சனி, ஜனவரி 13, 2007

Sun TV New Year Special Programmes

என்னுடைய தோழியைப் பார்த்துக் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அக்டோபர் மாதவாக்கில் டிஷ் நெட்வொர்க்கை கூப்பிட்டு, சன் டிவி கணக்கைத் துவங்குவார். ஜனவரி மாத இறுதியில் சன், கே தொலைக்காட்சிகளை அணைத்து விட்டு, டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ், சிஎஸ்ஐ என்று கட்சி மாறி விடுவார்.

புத்தாண்டு நிகழ்ச்சி குறித்து எழுதுவதற்கு முன் பொங்கல் சிறப்பு ப்ரொகிராம் அறிவிப்பே வந்து விட்டது.

சோம்பேறிகள் டிவி பார்க்க கூடாது. டிவி பார்த்தாலும், ப்ளாக் செய்யக் கூடாது. பதிவு எழுதினாலும், பத்தாண்டு பழைய, விசு-கிஷ்மு மொழிபெயர்ப்பை சிலாகிக்கலாம். பத்து நாள் பழைய, ஊசிப் போன புத்தாண்டு சின்னப்பெட்டி விமர்சனங்களை பொங்கலின் போது இடக் கூடாது.

இது மாதிரி ஆயிரம் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கலாம். 'பொய்' பிரகாஷ்ராஜ் இருந்தால், பாலச்சந்தர் தலைவிதியாக படம் எடுத்துதானே படுத்துவார். அவ்வழியில் சன் டிவியின் 2007 சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த என்னுடைய கண்ணோட்டம்.

நிகழ்ச்சியின் ஹைலைட் யுவன் ஷங்கர் ராஜா. சிறப்பு வணக்கம் தமிழகம் என்று காலங்கார்த்தாலே போணி. ஏஆர் ரெஹ்மானுக்கு டூப் போட்டது போல் இருந்தார். அதே நிதானம். சலனமற்ற முகம். அடக்கமான தொனி. தலைமுடி விரித்துவிட்ட இசைப்புயலை பார்ப்பது போலவே இருந்தது. அதே சிரிப்பு. வெளிப்படையாகப் பேசுவதை உணர்த்தும் கண்கள்.

புதுப்பேட்டை பின்னணி இசை குறித்து சொன்னார். இசை எழுதத் தெரியாததால், ஒவ்வொரு வாத்தியமாக வாசித்துக் காட்டுவார். பேங்காக் சிம்ஃபொனி ஆர்க்கெஸ்டிரா அதை இசை மொழியாக எழுதும். தெலுங்குப் படத்தை தமிழ் இயக்குநர் கையாள்வது போன்ற அனுபவம். இப்பொழுது இசை எழுதுவது குறித்த படிப்பில் ஆர்வம்.

'ஏதாவது செய்ய வேண்டும். இசையை பிராபல்யபடுத்தி, ஆர்வமுடையவர் அனைவரும் எளிதில் நுழைய வழிவகுக்க வேண்டும்' என்று பேசி மட்டும் செல்லாமல், திறமைகளைத் துழாவி முன்னிறுத்த, சொந்த அமைப்பு ஆரம்பித்திருக்கிறார்.

'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படத்தை செல்வராகவனுடன் சேர்ந்து தயாரிக்கிறார். சந்தியா ஹீரோயின். ஷங்கர் வழியில் இன்னொரு நிறுவனம்.

அப்பாவிடம் பிடித்தது தொழில் சிரத்தை. 'காலாபாணி' படத்தின் போது இளையராஜாவை முழு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தி அந்தப்பக்கம் சென்றவுடன், ரெகார்டிங் தியேட்டர் சென்று நேரத்திற்கு பி.ஜி.எம். இசைக்க ஆழ்கிறார். அப்பா மாதிரி தன்னால் அக்கறையொடு இசை மீது காதலாக முழுவதுமாக அர்ப்பணிப்பது சந்தேகம்தான் என்று தன்னடக்கத்தோடு ஒத்துக் கொள்கிறார்.

ட்ராக் மட்டும் பாடி செல்பவனை, இயக்குநர்கள், திரையிலும் பாட வற்புறுத்துகிறார்கள். சொந்தக் குரலில் பாடியதில் பிடித்தது பட்டியலின் 'ஏதேதோ எண்ணங்கள்'. மொழித் தூய்மை வேண்டியும் சில பாடல்களில் பின்னணிக் குரல் கொடுக்க கடைசி நிமிடத்தில் பாடகன். தன் இசையமைப்பில், தமிழ் வரிகள் ஒலி தெளிவாகக் கேட்க வைப்பதில் ப்ரியம்.

''7-ஜி ரெயின்போ காலனி' இசையமைக்கும் சமயத்தில் செல்வராகவன் உறங்கிப் போகிறார். சோர்வுற்று தூங்கிப் போனவரை எழுப்ப மனம் வரவில்லை. "தானொரு ட்யூன் போடுவோம். அந்த தாளத்தில், இயக்குநரே விழித்தெழ வேண்டும்" என்னும் முடிவோடு இசையமைக்கிறார். அப்படி கண்திறந்த பாடல்தான் 'கனாக் காணும் காலங்கள்'. "அருமையா இருக்கே" என்று நித்திரை கலைத்த பாடல்.

 • இரண்டே நாளில் ஒலிப்பதிவான 'கண் பேசும் வார்த்தைகள்',
 • ரீமிக்ஸ் பாடல்களில் உள்ள அசௌகரியம்,
 • 'லூசுப் பெண்ணே' உருவான விதம்,
 • 'எம்மாடீ ஆத்தாடி' எவ்வாறு தன் பாடல்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது,
 • இயக்குநருடன் ஒத்திசைவு... திருப்தியான உரையாடல்.

  மற்ற அனைத்தும் திருஷ்டி பரிகாரம் என்று விட்டுச் செல்ல முடியாது.

  'ஹாய் கோபிகா' இயல்பாக அமைந்திருந்தது. காதல் குறித்த சிந்தனை, சந்தித்த விதம் என்று கொஞ்சம் (கொஞ்சமே கொஞ்சம்) சாதாரண நேர்வழிசல்களில் இருந்து தள்ளி நின்று, மனதார ஜொள்ளு விட அழைத்தது.

  சிறந்த பத்து திரைப்படங்களில் 'கோவை பிரதர்ஸ்' போன்ற சூப்பர் படங்கள் பட்டியலை ரொப்பி, அதிர்ச்சி கலவாத தொலைக்காட்சி நடத்துவதின் பொருளாதார சிக்கல்களை முன்வைத்தது.

  தனுஷ் நடித்த நாலைந்து படங்களின் இயக்குநர்களை தலா ஐந்து நிமிடம் சந்தித்து உரையாடினார். செல்ஃப் வாய்க்கரிசியாக, 'நான் நடிச்சதே ஒரு விரலுக்குள் அடங்குற மாதிரி படங்கதான்... அதில் என்ன சஸ்பென்ஸ்' என்று ஜாலியாக கலந்துரையாடினார். 'சுள்ளான்' ரமணா, பூபதி பாண்டியன், திருடா திருடி டைரக்டர், பாலு மகேந்திரா ஆஜர். அவர்களில் சுவாரசியம் ஏதும் இல்லை.

 • 'நீங்க ஏன் நேரில் பேட்டி கொடுக்க மாட்டேங்கறீங்க?'

 • 'நிஜத்தில் நாயே, பேயே, சனியனே என்று திட்றீங்க... இந்த மாதிரி டிவிக்காக ஃபோனில் பேசறப்ப, "வாங்க/போங்க" மரியாத பலமா ஃபிலிம் காட்றீங்களே?'

 • 'உங்களுக்கு அப்பா சூப்பர் ஸ்டார பிடிக்குமா? ஒல்லிப்பூச்சி தனுஷ் பிடிக்குமா?' என்று அரட்டையாக மனைவி ஐஸ்வர்யாவுடன் பேசியது சூப்பர்.

  கனவுக்கன்னி, கலகல கருணாஸ், மிஸ் மெட்ராஸ் (அல்லது அது போன்ற ஏதோ ஒரு பட்டமளிப்பு முடிசூட்டு நீச்சலாடைப் பெருவிழா) எல்லாமே 'நல்லவேளை... ரெகார்ட் செய்யவில்லை' என்று பார்க்கவும் இல்லை. அது போல் விட்டுப்போன சில நிகழ்ச்சிகளை ஸ்ரீகாந்த் பார்த்து, அனுபவித்ததை பதிந்திருக்கிறார். (படிக்க: கில்லி - Gilli » New Year Spl programmes in TV)

  2006-இன் சிறந்த பத்து பாடல்களில் 'கருவாப்பையா' வந்திருந்தது.

  'அழகிய அசுரா' பார்க்கலாம் என்று எண்ணம் இருப்பவர்களின் சித்தத்தை மாற்றும் நோக்கோடு, அந்தத் திரைப்படம் குறித்த விளம்பரதாரர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. வருகிற ஒன்றிரண்டு பேரையும், இவ்வாறு விரட்டுவது எந்த வகை நியாயமோ?

  'வேட்டையாடு விளையாடு' நூறாவது நாள் விழா. கமல், கௌதம், பாராட்டு பூகம்பத்தில் காணாமல் போக்கிக் கொண்டார்கள். ஜோதிகா நடிக்காத வே.வி. என்று எண்ணுகிறேன். ஜோ குறித்து யாராவது சொல்கிறார்களா என்று எண்ண ஆரம்பித்ததில் கை விரலுக்கு வேலை கொடுக்காத பேச்சாளர்கள். (அல்லது ஜோவைக் கத்தரித்த படத்தொகுப்பாளர்).

  கடந்த வருடத்தில் நடந்த முக்கிய உலக நிகழ்ச்சிகள் சன் நியூஸின் உண்மையான திறமையை வெளிக் கொணர்ந்தது. அதைத் தொடர்ந்த இந்திய நிகழ்வுகளின் தொகுப்பு, சன் குழும மேலாளர்களின் ஊடகத் திணிப்பை மீண்டும் பறை சாற்றியது.

  கடைசியாக 'அழகே ஐஸ்வர்யா' கொட்டாவி. Longines பட்டை பட்டையாக தீற்றல். ரஜினியுடன் நடிக்க மறுப்பதற்கு உண்மையை சொன்னால் கொடும்பாவியாகலாம் என்னும் பயம் தடுத்தாலும், பற்பசை விளம்பரத் தோற்றத்துடன் பசையில்லா பதில்.

  நிகழ்ச்சியைத் தவற விட்டவர்களுக்காக... முழு நிரல் இங்கே:

  ஐஷ்வர்யா: 'I like tamils.'

  விஜயசாரதி: 'அப்புறம்...'

  ஐ: 'I like Tamil!'

  இப்பொழுது (கண்டு கொண்டேன்)**2 பார்ப்போம்.

  ஐ: 'I like Mani.'

  வி: 'ஓ..'

  இப்பொழுது (கண்டு கொண்டேன்)**2 பார்ப்போம்.

  ஐ: 'I like Rathnam.'

  இப்பொழுது (கண்டு கொண்டேன்)**2 பார்ப்போம்.

  விளம்பர இடைவேளை

  ஐ: 'I know couple of tamil words. நன்றி வணக்கம்'

  எல்லோருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.


  | | | | | | |

 • 10 கருத்துகள்:

  நெசமா.. பொங்கல் நிகழ்ச்சிகளில் என்னென்ன உருப்படியா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்னு எழுதியிருப்பீங்களோன்னு நினைச்சு வந்தேன்! அதுலயும், வரப்போற நாலு படத்தில் அந்நியன் மட்டுந்தான் பார்த்திருக்கேன், மிச்ச மூணு படம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கலாம்னு பார்த்தா... தலைப்பை ஒழுங்கா கவனிக்காம வந்து முதல் ரெண்டு பத்தியைப் பார்த்து தான் விசயமே புரிஞ்சுது :) ஆனா நல்ல அலசல்.. as usual.

  ---அந்நியன் மட்டுந்தான் பார்த்திருக்கேன்,---

  அது கூட மறுபடியும் பார்க்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.

  நான் தவறவிடப் போவது: பட்டிமன்றம்.

  தவறவிட்டிருக்கலாம் என்று வருந்தப் போவது: இளைய தளபதி விஜய் நிகழ்ச்சி :)

  //தவறவிட்டிருக்கலாம் என்று வருந்தப் போவது: இளைய தளபதி விஜய் நிகழ்ச்சி :) //

  ஓகோ...

  அவ்வளவு வருந்தற மாதிரி இருக்குமா?

  உங்களுக்கும் என்
  இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  Don't miss . coffee with Anu ( Madhavan , Sherya )on pongal in Vijay TV .

  சிந்தாநதி,

  இளைய தளபதி விஜய் நிகழ்ச்சிகள் இரண்டு வகைப்படும்.

  முதலாம் வகையில் சிறுவர்களை சந்திப்பார். ரசிகர்களுடன் பொங்கல் சமைப்பார். அரங்க அமைப்புக்குள் வருவிக்கப்பட்ட சாதாரண ஜனங்களோடு உலாவுவார்.

  இரண்டாவது வகையில் புகழ் பெற்றவர்களை பேட்டி காண்பார். விழா நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்.


  முதலாவதில் 'இந்த தீபாவளி (அல்லது புத்தாண்டு (அல்லது பொங்கல்))-க்கு என் படம் வந்திருக்குங்க... உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்குங்க... ரொம்பக் கஷ்டப்பட்டு எல்லாருக்கும் ரசிக்கற மாதிரி செஞ்சிருக்கோம்... (சென்ற ரிலீஸ்-ஐ இங்கு இடவும்; எ-டு: சிவகாசி, திருப்பாச்சி) மாதிரியே இதுவும் அனைவரையும் மகிழ்விக்குங்க!'


  இரண்டாவதில் இறுக்கமான முகம். பரபிரும்மமே என்று விட்டேத்தியான 'நிற்பதுவே... நடப்பதுவே' என்று அத்துவானப் பார்வை. 'நீங்க எப்படி சார் இப்படி?' என்று எதிர்முகத்தில் இருப்பவரை நோக்கியோ; 'இவரைப் பற்றி நான் சொல்லி, நீங்க தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்ல' என்று மேடையில் அமர்ந்திருப்பவரை பார்த்தோ அளவளாவுவார்.


  நேர்காணல் என்றால் கமல்.
  மேடையில் பேசு என்றால் ரஜினி ;-)

  சுந்தர் __/\__
  பொங்கல் வாழ்த்துகள் : )

  நேத்து அந்நியன் படம் பார்க்கும்போது இப்படி சொதப்பிட்டாங்களே, பார்த்தீங்களா? இந்தியாவில் அப்படி ஆகலையாம். நம்ம ஊர்ல தான்!! படத்தில் ஒன்றரை மணிநேரத்தை முழுங்கி ஏப்பம் விட்டுட்டாங்களே! "ஏ சுகுமாரி"ன்னு பாட ஆரம்பிக்கிறப்ப டபார்னு பக்திப் பாடலைக் கொன்டுவந்து நுழைச்சிட்டாங்க :-)

  விக்ரம் நேர்காணல் பார்த்தேன். நல்லா இருந்தது. உருப்படியா பார்த்தது அதுமட்டுந்தான்.

  ---விக்ரம் நேர்காணல் பார்த்தேன். நல்லா இருந்தது. உருப்படியா பார்த்தது அதுமட்டுந்தான்.---

  காலையில் ஸ்னேஹா. வழக்கம் போல் படபட பேச்சு. சினேகாவுடன் சௌகரியம் என்னவென்றால், 'ஏதோ... பெரிய ஆளு வந்திருக்காங்க' என்று தோன்றாமல், பக்கத்து வீட்டு நட்புடன் பேசும் தொனி.

  'நீச்சல் கத்துக்க ஆரம்பிச்சேன்; பாதியில் விட்டுட்டேன். எதை எடுத்தாலும், முழுக்க முடிப்பதில்லை' என்று சொல்லும்போது, 'அட... எனக்கும் எனக்கும்' என்று புறந்தள்ளலில் ஒற்றுமை. மொத்த பேட்டியும் பழகிய கருத்துகள்+சொற்கள் என்றாலும்...

  "காதல்னா என்னங்க? நான் அம்மாவை, அப்பாவை, அண்ணாவை லவ் செய்யறேன். நமக்குத் தெரிந்த ஒருவர் நல்லா இருப்பாரா என்று எண்ணிப் பார்ப்பது காதல். 'இந்த சமயம் என்ன செஞ்சுண்டு இருப்பார்? சாப்பிட்டு இருப்பாரா? தூங்கி எழுந்திச்சிருப்பாரா? இப்ப அங்க என்ன நேரம்?' என்று நினைவுக்கு வந்து கரிசனம் காட்டி மனதில் நிறுத்துவதும் காதல்தானே? அந்த மாதிரி நிறைய பேரிடம் காதல் இருக்கு" என்று தெளிவாக டயலாக் மாதிரி இயல்பாக சொன்னபோது மகிழ்ச்சி.

  [இதே பாணியில் சமீபத்திய காட்டுகள் சில...

  #1: 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் ஒரு காட்சி:
  ஸ்ரேயா: 'எனக்காக உயிரை கொடுக்கிறேன்னு சொன்ன இல்ல... எங்கே உயிரை விடு பார்ப்போம்?'

  தனுஷ்: 'உயிரைக் கொடுப்பது என்றால் செத்துப் போவது இல்லீங்க! உங்களுக்கு ஒரு குழந்தை கொடுக்கிறோம் இல்லையா? அது உயிர்தானே?'


  பி.கு.2: 'காமெடி டைம்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த விஜய டி இராஜேந்தர்:
  சிட்டிபாபு: "உங்க மனைவி உஷாவைப் பார்த்து 'லூசுப் பெண்ணே' என்று பாடுவீங்களா?"

  டி.ஆர்.: "நிச்சயமாப் பாடுவேன்! என் இதயத்தை லூஸ் செய்த பெண்ணிடம் பாடுவேன்."]

  பாவ்னா பேட்டி கூட செயற்கைத்தனம் இல்லாத வெளிப்படை.

  விக்ரம் பேட்டி முடிவில் விஜயசாரதி மாதிரியே 'நாம இப்ப இருப்பது மரக்காணம்' என்று சதாய்த்தது நல்ல ஃபினிஷிங் டச்.

  பார்த்த மற்ற நிகழ்ச்சிகள் எதுவும் ரசிக்கலை. சோபாவில் நன்றாக தாலாட்டியது. இன்னும் விரிவாக... நேரம் கிடைத்தால் (குடியரசு தினத்துக்குள்) எழுதி வைக்கலாம் : )


  ---அந்நியன் படம் பார்க்கும்போது இப்படி சொதப்பிட்டாங்களே, ---

  அதற்கு பதிலாக தாமிரபரணி, ஆழ்வார், 'ஜெயம்' ரவி சாகசம் போது நாதஸ்வரம் போட்டிருக்கலாம் ; )

  //விக்ரம் பேட்டி முடிவில் விஜயசாரதி மாதிரியே 'நாம இப்ப இருப்பது மரக்காணம்' என்று சதாய்த்தது நல்ல ஃபினிஷிங் டச்.//

  ஆமாம்!! (நீங்க குறிப்பிட்டிருந்த தனுஷ் & டி.ஆர். டயலாக்குகள் நல்ல டகால்டி வேலை தான்!)

  aishwarya rai petti ya i neenga varnitha cidham arumai..valthukkal baba ji

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு