விகடனின் நேரடிப் பதிவு
பா.ராஜநாராயணன் & இரா.முத்துநாகு
"எங்க கிட்ட கூலி வேலை பாக்கிறவங்க எங்களையே ஆள முடியுமா? ஆனா பாவம், அவங்களையும் சொல்லிக் குத்தமில்லே. எங்க நிலத்துல பாடுபட்டு, நாலு காசு சம்பாதிச்சிட்டிருந்த பாவப் பட்ட சனங்க பொழப்புல அரசாங்கம் மண்ணை அள்ளிப் போட்டுருச்சு. அதான் உண்மை!"
- ராஜாக்கிளித் தேவர், கீரிப்பட்டி
இந்த தேர்தல்ல, ‘அழகுமல! நீதாம்ப்பு தலைவரு. என்ன, புரியுதுல்ல? இந்தா!’னு ஒரு மூடை அரிசி குடுத்தாங்க எசமானருங்க. கூடவே ஆயிரம் ரூவா குடுத்து, ‘நல்ல துணிமணி வாங்கிக்கப்பா’ன் னாங்க. அவங்க சொன்னபடி தேர்தல்ல நின்னேன். செயிக்கவெச்சாங்க. அப்புறம் ஊர்வலமா போய் ராசினாமா செஞ்சு புட்டேன். இதுல நான் வேற என்னத்தச் சொல்ல?"
- கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்று, உடனே ராஜினாமா செய்த அழகுமலை
"அன்னிக்கு மதிய நேரம்... தேவர் ஐயா வூட்டு மாடியில நெல்லு காயப் போட்டுக்கிட்டு இருந்தேன். திடீர்னு மழை வந்துச்சு. மழை வருதேனு யோசிக்கிற நேரத்துல, தடால்னு ஒரு இடி என் தலையிலேயே விழுந்துச்சு. மயங்கி விழுந்துட்டேன். தேவர் ஐயாதான் ஓடிவந்து காப்பாத்துனாரு. பஞ்சாயத் துத் தலைவரா நான் ஆனதுல உள்ள குத்தம்தான் இதுனு புரிஞ்சுபோச்சு! 'பொழைச் சதே பெரிசு'னு மறுநாளே ராசினாமா செஞ்சுட்டேன்!"
- தனிக்கொடி (பாப்பாப்பட்டி)
"இதாங்க இங்க நடக்குது. இவன் தலையில இடி விழுந் துச்சா... சரினு அடுத்த தேர்த லுக்கு ஆளைத் தேடினோம். ஒரு பய சிக்கலே. கடைசியா, அழகர்னு ஒருத்தனைப் பிடிச்சு, அவனுக்குக் காசு பணமெல்லாம் கொடுத்து, துணிமணி கொடுத்து, நிக்கச் சொல்லி, செயிக்கவும் வெச்சோம். ஆனா, அவன் தலைவரான பத்தாவது நாள் ஜுரம் வந்து செத்துப் போனான். இவங்கள்ல யாரும் தலைவராகுறது அந்த ஒச்சாண் டம்மனுக்கே புடிக்கலீங்க. நான் வேற என்னத்தச் சொல்ல?"
- செல்லக்கண்ணுத் தேவர்
"ஊரைவிட்டு விலக்கி இருந்தாங்களே, அந்தப் பதினஞ்சு குடும்பங்கள் யார், யார்?" என்று விசாரித்தால், "வேணாம்யா! நீங்க இங்கே நிக்கிற நேரம்கூட எங்களுக்கு ஆபத்துதான். நீங்க போன பொறவு, 'பத்திரிகைக்காரங்க கிட்ட என்ன சொன்னே?'னு ஆளாளுக்கு வந்து கேப்பாங்க. இந்தப் பஞ்சாயத்தை ஆளணும்னு எங்க யாருக்கும் ஆசையில்லே. எங்களை நிம்மதியா வாழ விட்டாப் போதும்!" என்று ஒட்டு மொத்தமாகக் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்.
கருத்துரையிடுக