திங்கள், நவம்பர் 07, 2005

சிதறல்

Qu'ils mangent de la brioche

நான் வலையில் பதிவது என்பதே, கோர்வையில்லாமல் தோன்றும் எண்ணங்களுக்கும், நிகழ்வுகளுக்கும், ஒரு தொடர்ச்சியை கொடுத்து அழகு பார்க்கத்தான். மனதில் தோன்றியதை எழுதி, பதிந்தால் சில சமயம் 'நல்லாயிருக்கே' என்று பதில் வரும்.

ஏபிசிடி-களின் தீபாவளி கதையை அகஸ்மாத்தாக படித்த உறவினர், செம கடுப்பாக பதில் எழுதியிருந்தார்:

Your story stinks........ it is not worth the space on which it is written...


உள்ளத்தில் நினைத்ததை வெளிப்படையாக சொல்லும் பதில்கள் அரிதான காலகட்டத்தில் எனக்கு வந்த பதிலை ஆர்வத்துடன் பார்த்து வைத்துக் கொண்டேன். வலைப்பதிவுகளுக்கு வந்த பிறகு சொரணை மழுங்கி விட்டதோ என்று எண்ணவும் வைத்தது :-)

சொரணை என்பதை வெறும் கோபமாக மட்டும் வெளிப்படுத்திவிட்டு போகாமல், செயலில் காண்பித்த 'ரோஸா பார்க்ஸ்' நினைவுக்கு வந்தார். பெண்கள் இருக்கையில் ஆண் உட்கார்ந்திருந்தால் கூட 'அட்ஜஸ்ட் செய்து கொள்வோமே' என்று விட்டுப் போகும் சென்னை போல் இல்லாமல், கொண்ட கொள்கைக்காக புறக்கணிப்பை முன்னிறுத்தி, தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்டவர்களை வீறு கொள்ள செய்தவர்.

ஆரம்பத்தில் பதவியில் இருப்பவர்கள் அலட்சியம் செய்யத்தான் போகிறார்கள். பிரெஞ்சு ராணி மேரி (Marie-Antoinette) உப தலைப்பில் (Qu'ils mangent de la brioche) சொன்னது போல் 'பட்டினியில் வாடினால் என்ன? அவர்களை கேக் சுவைக்க சொல்லுங்கள்!' என்பது போல் அதிகாரபூர்வமில்லாமல் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

பிரான்ஸில் இனக் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா, இஸ்ரேல், ஸ்லோவேனியா, ருவாண்டா என்று இருந்த கோஷ்டி பூசல்கள் வளர்ந்த நாடுகளுக்கும் க்ளோபலைஸ் ஆகிறது.

அன்றாட செய்திகளையும் அத்தியாவசிய கவலைகளையும் மறக்க தொலைக்காட்சி ஏதுவானது. பிகேயெஸ் முன்பு மொழிபெயர்த்த Martin Niemöller-இன் கடைசியாக என்னைத் தேடி வந்தார்கள் கவிதையை 'பாஸ்டன் லீகலி'ல் வாதத்துக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.

'ஹாலோவீன்' பண்டிகை குறித்து கல்வெட்டு விலாவாரியாக எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் 'ஹாலோவீனை' கொண்டாடக் கூடாது என்று கத்தோலிக்க குழுவும் சூனியக்கார குழுவும் வழக்குத் தொடுக்கிறது. இவர்களுக்காக ஆஜரான வக்கீல்தான் மார்டினை துணைக்கழைத்துக் கொண்டு 'இப்பொழுது கத்தோலிக்க நம்பிக்கைகளை கிண்டல் செய்கிறார்கள்; நாளை?' என்று ஜூரிகளை நோக்கி கேள்வி எழுப்பினார்கள்.

மாற்று வினாக்களை டிவி தொடர்கள் திறம்பட எழுப்புகிறது.

'கருக்கலைப்புக்கு நீங்கள் ஆதரவாளர் என்கிறீர்கள்... சரி. ஆணா, பெண்ணா என்று கருவைப் பார்த்து தேர்ந்தெடுத்து கலைப்பதும் சரியா? மூன்று மாதக் கருவின் புத்திசாலித்தனம் சராசரியாக இருந்தால் கலைத்து விடுவேன் என்று ஒருவர் வாதிட்டாலும் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?'
என்று வெஸ்ட் விங்கில் கேட்டார்கள். முன்முடிவோடு அணுகும் பிரச்சினைகளுக்கும் மாற்று கருத்தைப் பாங்குற சொன்னார்கள்.

தற்கால அரசியல் வாதங்கள் போல் இல்லாமல், நிஜமான வாக்குவாதத்தை நேற்று ஒளிபரப்பினார்கள். தமிழில் 'மெட்டி ஒலி' சில புதுமைகளை செய்தது. பேசாத, வார்த்தைகளே இல்லாத முப்பது நிமிடங்கள் என்று சொல்லி, உரையாடல்கள் இருக்க வேண்டிய முக்கிய நிமிடங்களிலும் மௌனம் சாதித்து கழுத்தை அறுத்தார்கள்.

ஆனால், 'வெஸ்ட் விங்' நேரடி ஒளிபரப்பாக தங்களின் சுதந்திர கட்சி வேட்பாளருக்கும் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கும் இடையேயான, வாக்குவாதத்தை இரு முறை நிகழ்த்திக் காட்டியது. அனுபவித்து, ரசித்து, மகிழ்ந்த நிகழ்ச்சி. குடியேறல், சுகாதாரம், காப்புரிமை, பணவீக்கம், வேலை உருவாக்கம், பொது சேமநிதி என்று பல தலைப்புகளில் நறுக் வாதங்கள். நிஜ ஜனாதிபதிகளும் இப்படி முட்டிக் கொண்டால், அவர்களின் உண்Mஐ திறமைகளும், கொள்கைகளுக்கும் வெளிச்சம் கிட்டும்.

முடிந்தால் பாஸ்டன் க்ளோப் போல் விரிவாக எழுத வேண்டும்.

Commander in Chief-தான் 'நீங்க நல்லவரா.... கெட்டவரா?' என்று மனிதருக்கு இரு நிறங்கள் மட்டுமே உண்டு என்று விளிக்கிறது. உலகின் எல்லா பிரச்சினைகளையும் அமெரிக்க ஜனாதிபதி தீர்த்து விடுகிறார். அனேகமாக, கனடா-வில் இந்த தொடர் வரவேற்பை பெறாது என்று நினைக்கிறேன். தனி மனிதனாக, குடும்ப பாரத்தையும் சுமக்கிறார். கொஞ்சம் ரியாலிடியும் கலந்தடித்தால் நம்பும்படியாக இருக்கும்.

இந்தியா சென்றபோது நிகழ்ந்த சந்திப்பொன்றில், பதிவு என்றால் ஏதாவது தொக்கி நிற்க வேண்டும் என்று ஐகாரஸ் பிரகாஷ் எனக்கு துப்புக் கொடுத்திருந்தார். அந்தக்கால சரத்பாபு மாதிரி என்றால் 'நூல்வேலி', 'கீழ்வானம் சிவக்கும்' மாதிரியா என்று எனக்குத் தோன்றுவதைப் போல் உங்களுக்கும் ஏதாவது உதித்தால் சொல்லுங்கள்.

'அடியைப் பிடிடா பாரத பட்டா' என்பது போல் மனதில் தோன்றியதை எழுதி, பதிந்தால் சில சமயம் 'நன்று' என்று பதிலும் வரலாம். ஆனால், உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக வெளிப்படையாக சொல்லும் பதில்கள் ஆத்திரமும் ஊட்டி விடலாம் ;-))




| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு