வெள்ளி, மே 05, 2006

Tamil Drama Review

ரகசிய ஸ்னேகிதியே

Director Chats'நியு இங்கிலாந்து தமிழ் சங்கம்' கடைசியாக 'பொங்கல் விழா'வில் கூடியது. அதற்குப் பிறகு அடுத்த சந்திப்பாக, நியு ஜெர்ஸி ஸ்டேஜ் ·ப்ரெண்ட்ஸ் குழுவின் நாடக நிகழ்வு.

மேகமூட்டமான இரவில் அரிதாகத் தென்படும் நட்சத்திரங்கள் போல் பாஸ்டனில் தமிழர் கொண்டாட்டங்கள் எப்பொழுதாவதுதான் கிடைக்கிறது. அவ்வப்போது கண்ணில் மாட்டும் நட்சத்திரங்களையும் யாரும் கண்டு மகிழாமல், சன் டிவிக்குள் புகுந்து விட்டிருக்கும் சூழ்நிலை.
Kathir Faints
அளவான கூட்டம். இலவசமாக நடந்த பொங்கல் விழா போல் நாடகமும் காசு வாங்காமல் நடத்தப் பட்டிருந்தால், இன்னும் கொஞ்ச பேர் வந்திருப்பார்கள். திருட்டு விசிடியை ஆதரிக்கும் தமிழுலகில் இருந்து வந்தவர்களிடம் நுழைவுப் பணம் கேட்கலாமா?

வெகுஜன எழுத்தாளர் பிரும்மா. 'வணக்கம் தமிழகம்' நேர்காணலில் நாடகம் சுறுசுறுப்பாக பயணத்தைத் தொடங்குகிறது. குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைக்கப் பெறுகிறோம். பிரும்மா எழுதும் காதல் கதையின், பின்கதைதான் 'ரகசிய சினேகிதியே' நாடகம்.

அரங்கத்தின் ஒரு பாதியில் பிரும்மா எழுதும் காதல் கதை அரங்கேறுகிறது. மற்றொரு Stage in Stageபாதியில் பிரும்மாவின் எழுத்தாக்க முரண்கள் தரப்படுகிறது. திரைக்கு முன்னும் பின்னும் நடப்பவை, கதைக்குள் கதை என்று தொய்வில்லாமல் செல்கிறது.

நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனாக தாமோதரனை முடிவு செய்வதன் தாத்பர்யம்; வெள்ளித்திரையில், பணக்கார வீடு என்றால் அம்மா இருக்கமாட்டாளே என்னும் சினிமா இலக்கணங்களை மெல்லிதாக சாடுவது; மருத்துவத்திற்குப் படிக்கும் காவ்யாவிற்கும் மருத்துவர் கதிருக்கும் காதல் திருமணம் நடைபெற வைப்பதுடன் நாடகம் முடிகிறது.

Doctor Directorமதுரையில் இருந்து சென்னை தூரம் அளவு இருக்கும் நியு ஜெர்ஸி - பாஸ்டன் தொலைதூர பயணத்தில் கூட சோபா, இருக்கைகள், அரங்க அமைப்பு என்று கவனித்து அமைத்திருந்தார்கள். நாடகத்தின் வசனங்கள் ஆங்காங்கே சிரிப்பை வரவழைத்தாலும், இயல்பாக நடிகர்களிடமிருந்து வெளிப்பட்டாலும், இன்னும் கொஞ்சம் இளசாக, புதுசாக இருந்திருக்கலாம். தனக்கு முக்கியமல்லாதவற்றை மறந்து விடும் ஹீரோயினிடம் 'என்றைக்கு எவன் உடம்பில் எதை மறந்து வைக்கப் போறியோ' என்று Aariya Uthadugal Bhawanஅங்கலாய்க்கும் அம்மாவின் உரையாடல்கள் போல் நாடகம் நெடுங்க ஆங்காங்கே ஷார்ப் டயலாக் எட்டிப் பார்த்திருந்தால், நடுவில் ஏற்படும் தொய்வு குறைந்திருக்கும்.

சன் டிவி வணக்கம் தமிழகத்தில் 'ரமேஷ் பிரபா'வும் 'ரேவதி'யும் லேட்-20களாக வயசைக் கணிக்கலாம். அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், என்.ஆர்.ஐ. ஆங்கில உச்சரிப்புடன் யுவதியும், நேர்காணலுக்குரிய சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்திய தெளிவான உச்சரிப்புடன் மிட்-40களை சொல்லத்தக்கவரும் நாடகத்தில் கதாபத்திரங்கள் ஆனது, சன் டீவியை சதாய்ப்பதற்கா அல்லது நடிகர் பற்றாக்குறையா என்றறியேன்.

Maamis Talk Serialபிரும்மாவாக நடித்தவர், அவரின் ஆல்டர்-ஈகோ ஆனந்தனாக மனசாட்சியாக உலா வந்தவர், காதலன் + மணமகனாக மேடையில் இருந்து துள்ளிக் கீழே விழுந்து நமக்கு அடிபடுமளவு ஒன்றி நடித்த கதிர், அம்மா மீனாட்சி (பார்வதி?), அப்பா தாமோதரன் எல்லாருமே டிஸ்டிங்சனுடன் கலக்கினார்கள். ரகசிய சிநேகிதி 'காவ்யா' நடன முகபாவங்களையும் கண் பேசும் வார்த்தைகளையும் கொஞ்சம் குறைத்திருந்தால் சிவாஜித்தனம் உணராமல் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மெனுவை எம்.பி.3 ஆக ஒலிக்க விட்ட பணியக சிப்பந்தி, உணவகத்திலும் வாடிக்கையாளரை வளைக்கும் சாஸ்திரி மற்றும் ஸ்டீரியோடைப் மாமிகளுக்கும் ஒரு 'ஓ'.

டயல் செய்யாமலே செல்பேசியில் பேசுவது, பட்டு வேஷ்டியில் வலம் வரும் கிளார்க், நடுத்தரக் குடும்பமாக இருந்தாலும் பளபளா (பட்டுப்) புடைவையில் காலை டிபன் செய்து கொடுக்கும் பார்வதி போன்ற சறுக்கல்களை எஸ்.வி.சேகர் (எம்.எல்.ஏ) டைப் நாடகங்களைக் கிண்டலடிக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்வேன்.

எழுத்தாளர் சுஜாதாவிற்கு ஒத்த பிரும்மாவை, 'ஆன்ஜைனா', இருதய வால்வ், ரத்தக் Hero meets Heroine & In-Lawsகுழாய் என்று மருத்துவ சொற்களையும் பிரயோகங்களையும் கொண்டு முழுசாக ஜல்லியடிக்க வைப்பது போன்ற ப்ராக்டிகல் ஜோக்களும் ஏராளம்.

நாடகாசிரியர் திரைப்படங்களைப் பார்ப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு எழுதினால் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., நூற்றுக்கணக்கான சொல்லாமல்/சொல்லி/·ப்ரெண்ட்ஷிப்/காமம்/கவர்ச்சி/கல்லூரி காதல் கதைகளின் வாசம் எட்டிப் பார்க்காமல் இருக்கும். இந்த விமர்சனத்தை எழுதுபவரும் ஆயிரக்கணக்கான தமிழ்த் திரைப்படங்களை ரெகுலராக ரசிப்பது, இந்த மாதிரி வாசனைகளை அதீதமாக உணரச் செய்வதாக இருக்கலாம்!

வாசகர் கடிதம், நேயர் உரையாடல், போன்ற உத்திகள் மூலம் இருபத்தி நாலு வாரத் தொடரை நகர்த்துதல், எழுத்தாளனின் சறுக்கல்கள், ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளின் பழக்கங்கள் என்று ஒரு நாடகம் அமர்க்களமாகவும்;
Brahma in vanakkam Thanmizhagam
காதல் குழப்பம், கல்யாணமா நட்பா என்னும் பயங்கள், போன்றவற்றை இயல்பான நிகழ்வுகளின் மூலம் வெகுஜன பத்திரிகை தர்மப்படி உருவாக்கிய, சஸ்பென்ஸ் திருப்பங்கள் நிறைந்த காதல் கதையை இன்னொரு நாடகமாக விறுவிறுப்புடனும் கொடுத்திருக்கிறார்கள்.

கதை, வசனம் கலிபோர்னியாவை சேர்ந்த திரு. மணிராம் அவர்கள். எஸ்.வி சேகர், கிரேசி போன்றோர் அரசியல், சினிமா என்று ஆளுக்கொர் பக்காமாய் போய்விட அடுத்த தலைமுறை நாடகங்களுக்கு திரு. மணிராம் போன்றோர் தேவை.

பின் கேள்வி: பழைய ஜானி வாக்கர் ரெட் லேபிள் புட்டியில் புதிய ஆப்பிள் ஜூஸை நிறைய அருந்திய நடிகர் பிரும்மா ஒகேதானே?! :-)

பின் பதில் - ரமணி: மேடையில் பிரம்மா குடிப்பது ஆப்பிள் ஜுஸ்தான் என அவ்வளவு அப்பட்டமாகவா தெரிந்தது? நாடகம் முழுவதும் ஒருவர் அவ்வளவு குடித்து அவ்வளவு தெளிவாக பேசுவாரேனால் அவர் குடித்தது மதுவாக இருக்க முடியாது என்பது ஒரு சுலபான யூகம் என்றாலும், அது ஏன் ஐஸ் டீயாக இருக்க முடியாது?


நிகழ்வுப் புகைப்படங்கள்

பதிவான மின்னிதழ்: தமிழோவியம்



| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு