காங்கிரஸ்
kalki:: மதச்சார்பற்ற நடுநிலை கூட்டணியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வாக்காளர்களுக்கு முன்னிலைப்படுத்தியது; தேர்தல் பிரசாரத்தில் திட்டமிட்டுச் சீராக ஈடுபட்டது; அகௌரவமான விமர்சனங்களுக்கு மோசமான பதிலடிகள் தராமல், கௌரவமாக அவற்றை எதிர்கொண்டது, என்று சோனியா காந்தி தமது நேரத்தையும், சக்தியையும், சிந்தனையையும் வஞ்சனையின்றி காங்கிரஸுக்காகச் செலவிட்டார். தேர்தலில் ஜெயித்த பின்னர், பிரதமர் பதவியை ஏற்க மறுத்து, எதிர்கட்சிகளின் வாயை அடைத்தார்!
மக்கள் தமது கட்சிக்கு வாக்களித்தாலும், அந்நிய தேசத்தைச் சேர்ந்த தம்மைப் பிரதமராக ஏற்கத் தயங்குவார்கள் என்ற நல்லறிவு சோனியாவுக்கு இருந்திருக்கலாம். அல்லது எதிர்கட்சிகள் தமது அன்னியத் தன்மையைச் சுட்டிக்காட்ட வழியின்றிச் செய்து விட வேண்டும் என்கிற அரசியல் நோக்கு இருந்திருக்கலாம்...
இந்நிலையில் காங்கிரஸ் கீதத்தில் சில அபஸ்வரங்கள் நாராசமாக ஒலிக்கின்றன:
முதலாவது: செயற்குழு உறுப்பினர்கள், நியமன முறையில் சோனியாவால் தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் என்பது.
சோனியா காந்தியே காங்கிரஸின் நியமனத் தலைவர்தான். வேறு போட்டி நியமனங்களே இல்லாமல் தலைவியாகியிருக்கிறார். குடும்பப் பின்னணி - அந்தஸ்து காரணமாகத் தலைமையை எய்தியவர், அப்பொறுப்புக்கான தமது தகுதியை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதும் உண்மையே. அவ்வாறு வளர்த்துக் கொண்ட பிறகாவது கட்சி செயற்/பொது குழுக்கள், இதர செயல் பொறுப்புகளுக்கு முறையான தேர்தல் நடத்த அவர் தீவிரமாக முனைய வேண்டும். ஆனால் உட்கட்சி ஜனநாயகத்தை உடைப்பிலே போட்டுவிட்டு 'நியமனத்' தலைவர்களையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார் சோனியா.
இரண்டாவது அபஸ்வரம்: "போஃபர்ஸ் வழக்கில் ஹிந்துஜா சகோதரர்கள் பேரிலான குற்றச்சாட்டுக்கு சாட்சியங்கள் பலமாக இல்லை" என்று நீதிமன்றம் சி.பி.ஐயைக் கண்டனம் செய்து சகோதரர்களை விடுவிக்க, அதை காங்கிரஸ் தனது வெற்றியாகக் கருதி கூப்பாடு போடுவது; குற்றம் சாட்டிய இதர கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை விடுவது...! கூட்டணி ஆதரவுக் கட்சியான சி.பி.ஐ.எம், வழக்கு ஜோடனையின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டி அரசு தரப்பை மேல்முறையீடு செய்யக் கோரியுள்ளது.
மூன்றாவது அபஸ்வரம்: ஜமயத் - இ - உலெய்மா - இ - ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்த மாநாட்டில் சோனியா காந்தி ஆற்றிய உரை. "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்பாடுகள் இந்தியாவின் இமேஜையே கெடுத்துவிட்டன" என்று பேசியவர், பா.ஜ.க கூட்டணியைப் போலன்றி தமது கூட்டணி இஸ்லாமியர்களுக்காகப் பாடுபடுகிறது என்று பேசியிருக்கிறார். "'பொடா' நீக்கப்பட்டதே இஸ்லாமியர்களுக்கு அதனால் விளைந்து வந்த அநீதியைக் கருதிதான்" என்றும் கூறியிருக்கிறார்! போதும் போதாததற்கு, "நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நாங்கள் செயல்படாமலிருக்கலாம்... ஆனால் இன்னும் முயற்சி செய்வோம்" என்று வேறு வாக்களித்திருக்கிறார்! இவை மிக அபாயகரமான வாக்கியங்கள்.
மதச்சார்பற்ற கூட்டணி என்கிற பலத்தில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி கண்டிருக்கிறது. ஜமயத் மாநாட்டில் அரசியல் ஆதாயம் தேடுவதும், பா.ஜ.கவைச் சாடுவதும் எவ்வாறு மதச் சார்பின்மையாகும்?
பொடாவை நீக்கியது சிறுபான்மையினரின் நலன் கருதித்தான். எனில், தற்போது அமலில் உள்ள பாதுகாப்புச் சட்டம் யார் நலன் கருதி உருவாக்கப்பட்டிருக்கிறது?
என்ன போங்க... மதசார்பின்மைன்னா என்னன்னு உங்களுக்கு இன்னும் புரியலைன்னு நெனக்கிறேன். முஸ்லீம் லீக், கிறுஸ்துவர்கள் முன்னேற்ற கழகம், இவை தவிர தி.மு.க. - இந்தக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இருக்கோ அதான் மதசார்பற்ற கூட்டணி. உதாரணத்துக்கு, தப்பித்தவறி இந்தக் கட்சிகளெல்லாம் பா.ஜ.க.விலே கூட்டணி சேர்ந்தா அப்போ அதான் மதசார்பற்ற கூட்டணி!!
சொன்னது… 6/14/2005 11:27:00 AM
கருத்துரையிடுக