New Jersey Short Film & Documentary Film Festival
நியூ ஜெர்சி திரைப்படவிழா
தமிழோவியத்திற்கு நன்றி.
விடிந்தும் விடியாத அதிகாலை ஐந்து மணிக்கு பாஸ்டனில் இருந்து நியு ஜெர்ஸி நோக்கி பயணம் ஆரம்பித்தது. சாதனையாளர்களின் வரலாறுகளின் திரைப்படப்பதிவுகள் பார்ப்பதற்கான ஆர்வம் இருந்த அளவு சூரியன் உதயமாகும் கருக்கல் காலத்தை ரசிப்பதற்கும் ஒதுக்கலாம்.
பல காலமாக பாஸ்டனில் இருந்தாலும் முதல் முறையாக 'பிரக்ஞை' ரவி சங்கரை சந்தித்தது இந்த விழாவின் ஹைலைட். போக ஐந்து மணி நேரம், திரும்பி வர ஐந்து மணி நேரம். அனேகமாக இந்த மாதிரி பயணங்களில் 'அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு' என்று குத்துப் பாடல்களையும், 'அந்தாக்சரி' போன்ற சின்னபுள்ள விளையாட்டுகளையும், 'போலீஸ் மாமா தெரிகிறானா' என்னும் கண்ணாமூச்சியும் நடத்துவது எம் வழக்கம்.
'பிரக்ஞை' ரவி ஷங்கர் இந்த பழக்கத்தை மாற்றினார். கொஞ்சம் நினைவலை, நிறைய ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியச் சூழல், கருத்தியல் மோதல்களின் நியாயங்கள் என்று அலுக்காமல் பரவலாக பேசினார். சிந்தனையை முடுக்கி, கற்பித்துக் கொண்ட நியாயங்களை அசைத்து, தேங்கிப் போன மூளையை தூசி தட்டி, அறிவைத் தூண்டிய தர்க்கமுறை தெளிவுகள்.
மார்க்சிஸம், சமூகவியல், மானுடவியல், இயங்கியல், இயக்க மறுப்பு வாதத்தின் பிழையான சொல்லாக்கம், என்று இஸங்களும் உண்டு. சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா என்று நாடுகளும் களத்தில் இடம்பெற்றது. இஸ்லாமிய கள ஆய்வு, 'பிரக்ஞை' பத்திரிகைக்கான நேர்காணல்கள், சம்பத் கதைகள், ஆ. இரா. வெங்கடாசலபதி கட்டுரைகள், எஸ்.வி.ராஜதுரை என்று நேம் ட்ராப்பிங் கலந்த சர்ச்சைகள் அலசப்பட்டது. உளவியலுக்கும் மார்க்சுக்கும் உள்ள முரண், கம்யூனிசத்திற்கும் காபிடலிஸத்திற்கும் உள்ள பல ஒற்றுமைகள் என்று பரந்த தளங்களின் கருத்துக்களின் கோர்வைகளும் முன்வைக்கப்பட்டன.
பொம்மைக் கடைக்குள் நுழையும் என்னுடைய குழந்தைக்கு தந்தையின் பட்ஜெட் எவ்வளவு என்று அறிந்து வைத்திருக்கும். இருந்தாலும், தூண்டிலாக வைக்கப்பட்டிருக்கும் எல்லா பொம்மைகளையும் ஆற அமர ரசித்து விளையாடுவாள். கடைசியாக, அலுத்து மிதமிஞ்சிய திருப்தி கிடைத்தவுடன், ஒரேயொரு விளையாட்டுப் பெட்டியை மட்டும் வாங்கச் சொல்லுவாள். அதே போல், மொத்தமாக பல்சுவை ஆக்கங்களையும், தன்னுடைய ஐம்பதாண்டுக்கும் அதிகமான ஆய்வறிவை இலகுவாக வழங்கினாலும், எங்களின் பொக்கீடறிந்து, சிந்திக்கவேண்டிய takeaways-ஐ எங்களுக்குள் விட்ட, மிக மிக சுவாரசியமான பத்து மணி நேரம்.
இனி ஆவணப்படங்கள் குறித்த சிறு எண்ணவோட்டங்கள்:
1. சர் சி வி ராமன் (இயக்கம் : அம்ஷன் குமார்)
நான் சென்றபோது ஆரம்பித்திருந்தது. தன்னம்பிக்கை சிவி ராமனின் முகத்தில் மிளிர்கிறது. வெளிநாடுகளில் தங்கி பத்தோடு பதினொன்றாக ஆகாமல், தாயகம் திரும்பி பளிச்சிட்டதை சிறப்பாக வெளிக் கொணர்ந்திருந்தார். தனியாக ஆராய்ச்சி மையம் துவக்கியது, பலரையும் ஊக்கமூட்டும் விதமாக படமாக்கப்பட்டிருந்தது.
கிருஷ்ணனின் பங்கு போன்ற பரபரப்பான விஷயங்களை ஒதுக்கியிருந்தார்.
படத்தில் கவர்ந்த காட்சி: இரவு உணவு உண்ட பின் அனைவரும் இளைப்பாறும் தருணத்தில் இராமனின் நண்பர், அவரின் தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு ரிலாக்ஸ் செய்யச் சொல்கிறார். 'அதில் என்னுடைய ஈகோ இருக்கிறது. அவிழ்த்தால் தலைக்கனம் வெளியே வந்துவிடும்' என்று நகைச்சுவையும் சமயோசியதமாகவும் ராமன் பதிலளிக்கிறார்.
2. எம் எஸ் சுவாமிநாதன் (இயக்கம் : அம்ஷன் குமார்)
'இன்னும் இருபதாண்டுகளில் பசி, பட்டினியால் இந்தியாவே காலி' என்று உலகம் உச்சரித்ததை மாற்றிக் காட்டியவர். பசுமைப் புரட்சியில் முக்கிய தூணாக இருந்தவரின் வாழ்க்கையை அறிய முடிகிறது.
3. அப்துல் கலாம் (இயக்கம் : பி தனபால்)
தாத்தா தன்னுடைய பேரனுக்கு கலாமின் கதையை சொல்வதாக அமைத்திருக்கிறார்கள். ஷோபனாவும் ஆவனப்படத்தில் அம்மாவாக நடித்திருக்கிறார். (செய்தி :: சிக்குன் குனியா தாக்கி நடிகை ஷோபனா அவதி)
அப்துல் கலாம் தன் சாதனைகளாகச் சொல்வதை படம் பிடித்திருந்தார்கள். சிறுவர்களைப் பெரிதும் கவர்ந்த படம் என்பதாலோ என்னவோ, விழாவிற்கு வந்திருந்த பெரியவர்களைக் கவருமாறு காட்சியோட்டம் அமையவில்லை.
மதிய உணவு மெனு மனதை மயக்கியது. அவியல், உருளைக் கறி, மாங்காய் ஊறுகாய், ஜிலேபி, பிஸிபேளா பாத், பகாளா பாத் என்று வயிறார உண்டோம். உண்ட மயக்கம் கூடாது என்பதற்காக ஃபில்டர் காபியுடன் எழுத்தாளர்களின் வாழ்க்கை சித்திரங்களை பார்க்க ஆரம்பித்தோம்.
4. இந்திரா பார்த்தசாரதி (இயக்கம் : ரவி சுப்பிரமணியன்)
இ.பா. வாழ்ந்த இடங்களுக்கு சென்று படம் பிடித்திருந்தார்கள். புதுச்சேரியில் காலங்கழித்த பகுதிகள், நாடக அரங்கில் இ.பா. ஆகிய இரண்டும் பெரும்பாலான பங்கு வகித்தது. வெளி ரங்கராஜன், நா முத்துசாமி, பிரபஞ்சன், வெங்கட் சாமிநாதன், ஞானி, என்று பிரபலங்களும் இ.பா.வின் சிஷ்யர்களும் தங்கள் கருத்துக்களை சுருக்கமாக வெளிப்படுத்தி, இ.பா. குறித்த சித்திரத்தை முழுமை செய்தனர்.
5. அசோகமித்திரன் (இயக்கம் : அம்ஷன் குமார்)
'Finding Neverland' திரைப்படத்தில் பீட்டர் பான் பிறந்த கதையை விவரிப்பது போல் ஹைதராபாத் நகரமும் பதினெட்டாவது அட்சரக் கோடும் உருவான கதை, குறும்படத்தை ஆக்கிரமித்திருந்தது. எழுத்தாளர்களுக்கே உரித்தான, துண்டுக் காகிதத்திலும் நெடுங்கதைகளை அடித்தல் திருத்தல்களுடன் எழுதும் பழக்கத்தினை வெளிக்கொணர்ந்தார். சா. கந்தசாமி, வாஸந்தி என்று பொருத்தமானவர்களைத் தேடிப் பிடித்து பேட்டிகளை இணைத்திருந்தார்.
'தான் கண்ட காட்சிகளையும் மனிதர்களையும் எழுதி முடிக்க இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளாவது பிடிக்கும்' என்று அ.மி. சொன்னதை வைத்தது, வெகு சிறப்பான முத்தாய்ப்பு.
6. ஜெயகாந்தன் (இயக்கம் : சா கந்தசாமி)
ஜெயகாந்தனின் திரைப்படங்களில் இருந்து சில காட்சிகள் இடம்பெற்றது. அவரின் புகழ்பெற்ற படைப்புகளில் இருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டது. அவர் உலவிய பிரதேசங்களில் மீள் உலா நடத்தப்பட்டது. பிரமிக்க வைக்கும் மனிதரைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டுமாறு அமைக்கப்பட்டிருந்தாலும், படக்கோர்வையிலும் விஷயப்பரப்பிலும் போதாமையை வெளிப்படுத்திய ஆக்கம்.
7. ஊருக்கு நூறு பேர் (இயக்கம் : பி லெனின்)
விருதுப்படங்களுக்குரிய சாமுத்ரிகா லட்சணங்களுடன் கூடிய புனைவுப் படம். திரைப்படத்திற்கு சிறப்பான முன்னோட்டத்தை கே.எம். சுந்தரம் வழங்கினார். படத்தின் பிறகு நடந்த கலந்துரையாடலில் சிந்தனை வட்ட அமைப்பாளர் முருகானந்தம், ஜெயகாந்தனின் குறுநாவலில் இருந்து, திரையாக்கம் மாறுபட்டிருந்த சிற்சில இடங்களை சுட்டினார்.
பத்திரிகையாளராக நடித்த அர்ச்சனாவிற்கு வசனம் இல்லாவிட்டாலும், இயல்பாக சிறப்பாக நடித்திருந்தார். மரண தண்டனையா, மன்னிப்பா? என்னும் விவாதத்தை எழுப்புகிற திரைப்படம். தூக்குப் போடுவது சரியா தப்பா, என்பதில் இருந்து ஆங்காங்கே வழுவி, கம்யூனிசம், மார்க்சிசம், ஆளும் வர்க்கம் என்று தத்துவங்களில் போராடியது கவனத்தை சிதறடித்தது.
மாலதி ரங்கராஜனின் விமர்சனம்: The Hindu : "Oorukku Nooru Paer"
தியோடார் பாஸ்கரனின் விமர்சனம்: The Hindu : A language of visuals
விழா நிகழ்வின் இறுதியில் எடுத்த சில படங்கள்
Short Films | Docudrama | New Jersey | Ravishankar | Sinthanai Vattam
நம்ம ஊர் பக்கம் வந்தீங்களா? சொல்லி இருந்தா வந்து பாத்திருப்பேனே... :(
சொன்னது… 10/05/2006 02:14:00 PM
சும்மா நச்சுனு இருக்கு :-)
சொன்னது… 10/05/2006 04:08:00 PM
பாலாஜி,
இப்பட நிகழ்வுக்கு வர விருப்பமிருந்தாலும், அதே நாளில் இங்கு வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்கனவே ஒப்புதல் அளித்த படியால் முடியவில்லை. சுருக்கமான தொகுப்புக்கு நன்றி. சர் சி வி ராமன், எம் எஸ் சுவாமிநாதன், ஊருக்கு நூறு பேர் படங்களைக் காண ஆசை.
எம் எஸ் சுவாமிநாதனைப் பற்றியும், பசுமைப் புரட்சியைப் பற்றியும் இந்திய விவசாய ஆராய்ச்சித் துறை விஞ்ஞானிகள் சிலர் மத்தியிலும், சுற்றுப் புறச் சூழலியலாளர்கள் மத்தியிலும் மிகப் பரவலாக இருந்து வரும் விமர்சனங்களைப் பற்றியும் தொட்டிருக்கிறார்களா? அம்ஷன் குமார் ஒரு நேர்மையான கலைஞன் என்ற என் எதிர்பார்ப்பின் அடிப்படையில் இந்தக் கேள்வியை முன் வைக்கிறேன்.
Dr Y.P. Gupta of IARI disputed the research reports of MSS and complained of research manipulation. In 1974, the British journal New Scientist published a report on M S Swaminathan’s false data. What brought the scandal to public notice was the suicide in May 1972 of Dr. Vinod Shah, an agronomist at the Indian Agricultural Research Institute.
Environmentalists Vandana Shiva and Dr. Claude Alvares are also highly critical of the claims of Green Revolution. According to Vandana Shiva of Third World Network, the Green Revolution has been a failure resulting in reduced genetic diversity, increased vulnerability to pests, soil erosion, water shortages, reduced soil fertility, micronutrient deficiencies, soil contamination, reduced availability of nutritious food crops for the local population, the displacement of vast numbers of small farmers from their land, rural impoverishment and increased tensions and conflicts. She says that the beneficiaries have been the agrochemical industry, large petrochemical companies, manufacturers of agricultural machinery, dam builders and large landowners.
Dr. Claude Alvares of the Goa Institute wrote an article entitled, "The Great Gene Robbery" in Illustrated Weekly of India in the seventies. There was a wide debate following this. Alvares says, "At a Gandhi seminar, he will speak on Gandhi. At a meeting in Madras, on the necessity for combine harvesters. At another meeting on appropriate technology, he will plump for organic manure. At a talk in London, he will speak on the necessity of chemical fertilizers. He will label slum dwellers "ecological refugees", and advertise his career as a quest for "imparting an ecological basis to productivity improvement". This, after presiding over, and indiscriminately furthering, one of the ecologically most devastating technologies of modern times - the [High Yielding Varieties - HYV] package of the Green Revolution.".
I have been reading several public statements and lectures of M.S. Swaminathan in the past several years which are testimony to the above judgment of Claude Alvares. M.S. Swaminathan Foundation in Chennai is probably one of the topmost institutes in India (probably in the world too) which received public and private funding in India. On the one hand, he (who transformed Indian agriculture into fertislizer intensive) is the spokesman for organic farming in India. On the other hand he has been a staunch supporter of Genetically modified crops being pushed by the multinationals.
In short, as Vandana Shiva says, there were three groups of international agencies involved in transferring the American model of agriculture to India - the private American Foundations, the American Government and the World Bank.
Here is an e-petition to the President.
I hope Amshan Kumar has touched upon these issues in the movie at least for the sake of completion.
நன்றி - சொ. சங்கரபாண்டி
சொன்னது… 10/05/2006 06:26:00 PM
"கிருஷ்ணனின் பங்கு போன்ற பரபரப்பான விஷயங்களை ஒதுக்கியிருந்தார்." என்ற வாசகத்தில் 'ஒதுக்கியிருந்தார்' என்பதை 'விளக்கியிருந்தார்' என்று முன்பு தவறுதலாக வாசித்து விட்டேன். எனவே எம்.எஸ்,சுவாமிநாதனுடனுடைய படத்திலும் எதிர்மறையான விசயங்களை தவிர்த்திருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். அப்புறம் அரசியல் தலைவர்களுடைய வாழ்க்கைப் படங்கள் போல கடவுள்களாகத் தான் காட்டியிருக்க முடியும் :-)
என்னுடைய முந்தையப் பின்னூட்டத்தில் டாக்டர் க்ளாட் ஆல்வாருடைய "The Great Gene Robbery" என்ற முக்கியமான கட்டுரையின் சுட்டி தவ்றுதலாக விடப் பட்டு விட்டது. அது இங்கே:
http://www.gmwatch.org/p1temp.asp?pid=45&page=1
நன்றி - சொ. சங்கரபாண்டி
சொன்னது… 10/05/2006 08:21:00 PM
Thinnai :: நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் நடத்திய திரைப்பட விழா: "தகவல்கள் அடங்கிய குறுமலர் ஒன்றும் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மூன்று படங்களும் முடிந்ததும், கலந்து கொண்டவர்களுக்கு ஒரு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. தங்கள் எண்ணங்களை அவர்கள் அதில் பதித்தனர். அதன்பிறகு, பார்வையாளர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன."
சொன்னது… 10/06/2006 03:15:00 AM
வி.பி.
நன்றி. இங்கே குறும்படம்; அங்கே 'பொம்மரில்லு'வா ;-)
இ.கொ.
சில நண்பர்களுடன் வந்திருந்ததால், எவரையும் இந்த முறை சந்திக்க இயலவில்லை. அடுத்த முறை வரும்போது அவசியம் சந்திக்க விரும்புகிறேன்.
சொன்னது… 10/06/2006 07:02:00 AM
சங்கரபாண்டி
எம்.எஸ். சுவாமிநாதனைக் குறித்து அதிகம் அறிந்ததில்லை. விரிவான பதிவுக்கு நன்றிகள் பல.
Recursive Hypocrisy.: Greatest Indian - Post Independence. பதிவைப் படித்தவுடன் இணைய நண்பர் மின்னஞ்சலிட்டிருந்தார். தாங்கள் குறிப்பிட்ட சில செய்திகளையும் அப்போதுதான் முதன்முறையாக அறிந்து கொண்டேன்.
---சர் சி வி ராமன், எம் எஸ் சுவாமிநாதன், ஊருக்கு நூறு பேர் படங்களைக் காண ஆசை.---
சிவி ராமனின் குறும்படம் வட்டில் கிடைக்கிறது. முருகானந்தத்தைத் தொடர்பு கொண்டால் கிடைக்கும். அவர்தான் சர். சிவி ராமனின் படத்தைத் தயாரித்ததுள்ளார்.
---விமர்சனங்களைப் பற்றியும் தொட்டிருக்கிறார்களா?---
சிறுவர்களுக்கும் உகந்த முறையில் தயாரித்திருந்ததால், விமர்சனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
---On the one hand, he (who transformed Indian agriculture into fertislizer intensive) is the spokesman for organic farming in India. On the other hand he has been a staunch supporter of Genetically modified crops being pushed by the multinationals.---
இந்த மூன்று விஷயங்களையுமே (இந்தியாவில் விவசாய முறைகளை மாற்றிய விதம், தற்போது இயற்கை வளங்களை அனுசரித்து செல்வது குறித்த முக்கியத்துவம், ஆராய்ச்சி விதைகள்) குறும்படம் சுருக்கமாக தொட்டுச் சென்றது.
---அரசியல் தலைவர்களுடைய வாழ்க்கைப் படங்கள் போல கடவுள்களாகத் தான் காட்டியிருக்க முடியும்---
;-)
சொன்னது… 10/06/2006 07:20:00 AM
ஆஹா... வெகு அருமை... என்னமோ கிட்டயிருந்து , பார்த்த மாதிரியே ஒரு உணர்வு
ப்ரக்ஞை ரவிஷங்கர் உங்கூர்க்காரர்தானா? ப்ளாகு பண்றாரான்னு விசாரிச்சீங்களா? ( இந்த புத்தி என்ன உட்டு எப்ப போவுமோ :-) )
சொன்னது… 10/06/2006 07:30:00 AM
//சிவி ராமனின் குறும்படம் வட்டில் கிடைக்கிறது. முருகானந்தத்தைத் தொடர்பு கொண்டால் கிடைக்கும். அவர்தான் சர். சிவி ராமனின் படத்தைத் தயாரித்ததுள்ளார்.//
பாலா, தகவலுக்கு நன்றி. திரு. முருகானந்தத்தை தொடர்பு கொள்கிறேன். முன்பு கேட்க மறந்தது - 'பிரக்ஞை' இரவிசங்கர் பாஸ்டனில் வசிக்கிறாரா?
நன்றி - சொ. சங்கரபாண்டி
சொன்னது… 10/06/2006 09:32:00 PM
பிரகாஷ் & சங்கரபாண்டி
நன்றி!
---'பிரக்ஞை' இரவிசங்கர் பாஸ்டனில் வசிக்கிறாரா?---
ஆமாம்.
---ப்ளாகு பண்றாரான்னு விசாரிச்சீங்களா?---
இல்லை.
மின்னஞ்சல் குழுவொன்றை பரிந்துரைத்தார்: The Heathen in His Blindness - Asia, the West and the Dynamic of Religion.
சொன்னது… 10/09/2006 09:25:00 AM
I came here from mugamoodi's blog after reading comment by PKS.It is easy to project green revolution
as a conspiracy or as a great
miracle.The reality is more complex
and for me there is a need to go
beyond what Claude or Vandana says.
What sounded novel in 1980s would sound like a cliche today. So I would prefer a sophisticated approcah than a conspiracy theory or swaminathan as a bad or evil scientist. If two or three minutes were alloted in the documentary to give space to other views about him/green revolution it would have
been better.But to deal with issues
like professional misconduct,allegations and responses a brief documentary
is not the right place.
சொன்னது… 1/17/2007 09:59:00 PM
---to deal with issues
like professional misconduct,allegations and responses a brief documentary
is not the right place.---
மைக்கேல் மூர் போன்றவர்கள், இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை மட்டும் வைத்தே முழு நீள விவரணப்படம் எடுத்துக் காட்டும்போது, அரை மணி நேர வாழ்க்கை சித்திரத்தில், இவை அடங்காது?!
சொன்னது… 1/18/2007 08:29:00 AM
// ---to deal with issues
like professional misconduct,allegations and responses a brief documentary
is not the right place.---
மைக்கேல் மூர் போன்றவர்கள், இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை மட்டும் வைத்தே முழு நீள விவரணப்படம் எடுத்துக் காட்டும்போது, அரை மணி நேர வாழ்க்கை சித்திரத்தில், இவை அடங்காது?! //
பாபா, அரை மணி நேர வாழ்க்கை சித்திரம் பத்தாது, மூணு மணி நேரம் வேணும்னு நீங்க சொல்றதத்தான் ரவியும் சொல்றாரு... என்ன translate பண்றீங்களா?
சொன்னது… 1/18/2007 09:43:00 AM
@முகமூடி
---என்ன translate பண்றீங்களா?---
எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் ; )
மைக்கேல் மூர் படம் எடுத்தால், பிரச்சினையின் மைனஸ்களை மட்டும் முன்னிறுத்துவதுவார். அது போல், அரை மணி நேரப் படமாகட்டும், முழு நீள காவியமாகட்டும்... தங்களுக்கு விருப்பமானதை மட்டும் இயக்குநர்கள் காட்டுகிறார்களா?
அல்லது
சொல்லாமல் விட்டுப் போவதன் மூலம், பார்வையாளனுக்கு விவாதத்தில் ஆர்வத்தைத் தூண்டி, தேடித் தெளிய சொல்கிறார்களா...
---அரை மணி நேர வாழ்க்கை சித்திரம் பத்தாது, மூணு மணி நேரம் வேணும்னு---
எத்தனை இடம்/கிலோபைட்/நேரம் கொடுத்தாலும், 'உணர்த்த ஆசைப்படுவதை' மட்டுமே பதிப்பிப்போம்/இடுவோம்/திரையிடுவோம்.
அதாவது... மனமிருந்தால் மார்க்கமுண்டு.
சொன்னது… 1/18/2007 12:17:00 PM
கருத்துரையிடுக