புதன், ஏப்ரல் 20, 2005

அந்த நாள் ஞாபகம்

ஏவிஎம் சரவணன்: ''எப்படி வரும்?'' என்று கேட்டார் திரிலோக். ''நீங்க எடுக்கறது படிக்காத மேதை. எமோஷனல் ஸ்டோரி. அதில் சீன்கள்ல எமோஷனைக் காட்டணுமே தவிர, காட்ட முடியுமே தவிர, அங்கே போய் 'செட்'டோட ரிச்னஸை எப்படிக் காட்ட முடியும்? பீம்சிங் எப்படிக் காட்டுவார்?''

''நெறய செலவு பண்ணி 'செட்' போட்டாச்சு. என்ன பண்றதுன்னே தெரியல'' என்றார் அப்பச்சி.

ஸ்டூடியோவில் செட் போட்டு அங்கே ஷ¥ட்டிங் முடிந்த பின்பு, அந்த செட்டைப் பிரித்து விடுவதுதான் எங்கள் வழக்கம். அதே செட்டை பிறகு யாருக்கும் வாடகைக்கு விடுவதில்லை. மெஹர்பான் செட்டைப் பொறுத்தவரை, அதன் 'ரிச்னஸ்'ஸை படத்தில் காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கம் அப்பச்சிக்கு இருந்தது.

''சரி... இந்தப் படம் முடிஞ்ச பிறகு இந்த செட்டைப் பிரிக்க வேணாம்'' என்றார் ''இந்த செட்டுக்குப் பொருந்தி வராப்போல ஒரு கதை ரெடி பண்ணுங்க''

''பொருந்தி வராப்போலன்னா, இதுக்கு சோஷியல் சப்ஜெக்ட்ஸ் சரிப்பட்டு வராது. க்ரைம் த்ரில்லர் தான் பொருந்தி வரும். செட்டுக்கு ஸ்கோப் இருக்கும்'' என்றார் திருலோக்.

பூட்பங்களா, பீஸ் ஸால் பாத், கும்நாம், டார்க் பங்களா போன்ற நாங்கள் பார்த்திருந்த படங்களையெல்லாம் மிக்ஸ் பண்ணி, ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை தயார் செய்தோம். அதுதான் 'அதே கண்கள்!'

டி.என். பாலுவை வைத்து காமெடி ட்ராக்கை மட்டும் தனியாக எழுதினோம். டி.ஆர். ராமண்ணாவிடம் இருந்தவர் பாலு. 'நான்', 'குமரிப்பெண்' போன்ற படங்களில் பிரபலமான காமெடி ட்ராக்கை எழுதியவர். ஒரே வாரத்தில் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்து விட்டோம்.

இந்தப் படத்துக்கு வேதா இசையமைத்தார். இலங்கை வானொலியில் புகழ் பெற்ற மயில்வாகனன்தான், இந்த வேதாவை என் சகோதரர் குமரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

''இவருக்கு இசையமைக்க வாய்ப்புத் தாருங்கள். பாடல்களை இலங்கை வானொலி மூலம் 'ஹிட்'டாக்கிக் காட்டுவது என் பொறுப்பு' என்று மயில் வாகனன் உறுதியும் தந்திருந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தப் பாடல்களை வானொலி மூலம் ஹிட்டாக்கிக் காட்டுகிறேன் என்று மயில் வாகனன் உறுதி தந்திருந்தாரோ, அந்தப் பாடல்கள் வெளியானபோது அவர் இலங்கை வானொலியில் பணியில் இல்லை. இருந்தாலும் பாடல்கள் யாவும் இனிமை காரணமாக தாமாகவே பிரபலமாயின.

நன்றி: kalki

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு