போட்டி: பதிவுக்கு மேய்க்கி
தேன்கூடு + தமிழோவியம் மாதாந்திரப் போட்டிக்கான பதிவு.
பதிவுக்கு மேய்க்கி
பதிவின் தலைப்பு :: பதிவு ஏற்றமும் கழிவு இறக்கமும்
செப்டம்பர் 4, 2006 - திங்கள் :: வெளியான பதிவு - E-Tamil : ஈ-தமிழ்
'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?' தலைப்பில் எழுத வேண்டும். என்ன எழுதுவது என்று குறிப்புகள் எடுக்க வேண்டும். அதற்கு அடிப்படையாகக் கொஞ்சம் கற்பனை கூடிய கதை வேண்டும்.
அமெரிக்காவில் elevator என்று அழைக்கிறார்கள். பிரிட்டிஷாருக்கு பதில் அமெரிக்கர், இந்தியாவை ஆண்டிருந்தால் 'கொஞ்சம் எலிவேட்டர் கிடைக்குமா?' என்று கொங்கு ராசா தலைப்பிருப்பார். பெரிய பழுவேட்டரையர், சின்ன ப.வே. மாதிரி சூப்பர் எலிவேட்டரையர் & சிக் எலிவேட்டர் கதை எழுதலாம்.
லிஃப்ட் கடைக்கு சென்று 'லிஃப்ட் வேண்டும்' என்று கேட்டால், லிஃப்ட் கடைக்காரன் எனக்கு லிஃப்டாக லிஃப்ட் கொடுப்பானா, அல்லது லிஃப்ட்களைக் காட்டி லிஃப்டைத் தேர்ந்தெடுக்க வைப்பானா என்பது என்னை லிஃப்ட் செய்யும் ஆண்டவனுக்கு வெளிச்சம் என்பது விசுத்தனமாக இல்லாமல் புரிந்து விடுகிறது.
அத்னான் சாமியின் "முஜ்கோ பீ லிஃப்ட் கரா தே" (பார்க்க: YouTube - Adnan Sami's Lift Karade) ஆட்டமும் பாட்டமும் துள்ளவைக்கும். கையை அந்த மாதிரி செய்கை காட்டுவதை 'ஹம் ஹே ரஹி ப்யார் கே'வின் (கேட்க: RAAGA - Hum Hain Rahi Pyar Ke - Hindi Movie Songs) 'கூங்கடி கி ஆட்ஸே' பாடலில் ஜூஹி சாவ்லா வேகமாகவும் நளினமாகவும் மெல்லிய புன்னகையுடன் செய்திருக்கிறார். ஜெய்ப்பூர் அரண்மனை மாடங்களில், இளவரசி போல் நகையணிந்து 'கொஞ்சம் லிஃப்ட் வேண்டும்' என்று கேட்பதை ஒத்திருக்கும்.
லிஃப்ட்டுக்கு தமிழில் என்ன என்று தேடினால், நெம்புதல், ஏற்றிவிடுதல், தூக்குதல் போன்ற பழக்கமானவை தவிர விவசாயத்துக்கு உரித்தான, பல புழங்காத வார்த்தைகளை அகரமுதலிகள் அடுக்குகிறது. தண்ணீர் தூக்கிகளை கபிலை, காம்பி, காராஞ்சி, பூட்டைப்பொறி என்று விதவிதமாக விளிக்கலாம் என்கிறது கொலோன்.
'நினைவே ஒரு சங்கீதம்' படத்தில் விஜய்காந்த் களத்துமேட்டில் ஜனதா தளத்தின் சின்னத்தில் உழவனாக நீர் இறைக்க, காதலி ராதா 'ஏத்தமைய்யா ஏத்தம்' என்று டூயட் பாடுவது போல், இவற்றையும் ராகம் தேடும் பல்லவி ஆக்கினால், 'என்றென்றும் அன்புடன்' பாலா பிறிதொரு நாளில் அதில் இருந்து சரணம் தேர்ந்தெடுப்பார்.
'வள்ளி'யில் வடிவேலு எப்படி இருந்திருக்கிறார்? அப்போது அவரை லிஃப்ட் செய்வது எளிது. இம்சை அரசனை லிஃப்ட் செய்தால் முதுகு திருகி விடும். அதையும் நகைச்சுவை ஆக்கிவிடும் திறன் கொண்டவர். சென்ற முறை இந்தியாவுக்கு செல்லும் வழியில் வடிவேலுவை சந்திக்க நேர்ந்தது. இயல்பாக பேசிக் கொண்டிருந்தார். தனக்கு ஆங்கிலம் படிக்க வராது என்று வெளிப்படையாக பகிர்ந்தார். பரங்கியரின் ஆங்கிலத்தில் வந்த அறிவிப்புகளை, லிஃப்ட் போன்ற தமிங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.
ரஜினி படங்களில் பணக்கார வில்லன் ஐந்து நட்சத்திர குடிலின் கண்ணாடி லிப்ட்டில் கீழே இறங்குவான். 'என்றென்றும் காதல்' விஜய் வீட்டுக்குள்ளேயே லிஃப்ட் வைத்து வருவார். சினிமாவில் லிஃப்ட் காட்சி என்றவுடன் 'தூள்' படத்தில் வில்லர் ஜோதிகா கழுத்தில் கத்தி வைப்பதும், விக்ரம் பதிலடி கொடுத்து காத்திருப்பதும் நினைவில் ஊசலாடும். சூர்யா - ஜோதிகா கல்யாணத்தில் விக்ரம் ஏன் வரவில்லை என்பது சூடான வதந்தி (வம்பு: Idleburra.com: Key people not invited for Surya-Jo wedding!!).
இந்த மாதிரி பிற வலையகங்களில் இருந்து உருவி எழுதுவதை லிஃப்ட் எழுத்து என்பார்கள். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு சொல்லாமல் கொள்ளாமல் மொழிபெயர்த்தால், அனு மாலிக் மொழியில் இன்ஸ்பிரேசன். சாதா மொழியில் திருட்டு. காவ்யா விஸ்வநாதன் பாஷையில் லிஃப்ட். எங்கிருந்து சுடுகிறோம், எதில் இருந்து ரீ-மிக்ஸ் செய்கிறோம் என்று சொல்லிச் செய்வது சாரு நிவேதிதாவாக இளிக்காமல் காப்பாற்றும்.
ஏதாவது எழுதிப் பார்க்க வேண்டும். சினிமா ரொம்ப கலக்காமல் இருக்க வேண்டும். கொஞ்சம் புனைவு வாசமாவது அடிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற்றால் 'என்னை லிஃப்ட் செய்து முதல் பத்து இடத்துக்குள் தனி இடம் அமைத்துக் கொடுத்த வாக்காள வாசக வலைப்பதிவாளர்களின் வாழ்க்கையும் லிஃப்ட் ஆக வேண்டுகிறேன்' என்று எதுகை மோனையோடு பதியலாம்.
அல்லது தன்னடக்கத்தோடு "'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?' என்று கேட்ட எனக்கு 'கொஞ்சம் என்ன... நிறைய தூக்கி விடுகிறோம்' என்று வாழ்த்தி வரவேற்று, இந்தச் சிறுவனையும் சிகரத்தில் அமர்த்தி, அழகு பார்த்த அனைவருக்கும் பணிவான நன்றி கலந்த சிரம் தாழ்ந்த லிஃப்ட் பையனின் வணக்கங்கள்" என்று நவிலலாம்.
ஆமாம்.
எழுத வேண்டும்.
பதிவின் தலைப்பு :: God in Lift
செப்டம்பர் 5, 2006 - செவ்வாய் :: வெளியான பதிவு - E-Tamil : ஈ-தமிழ்
இந்த மாதப் போட்டிக்காக கற்பனை குதிரை மக்கர் செய்ததால் கூகிள் குதிரை ஓடவிட்டேன். திண்ணையில் இரா. முருகனின் 'அலுவலகம் போகும் கடவுள்' மாட்டியது.
கதையை ஆரம்பித்த விதம் கட்டிப் போடுகிறது. தனியே இருக்கும்போது தப்புகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. கூடவே கடவுளும் வந்து தொலைக்கிறார். இனி எங்காவது லிப்ட் என்றவுடன் எப்போதும் நினைவுக்கு வந்து அவஸ்தை தரப் போகும் விவரிப்பு. வேலைக்கு போகும் வாழ்க்கையை லிஃப்டோடு கொண்டு போகிறார்
இந்த மாதிரிதான் கதை எழுதவேண்டும். அப்போது பரிசு கிடைக்கும்.
பதிவின் தலைப்பு :: Thenkoodu - Tamiloviam September Contest
செப்டம்பர் 7, 2006 - வியாழன் :: வெளியான பதிவு - கில்லி - Gilli
இந்த மாதப் போட்டிக்கான தலைப்ப அறிவிச்சுட்டாங்க. அது குறித்த விவரங்கள் கொங்கு ராசாவின் பதிவில் கிடைக்கிறது.
லிஃப்ட் தொடர்பான முந்தைய லக்கிலுக் செய்தி: கலங்கரை விளக்கம் - TamilnaduTalk.com:
"சென்னையின் கலங்கரை விளக்கத்துக்கு ஒரு சிறப்பு உண்டு..... ஆம்... ஆசியாவிலேயே லிப்ட் வசதி கொண்ட ஒரே கலங்கரை சென்னை கலங்கரை விளக்கம் தான்...
முதலில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தான் கலங்கரை விளக்கம் இருந்தது.... அப்போதெல்லாம் மின்சார வசதி இல்லை... எனவே நெய் கொண்டு பெரிய தீப்பந்தம் ஏற்றுவார்கள்.... பின்னர் கலங்கரை விளக்கம் இப்போதைய உயர்நீதி மன்ற கட்டிடத்தில் இயங்கியது.... இப்போதும் அந்தக் கலங்கரை விளக்கத்தை நீங்கள் உயர்நீதி மன்றம் சென்றால் காணலாம்.... சென்னை துறைமுகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே இப்போதைய சாந்தோம் பகுதியில் புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது...."
பதிவின் தலைப்பு :: Losing Jobs to NRIs - US Senator Escalates Issue by Resigning
செப்டம்பர் 13, 2036 - சனி :: வெளியான பதிவு - தமிழகத் தேர்தல் 2006
இந்தியர்களினால் அமெரிக்கர்களின் வேலை இழப்பு பிரச்சினை: செனேட்டர் பதவியை ராஜிநாமா செய்தார் ஃப்ரெட்ரிக் கென்னடி
வாஷிங்டன் டிசி, செப்.12: அமெரிக்க நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் அயல்நாட்டவர் பதவி வகிப்பது தொடர்பான பிரச்சினை காரணமாக ரிபப்ளிகன் கட்சித் தலைவர் ஃப்ரெட்ரிக் கென்னடி தனது செனேட்டர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அவர் கூறியதாவது:
அமெரிக்க வேலை வாய்ப்புகளை அமெரிக்கர்களே பெறக் கோரி தொடர்ந்து போராடுவோம். இதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை. லட்சியத்தை அடையும் வரை ஓயமாட்டோம்.
பல மாகாணங்களிலும் செல்வாக்கை இழந்திருந்த ஜனாதிபதி, அமெரிக்க குடியுரிமை மெற்றவர்களுக்கே வேலை என்று கூறி எங்களுடன் அணி சேர்ந்து தேர்தலை சந்தித்தார். இதன் காரணமாகவே அவருடைய கட்சி பல இடங்களில் தோற்றிந்தாலும், அவரால் மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது. இன்று வாக்குறுதியை மறந்துவிட்டு ஜனாதிபதியும் அவருடைய டெமோக்ரடிக் கட்சியும் செயல்படுகின்றன.
கோரிக்கையை நிறைவேற்ற மத்தியில் பெரும்பான்மை உள்ள குடியரசு கட்சியும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதையடுத்து செனேட்டர் பதவியிலிருந்து விலகினோம். கொள்கையை விட்டுக் கொடுத்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க விரும்பவில்லை.
சீனா, இந்தியா போன்ற அந்நியர்களுக்கு அமெரிக்க மண்ணில் வேலை அனுமதிக்கக்கூடாது என்று அமெரிக்க நிறுவனங்களைக் கேட்டுக்கொள்ளப் போகிறேன். பிறர் வந்து நமது வாய்ப்புகளைத் தட்டி பறிப்பது, அமெரிக்க சந்ததியினருக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது.
இந்தியாவிலும் அமெரிக்கர்களை வேலையை விட்டு காரணமின்றி நீக்குவது, விசாவை ரத்து செய்வது போன்றவை நடைபெற்று வருகின்றன. இன்றைய நிலையில் குடிபுகல் என்பது இருநாடுகளுக்குமே அச்சுறுத்தலாக இருப்பது உண்மையிலும் உண்மை. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க விரும்பவில்லை.
வாழ்க்கைமுறையை பாதுகாக்க இருநாடுகளுமே உறுதியாக இணைந்து செயல்பட வேண்டும்.
இருண்ட காடாக உள்ள அமெரிக்காவை பிரகாசிக்கச் செய்ய நான் வழிகாட்டுகிறேன். அமெரிக்காவின் மிகப் பெரிய சக்தி தனித்துவம் கொண்ட புத்தியல் சிந்தனாவாதிகள். இன்று அறிவியலாளர்களும் முதலீட்டாளர்களும் ஒன்றோடு ஒன்று மோதி சின்னாபின்னமாகின்றனர். மாற்று சக்திகள் தலைதூக்குகின்றன. இந்நிலையில், அமெரிக்கர்களை ஒருங்கிணைத்து, அரவணைத்துச் செல்பவராக நான் இருப்பேன். இந்தியாவுடன் அணுகுமுறை மென்மையானதாக இருந்தாலும், நம் திறன்களை கொள்ளையடிப்போரிடம் கண்டிப்பாக இருப்பேன்.
இந்த இடுகை குங்குமம்.காம் நடத்தும் பூமாலை வலையிதழில் வெளியாவதற்கு சம்மதம் இல்லை.
பதிவின் தலைப்பு :: நெஞ்சு பொறுக்குதில்லையே
டிசம்பர் 15, 2036 - திங்கள் :: வெளியான பதிவு - E-Tamil : ஈ-தமிழ்
நாற்பது வருடங்களில் சீதோஷ்ணமும் இணையமும் நிறைய மாறிவிட்டது. இருபது வருடம் முன்பு வரை நாளொன்றுக்கு ஆயிரம் வருகையாளர் தரிசித்த இந்த வலைப்பதிவில், இன்று நூறு வருவதே அரிதாகி இருக்கிறது. இவர்களுக்காக எழுத வேண்டுமா என்று மனம் அயர்வுற்றாலும், அமெரிக்காவின் நிலைப்பாடு வருத்தமளிக்கிறது.
'ஜனவரி 1-க்குள் அமெரிக்காவை விட்டு அயல்நாட்டவர்கள் வெளியேற வேண்டும்' என்னும் சட்டம் நத்தார் விடுமுறைக்கு செல்வதற்கு முன் காங்கிரஸ், செனேட் எல்லாம் தாண்டி ஜனாதிபதியின் கையெழுத்தும் பெற்றுவிட்டது. (நேற்றைய செய்தி : சுட்டி இங்கே கொடுக்கவும்). வேற்று நாடுகளில் இருந்து வந்த பலருக்கும் இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இது அவசியமான ஒன்று. என்னைப் போன்ற இந்தியாவை பிறப்பிடமாக கொண்டவரையும் அமெரிக்கராகவே இந்த நாடு நடத்துகிறது. தங்கள் நாட்டுவாசிகளின் நலனை முன்னிறுத்துவதை எப்படி குறை கூற முடியும்?
'தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்' என்னும் சென்ற நூற்றாண்டு மொழியை நீங்கள் சன் டிவியில் பிரகாஷ்ராஜின் 'அரட்டை அரங்க'த்தில் கேட்டிருக்கக் கூடும். சொந்த ஊர்க்காரருக்கே வேலை இல்லாதபோது அந்நியருக்கு எப்படி குடிபுகல் தர முடியும்!?
என்னுடைன் வேலை செய்யும் இருவர் இதனால் பாதிக்கப் பட்டனர். அவர்களுடன் நான் உரையாடிய ஆங்கில நேர்காணலை வலையொலிபரப்பாக கூடிய சீக்கிரம் இங்கு இடுகிறேன்.
குறுகிய காலத்தில் இளம் வயதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்னும் தேவை நிறைவேறியதை அவர்கள் சொன்னார்கள். மாற்று நகரத்தில், கட்டுப்பெட்டி சிந்தனையில் மூழ்கிய இடத்தில், இந்தியாவை விட வித்தியாசமான பழங்கால சூழலில், சில காலம் வசிக்க கிடைத்த வாய்ப்பை, அவர்கள் பெருமையாகவே கருதுகிறார்கள்.
என்னவாக இருந்தாலும் நம்மவர்களுக்கு உதவுவதில் ஒரு திருப்தி கிடைக்கிறது. அவர்களின் உடைமைகளை விற்க, மூட்டை முடிச்சு கட்ட, கடைசி நேர சாமான் வாங்க என்று ஓடுவதில் நான் வாழும் நாடு அவர்களுக்கு செய்த தடாலடி மாற்றத்தை ஓரளவு பிராயசித்தம் செய்வதாக உணர்கிறேன்.
'ஏர்போர்ட்டுக்கு லிஃப்ட் வேண்டும்' என்று கேட்பதற்கு முன் நானே கொண்டு விடுகிறேன் என்றும் சொல்லி இருக்கிறேன்.
இந்த இடுகை குங்குமம்.காம் நடத்தும் பூமாலை வலையிதழில் வெளியாவதற்கு முழு சம்மதம்.
பதிவின் தலைப்பு :: குங்குமம்.காம் & கூகிள் - இலக்கிய போட்டி பதிவுகளுக்கான விமர்சனம்
செப்டம்பர் 15, 2006 - வெள்ளி :: வெளியான பதிவு - தடிப்பையன்
வாசகரைப் பொறுத்து இந்தப் பதிவு அமைந்திருக்கிறது. சிறுகதையிலிருந்து வேறுபட்டாலும் அனுபவ வெளியீடாக உருக்காண முடியாதது இடுகையின் மிகப்பெரிய குறை. வாசகரை முன்வைத்து எழுதப்பட்ட பதிவு. வாசகனுக்காக எழுதப்படுபவை நல்ல இலக்கியத் தகுதி உடையனவாகக் கருதப்படுவதில்லை என்று ஜூலை 2036 காலச்சுவட்டில் இ. அண்ணாமலை எழுதுகிறார். வாசகனை மனத்தில் இருத்தி எழுதப்பட்ட இந்தப் பதிவு பூரண திருப்தியளிக்கவில்லை. எழுதுபவரின் ஆளுமையையும் பிரதிபலிக்காமல், கதைக்கே உரித்தான பாத்திரப் படைப்பும் ஜொலிக்காமல், எழுத்தாளரின் உணர்வுகளும் வெளிப்படாமல் அரைகுறை அவியல்.
(சிறுகதை) மதிப்பெண் - 1.5 / 4
இந்த இடுகை குங்குமம்.காம் நடத்தும் பூமாலை வலையிதழில் வெளியாவதற்கு முழு சம்மதம்.
Thenkoodu | Tamiloviam | Contest
பாபா,
உங்களுக்கு இத்தனை விதமாக தோன்றியிருக்கிறது!!! (ஆச்சர்யகுறி)
எனக்கு "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா"னு சொன்னவுடனே தோன்றியது வண்டில கொடுக்கற லிப்ட்தான் :(
போக்கிரி கிடைத்தால் பார்க்கவும் அதில் லிப்டில் மகேஷ் பாபுவும், இலியானாவும் பேசி கொள்ளும் காட்சி அருமையாக இருக்கும்...
காரில் லிப்ட் கொடுக்கும் சீன்களும் தமிழ் படத்தில் அதிகம்...
சொன்னது… 9/16/2006 05:30:00 PM
'2036' பதிவுகள் சூப்பர்.
என்னோட நினைவுல நிக்கற இன்னொரு லிஃப்ட் காட்சி, ஜெண்டில் மேன் படத்துல, ப்ரிண்ஸ் ப்ளாஸா லிஃப்ட்-ல, அர்ஜூன் மேல போயி அப்டியே காணாம போய்டற காட்சி.
பெயரில்லா சொன்னது… 9/17/2006 06:16:00 PM
சரவ், பதிவெழுதி இரண்டு நாளாகியும் எவரும் சீந்தாத நிலையில் நண்பருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.
'உன் கதை படிச்சேன்... ஒன்னுமே புரியலை'
'ஒரு ரெண்டு பேருக்காவது வெளங்கும்னு தோணுது!?'
'ஒன்று நீ... சரி! அந்த இன்னொருவர் எவர்?'
ஏதோ, மற்றொரு வாசகராவது ரசித்ததில் பெருத்த மகிழ்ச்சி :)
சொன்னது… 9/17/2006 08:15:00 PM
----போக்கிரி கிடைத்தால் பார்க்கவும் ----
தீபாவளிக்கு வந்துருவார் இல்லையா!
ஃப்லிம்பேர் விருதுகளை சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். 'உனக்கும் எனக்கும்' தெலுங்கு பதிப்பும் அன்னியனும் பெரும்பாலான விருதுகளை அள்ளிக் கொண்டது. சார்மி நடித்த படமும் (Instant Kaapi » Blog Archive » Anukokunda Oka Roju) கவனிப்ப்பை பெற்றது.
----காரில் லிப்ட் கொடுக்கும் சீன்களும் ---
அட எப்படி மறந்தேன்! 'திருடா திருடா'வில் மாட்டுவண்டியில் லிஃப்ட் கிடைக்கும்.
அது தவிர, காலைக் காட்டி லிஃப்ட் வாங்குவது, 'பூவெல்லாம் கேட்டுப்பார்' பிள்ளைத்தாச்சி லிஃப்ட் என்று நிறைய நினைவுக்கு வருகிறது.
சொன்னது… 9/17/2006 08:21:00 PM
அஸினைவிட இலியானா அட்டகாசமாக அந்த காட்சிக்கு பொருந்துவார்.
அதனால்தான் தெலுகு போக்கிரியை சொன்னேன்.
அனகோக்கண்ட ஒக ரோஜு அட்டகாசமான படம். சார்மீயின் நடிப்பும் பிரமாதம். இவரா இப்படி என்று நான் ஆச்சரியமடைந்தேன்.
கார் லிப்ட் சீன்னா எனக்கு நியாபகம் வருவது பிரபு GVயிடம் லிப்ட் கேட்டு வரும் சீன். அடுத்து குஷியில் விஜயக்குமாருக்கு விஜய் கொடுக்கும் லிப்ட்தான்.
சொன்னது… 9/17/2006 08:34:00 PM
//லிஃப்ட் தொடர்பான முந்தைய லக்கிலுக் செய்தி: கலங்கரை விளக்கம் - TamilnaduTalk.com: //
நன்றி தலைவரே.... தமிழ்நாடு.காமும் அவ்வப்போது மேய்வதுண்டா?
சொன்னது… 9/17/2006 10:36:00 PM
//சினிமாவில் லிஃப்ட் காட்சி என்றவுடன் 'தூள்' படத்தில் வில்லர் ஜோதிகா கழுத்தில் கத்தி வைப்பதும், விக்ரம் பதிலடி கொடுத்து காத்திருப்பதும் நினைவில் ஊசலாடும்.//
தூள் படத்தில் வில்லன்களிடம் லிஃப்டில் மாட்டிக்கொள்வது ஜோதிகா இல்லை, ரீமா சென். எங்க ஆளு பத்தி எங்க கிட்டயேவா? ;-)
சொன்னது… 9/18/2006 02:38:00 AM
இதைப் படித்து, புரிந்து(?) கொண்டு விமர்சிக்க ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன் :-))
***
என்னமோ போங்க, உங்களுக்கு எல்லாமே விளையாட்டா இருக்கு...
***
//'உன் கதை படிச்சேன்... ஒன்னுமே புரியலை'
'ஒரு ரெண்டு பேருக்காவது வெளங்கும்னு தோணுது!?'
'ஒன்று நீ... சரி! அந்த இன்னொருவர் எவர்?'//
சிரிப்போ, சிரிப்பு :-))
***
வந்து விமர்சனத்தையும் பாத்துடுங்க...
சொன்னது… 9/19/2006 12:26:00 AM
இந்தப் பதிவு எவரெவருக்கு விளங்கவில்லையோ அவர்கள் தங்களின் பொன்னான வாக்கை அளிக்க வேண்டுகிறேன் :-D)
சோ.பை.... தங்களின் சூடான விமர்சனத்திற்கு நன்றி. பொறுமையைக் கண்டால் பொறாமை வருகிறது :)
மீனாக்ஸ்....
----ஜோதிகா இல்லை, ரீமா சென். ----
ஓ.... ஏதோ ஒருவர்... பரவாயில்லை; இருவருமே படத்தில் இருக்கிறார்களே :)))
லக்கிலுக்....
எப்பொழுதாவது எட்டிப்பார்த்தாலும், கூகிள் கைகொடுத்ததால் இப்பொழுது சரியான சுட்டி கிடைத்தது.
வெட்டி....
உங்களுக்கு ஒரு செய்தி: Fan Clubs will facilitate Free Food on all Religion’s Festivals - Thrisha « Bala’s Blog: "ரசிகர் மன்றங்கள் மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பண்டிகை தினத்திலும் அன்னதானம்: த்ரிஷா"
சொன்னது… 9/20/2006 04:06:00 PM
//Boston Bala said...
இந்தப் பதிவு எவரெவருக்கு விளங்கவில்லையோ அவர்கள் தங்களின் பொன்னான வாக்கை அளிக்க வேண்டுகிறேன் :-D)
//
அட்டகாசமான வேண்டுகோளா இருக்கே...
அப்படினா நீங்க 1000 ஓட்டு வித்தியாசத்துல ஜெயிப்பீங்க ;)
பெயரில்லா சொன்னது… 9/20/2006 05:07:00 PM
//ரசிகர் மன்றங்கள் மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பண்டிகை தினத்திலும் அன்னதானம்: த்ரிஷா//
பாஸ்டன்ல இருக்கா??? (I mean Annathaanam)
சொன்னது… 9/20/2006 05:09:00 PM
----நீங்க 1000 ஓட்டு வித்தியாசத்துல ஜெயிப்பீங்க ----
எனக்கு வாக்களிப்பதாக தங்கள் வலைப்பதிவில் அடித்து சத்தியம் செய்வோருக்கு, 'போலி வாக்கு போடுவதெப்படி' (எப்படி... எப்படீ series) மற்றும் 'கள்ள வோட்டு வாங்கலாம் வாங்க' (வாங்க... வாங்க series) புத்தகங்கள் மின்னஞ்சல் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் :D
தங்கள் கணினியை படுக்கப் போட்டு 'முந்தானை முடிச்சு' ஸ்டைலில் தாண்டுவோருக்கும் இந்த டிப்ஸ், டம்மீஸ், இடியட்ஸ் கைட் மின் புத்தகம் வழங்கப்படும்.
சொன்னது… 9/20/2006 08:08:00 PM
வி.பி....
----த்ரிஷா//
பாஸ்டன்ல இருக்கா???----
தற்கால அம்மா நடிகை, கண்ணை மூடிக் கொண்டு மட்டும் அழத் தெரிந்த, பல்லைக் கடித்தால் சிரிப்பு என்று புரிந்து வைத்திருக்கும், கமலா காமேஷின் டூப்புக்கு - பாஸ்டனில் ரசிகர் மன்றமா! சார்லஸ் நதி பொங்கிவிடும் சார் :P
சொன்னது… 9/20/2006 08:11:00 PM
//Boston Bala said...
இந்தப் பதிவு எவரெவருக்கு விளங்கவில்லையோ அவர்கள் தங்களின் பொன்னான வாக்கை அளிக்க வேண்டுகிறேன் :-D)
//
எனக்கும் கொஞ்ச நேரம் எங்கெ இந்த படைப்பு முடியுதுன்னே விளங்கலை பாலா..
முரட்டுக்காளை
பெயரில்லா சொன்னது… 9/22/2006 06:36:00 PM
கருத்துரையிடுக