செவ்வாய், ஜூன் 06, 2006

Boston Cambridge in Symphony

இந்த மாத திசைகள் வலையிதழில் என்னுடைய 'பாஸ்டனுக்கு வரலாம்' சுற்றுலா கட்டுரை வெளியாகியுள்ளது. திசைகள்.காமுக்கும் அருணா ஸ்ரீனிவாசனுக்கும் நன்றிகள் :-)


இந்த வலையகங்களுடன் சௌகரியம் என்னவென்றால், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ·பயர்·பாக்ஸ் என்று விதவிதமான உலாவியில் பார்த்தாலும், 640x480 என்று டைனோசார் காலத்து அரங்குகளில் ஆரம்பித்து உள்ளங்கைக் கணினி வரை எல்லாவிதமான திரைகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தெரியும்.

பெரும்பாலான அமெரிக்க நகரங்கள் இதே மாதிரிதான். நியுயார்க், அட்லாண்டா, சிகாகோ என்று முக்கிய நகரங்கள் அனேகமாக வார்ப்புருவில் உருவான வலையகம் போல் காட்சியளிக்கும்.

ஊர் நடுவே ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடம். நகரத்தை சுற்றிக் காட்ட சிறப்பு பேருந்துகள். கலை அருங்காட்சியகம், செத்த அருங்காட்சியகம், உயிர் காட்சியகம், மீன் காட்சியகம் என்று விருப்பத்துக்கு ஏற்றவாறு சுற்றலாம்.

ஐந்து வயதுக்குட்ப்பட்ட குழந்தைகள் இருந்தால் விலங்கியல் பூங்கா. ஐந்துக்கு மேல் குழந்தைகள் இருந்தால் ஆட்டம் போட்டு தள்ளிவிடும் மாபெரும் சவாரிகள் கொண்ட தீம் பார்க். அம்பதுக்கு மேற்பட்ட பெருசு இருந்தால் சரித்திரத்தையும் சிற்பங்களையும் அள்ளிவிடும் ம்யூஸியம் என்று வகை செய்து வைத்தல் நலம்.

இந்த மாதிரி நகரங்களுக்கு பாஸ்டனும் விதிவிலக்கல்ல. நயாகரா என்றால் பெரிய அருவி ஒன்று, சிற்றருவி ஒன்று; லாஸ் வேகாஸ் சூதும் சூதாட்டமும் சார்ந்த இடம்; மவுண்ட் ரஷ்மோரில் வெறுமனே கோபுர சிற்ப தரிசனம்; ·ப்ளோரிடாக்களில் டிஸ்னி பங்குக் குறியீடுகள் உயர விதவித மொந்தையில் ஒரே கள் என்றில்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகவும் கொஞ்சம் பழக்கமான தலங்களும் துளி மெனக்கிட்டால் பூரிப்படைய வைக்கும் தனித்துவமான இடங்களும் கொண்டது.


அலுவல் சம்பந்தமாக பாஸ்டன் பக்கம் வர வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால், அரை நாள்தான் ஊர் சுற்ற ஒதுக்க முடியும் என்று வைத்துக் கொண்டால்...

அவசியம் 'பாஸ்டன் வாத்து சிற்றுலா' என்றழைக்கப்படும் பாஸ்டன் டக் டூர் சென்று விடுங்கள். டிக்கெட் கிடைப்பது கொஞ்சம் சிரமமானது. பைசாவும் நிறையவே பிடுங்குவது போலும் தோன்றலாம். ஆனால், ஒன்றேகால் மணி நேரத்தில், உங்களுக்கு பாஸ்டன் குறித்த சரித்திரத்தை நகைச்சுவை உணர்வோடு விவரித்து இடஞ்சுட்டி விளக்கி விடுவார்கள்.

மீதம் இருக்கும் காலரைக்கால் நாளில் ஊருக்கு நடுவே இருக்கும் ப்ருடென்சியல் கோபுரத்தின் ஐம்பதாவது மாடியைத் தொட்டு, கண்ணாடிக் கூண்டில் இருந்து அக்ரோ·போபியா இல்லாமல் கண்குளிர மாநகரத்தை தரிசிக்கலாம். ஏறக்குறைய தண்ணீரில் இறங்கும் விமானங்கள் கொண்ட லோகன் விமான நிலையம், கண்ணுக்கெட்டிய தூரத்தில் எம்.ஐ.டி, ஹார்வார்ட் போன்ற பல்கலைகள், குத்துச்சண்டைக்குக் கூவும் சமபலம் கொண்ட வீரன் போல் அறுபது மாடிகளுடன் ஜான் ஹான்காக் டவர், ஈராக்கில் கடத்திப் பிணையாக இருந்த ஜில் கரோல் போன்றோரை நிருபராகக் கொண்ட கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர் கட்டிடங்கள் என்று வனப்பாக பரந்த பார்வை நோக்கலாம்.


அரை நாள்தான் அவகாசம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, வேலை சீக்கிரமே முடிந்துவிட்டு, மதிய உணவுக்கு கம்பெனிக் கொடுப்பவளும் டேக்கா கொடுத்துவிட, ஒரு நாள் முழுக்கக் கிடைத்துவிட்டால்...

அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் தலைநகரங்களாக இருப்பதில்லை. நியு யார்க் மாகாணத்துக்கு எங்கோ மூலையில் இருக்கும் ஆல்பனி; லிங்கனின் இல்லினாய்க்கும் சிகாகோ கிடையாது. அமெரிக்காவுக்கு தலையான வாஷிங்டன் டிசி-யிலோ, அமெரிக்க பாராளுமன்றத்தைப் பார்வையிட ஏழு கடல் ஆறு மலை என்பது போல் தடைக்கற்கள் மிக அதிகம். அமெரிக்க செனேட்டரைப் பார்க்க வேண்டும்... கையெழுத்துடன் சிபாரிசுக் கடிதம் வாங்க வேண்டும்... ஒரு மண்டலம் முன்பே ஒப்புதல் கொடுக்க வேண்டும்... நடக்கிற (சாரி...) பார்க்கிற காரியமா அது?!

அந்த மாதிரி எதுவும் இல்லாமல், கவர்னர் அறை, மாஸாசூஸட்ஸ் மக்களின் பிரதிநிதிகள் சண்டமாருதம் பொழியும் அவை, செனேட்டர்கள் கர்ஜிக்கும் விவாதக் களம், பெருந்தலைவர்கள் வந்தால் விருந்து கொடுக்கும் சபா மண்டபம், சிலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் என்று விளக்கமாக அறிய, பார்வையிட 'ஸ்டேட் ஹவுஸ்' செல்ல வேண்டும்.

அப்படியே அங்கிருந்து பொடி நடையாக பாஸ்டன் பொதுமக்கள் பூந்தோட்டத்தையும், சோலைகளையும் மேயலாம். புல்தரையில் மடி மீது தலை வைத்து சூரியன் மறையும் வரை வெயில்காயும் ஜோடிகளைக் காணலாம். டாவின்சி கோட் புரட்டும் படிப்பாளிகளைத் தாண்டலாம். பூத்துவாலைக் குளியலில் குதியாட்டம் கட்டும் சிறார்களோடு இளைப்பாறலாம்.

அங்கிருந்து நடையைக் கட்டி, 'சுதந்திரச் சுவடுகள்' என்று நாமகரணமிட்டிருக்கும் 'Freedom Trail'-ஐ பின்பற்றி கையெழுத்துக்கே இலக்கணம் வகுத்த ஜான் ஹான்காக், சோமபானுத்துக்கு இலக்கணமான சாமுவேல் ஆடம்ஸ் போன்ற பலரின் சமாதிகளை அரகரா போட்டுக் கொண்டே கழைக்கூத்தாடிகளும் இசைக் கலைஞர்களும் முக்குதோறும் காணப்படும் க்வின்சி மார்க்கெட் வந்து சேருவோம்.

'எனக்கு பீட்ஸா பிடிக்காது; புரீடோ மட்டும்தான் வேணும்', 'இட்லி மட்டும்தான் வெளியில் சாப்பிடற பழக்கம்'; 'சூடா டிகிரி காபி கிடைக்குமா?', 'ஐ லைக் ஒன்லி ட்யூட்டி ·ப்ரூட்டி ஐஸ்க்ரீம்', 'எலும்பு இல்லாம என்னய்யா சிக்கன்! செட்டி நாட்டு கோழி மாதிரி வருமா?' என்று விதவிதமாய் மெனு கேட்டு ருசிப்பவர்களுக்கு இது ஏற்ற இடம். அண்டார்டிகா பெங்குயின் முதல் ஆர்க்டிக் பனிக்கரடி வரை சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்து வகையறாவும் எப்படியெல்லாம் சமைக்கமுடியுமோ அனைத்தும் ஒருங்கே பரிமாறுவார்கள்.

வெளியில் வந்தால் நாஜிகளினால் கொல்லப்பட்டவர்களுக்கான 'Holocaust' நினைவுச்சின்னம். ஆஸ்ஷ்விட்ச் உட்பட ஏழு இடங்களில் விஷவாயு செலுத்தி பலியானதன் குறியீடாக ஏழு கண்ணாடி கோபுரங்கள். தப்பித்தவர்களின் நேரடி அனுபவங்களில் இருந்து சில மேற்கோள்கள், நேரடியாக பார்த்தவர்களின் சாட்சிக் குறிப்புகள், காலவரிசை, ஹிட்லரின் செய்முறை என்று உறைய வைக்கும் நினைவாலயம்.


இன்னுமொரு நாள் இருக்கிறதா?

கடல்வாழ் உயிர்காட்சிசாலை, விலங்கியல் பூங்கா, அருங்காட்சியகம் போன்றவை உலகத்தரமானது. உங்களின் வெறுப்பிற்கேற்ப எதைத் தவிர்க்க வேண்டுமோ அதை விடுத்து ஏதாவது ஒன்றுக்கு செல்லலாம்.

அட... நாள்களை எண்ணாதே! ரசிக்க வேண்டியதை நின்று நிதானமாகப் பார்த்துக் கொள்வோம் என்கிறீர்களா?

மார்த்தாவின் பழரசத் தோட்டம் என்னும் ரசமான பெயருடைய Marthas Vineyard அல்லது நான்ட்டுக்கெட் தீவுகளுக்கு கடல் வழியாக கப்பல் பயணத்தில் சென்றடையலாம். வெயிலில் திராவிடனாகும் வரை காயலாம். கடற்கரையோரமாக சைக்கிளில் சுற்றலாம். நகரத்தின் நச்சுப்புகையும் அவசர மனிதர்களும் விரட்டல் மனப்பானமையும் ·பாஸ்ட் ·புட் உணவும் இல்லாமல் கிராமத்தின் அன்னியோன்மும் தீவின் தனிமையும் மலையின் குளிரையும் மணல் ஒட்டிய கால்களுடன் மகிழலாம்.

வடக்கு பக்கமாக சென்றால் கோடை காலத்தில் கூட பனியை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கும் வாஷிங்டன் மலை. நன்றாக வண்டியோட்டுவேன் என்பவர்கள் கூட நடுங்கிக் கொண்டே வண்டியோட்டும் ஒரு வழிப்பாதை மலையேற்றம். காரோட்டி திகிலில் இன்புறாவிட்டால், சிக்குபுக்கு ரயில் பயணம். காட்டுவழிப் போக ஆயிரம் பாதைகள். வரைபடங்களும் கொடுத்து விடுவதால் 'ப்ளேர் விட்ச் ப்ராஜெக்ட்' போல் பயப்படத் தேவையில்லை. ஆற்றோடு துடுப்பு போட்டு துள்ளலாம். ஏரி நீரில் ஜெட் ஸ்கீயும் பாயலாம்.

ஊர் சுற்றி விட்டு ஏறக்கட்டும்போது பாஸ்டன் ட்ரினிட்டி தேவாலயத்திலும் நியு இங்கிலாந்து மஹாலஷ்மி கோவிலிலும் சொல்லிக் கொண்டு போக மறந்து விடாதீர்கள்.

நண்பரின் பாஸ்டன் புகைப்படங்கள்| |

2 கருத்துகள்:

//அமெரிக்காவுக்கு தலையான வாஷிங்டன் டிசி-யிலோ, அமெரிக்க பாராளுமன்றத்தைப் பார்வையிட ஏழு கடல் ஆறு மலை என்பது போல் தடைக்கற்கள் மிக அதிகம். அமெரிக்க செனேட்டரைப் பார்க்க வேண்டும்... கையெழுத்துடன் சிபாரிசுக் கடிதம் வாங்க வேண்டும்... ஒரு மண்டலம் முன்பே ஒப்புதல் கொடுக்க வேண்டும்... நடக்கிற (சாரி...) பார்க்கிற காரியமா அது?!//

ahem...This only applies to the White house, not to the Capitol building (which houses the House and the Senate):

"The Capitol is open to the public for guided tours only. Tours will be conducted from 9:00 a.m. to 4:30 p.m. Monday through Saturday (the Capitol is not available for tours on Sundays). The Capitol will be open on all federal holidays except Thanksgiving Day and Christmas Day.

Visitors must obtain free tickets for tours on a first-come, first-served basis, at the Capitol Guide Service kiosk located along the curving sidewalk southwest of the Capitol "

சரி பார்த்திருக்கலாம்... முன்னுமொரு காலத்தில் நான் போனபோது இந்த மாதிரி படுத்தல்கள் இருந்த பழைய நெனைப்பில்.. ஹி...ஹி...! நன்றி ஸ்ரீகாந்த்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு