ஞாயிறு, ஏப்ரல் 17, 2005

சந்திரமுகி க(வ)லையா?

அறியா விஷயம் ஆயிரம் புரியும்

(இந்த அனுபவப் பகிர்வில் படம் குறித்த முக்கிய திருப்பங்களும் தகவல்களும் இருக்கிறது. சம்பவங்களை முன்பே அறியாமல், சந்திரமுகியை பார்க்க விரும்புவோர் இந்தப் பதிவை தவிர்க்கலாம்.)

சுமார் இருநூறு இருக்கைகள் மட்டுமே இருக்கக்கூடிய ஸோமர்வில் (Somerville) திரையரங்கம். மூன்று மணி ஆட்டத்திற்குப் போடப்பட்டிருக்கும் உதிரி சேர்களும் இரண்டரைக்கே 'ஆள் வராங்க' ஆகிறது. திரைப்படத்திற்கு செல்வதை கொண்டாட்டமாக செய்யும் தமிழ் மக்கள். சன்டான்ஸ் (Sundance) போன்ற மாற்றுத் திரைப்படங்களை 35 எம்எம் இடும் வெள்ளித்திரையில் டால்பி அதிர்வுகளுடன் ரஜினியின் சந்திரமுகி. வடிவேலு பயப்படுகிற மாதிரி பெண் ரசிகைகள் நிரம்பி வழிகிறார்கள். புத்தம் புதிய தலைமுறை 'ரஜினி அங்கிள்' என்று ஷூ காலை பார்த்தவுடன் கண்டுபிடிக்கிறது. கூடவே கொண்டு வந்த விசிலையும் அடிக்கிறது.

முன்னேற்பாடு, மணிசித்திர தாழ்ப்பாள் திறந்த பார்வை, போஸ்ட் மார்ட்டம் புலனாய்வு எல்லாம் இல்லாமல் ரஜினியின் ரசிகனாக பார்க்கிறவர்கள் மெய்மறந்து ரசிக்கிறார்கள். கமல்ஹாஸனுக்கு நன்றியுடன் ஆரம்பிக்கிறது டைட்டில். சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு ஆடை வடிவமைப்பில் 'சரிகாவாக' உதவி புரிந்திருக்கலாம்?!

'படையப்பா' போன்ற துதிவசனங்கள் ஓரிரண்டு இடங்களில் (மட்டுமே!) கண்ணொளியாக வந்து கண்ணெரிச்சலைக் கொடுக்கிறது. கமல் எல்லாம் என்ன காமெடி செய்கிறார் ? ரஜினியைப் பார்த்து (இனிமேலாவது) கமல் நகைச்சுவைக்க கற்றுக் கொள்ளவேண்டும்.

படம் முடிந்து வெளியே நிருபர் யாராவது மைக் பிடித்து 'படம் எப்படி' என்று கேட்டால், நான் சொல்ல நினைத்தது

'திருப்தியாக இருக்குங்க! அருணாசலம் ஸ்டைல்; தம்பிக்கு எந்த ஊரு காமெடி; பாட்சாவின் அமர்க்களம்; படையப்பா போல சூப்பர் ஹிட்டாகுங்க!'


சிறுபத்திரிகை மாதிரி சீரியஸ் படங்களைத் திரையிடும் தியேட்டரில் உட்கார்ந்ததாலோ என்னவோ... உள்ளே இருக்கும் மைக்ரோ விமர்சகர் எட்டிப் பார்த்து, தொடரும் வாரங்களில் சீரிய பத்திரிகை எழுத்தாளர்கள் கண்ணில் பட்டு, உருட்டப் போகும் சங்கதிகளை உழலவிட்டார்:

 • பட்டி தொட்டியெங்கும் செல்பேசி சிக்னல் கிடைக்காமல் கிராமவாசிகள் திண்டாடுகிறார்கள். எங்கோ ஒரு கிராமத்தில், பாழடைந்த பங்களாவின் முகப்பு, பின்புறம் என்று பொறியியல் வகுப்பில் படிக்கும் வரைகலை போல் விளம்பரங்கள். பட்டம் விடச் செல்லும் மண்சாலையில் கூட டாடா இண்டிகாம் தட்டிகள். இதன் மூலம் தமிழக கிராமங்களில் வளர்ச்சிக்கான தன்னுடைய அலட்சியத்தை, சூப்பர் ஸ்டார் வெளிப்படுத்தியுள்ளார். செல்பேசி வாங்கினால் அவருக்குப் போதும். கிராமங்களின் சீரிய வளமையில் அக்கறையில்லை. (அப்படியே காந்தீயம், கதர் கிராமம் என்று நாலு பக்கங்கள் செலுத்தலாம்.)

 • ஆரம்பத்தில் த்ரிஷா வருவது என்ன குறியீடு? ரஜினிகாந்த்தின் முதல் காதலியா இவர்? எதற்காக த்ரிஷா டாடா இண்டிகாமை அறிமுகம் செய்துவிட்டு, பின் நயன் தாராவின் பிண்ணணியில் டாடா இண்டிகாம்மின் விளம்பரப் பலகைகள் தெரிய வைப்பது -- செல்பேசி போல காதலிகளையும் மாற்றலாம் என்னும் உள்ளத்துக் கிடக்கையின் நீட்சியே. (தொடர்ந்து உழைப்பாளி, எங்கேயோ கேட்ட குரல் என்று சரித்திரத் தகவல்களைக் கொண்டு ரஜினியின் இரண்டு மனைவி விருப்பத்தை நீட்டிக்கலாம்.)

 • சௌரவ் கங்குலி நூற்றியெட்டு வினாடிகளுக்கொரு முறை சந்திரமுகியில் காணக் கிடைப்பதை நாம் இங்கு உற்று நோக்கவேண்டும். அவர் கடந்த சில ஆட்டங்களில் சரியாக விளையாடததைப் போலவே ரஜினியின் சென்ற படமும், கடந்த சில வருட செயல்களும் தோல்விக்குள்ளானது. அவருக்குத் தடை விதிக்கப் பட்டதைப் போலவே ரஜினிக்கும் சில வருட கட்டாய ஓய்வு தேவை என்பதை ரஜினி எதிர்ப்பாளர்கள் நேரடியாக சொல்ல முடியாமல், குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். (கிரிக்கெட்டில் நடக்கும் சூது வாதுகளுடன் ரஜினியின் தொடர்பு, சர்வதேச சந்தையில் ரஜினியின் மேட்ச் பிக்ஸிங் என்று விளக்கலாம்.)

 • துர்கா என்னும் தெளிய பெயரை வேண்டுமென்றே 'தர்கா' என்று மாற்றி உச்சரிக்கிறார். படம் நெடுக இந்த வெறுப்பேற்றல் தொடர்கிறது. பத்து தடவைக்கு மேல், கால் விரல்களையும் சேர்த்துக் கொண்டு எண்ணுமளவு தர்கா... ஸாரி... துர்கா-வால் திருத்தப்பட்டபிறகும், இந்தப் பழக்கம் மாறவில்லை. துர்கை கோவில்கள் தர்காக்கள் ஆகிவிட்டன என்கிறாரா? எல்லா தர்காக்களையும் துர்கா ஆலயங்களாக மாற்ற அறைகூவல் விடுப்பது போல் இந்த பெயர் திரிப்பு இருக்கிறது. துளிக் கூட சிரிப்பும் வரவில்லை; வேறு எழவும் வரவில்லை. மற்றபடி கடினமானத் தமிழைக் கூடத் தெளிவாகப் பேசும் அமெரிக்கவாசி சரவணன், வேண்டுமென்றே இவ்வாறு உச்சரிப்பது ஏன்? (சத்தியமாக கண்டிக்கவேண்டிய காட்சியமைப்பு இது. தேவையில்லாத பெயர்க் குழப்பம் எதற்கோ?)

 • உருது எழுத்துக்கள் கலைந்து திரிந்து 'சந்திரமுகி'யின் டைட்டிலாகின்றது. உருதுவை அழித்து நிலாவை தலைப்பில் தரிக்க வைக்கிறார்கள். சந்திரனை தலையில் சூடியவர் சிவன். சந்திராஷ்டம் நாள், இருபத்தியேழு மனைவிகளைக் கொண்ட சந்திரன், ராகு/கேது போன்ற அரக்கர்களை விரும்பாத சந்திரன் என்று இதைக் கொள்ளலாம். சந்திரமுகியின் அறை வாயிலில் சூலம். இந்துத்வா பிரச்சாரத்தின் மற்றொரு வீச்சாகவே இந்த தலைப்புத் தோற்றத்தைக் கண்ணுறுகிறேன். (ஆங்காங்கே வரும் 'ஹ்ரீம்; க்லிம்', முந்தைய புள்ளி எல்லாவற்றையும் சேர்த்து ரஜினியின் பாஜக ஆதரவு நிலையாக நிலை நிறுத்தலாம்.)

 • ரஜினி இனிமேல் விஜய்யைத்தான் தன் முதல் எதிரியாக நினைக்கிறார் என்பது படத்தில் இருந்து தெளிவாக உணர முடிகிறது. சச்சின் படத்துடன் ரிலீஸ் செய்து போர்க்களத்தைத் தயார் செய்து கொண்டார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் கமலுக்கு நன்றி போட்டு கைகோர்த்துக் கொண்டார். நடுவே விஜய்யின் 'புதிய கீதை' திரைப்படத்தை மறைமுகமாக நக்கலடிப்பதற்காக 'கீதையின் உண்மை அர்த்தங்கள்' புத்தகத்தைப் படித்து ரசிக்க, கண்மணிகளை மாப்பிள்ளை தனுஷுக்கே ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறார். (விஜய்யின் சமீபத்திய ஹிட்களில் நடித்த த்ரிஷா ஆரம்பத்தில் தோன்றுவது, குஷி போன்ற படங்களில் கூட நடித்த ஜோதிகாவை குணப்படுத்துவது என்று விரிவாக இளம் ரசிகர்களை தனுஷ் பக்கம் கொணரும் ஆதிக்க மனோபாவத்தை எடுத்து வைக்கலாம். தொடர்ச்சியாக விஜய் என்பது விஜய்காந்த் என்னும் பெயரின் எச்சமே என்றும் வாதிட்டு அசத்தலாம்.)

 • சபரி மலை பக்தர்களை ரஜினி புண்படுத்துகிறார். மண்டல விரதம் இல்லாமல் மலைக்கு செல்வது என்பது சரியே என்னும் குணத்தை விதைக்க நினைக்கிறார். காலணி அணிவது, வீட்டில் இருக்கும்போது கூட காவி அல்லது கருப்பு வேட்டி அணியாதது, சவரம் செய்வது, பிறன்மனை நோக்குவது, காதலியுடன் மாஞ்சா போடுவது, ஆகியவற்றை அரங்கேற்றிய சூட்டோடு சபரி அய்யன் அய்யப்பனின் தரிசனம் செய்து திரும்புவதாக சொல்வது உண்மையான ஐயப்ப சாமிமார்களை வேதனைக்கும் நகைப்புக்கும் உள்ளாக்குகிறது. (கோவில் குருக்களின் பேச்சை அலட்சியப் படுத்துவது, ஹோமம் நிகழ்த்துபவர்களை மாயாவியாக சித்தரிப்பது, இறைவன் அடியார்களை திரை மறைவில் விலை கொடுத்து வாங்குவது என்று பிட்டு பிட்டாக்கிடலாம்.)

 • புலனாய்வுத் துறையினை நகைப்புள்ளாக்கும் காட்சிகளை வெட்டக் கோரி போராட்டம் :: விஷம் தங்கிய காபி என்பதை பரிசோதிக்காமல் முன்வைப்பதும், பழிபோடுவதும் அபத்தம். கிரிமினல் கொலைக் குற்றம் நிகழ்ந்த இடத்தை அவசர அவசரமாக சுத்தம் செய்யப் பணிப்பதும் கண்டிக்கத் தக்கது. கைரேகை, தடயங்கள், இன்னபிற துப்பு துலக்காமல், காவல்துறையை அழைக்காமல் மூடி மறைப்பது சட்டப்படி குற்றம். (மிச்ச ரஜினி பட கட்டப் பஞ்சாயத்துகள், அமெரிக்கவாசியின் விசா, அரசு சார்ந்த இடங்களின் பொருட்சேதம், டாடா இண்டிகாம் விளம்பரப் பலகைகளின் அத்துமீறல் என்று புத்தகங்களேப் போட்டுவிடலாம்.)

 • பிளவாளுமை என்னும் தெளிவான தமிழ் பிரயோகம் இருக்கும் போது ஸ்ப்ளிட் பெர்சனாலிடி என்று அழைப்பது ஏன்? பாதிப்பு, நோய், பிணி, தாக்கம், கற்பனை, நிகழ்வு என்று நோய் சார்ந்த வார்த்தைகளைப் பொறுத்தமாக உபயோகிக்க மறுப்பது ஆங்கில அடிமைத்தனத்தின் எச்சமே. தெலுங்குப் பாடலுக்கு நடனமாடுவதும் ஆதிக்க மனோப்பான்மையே. இன்னும் சங்கீத மேடைகளில் தெலுங்கு கீர்த்தனங்களே கோலோச்சுகிறது. நாயகியின் தெலுங்குப் பிரேமையையும் இந்த விழுமியத்தில் சேர்க்கலாம். (படத்தில் வரும் ஆங்கில வார்த்தைக் கலப்பை அளந்து சந்திரமுகியைக் காய்ச்சியெடுக்கலாம்.)

 • பெண் என்றால் நகைப் பிரியை, புது புடைவை ஆசை கொண்டவள் என்ற தட்டையான பிம்பத்துக்குள் வடிவமைத்து நிறுத்தப்படும் ஆக்கமே சந்திரமுகி. தினம் முழுதும் கணவன் அலுவலில் உழல, பிரிவுத் துயருக்கு உள்ளாகும் மனைவியின் தாபங்கள் இங்கு அசிங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. விரகம் போன்ற இயல்பான மாற்றங்களை, கட்டுப்பெட்டித்தனம் என்னும் கயமைக்குள் அடக்க நினைக்கிறார்கள். பரதம் பயின்ற பழங்காலத்தவர் - தேவதாசிகள் என்னும் முலாம் பூச்சல் பார்வையாளர்கள் மேல் இன்னும் எத்தனை காலம் நிகழ்த்தப்படுமோ ? கீழ் சாதியை சேர்ந்தவர்களைக் காதலித்து கரையேற்றுவதுதான் தமிழ் கதாநாயகனின் கல்யாண குணமாக்கப் படுவது இங்கும் தொடர்கிறது. மேல் சாதியின் அடக்குமுறைகளும் வரம்பு மீறல்களும் ஒதுக்கிவைத்தல்களும் நயன் தாரா என்னும் தோட்டக்காரக் குடும்பத்தின் மேல் செலுத்தப்பட்டு ஆதிக்க சக்திகளுக்குத் தீனி போடப்படுகிறது. (தலித், பெண்ணியம், விஜயகுமார் என்பதன் திருமாவளவன் குறியீடு, ஆடல்கலை/பழங்கலைகளுக்கான எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் ஆசிரியைகளாக இருப்பதன் ஆதிக்க அதிர்ச்சிகள் என்று விளாசலாம்.)

  கற்றது கை byte அளவு; கல்லாதது internet அளவு என்பது போல் இன்னும் நான் கண்டுபிடிக்காத ஃபீலிங் எவ்வளவு சந்திரமுகியில் புதைந்து கிடக்கிறதோ.... வாருங்கள்... துழாவுவோம். நிச்சயம் ஏதாவது கிடைக்கும்.

  - பாஸ்டன் பாலாஜி

  (வேறொரு சமயத்தில் பிளவாளுமை என்னும் பெயரைக் கொடுத்து உதவிய ரமணிக்கு நன்றி)

 • 13 கருத்துகள்:

  பாலாஜி,

  எப்ப நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெளிவா எழுதப் போறீங்க?

  //சிறுபத்திரிகை மாதிரி சீரியஸ் படங்களைத் திரையிடும் தியேட்டரில் உட்கார்ந்ததாலோ என்னவோ... உள்ளே இருக்கும் மைக்ரோ விமர்சகர் எட்டிப் பார்த்து, தொடரும் வாரங்களில் சீரிய பத்திரிகை எழுத்தாளர்கள் கண்ணில் பட்டு, உருட்டப் போகும் சங்கதிகளை உழலவிட்டார்:
  //

  க்குப் பிறகு வர்ரதெல்லாம் நீங்க நினைக்கிறதா? இல்ல *சிண்டு முடியிற சமாச்சாரமா?* - அதில துர்கா/தர்காவுக்கு மேல படிக்க முடியலை. போர் அடிச்சது.

  ====

  மேல எழுதியிருக்கிறதில நீங்க சொல்ற விஷயத்தை மட்டும் எனக்கு இங்கயே சொல்லுங்க.

  எப்பதான் இந்த விளக்கெண்ணெய் + வெண்டக்காய் பழக்கத்தையும் சிண்டு முடியிறதுன்னு //
  சிறுபத்திரிகை மாதிரி சீரியஸ் படங்களைத் திரையிடும் தியேட்டரில் உட்கார்ந்ததாலோ என்னவோ... உள்ளே இருக்கும் மைக்ரோ விமர்சகர் எட்டிப் பார்த்து, தொடரும் வாரங்களில் சீரிய பத்திரிகை எழுத்தாளர்கள் கண்ணில் பட்டு, உருட்டப் போகும் சங்கதிகளை உழலவிட்டார்:'// நான் நினைக்கும் பழக்கத்தையும் விட்டுவிட்டு,

  எப்போதாஆஆஆஆஆஆஆவது நல்லபடியாக எழுதுவதை அடிக்கடி செய்வீர்களோ? ஆறு மாதத்துக்கு ஒரு முறை எழுதும் உங்கள் எழுத்துத் திறமையை வெளிக்காட்டும் பதிவுகளுக்காக நீங்கள் கொண்டு வந்து குவிக்கும் சுட்டிகளையும் சில்மிஷங்களையும் சகிச்சுக்க வேண்டி இருக்கு. ஆனா, இந்தப் பக்கம் வந்து ஏமாறுவதுதான் நடக்கிறது. பேசாமல் நிறுத்திரலாமான்னு தோணுது.

  நான் ரொம்ப சீரியஸாக என்ன சொல்ல வருகிறேன் என்பதை நண்பராகப் புரிந்துகொள்வீங்கன்னு நினைக்கிறேன் பாலாஜி.

  போன முறை சென்னைக்குப் போய் வந்து எழுதிய பதிவையே இன்னமும் நினைத்துப் பார்க்கும்,
  மதி

  அன்பு மதி,
  //போன முறை சென்னைக்குப் போய் வந்து எழுதிய பதிவையே இன்னமும் நினைத்துப் பார்க்கும்,
  மதி //

  இது என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

  புரியாமல் விழிக்கும்
  துளசி.

  பாலாஜி, பதிவு செம நக்கல். :)

  பின் நவீனத்துவ இலக்கியவாதிகளை எல்லாம் படிச்சீங்கன்னா, அதே பழக்கம் தொத்திக்கும்னா கேக்கறீங்களா? :-)

  ஆனாலும், நீங்க சொன்ன சாத்தியக்கூறுகள் ரசிக்கும் படியாகத்தான் இருந்தன. ஒருவேளை, இந்த ரேஞ்சிலேயே, சிறுபத்திரிக்கைகள்லே, சந்திரமுகிக்கான விமர்சனம் வந்தால், ஆச்சர்யப்படமுடியாது. அப்படி செஞ்சா, தீர்க்க தரிசி பட்டம் குடுக்கிறேன்.

  பாலாஜி,

  கலக்கலான கிண்டல்.

  வாழ்த்துக்கள்.

  அன்புடன்

  ராஜ்குமார்

  //வேறொரு சமயத்தில் பிளவாளுமை என்னும் பெயரைக் கொடுத்து உதவிய ரமணிக்கு நன்றி//

  ம்ம்ம்... நம்ம ரமணி நிறய பேர கெடுத்து வெச்சிருக்காரு...

  பிளவாளுமையா? ஏதோ மிட் நைட் மேட்டராட்டம் இருக்குதே!

  யோவ்... மாங்கா பாபா, என்னையா வெண்னை மாதிரி எழுதியிருக்கீர்..

  எதாவது சொல்லிடப்போறேன்..

  மைக்ரோ விமர்சகர் == மேக்ரோ நாரதரோ?

  --பாண்டி

  பதில் போட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.
  ------
  மதி,

  >>*சிண்டு முடியிற சமாச்சாரமா?*

  My attempt was similar to Jay Leno/SNL/Mad TV bits. If it poorly came out, it is due to my lack of finesse.

  >>நான் ரொம்ப சீரியஸாக என்ன சொல்ல வருகிறேன் என்பதை நண்பராகப் புரிந்துகொள்வீங்கன்னு நினைக்கிறேன் பாலாஜி.----

  Yes. yes.
  ----
  துளசி,

  ரொம்ப எல்லாம் எதிர்பார்க்காதீங்க... வழக்கமான பதிவுதான் :-)

  http://etamil.blogspot.com/2004_04_01_etamil_archive.html#108258391473642440

  http://etamil.blogspot.com/2004_04_01_etamil_archive.html#108248989917940984

  http://etamil.blogspot.com/2004_04_01_etamil_archive.html#108241179971554012

  WASTED DOLLARS !!

  திரிஷாவருவது டாடா இன்டிகாம் விளம்பரத்திற்கு தான் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். தாங்களுக்கும் தெரியும். இருந்தாலும் ரஜினியை விமர்சிப்பது என் முடிவு செய்தவுடன் எல்லாவற்றையும் மறக்க முடிவ்ய் செய்து விட்டீர்கள். நல்ல வேளை படத்தில் வரும் விளம்பரங்களில் கங்குலி வந்தார். அதுலையும் ஒரு பெண் படம் வந்திருந்தால் விமர்சிப்பதிற்கு வசதியாக இருந்திருக்கும்.

  ரஜினி விஜய்யை போட்டியாக நினைப்பதாக எழுதியதிலிருந்து நீங்கள் சந்திரமுகி பற்றி விமர்சனம் எழுதவில்லை ரஜினியை அதிகபடசமாம் கேவலப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து விட்டதாக அறிந்து கொள்ளலாம்.

  தர்கா என்று ஒரு பெண்ணை அழைப்பதால் முஸ்லிம்களின் தர்காவை கேவலப்படுத்குகிறார் என சொல்கிறீர்கள். அப்புறம் சபரிமலையையும் கேவலப்படுதுவதாக சொல்கிறீர்கள்.சபரிமலை இந்து கோயில் தானே.

  சாமீ பிளாக்ல ஏத்துறதுக்கு முன்னாடி ஒரு தரவ படிச்சுட்டு ஏத்துங்க ராசா

  விமர்சனம் எழுதுவதற்காக உன்னிப்பாக படம் பார்த்திருக்கீங்க . பாருடா இவுங்கள மாதிரி ஆளுங்க பாத்தாலே படம் 100 நாள் ஓடிடும் .இது தெரியாம போய் தியேட்டர்ல் பார்க்குறாங்க. அப்புறம் எப்படி படம் மண்ண கவ்வுமாம்.

  இவ்வளவு தூரம் எழுதியாச்சு அப்படியே இன்னும் வெட்கப்படாம சச்சின் சூப்பர். சந்திரமுகி பிளாப்னு எழுதியிருக்கலாம்.

  >>> இருந்தாலும் ரஜினியை விமர்சிப்பது என் முடிவு செய்தவுடன் எல்லாவற்றையும் மறக்க முடிவ்ய் செய்து விட்டீர்கள்.----

  Raja... My point is also the same. I tried to drive to that inference in a alternate way.

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு