திங்கள், ஜூன் 19, 2006

Chat Meet - Tamiloviam Meena

எனக்கு அறிமுகமான சில இணைய விஐபி-க்களுடன் சிறு மின்னஞ்சல் அரட்டை பேட்டி:

மீனா (மீனாஷி) தமிழோவியத்தின் தொடக்க காலத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு தளங்களில் எழுதி வருபவர். கடந்த மூன்றாண்டுகளாக ஆசிரியர் பொறுப்பு.

'முக்கிய இணைய இதழ்களின் ஆசிரியர்கள் எல்லாருமே் பெண்களாகவே இருப்பது எப்படி' என்பது வாசகரிடம் கேட்க விரும்பும் கேள்வி :-)


1. திங்கள் இரவு நெருங்கிவிட, வேலை நெட்டி முறிக்க, செய்தி வெள்ளமாய் குழப்ப, என்ன எழுதலாம் என்று திணறியதுண்டா? (ஆம் என்றால்) எப்படி முடிவெடுத்தை எதை எழுத நேரிட்டது? (இல்லை என்றால்) என்ன எழுதலாம் என்பதை எவ்வளவு சீக்கிரம், எப்படி முடிவெடுப்பீர்கள்?

பொதுவாக வாரம் முழுவதும் வரும் உலக, தேசிய, மாநில செய்திகளை விடாமல் படிக்கும் பழக்கம் உண்டு. அந்த வாரத்தில் எந்த நிகழ்வு எனக்கு முக்கியமாகப் படுகிறதோ அதுதான் அந்த வாரத் தராசாக வெளிவரும். பல நேரங்களில் முதலில் நான் எழுத நினைத்திருந்த செய்தியை விட விருவிருப்பான / முக்கியமான நிகழ்வுகளை கடைசி நேரத்தில் படிக்க நேர்ந்தால் அதை அந்த வார தராசாக எழுதுவது வழக்கம். ஆனால் இன்று வரை தராசு பகுதிக்காக என்ன எழுதலாம் என்று குழம்பியது கிடையாது.

2. தாங்களும் கணேஷ் சந்திராவும் இணைந்துதான் 'தராசு'/இன்ன பிற எழுதுவதாக காதுவாக்கில் செய்தி வந்தது. கணேஷ் சந்திராவுடன் இணைந்து எழுதிய அனுபவம் உண்டா? எப்படி இருந்தது? 'சுபா' போன்று உருவாகும் சாத்தியம் இருக்கிறதா?

தமிழோவியத்தின் ஆசிரியராக நான் விரும்பி செய்யும் வேலைகளில் ஒன்று தராசு மற்றும் சினிமா விமர்சனம் எழுதுவது. நான் எழுதும் கட்டுரைகளில் யாரும் தலையிடுவது கிடையாது. அதை நான் விரும்பவும் மாட்டேன். ஒவ்வொரு வாரமும் தராசு மற்றும் சினிமா விமர்சனத்தை எழுதி முடித்த பிறகு அதை கணேஷ் அவர்களிடம் காட்டுவேன். என்னுடைய கட்டுடைகளின் முதல் விமர்சகர் அவர். மற்றபடி அவருடன் இணைந்து எழுதிய அனுபவம் இல்லை. எனவே சுபா போன்று உருவாகும் சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை.

3. தாங்கள் இதுவரை எழுதியதில் மிகவும் பிடித்த கட்டுரை/செய்தி அலசல் எது? ஏன்? அந்த ஆக்கம் உருவாகுவதற்கு ஏதாவது சிறப்பு காரணங்கள்...

தனஞ்சய் தலை தப்பலாமா என்ற தராசு தான் என் எழுத்துகளில் எனக்கு மிகப்பிடித்த ஆக்கம். ஒரு 14 வயது மாணவியை கற்பழித்து கொலை செய்த பாதகன் அவன். உச்சநீதிமன்றம் வரை அவனுடைய மரண தண்டனையை உறுதி செய்த பிறகு தண்டனையை ரத்து செய்யுமாறு அவன் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தான். குடியரசுத் தலைவர் அவனுடைய மனுவை நிராகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் எழுதப்பட்டது அந்த தராசு. உச்சநீதிமன்றம் வரை தண்டனை உறுதி செய்யப்பட்ட ஒருவனது மரண தண்டனையை எந்தக் காலத்திலும் குடியரசுத் தலைவர் ரத்து செய்யக்கூடாது என்பதே என்னுடைய கருத்து. என்னதான் மரணத்திற்கு மரணம் தீர்வாகாது என்று ஆர்வலர்கள் சிலர் கூறினாலும் உச்ச நீதிமன்றம் வரை ஒருவனது தண்டனை உறுதி செய்யப்பட்டது என்றால் அவன் எத்தகைய கொடூரமானவனாக இருந்திருக்கவேண்டும்? அவனை ஏன் மன்னிக்கவேண்டும்? சட்டம் தண்டித்த ஒருவரை ஜனாதிபதி மன்னித்துவிட்டால் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்கு என்ன மரியாதை இருக்கும்? செய்த குற்றத்திற்கான தண்டனையிலிருந்து ஒருவரை எக்காரணத்தை முன்னிட்டும் தப்ப விடக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் இந்தக் கட்டுரைதான் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை.

4. கதை/நாவல் பக்கம் ஒதுங்கும் எண்ணம் இருக்கிறதா? மனதில் உட்கார்ந்திருக்கும் கரு மற்றும் கதைக்களம் குறித்துப் பகிர முடியுமா?

கதை / நாவல் எல்லாம் எழுதும் எண்ணம் இல்லை. மேலும் எனக்கு அரசியல் (உள்நாடு, வெளிநாடு) மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் ஒரு சிறந்த அரசியல் விமர்சகராக ஆவதே என் ஆசை.


5. வலைப்பதிவு ஆரம்பிப்பீர்களா ? (ஆம் என்றால்) எப்போது... சொந்தப் பெயரிலா... எதைக் குறித்து அனுதினம் பதிவீர்கள்? (இல்லை என்றால்) ஏன் ? தற்போது பதிவுகளைப் படிக்கிறீர்களா? எது தவறவிடாமல் படிப்பீர்கள் ?

எனக்கென்று வலைப்பதிவு தொடங்கும் எண்ணம் ஏதும் இல்லை. நான் எழுத நினைப்பதை எழுத "தமிழோவியம்" இருக்கிறது. தற்போது வேலை, குழந்தை இதற்கே நேரம் சரியாக இருக்கிறது. நாளிதழ்கள், வார இதழ்கள் படித்தது போக நேரம் கிடைக்கும் போது தமிழ்மணம் / தேன்கூடு வலைதிரட்டிகளை படிப்பதுண்டு.




| |

2 கருத்துகள்:

முக்கியமான கேள்விய விட்டுட்டீங்க.

இந்த வார சிறப்பாசிரியர் கட்டுரைகள் எப்படி?

அவர்தானே பிச்சு உதறியிருப்பதாக கேள்விப்பட்டேனே :-)

Muttom to Chicago

எந்தையும் நானும்

கத்தோலிக்கம் - ஒரு மேலோட்டம்

சிக்காகோவில் அந்துமதியும் லென்ஸ்மாமியும்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு