புதன், ஜனவரி 31, 2007

Ustad Bismillah Khan & Late Night Hindustani Music

பிச்சைப்பாத்திரம்: இசைக்க மறந்த கலைஞன்: "எப்போதும் டொய்ங்.. டொய்ங்.. என்ற சப்தத்தோடோ அல்லது யாரோ அழுகிறாற் போன்ற கர்நாடக சங்கீதமோ இரண்டாவது அலைவரிசையில் கேட்கக் கிடைக்கும்."

என்னும் அவதானிப்பை உணர்ந்தவுடன் 'அட... இது நான்தானே!' என்று தோன்றியது. அப்படியே இசையில் திளைக்கும் சுகுமாரனின் நிலைக்கு செல்ல விழைந்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

கங்கையின் பெருமூச்சு - அஞ்சலி :: உஸ்தாத் பிஸ்மில்லா கான் : சுகுமாரன்

Ustad Bismillah Khanதிடீரென்று மேடைக்குள் சலசலப்பு. தபலாக்கள், கூடுதல் ஒலிபெருக்கிகள், பக்கவாத்தியக்காரர்கள் என்று மேடை உயிர்த்தது. சில நொடிகளுக்குப் பிறகு நிதானமான நடையுடன் ஒரு சின்ன உருவம் வந்து மையத்தில் அமர்ந்தது. விளக்குகள் ஒளிர்ந்தன. திரை மேலே சுருண்டது. பார்வையாளர் வரிசையிலிருந்து கரவொலி எழுந்தது. பிஸ்மில்லா கானின் முதுகு குனிந்து நிமிர்வது மட்டும் தெரிந்தது. பின்னர் நிசப்தம். சில நொடிகளில் 'ங்ங்ஙே' என்று ஒரு துளிப் பிரபஞ்ச விசும்பல் ஒலித்தது. அந்த விசும்பல் அதிர்ந்து பரவி 'மியான் கிதோடி'யாகப் பெருக்கெடுத்தது. இரண்டு மணி நேரம் அந்த ஆனந்த விசும்பல் படிப்படியாகப் பெருகி அந்த அரங்கு முழுவதும் ததும்பிக் கொண்டிருந்தது.

சராசரி வானொலி நேயர்களைப் போல எனக்கும் ஒப்பாரி வாத்தியமாகத்தான் ஷெனாய் முதலில் அறிமுகமானது. தேசீயத் தலைவர்கள் மறைவின் போது துக்கம் கடைபிடிப்பதற்கான சங்கீதமாகத்தான் அந்த வாத்திய இசை அடையாளம் பெற்றிருந்தது. செவிப்புலன் பக்குவப்பட்டு இசையின் நுண்ணதிர்வுகளைப் பிரித்து அறியத் தெரிந்துகொண்ட அந்த அறியப்படாத நொடியில் பிஸ்மில்லா கான் என்னுடைய மானசீகக் கலைஞர்களில் ஒருவரானார். ஷெனாய் இசை எனக்குள்ளிருக்கும் இயற்கையின் சாரத்தை உணர்த்தும் சமிக்ஞையானது.

பொதுவாக இந்திய இசையின் இயல்பு இது என்பது என் தரப்பு. கர்னாடக இசையோ ஹிந்துஸ்தானி இசையோ சாதாரண ரசிகனிடம் உருவாக்குவது இந்த நெகிழ்வான நிலையைத்தான். துக்கமல்ல; மகிழ்ச்சியின் உச்சத்தில் மனித மனதுக்குள் நிகழும் இளக்கத்தைத்தான் இசை சாத்தியமாக்குகிறது என்பது என் நம்பிக்கை. இந்த நெகிழ்வைத்தான் பக்தியென்றோ ஆன்மீகமென்றோ வைதீக மனப்பாங்கு சொல்லுகிறது என்று தோன்றுகிறது. பக்தியோ ஆன்மீக வேட்கையோ கலவாத நாட்டார் இசையில் மனம் லயிக்க இந்த இளக்கம்தான் காரணம். சாகித்ய வடிவத்தை அதிகம் சாராத ஹிந்துஸ்தானி இசையில் நெகிழ்வுக்கான சாத்தியங்கள் அதிகம். அதில் உச்சபட்ச சாத்தியம் கொண்ட வாத்தியம் ஷெனாய் என்பதை நிரூபித்தவர் பிஸ்மில்லா கான். அவர் பிரபலப்படுத்தும் காலம் வரை ஷெனாய் ஒரு பக்கவாத்தியம் மட்டுமே. கோவில்களில் வாசிக்கப்படும் சடங்குக் கருவியாகவும் திருமணம் போன்ற விமரிசைகளுக்கான ஊதுகுழலாகவும் கருதப்பட்டு வந்தது.
.
.
.
காசி விசுவநாதர் ஆலயத்தின் கதவுகள் பிஸ்மில்லா கானின் வாத்திய இசையுடனேயே திறக்கும். சநாதமான வரலாறும் மூர்க்கமான மத அக்கறைகளும் பின்னணியாகவுள்ள நகரத்தில் இது ஆச்சரியம். ஆனால் இது தன்னுடைய பிரிய நகரத்தில் சிறப்பு என்று நேர்காணல்களில் பலமுறை பெருமிதமாகக் குறிப்பிட்டிருக்கிறார் பிஸ்மில்லா கான்.
.
.
பிஸ்மில்லா கானின் இசையில் ஒரு நீர்ச் சலசலப்பு தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதாகத் தோன்றும். கங்கையின் கரையிலிருந்து உருவான இசை என்பதனால் அந்தக் கசிவா? தெரியவில்லை. ஆனால் அவரது கச்சேரி பாணியை நீரோடு தொடர்புபடுத்திதான் இதுவரை ரசிக்க முடிந்திருக்கிறது. சீவாளியை ஊதிப் பரிசோதிக்கும்போது இசையின் துளிகள் கொட்டும். பின்னர் சற்று வலுத்து சாரலாகப் பரவும். இடையில் கேட்கும் தபலாவின் தும்தும். அதில் இலைகள் சிலிர்த்து அசையும். ஷெனாயிலிருந்து சின்னதும் பெரிதுமான மேகங்கள் உருவாகி தொடர்ந்து நகர்ந்தபடிப் பொழியும். விளம்பித் (ஆலாபனை) வாசிக்கும்போது சீராக மண்ணுக்கு இறங்கும். இலைகளும் கிளைகளுமாக நிற்கும் மரங்கள் இசையின் கனம் தாளாமல் நிதானமாக அசையும். த்ருத் (நிரவல்?) வாசிப்பின்போது எல்லா அசைவுகளும் வேகமாகும். இசையும் மழையும் மண்ணும் ஆகாயத்தின் குறுக்காகப் பாயும் நதியில் கரைந்தது போலாகும். முத்தாய்ப்பான கட்டத்தில் ஒரு சந்தோஷக் கேவலாக சங்கீதம் முதிரும். அப்போது பூமி தனக்குத் தானே செய்துகொள்ளும் பிரார்த்தனையாக மாறும். இந்தக் கசிவு வாத்தியத்தினுடையதா? வாசிப்பவனுடையதா? ரசிப்பவனுடையதா? என்று வியக்க வைப்பதுதான் பிஸ்மில்லா கானின் பாணி.

நன்றி: உயிர்மை; செப். 2006

4 கருத்துகள்:

அய்யா சாமி! அது என்னோட பழைய அவதானிப்பு. இப்போ நான் கொஞ்சம் வளந்துட்டேனே பாலா. :-)

@சுரேஷ்

----என்னோட பழைய அவதானிப்பு.---

தெரியும்... உங்க பேரை சொல்லி சுகுமாரனின் இசைப்பயணைத்தை சேமித்து வைக்கும் எண்ணம் :)

2006ல் இந்தியாவின் சாதனை மனிதர்கள் பட்டியலில் இந்த இசை மேதைக்கும் இடம் தந்து சிறப்பித்தது இந்தியா டுடே இதழ்.

---சாதனை மனிதர்கள் பட்டியலில்---

இந்த மாதிரி விஷயமெல்லாம் கண்ணில் படறதே இல்லையே... உங்க பதிவில் அவ்வப்போது சொல்லுங்க... நன்றி 'தம்பி'

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு