சென்னை தூங்குகிறது
Tamiloviam ::
சென்னையை தமிழகத்தின் டெட்ராய்ட் என்றார்கள். இப்பொழுது இந்தியாவின் லாஸ் வேகாஸ் என்று அழைக்க ஆசைப்படுகிறார்கள். சென்னையின் முக்கிய தடங்களில் எலெக்ட்ரிக் பனை மரங்கள் முளைத்திருக்கிறது. ஸ்பென்ஸர், சென்ட்ரல், மீனம்பாக்கம் என்று எல்லா முக்கிய தளங்களும் பனையோலைகளை மினுக்குகிறது. பட்ஜெட் இடர்ப்பாட்டினாலோ, இடப் பற்றாக்குறையினாலோ தலத்துக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே தகிக்கும் வெயில். தற்போது மின்பனைகள். எப்போதும் மூணு சீட்டும் மங்காத்தாவும். 'அப்ரெண்டிஸ்' (Apprentice) நிகழ்சிக்காக ட்ரம்ப் வருகிறாரா என்று தெரியாது. ஆனால், 'ட்ரம்ப் பல்லவபுரம்' கூடிய சீக்கிரமே தொடங்கலாம்.
திரைப்படத் தணிக்கை குழுவின் திருவிளையாடல் எங்கும் தெரிகிறது. 'அப்புறமா மிச்சம் காட்டவா' என்று த்ரிஷா பாடுவதை மௌனமாக்கியவர்கள், 'ஸெஹர்' போஸ்டரில் மிச்சத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் உதிதா கோஸ்வாமியை ஒன்றும் செய்யவில்லை. எதிர் பக்கம் மௌனமாக எம்ரான் ஹாஷ்மியும் (Emran Hashmi) இந்தப் பக்க முதுகை மந்தகாசத்துடன் முக்குப் பிள்ளையாரும் அரோகராவசப்பட்டிருந்தார்கள்.
சென்னையில் மூன்று விதமானப் பெண்மணிகளைப் பார்க்க முடிகிறது. சேலை மட்டுமே கட்டும் நாற்பது+ மகளிர். சுடிதார் மட்டுமே விரும்பும் இருபத்தைந்தர்களும் மத்திய வகுப்பினரும். நியு யார்க் அளவுக்கு இல்லாவிட்டாலும் பரத்தின் சுசிலா போன்ற ·பேஷன் மகளிர். ஆண்களிடம் இரண்டே வகுப்பினர்தான். நூறு டிகிரி அடித்தாலும் வேட்டி அல்லது லுங்கி நுழையாமல் முழுக்கால் சட்டைக்குள் நுழைத்துக் கொள்பவர்கள் அதிகமாகி வருகின்றனர். கூட வந்திருந்த கேர்ள் ப்ரெண்ட்கள் பரவாயில்லை. காற்றோட்டமான கை வைக்காத டாப்களைக் கொண்டிருந்தனர்.
'ஆறுசக்கர கப்பல் நகர்வலமா வருதுடா' என்று பல்லவன் படத்தில் வரும் பாடல் போல் மாநகரப் பேருந்துகள் முன்பு போல் கண்ணில் படுவதில்லை. அதற்கு மாற்றாக பொறியியல் கல்லூரிகளின் வண்டிகள் சோர்ந்த முகத்துடன் நகர்வலம் வருகிறது. கோவில்களில் வேண்டுதல்கள் அதிகரித்துள்ளது. கபாலி கோயில் வாயிலில் ஜெயலலிதா புன்சிரித்திருந்தார். இன்னமும் நெய் மணக்கும் காரசாரத்துடன் புளியோதரைகள் கிடைக்கிறது. செருப்புகளைப் பாதுகாப்பதுடன் செல்பேசிகளையும் காக்க விட்டுச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். தப்பாமல் உடன் வரும் மற்ற செல்லினங்கள் 'தேவுடா தேவுடா'வில் ஆரம்பித்து மொஸார்ட் வரை எல்லா இசைகளையும் கோவில் மணியுடன் அழைக்கிறது. இறைவனுக்கு எட்டும்படியாகவும் நமக்கும் கேட்கும்படியாகவும் பலர் செல்லுக்கு செவி மடுக்கிறார்கள்.
பாரிமுனையில் சைனாவே கொட்டிக் கிடைக்கிறது. மீரான் சாஹிப் தெருவில் அமெரிக்காவில் கூட வெளிவராத ஆங்கிலப் படங்களின் வட்டுக்கள் கிடக்கிறது. கெடுபிடி அதிகமாகிப் போனதால் ஐம்பது ரூபாய் அதிகம் கேட்கிறார்கள். ஒரே டிவிடியில் ஆறு ஆங்கிலப் படங்கள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆட்டோக்கள் பண்பலைகளை அலறவிடுவதைக் குறைத்திருக்கிறது. ஆட்டோக்கள் குறைந்தபட்ச கட்டணமாக இருபது ரூபாய் கேட்கிறது. அவற்றிடம் ஐந்து ரூபாய் மதிப்பிழந்து விட்டிருந்தது. இவர்களின் தயவில் சென்னை ட்ரா·பிக் நன்றாக நகர்கிறது. நாலணா, எட்டணாவைப் பொறுக்கியே கோடீஸ்வரன் ஆவது போல் ப்ளாட்பாரத்தை இடித்தும் இடிக்காமலும் இரு சக்கர வாகனம் கூட நுழைய அஞ்சும் பொந்துகளில் புகுந்தும் போக்குவரத்தை நிலைநாட்டுகிறார்கள். விஜய்காந்த் நேர்மையானவர்; ஈகோ பார்க்காதவர்; என்று பட்டயம் கொடுத்த மூச்சோடு விவேக் ஓபராய் மாதிரி ஆகுமா என்றும் தராசுகிறார்கள்.
மிட்நைட்டில் பத்தடிக்கு இரண்டு காவல்துறையினர் கண்ணில் லத்தியை விட்டு ஆட்டுகின்றனர். இரு சக்கர வாகனங்களை நிறுத்தியும் நான்கு சக்கர வண்டிகளைக் கண்களால் அளந்தும் எட்டு சக்கர கனரகங்களை கையசைத்தும் அளக்கின்றனர். நடுநிசி தாண்டிய இரவுகளில் ரதி கஜ துரக பதார்த்தங்களுடன் ஊர் சுற்றுவோர் போதிய அடையாளங்களும் காரணங்களும் வைத்திருப்பது காவல்நிலையத்தை விட்டு போதிய தூரத்தில் உலாவ வைக்கும்.
'திருப்பாச்சி' சூப்பர் ஹிட்டாகிறது. 'கண்ணாடிப் பூக்கள்' ஓடும் அரங்கை டெலஸ்கோப்பில் பார்த்தாலும் கிட்டவில்லை. வேலை முடிந்த ஆறு மணிக்கு கணினி உழைப்பாளிகளோ கால் செண்டர் புண்ணியவான்களோ மாயாஜாலில் பௌலிங் கொண்டாடுகிறார்கள். பல திரையரங்குகள் இருக்கும் மாயாஜாலில் ஆங்கிலப் படங்களுக்கு நுழைவு சீட்டு கேட்டு தடுப்பதில்லை. காலியாக இருக்கும் கொட்டாவி 'மாயாவி'யானாலும் நூறு ரூபாய் கொள்முதல் கேட்கிறார்கள்.
விஜய் டிவியும் சன் நியுஸும் ஓரளவு தனித்தனமையுடன் வித்தியாசம் காட்டுகிறார்கள். அமெரிக்காவின் ஜெர்ரி ஸ்ப்ரிங்கர் போல் வீரபாண்டியன் பல குழாயடிகளை அரங்கேற்றுகிறார். இணைய வாக்குவாதங்களிடம் இருந்து நிறையவே கற்றுத் தேர்ந்திருந்தது போன்ற பிரமுகர்கள் இருவர் -- முஸ்லீம் லீக்-கரும் & பா.ஜா.க.வின் பெண்மணியும் மோடியை வம்புகிழுத்துக் கொண்டிருந்தார்கள். சுனாமி வருவதாக இருந்தால் இந்நேரம் வந்திருக்கும் என்று தலைப்புச் செய்திகளைப் போடுவதற்கென்று ஏழெட்டு செய்திக்காட்சிகள் இருக்கிறது. இவை அனைத்தும் ஒன்பது மணிக்கு நிகழ்ந்த இந்தோனேசியா பூகம்பத்தை உடனடியாக பதினொன்று பத்துக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டது. சீரியல் முடிந்து அதைப் பார்த்த தமிழர்கள் நிம்மதியாக கொறட்டை விட ஆரம்பித்தனர். அமெரிக்கர்களுக்கு உறக்கமே எட்டிப் பார்த்திருக்காது.
- பாஸ்டன் பாலாஜி
கருத்துரையிடுக