லை ஆகையால் இன்றும் செய்யக்கூடாது என்று எங்கே சொல்லியிருக்கிறது. முன்னர் கூட அவர்கள் நல்லது எதுவும் செய்யவில்லை, இப்போது செய்தால் வேண்டாம் என்று சொல்லுவார்களா ?

- ஆனந்த் சங்கரன்

//இதுநாள்வரை எந்த மதத்தின் எந்தவொரு (தேசிய அல்லது சர்வதேச) தலைவருக்கும் அறிவிக்கப்படாத அரசுமுறை இரங்கலை அறிவித்ததன்மூலம், சர்ச்சைக்குரிய ஒரு முன்னுதாரணத்தை வகுத்துவிட்டது மத்திய அரசு.//

BJP இது நாள் வரை இடித்துவரும் வெரும் உரலுக்கு(சோனியா வெளிநாட்டவர், இத்தாலிய கிருஸ்துவர்), அவல் போட்டாகிவிட்டது. இனி மாரி மாரி குத்த வேண்டியதுதான்.

//சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த ஹிந்து மதத் தலைவர் ஒருவருக்குத்//

'ஹிந்து' மதத் தலைவரா? பார்ப்பனத் தலைவரா?
பார்ப்பனர் அல்லாத 'ஹிந்து' மதத் தலைவர் என கல்கி குறிப்பிடுவது யாரை?

[இப்போதய 'ஹிந்து' தலைவர் ஜெயேந்திரர் தானே - ;)]

சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த ஹிந்து மதத் தலைவர் யாரென்று வெளிப்படையாக ஏன் 'kalki' எழுதவில்லை?

நடுநிலைமை என்பது பிஜேபி-யை எதிர்ப்பது என்ற stereotype ஆகிவிடக் கூடாதே என்று முடிக்கிறார்கள். காலத்திற்கேற்ற கவலைதான்.

சோனியா(வின் காங்கிரஸ்) பதவியில் இருக்கும் சமயம் இரங்கல் சொன்னதால், கிறித்துவர் ஆட்சி என்று விளிக்காத வரைக்கும் சரி.

இறந்த பிறகு 'எப்பேர்பட்ட ஆளு' என்று மெச்சுவது மனித குணம். விட்டால் 'கட்-அவுட்' வைத்து வோட்டு கேட்கும் தலைவர்கள் பட்டியலில் சேர்த்து விடுவார்கள்.

//ஆனால் சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த ஹிந்து மதத் தலைவர் ஒருவருக்குத் தரப்படாத கௌரவம், //

இதுதான் வடிகட்டின பார்ப்பன மனோபாவம் என்பது. அசோகமித்ரன் மாதிரி நடுநிலைமுகமூடிகள் ஒவ்வொன்றாகக் கிழிந்து வருகின்றன.

மறுமொழிந்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. (கிட்டத்தட்ட பதில் போட்ட எல்லாருமே அனானிமஸ்கள்! ;-))

அன்று அன்னை தெரசாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட போது சங்கப் பரிவாரங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இது பற்றிக் கேட்டதற்கு பிற மதத்தலைவர்களுக்கும் இதுபோல அரசுமரியாதை செய்யவேண்டும் என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள் என்று அத்வானி அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறினார். ஆனால் அன்னை தெரசாவை மதத்தலைவராக பி.ஜே.பி யும் சங்கப்பரிவாரங்களும் தவிர யாரும் நினைத்ததில்லை. பாரதரத்னா விருது பெற்ற ஒருவருக்கு முறையாகத் தரப்படவேண்டிய மரியாதை தான் அது. கூடவே நோபல் பரிசும் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர் அவர். அவருக்கு அரசு மரியாதை தராவிட்டால்தான் தவறு. மற்ற மத்தலைவர்களுக்கும் இந்தத் தகுதி இருந்தால் அரசு மரியாதை கொடுப்பதில் என்ன தவறு? யார் எதிர்க்கப் போகிறார்கள்?
போப் விஷயத்தில் உலகின் மிகப்பெரிய மதப்பிரிவின் தலைவர் அவர். இந்தியாவுடன் தூதரக உறவு கொண்டுள்ள ஒருநாட்டின் தலைவர். அவரது மத நிர்வாகத்தின் கீழ்வரும் ஏராளமான மக்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். உலகத் தலைவர்களில் பெரும்பாலானோர் அவரது இறுதிச் சடங்கில் நேரடியாகக் கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியோ பிரிட்டிஷ் பிரதமரோ போப்பின் கீழுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அல்ல. உலகம் செய்த மரியாதை போல இந்தியாவும் தன்வழியில் மரியாதை செய்தது. அது தகுதியற்றதல்ல. தவிர்த்திருந்தாலும் தவறில்லை. //சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த ஹிந்து மதத் தலைவர் ஒருவருக்குத் தரப்படாத கௌரவம்,// இந்திய மடத்தலைவர்கள் யாரும் ஒட்டுமொத்த இந்து மதத்தலைவர்கள் அல்ல. சைவம், வைணவம் போன்ற மதப்பிரிவுகளுக்கும் கூட இங்கே தனித்த தலைவர்கள் இல்லை. இருக்கும் மடத்தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் மரியாதை செலுத்துவதானால் அது ஜாதிரீதியாகத்தான் அமையும்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு