CC:H
மூன்று படங்களை குறித்து எழுதலாம்.
மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்.
இரண்டு படங்களுக்குள் உள்ள ஒற்றுமை கடவுள் நம்பிக்கை. பிறிதொரு இரண்டுக்குள்ள ஒற்றுமை குழந்தைகள் படம். கிறித்துவத்தைப் பின்னணியாகக் கொண்ட இரண்டு படங்களிலும், டில்டா ஸ்விண்டன் (Tilda Swinton) இருக்கிறார்.
கான்ஸ்டாண்டின்-ஐ (Constantine) சுருக்கமாக சொன்னால் 'கிங் காங்' இயக்குநரை 'பொட்டு அம்மன்' எடுக்க வைத்தால் எப்படி இருக்கும்!?
நார்னியா-விற்கு (The Chronicles of Narnia: The Lion, the Witch and the Wardrobe) 'ஆறு' ஹரியை குழந்தைகளுக்காக இயக்க வைத்தால் எப்படி இருக்கும்!
கடைசியாக, ஹாரி பாட்டர் (Harry Potter and the Goblet of Fire). திரையரங்குக்கு சென்று படம் பார்க்க வேண்டியதை ஹாரி பாட்டர் விடாமல் கோருகிறார். இந்தப் பதிவின் மற்ற இரண்டு படங்களைப் போலவே, 'ஏன், எதற்கு, எப்படி?' என்பதை யோசிக்காமல் பார்த்தாமல் ரசிக்கலாம். புத்தகத்தைப் படித்தால்தான் புரியாத மீதி ஹாரி விளங்குவார் போலத் தெரிகிறது.
விறுவிறுவென்று பறக்கும் ஹாரிக்கு நேர் எதிர்மாறாக 'நார்னியா' தாலாட்டுகிறது. குழந்தைகள் படம் என்பதால் 'தவமாய் தவமிருந்து' கலைப் படம் போல் அன்னநடை நடக்கிறதா என்றால், வெட்டு, குத்து, ஓநாய் என்று சத்தமாக படம் நெடுக பூச்சாண்டி காட்டுகிறார்கள். விமர்சனங்களில் படித்தால்தான் சிங்கம் என்பது யேசு கிறிஸ்துவையும், சூனியக்காரி சாத்தானையும் குறிப்பதாக புரிகிறது.
'நார்னியா' - சுவாரசியமாக, படிமங்களாக, அசத்தலாக, ரசிக்கக் கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட கதை. உள்ளடக்கம் அருமையாக உள்ள வலைப்பதிவில் டெம்பிளேட் கண்ணை உறுத்துவது போல் மாயாஜாலக் காட்சிகள் வெறுப்பேற்றுகிறது. எட்டு வயசுக் குழந்தைக்கு கத்தி கபடா எல்லாம் கொடுத்து 'லாஜிகல் ரியலிஸம்' என்பதை 'மேஜிகல் அன்ரியலிஸம்' ஆக்கியிருக்கிறார்கள்.
நல்லவர்கள் வாழ்வார்கள்; தீயவர்கள் அழிவார்கள் என்று 'நார்னியா' குழந்தைகளுக்கு சொன்னதை, அமர்க்களமான நரகத்துடனும், சப்பு போட வைக்கும் பிசாசுகளுடனும், 'மேட்ரிக்ஸ்' ரக தத்துவங்களுடனும் 'கான்ஸ்டாண்டின்' போதிக்கிறார்.
சொர்க்கமும் நரகமும் பூமியில்தான் இருக்கிறது. நம் காதில் அவ்வப்போது சாத்தான் வேதம் ஓதும். நாம் அப்போது உள்ளிருக்கும் மிருகத்தை உசுப்புகிறோமா அல்லது அடக்கி ஆள்கிறோமா என்பதில்தான் தேவதைகள் வெற்றி பெறுகிறார்கள்.
செய்தித்தாள்களைத் தடவினாலே முழுவதும் படித்து விடும் ஹெனிஸி; தண்ணீரைக் கொண்டு பரலோகத்தை அடைந்து திரும்புவது; பூதங்களை கண்ணாடிக்குள் அடைப்பது; ஊழை நிர்ணயிக்கும் யேசுவைக் கொன்ற ஈட்டி (Spear of Destiny); ஹாரி பாட்டரின் விநோதங்கள் போன்ற சொறிவண்டு தீப்பெட்டி பொம்மைகள் நிறைந்த டக்கர் ஜிங் படம்.
படத்தில் இருந்து சில வசனங்கள்:
Constantine - ஜாலம்
Narnia - கொட்டாவி
Harry Potter - வால்டிமார்ட் பிரத்யட்சம்; ஹாரி கடாட்சம்
ஹாலிவுட் | சினிமா | தமிழ்ப்பதிவுகள்
இந்த கான்ஸ்டன்டைனை திரையரங்கில் சென்று பார்த்த துர்ப்பாக்கியம் எனக்கு கிட்டியது. நரகம் அது இதுவென்று காய்ச்சி எடுத்துவிட்டார்கள். சரி, தூங்க வசதியான இருக்கைகளும் ஏ.ஸியும் இருக்கிறதே என்று பாதிக்கு மேல தூங்கப் பார்த்தாலும் முடியவில்லை. நடு நடுவே டம், டமாரென டி.டீ.எஸ் எழுப்பிவிட்டுவிட்டது.
சொன்னது… 12/22/2005 07:08:00 AM
கியானு ரீவ்ஸ் என்றாலே என்னுடைய மனைவி, 'நீ மட்டும் பார்த்து விடுகிறாயா' என்று கேள்வி கேட்குமாறு படங்கள் செய்து கொண்டிருக்கிறார்.
சொன்னது… 12/23/2005 12:27:00 PM
கருத்துரையிடுக