இரு கவிதைகள்
எரிந்த ஊர்களின் அழகி - சந்துஷ்
எரிந்த ஊர்களின் அழகி
நேற்று இங்கு வந்திருந்தாள்
எரிந்த ஊர்களைப் பற்றித்
தனக்கு எதுவுமே தெரியாதென்றாள்
வியப்புடன் கோணிய
என் முகத்தில் தொங்கிக் கொண்டு
நெடுநேரம் சிரித்தாள்
வழியும் அவள் குழற்கற்றைகளில்
தொலைந்துபோன தெருக்களை இணைக்கும்
கிளைப்பாதைகள் நீண்டு விரிகின்றன
அவள் பேசி நிறுத்தும் இடைவெளிகளில்
போரின் இரைச்சல் காதைப் பிளக்கிறது
கத்திக் கத்தி அவள் பேசுகையில்
எனதூரின் மௌனம் முகத்திலறைகிறது
நேற்றவள் சிரிக்கையில்
ஊர் எரிந்த வாசம் வந்தது
எரிந்த ஊர்களின் மீதமோ நீயென்றேன்
காதுகள் இருப்பதாக
அவள் காட்டிக் கொள்ளவில்லை
அவள் சொன்ன கதைகளில்
தனித்து ஓயும் பறவையின் ஓசையும்
மெல்லத் தணியும் ரயிலின் கூவலும்
நிலவில் நனையும் ஓசை கேட்டது
இறுகப் பற்றும் அவள் கைகளின் பிணைப்பில்
ஊரின் வேரொன்று தட்டுப்பட்டது
எனினும் எரிந்த ஊர்களைப் பற்றி
தனக்கு எதுவுமே தெரியாதென்றாள்
எரிந்த ஊர்களின் அழகி
இளங்கோ கிருஷ்ண்ன்
எப்போதோ திரும்பிச் சென்றிருக்க வேண்டிய
குழந்தையது
தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல்
அதனை நிற்கச் செய்திருக்கிறது.
நிராதரவும் இரங்கலுமற்ற கடைக்காரனின்
முகத்தை
கண்திரள பார்க்கிறது
தன் கனவு மிட்டாயின் உருவம் ஏக்கமாய்
இறுக போதாத நாணயம் கொண்ட
தன்னை நிந்திக்கவும் அறியாத அதன்
பிரச்சனை
திரும்பிச் செல்வதல்ல
வெறுங்கைகளுடன் திரும்பிச் செல்வதே.
எப்போதோ திரும்பிச் சென்றிருக்க வேண்டிய
குழந்தையது
தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல்
அதனை நிற்கச் செய்திருக்கிறது.
நன்றி: உயிர்மை - செப். 2005
தமிழ்ப்பதிவுகள்
nalla kavithaikaL! thodarunggaL...
aanaal kavithaikaLukku inth uudakaththil varaveeRpu kuRaivu.
சொன்னது… 10/23/2005 07:15:00 AM
கருத்துரையிடுக