திங்கள், பிப்ரவரி 26, 2007

Tamil Blogs - Thamizmanam Tactics & Strategy

கணிமை: தமிழ்மணத்தை மேம்படுத்த சில நுட்ப ஆலோசனைகள் பதிவை பின் தொடர்ந்து...

1. அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் - ஆங்கிலப் பட டிவிடிக்களில் 'நீக்கப்பட்ட காட்சிகள்' தொக்கிக் கொண்டு, இலவசமாக கூடவே வரும். படம் பார்ப்பதை விட, படத்தொகுப்பின் போது, கடாசிய இந்தக் காட்சிகளை பார்ப்பதில் சுவாரசியம் அதிகம். முதலில் வெறுமனே காட்சிகளை மட்டும் பார்ப்பேன். அது முடிந்தவுடன், 'இயக்குநரின் சொற்பொழிவோடு கூடிய' பின்னணியில் ரசிப்பேன்.

பின்னூட்டங்களும் அவ்வாறே. பதிவில் தொக்கி நிற்பதை பிறருக்கு விளம்பும்.

இன்னாருக்கு வரும் பின்னூட்டங்கள் 'அன்பே... நலமா' அல்லது 'சும்மா எண்ணிக்கை கூட்டிக் கொள்ள' வகையறா என்றால், நாளடைவில் அந்த வலைப்பதிவை நித்திராதேவி வரமறுக்கும், அரட்டை அடிக்க எவரும் மாட்டாத நேரத்தில் கூட (மறுமொழிக்காக) நான் க்ளிக்குவது கிடையாது. பத்ரிக்கு வரும் மறுமொழிகள், பதிவின் மேற்சென்று செறிவூட்டும் வகையறா என்பதையும் அன்றாட தமிழ்மண வாசகர் அறிவார்.



2. குறிச்சொற்கள்:

அ) check box தெரிவுகளாகத் தந்து மூன்று நான்கு குறிச்சொற்களை ஆகக் கூடுதலாக தேர்ந்தெடுப்பது (ரவிசங்கர்)
ஆ) குறிச்சொற்கள் என்பதை முழுக்கவே நீக்கிவிட்டு, பெரும்பான்மையான பதிவர்கள் பீட்டாவுக்கு மாறிவிட்டதால் பதிவில் கொடுக்கப்படும் குறிச்சொற்களையே திரட்ட வழி செய்யலாம்.(சுரேஷ்)

இவையிரண்டுமே முக்கியமான தேவையான மாற்றங்களைத் தரும்.

மேலும், digg.com போன்ற தளங்களில் இயக்கத்தில் உள்ளது போல், வலைப்பதிவு வல்லுநர்களைக் கொண்டு இந்த வசதியை மேம்படுத்தலாம். புதிய குறிச்சொற்களை, பதிவரின் விருப்பத்திற்கேற்ப சேர்க்கலாம்; குறைக்கலாம். ஆனால், தள நிர்வாகிகளின் கையில் இருப்பதால், தான்தோன்றித்தனமான பெயர்களுக்கு பதில், பொருத்தமானவை எடுபடும்.

ப்ளாகர் தவிர மற்ற வலைப்பதிவு நிரலிகள் அனைத்துமே (வோர்ட்பிரெஸ்.காம்) போல் 'வகைப்படுத்தல்' வசதியைக் கொடுக்கிறது. அவற்றையும் பொருத்தமாக உபயோகிக்க வேண்டும்.


3. வாசகர் பரிந்துரை -

வாக்குகள் எவரால் இடப்பட்டது என்று பெயரையும், வலைப்பதிவின் முகவரியையும் காட்டவேண்டும். மேலும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது கீழிறக்கப்பட்ட அனைத்துப் பதிவுகளையும் காணும் வசதி வேண்டும்.

நமது வாக்கு வெளிப்படையாகத் தெரியும் என்பது, வலைப்பதிவாளருக்கு பொறுப்பைத் தரும். விளிப்பிலியாக மறைந்திருந்து வாக்களிக்கும் வசதி இல்லாததால், கள்ள ஓட்டு எண்ணிக்கை குறையும். குழாமாக செய்ல்படுகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு உண்மையா என்பதும் விளங்கும்.

இவர் இந்த விதமாய எண்ணுவது பிடித்திருப்பதால், இவரின் மற்ற வாக்குகளையும் அறிந்து, அங்கும் சென்று படிக்க விழைவோருக்கும் பய்னுள்ளதாய் அமையும்.

எடுத்துக்காட்டாக, இந்திய தேசியம் வலியுறுத்தும் வலைப்பதிவர், பிரிவினையைத் தூண்டும் பதிவை நிராகரிக்கலாம். அவர் மறுதலித்த மற்ற இடங்களையும் சுட்டுவதன் மூலம், அவருடைய வாக்குடன் ஒத்துப் போகும் என் போன்றோருக்கு எளிதில், பிடித்தமான இடுகைகளுக்கு வழிகாணலாம்.

---9/34 என்ற வாக்குக் கணக்கில் 9 பேர் வாக்களித்தனர் என்பதை விட 25 பேர் எதிர்த்துள்ளனர் என்பது முக்கியம்.---

ஒன்பது என்பது, எட்டை விடப் பெரிது.

காட்டாக, கடந்த தேர்தலில் திமுக-வுக்கு எதிரான ஓட்டு அதிகம் என்பதால், அவர்கள் ஆட்சியில் அமறக்கூடாது; திமுக அல்லாத கூட்டணிதான் அமரவேண்டும் என்று சொல்ல முடியாது. இன்னாரின் கருத்தை எட்டு பேர் விரும்பியுள்ளனர்; இன்னொருவரின் கட்டுரையை ஒன்பது பேர் பரிந்துரைக்கின்றனர். 9 > 8!


4. நிலையாகக் காட்ட ஒரு தனிப்பக்கம் -

பழைய தமிழ்மணத்தில் வரிசையாகப் படிக்க இயலும். பதிவின் தலைப்பு, இட்டவர் பெயர், கொஞ்சம் முன்னோட்டம் என்று தொடர் வண்டி போல் நீட்டமாக ஓடும். அதே போல், பகுதிவாரியாக தனிப்பக்கம் இடாமல், வெப்2.0 பயன்படுத்தி, ஒரே பக்கத்தில் தோற்றுவிக்கலாம். பாப்யூரல் (இன்னொரு காட்டு: Just Samachar - National News) போல் அஜாக்ஸ் கூட கொண்டு வரலாம்.

---அறிவு சார் துறைகளுக்கு முன்னுரிமை தரலாம்.---

பூங்காவின் தேர்வு (அல்லது) சார்பு நிலை போல் இதுவும் பிணக்குகளை ஊக்குவிக்கலாம்.



5. எரிதத் தடுப்பு -

மீண்டும் மட்டுறுத்தனர், தள நிர்வாகி போன்ற தணிக்கையாளர் போல் தென்படுகிறது.

ஆங்கிலத்தில் ஏற்கனவே இருக்கும் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தால் என்னைப் பொருத்தவரை எரிதம். 'அதுதான் படித்த விஷயமாச்சே... மீண்டும் எதற்கு புதிய மொந்தை' என்பேன். இன்னொருவருக்கு, அதுவே மொழியை வலுப்படுத்தும் செய்கையாக, ஆக்கபூர்வமானதாகத் தோன்றலாம்.

தமிழ்மணம் என்பது வலைப்பதிவு திரட்டி. வலைக்குழு அல்ல.

---அதிகபட்சம் ஐந்து இடுகைகள் மட்டுமே தமிழ்மணத்தில் காட்சிப்படுத்தப்படும்---

பதிவு சுதந்திரமான இடம்.

  • 'காலையில் ஒன்று, மாலையில் ஒன்று!'
  • 'நாமொருவர்' நமக்கெதற்கு ஐந்து?'
  • 'உங்கள் பதிவு ஐந்து கிலோபைட்டைத் தாண்டினால் திரட்டமாட்டோம்'
என்று கூகிள் சட்டதிட்டம் இடுவதில்லை.


6. முகப்புப் பக்கத் தர மேம்பாடு -

---பூங்கா இதழில் காட்சிப்படுத்தப்பட்ட இடுகைகளை எழுதியவர்களை ஓரளவுக்கு தரமாக எழுதக்கூடியவர்கள்---

மேலே #3-இல் சொன்னது போலவே பூங்காவும் தேர்வாளர்களை அடையாளப்படுத்த வேண்டும். எவர் தேர்ந்தெடுத்தால் ஒருவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று அறிந்துகொள்ளவும், எவரின் தேர்ந்தெடுப்பு விருப்பமில்லாதது என்று புறந்தள்ளவும் இது ஏதுவாக இருக்கும்.


7. ---ஒரு திரட்டியாக எல்லா குப்பையையும் வாரிக் கொண்டு வர வேண்டுமா இல்லை சில குறைந்த பட்ச விதிகளுக்கு உட்பட்டு நல்ல படைப்புகளை காட்சிப்படுத்தும் இடமாகத் தமிழ்மணம் இருக்க வேண்டுமா---

இவ்விரண்டுமே ஒரே திரட்டியின் மூலமே சாத்தியம். தமிழ்மணத்தின் முகப்பு என்பது கூகிளின் திரட்டி (திரட்டி'ஜி') போல செயல்படலாம். கவனைத்தைக் கோரும் பதிவுகளைக் காட்டும் இடம் - கூகிளின் தேடல் முடிவுகள் பக்கம் போல் அல்லது ஆன்செர்ஸ்.காம் (Answers.com) போல் மாற்றாக விளங்கலாம்.


8. தமிழ்மணத்துக்கு வரும் பதிவர் அல்லாத வாசகருக்கு:

இவர்கள் அன்றாடம் தமிழ்மணத்திற்கு வருகை புரிவதில்லை. இப்படி பிரிக்கலாம்:


  1. தேடலில் எப்படியோ சுட்டி வந்து விழுந்தவர்கள்;
  2. நாளிதழ்/தாளிகைகளில், சன் டிவிக்களில் தமிழ்மணத்தின் உரலைக் கண்டவர்கள்;
  3. நண்பர் சொல்லி புரட்டி பார்க்க வந்தவர்கள்;
  4. யாஹூ டைரக்டரி போன்ற தொடுப்புகளில் சுட்டியவர்கள்;
  5. நேர விரயம் செய்ய abcd தட்டச்சியவர்கள்;


க்ரெய்க்லிஸ்டில் சில மாதம் முன்பு நிகழ்ந்ததை சொல்ல ஆசை.

'போக்கிரி' படத்தில் பிரகாஷ்ராஜ் குத்துவதற்கு முன்பு, சாட்டையடி வாங்கிக் கொண்டு, பாலுறவு கொள்ள வில்லன் விரும்புவார். அப்படிப்பட்ட, கட்டிப் போட்டு காதல் கொள்பவர்களை அழைப்பதாக ஒருத்தி விளம்பரம் கொடுத்தாள்.
'அழைத் தோழனாக இருக்கலாம். வாடகை: $...; உங்களுக்கு விருப்பமேற்படும்போதெல்லாம் என்னை அடித்து, துன்புறுத்தி, என்னையும் மகிழ்வித்து, நீங்களும் துய்க்கலாம்!'
விண்ணப்பங்கள் குவிந்தது. கடைசியில் 'ஏப்ரல் ஃபூல்' என்று சொல்லிவிட்டான். தன்னுடைய உளவியல் படிப்பு சம்பந்தமான ஆராய்ச்சி என்று ஏமாற்று விளம்பரத்தைத் தெரியப்படுத்தினான்.

தமிழ்ப்பதிவுகளைத் தேடி வருபவர்கள் இப்படிப்பட்ட விளம்பரங்களை நாடி வருபவர்கள் அல்ல. செய்தித்தாளில் இருக்கும் பதினாறு பக்கங்களை பத்து நிமிடங்களுக்குள் மேய்ந்து, பத்துக் குறிப்புகளை சுயமாகத் தேர்ந்தெடுத்து, படிக்க விரும்புபவர்கள்.



9. ---எந்த பதிவுகளை எப்படி எங்கு எவ்வளவு நேரம் காட்சிப்படுத்துவது என்ற உரிமை தமிழ்மணத்துக்கு உண்டு.---

ஆதி காலத்தில், இந்த கட்டுரைதான் Op-ed ஆக வரவேண்டும்; இதுதான் முகப்புப் பக்கத்தில் தலைப்பாக வேண்டும் என்று யாரோ நிர்ணயித்தார்கள். இன்றோ (Google tests personalized news feed service | CNET News.com அல்லது Micro Persuasion: What's on Your Google News?) உங்கள் சாய்ஸ் உலகம்.


10. ---என்ன குப்பை எழுதப்பட்டிருந்தாலும் வாரிக் கொண்டு வர கூகுள்---

கூகிளும் 'பக்கத்தின் தர'த்தை சொல்லும் பேஜ் ரேங்க் வைத்திருக்கிறது. தேடல் முடிவுகளை தானியங்கியாக விடாமல், வல்லுநர்களைக் கொண்டு ஏற்றி இறக்கி, கண்ணுக்குத் தெரியாத கடவுளாக செயல்படுகிறது.

கட்டாங்கடைசியாக, 'நல்ல கருத்துக்கள்; பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்' என்று சொல்லாவிட்டால், குய்யோ முய்யோ என்று சிறு பிள்ளைத் தனமானக் கதறலாகத் தோன்றலாம் என்பதால், தன்னடக்கத்துடன் 'எல்லாமே என்னுடைய ரெண்டனா :-)'


முந்தைய பதிவுகள்:

1. விருப்பப் பட்டியல் - 'தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்'

2. வலைப்பதிவு தேவைகள்

3. காலவரிசை

4. பயனர் அனுபவங்கள்

5. தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் கருத்துக்கணிப்பு - புதிய, பழைய வார்ப்புருக்கள்

20 கருத்துகள்:

தல,
தல புரிஞ்சுது வால் புரியல.
:))

@சிறில்

ஏதோ கொஞ்சமாச்சும் புரிஞ்சுதா : ஓ

மேலே #3-இல் சொன்னது போலவே பூங்காவும் தேர்வாளர்களை அடையாளப்படுத்த வேண்டும்.

இதுங் ஓவர்ங்ண்ணா. அவுங்கதான் ஆசிரியர்குழுவ அறிவிப்போம்ன்னு சொல்லிருக்காங்கல்ல. அது போதாதா?

//வாக்குகள் எவரால் இடப்பட்டது என்று பெயரையும், வலைப்பதிவின் முகவரியையும் காட்டவேண்டும். மேலும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது கீழிறக்கப்பட்ட அனைத்துப் பதிவுகளையும் காணும் வசதி வேண்டும்//
இது ரொம்பப் பிடித்திருந்தது...மிக நல்ல யோசனை.. அத்துடன் வாசகர் பரிந்துரைக்கு ஒரு உருப்படியான பயனாகவும் இருக்கும்..

boston bala, விரிவான எதிர்வினைகளுடன் புதிய ஆலோசனைகளையும் தந்திருப்பதற்கு நன்றி. தமிழ்மணம் நுட்ப ரீதியில் அடுத்த பதிப்பை வெளியிட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. இது போன்று பலரும் கலந்துரையாடுவதால் தீர்வுகள், ஆலோசனைகள், புரிந்துணர்வுகள் கிடைக்கலாம். யாருடைய பரிந்துரை சரி, எது செயற்படுத்தப்பட்டது என்பதை விட கடைசியில் மேம்பாடு இருக்கிறதா என்பதே முக்கியம்.

1. யாருமே பார்க்காத பதிவின் / பார்க்கத் தேவையில்லாத பின்னூட்டம் என்றாகி விட்ட பின் அது இடத்தை அடைப்பதில் என்ன பயன்? நல்ல பதிவை வாசகர்களால் அடையாளம் காண முடியும் என்பது பதிவர்கள் மட்டுமே தமிழ்மணத்துக்கு வருகிறார்கள் என்ற கருத்தால் இருக்கலாம். ஆனால், பயனர் கணக்குக்களை தொடங்கி, தமிழ்மண வருகையாளர் profileகளை அலசி ஆராய்ந்தால் தான் உண்மை புலப்படும். தவிர, பதிவர்கள் கூட தினம் தமிழ்மணத்துக்கு வந்து செல்ல முடியாது. இரு மாத விடுப்புக்குப் பிறகு வந்தால் latest blogger politics உணர்ந்து குப்பை இடுகைகளை ஒதுக்குவது பதிவர்களுக்குஉ கூட சிரமம்.

2. உங்கள் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.

3. உங்கள் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். தமிழ்மணப் பயனர் கணக்கு உருவாக்குவது இதற்கு உதவும்.

4.தமிழ்மணத்தில் நுட்பம் மேம்படுத்தப்பட வேண்டும். தரம் பிரித்தலை வெளிப்படையாகச் செய்தாலும் மறைமுகமாகச் செய்தாலும் சர்ச்சை என்றுமே இருக்கத் தான் செய்யும். அதற்காக அதற்கான முயற்சிகளில் இறங்காமல் இருக்க முடியாது.

5. முன்பு பாலச்சந்தர் கணேசன் என்று ஒரு பதிவரை பாடாய்ப் படுத்தினார்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். வலைப்பதிவுத் திரட்டி என்ற நிலையில் நீங்கள் சொல்வது சரி. ஆனால், வலைப்பதிவுத் திரட்டியாக மட்டும் காலந்தள்ளினால் தமிழ்மணம் நிலைக்காது. திரட்டியையும் வைத்துக்கொண்டு alternate main page அல்லது personalised main page கொண்டு வரும் முயற்சிகளில் தமிழ்மணம் இறங்க வேண்டும். குறைந்த பட்சம் Google reader போன்றவற்றின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பழகினால், எல்லாவற்றுக்கும் தமிழ்மணத்தை தூற்றுவது நிற்கும். தமிழ்ப் பதிவுலகம் சரியில்லை என்று யாரும் சொல்ல வில்லை. தமிழ்மணம் சரியில்லை என்று தான் சொல்கிறார்கள் என்கிற போது தன் brand name குறித்து தமிழ்மணம் கவலைப்பட வேண்டும்.

6, 7 - சரி.

8. ஒருவேளை இப்பொழுது பதிவர் மட்டும் உலவலாம். அதையும் தமிழ்மணப் பயனர் கணக்கு உருவாக்கி தான் உறுதிப்படுத்த இயலும்.ஆனால், பதிவர்களுக்கும் எல்லா குப்பையையும் படிக்க வித்தியாசமில்லை. குப்பைகளை தரம் பிரிக்க தமிழ்மணத்தால் இயலுமானால் அதை தமிழ்மணம் செய்ய முன் வர வேண்டும். ஏன் பதிவர் நல்ல பதிவுகளை கண்டு பிடிப்பதில் தன் நேரத்தை வீண்டிக்க வேண்டும். ஆனால், பதிவர் அல்லாத வாசகர்களை ஈர்ப்பதன் மூலம் தான் தமிழ்மணம் வளர முடியும் என்பது என் கருத்து. எனவே, அனைத்து செயற்பாடுகளையும் பதிவர்களை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்க முடியாது.

9. இப்போதைக்கு தமிழ்மணத்தில் personalisation இல்லை. தேன்கூட்டில் பிடிக்காத பதிவை நீக்கும் வசதி இருக்கிறது. தமிழ்மணத்தில் layout முதற்கொண்டு காட்சிப்படுத்தும் இடுகை வரை personalisation வந்தால் மகிழ்ச்சியே.

10. கூகுள் எல்லாவற்றையும் வாரி வருவது போல் தமிழ்மணமும் கொண்டு வரட்டும். ஆனால், கூகுள் தரம் பிரித்து தானே அடுக்குகிறது? அது போல் தமிழ்மணமும் தரம் பிரித்து live publishing செய்தால் தான் பயன் இருக்கும். கூகுள் page rank algorithm வெளியிட்டால் ஏகப்பட்ட சர்ச்சைகள் வரலாம். அது போல் தமிழ்மணமும் பதிவர், பதிவுத் தர எண்களை உருவாக்குவதில் முனைய வேண்டும்.

நான் வழக்கமான வாசகர். எல்லாவற்றையும் மேய்ந்து பார்த்து என்னால் தீர்மானிக்க முடியும். இப்பொழுது பொருந்தலாம். பதிவுகள் எண்ணிக்கை 10,000 தாண்டும்போது இது சாத்தியமா? வருங்காலத்தை எண்ணிப் பார்த்து தமிழ்மணம் தன் நிரலை,அணுகுமுறையை மாற்ற முன் வர வேண்டும்.

பொன்ஸ் __/\__

@விளிப்பிலி

---இதுங் ஓவர்ங்ண்ணா. அவுங்கதான் ஆசிரியர்குழுவ---

ஓவரோ, லெக்-பையோ, வைட் பாலோ... என்னுடைய விருப்பங்ன்னா...

பொறுப்பு என்பது உங்களுக்கு என்று ஐடெண்டிடி இருக்கும்போதுதான் வரும். அமைச்சகம் ஒவ்வொன்றுக்கும், கேபினெட் அளவில் இவர், துணை மந்திரியாக இவர் என்று சொல்கிறார்கள்.

யாரு, எதை, எப்படி செலக்ட் செய்கிறாங்க என்று தெரியாமல், 'கண்ணனே சாற்றினான்; கண்ணனே கொலை செய்கின்றான்' என்றால் எப்படிங்கன்னா...

விரிவான எண்ணங்களுக்கு மிக்க நன்றி ரவிசங்கர்

உங்க விருப்பம்ண்ணு புரியுதுங்ண்ணா. ஆனா அமுதசுரபில ஆட்டுக்குட்டி கதய ஆசிரியர்குழுவில ஆஞ்சநேயரு விரும்பிக் கெ என்கிற நேயர்விருப்பம் மாதிரில ஆய்டும் கத. சஞ்சிகைகக்கும் சரம் தொடுக்குறதுக்கும் வித்தியாசம் வாணாமுங்களாண்ணா?

ரொம்ப யோசிச்சு எழுதியிருக்கீங்கன்னு தெரியுது, க்ரெய்க்லிஸ்டு, கூகுள் இயங்கும் விதம்னு பந்தாவான பவர்பாயிண்டை பாத்த மாதிரி பயமா இருக்கு:(

நட்சத்திரக் குத்துக்கு சமாதி கட்ட ஆசைப்படறீங்களா? பேர் தெரியும்னு பயம் இருந்தா யாராச்சும் நெகடிவ்வோ பாஸிட்டிவ்வோ குத்து விடறதையே தவிர்த்து ஓடும் உலகமையா இது!

கன்வேயர் பெல்ட் முறை நன்றாகத்தான் இருந்தது, ஆனால் ஒரு ஸ்க்ரோலுக்கு மேலே பொறுமை யாருக்கு இருக்கிறது? (வெட்டியாக இருக்கும் காலங்களிலும் நான் தேன்கூட்டின் முந்தைய 15/50ஐ க்ளிக்குவதில்லை:-)

பின்னூட்டங்கள் எங்கே சுமார், எங்கே அரட்டை, எங்கே மேற்சென்று செறிவூட்டும் என்பதை தானியங்கித் திரட்டிகள் தீர்மானிக்க எதேனும் வழிவகை உள்ளதா?

எது எரிதம் என்பதில், மேலே சுட்டாமல் விட்டவைகளில், உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்:-)))))

@ரவிசங்கர்

பின்னூட்டங்கள்:

ப்ளாக்ஸ்பாட், வோர்ட்பிரெஸ்.காம், வோர்ட்பிரெஸ் நிரலி ஆகிய அனைவருமே பின்னூட்டங்களுக்கான செய்தியோடை முகவரியே தருகிறார்களே! இன்னும் ஏன் பழைய நுட்பத்தின் படி, பதிவுக்குள் தேட வேண்டும்?

அந்தக் காலத்தில், அதாவது தமிழ்மணம் ஆரம்பித்தபோது, பின்னூட்டங்களின் முதல் சில வரிகளைக் காட்ட முடியாத நிலை. அப்போது, என்ணிக்கை மட்டும் காட்டுவது, சிறப்பான நுட்பம்.

இன்றைய அளவில், யாரிடமிருந்து பின்னூட்டம் வந்திருக்கிறது, எவ்வளவு பெரிது, எப்படி ஆரம்பித்திருக்கிறார், எப்படி முடிக்கிறார் என்று ஆதியோடு அந்தம் அறிய முடிகின்ற நிலையில், ஸ்கோர் போர்டு போல், எண்கள் மட்டும் சுட்டினால் சரிப்படாது.


---தமிழ்மணமும் தரம் பிரித்து live publishing செய்தால் தான் பயன் இருக்கும். கூகுள் page rank algorithm---

கூகிளை விட digg நுட்பம் இங்கு எடுபடும்.

தரப்பிரித்தலை வெறுமனே, ஜாஸ்தியில் ஆரம்பித்து, குறைந்தவர் வரை, வரிசைப்படுத்திக் காட்டுவதில்லை. சிதறலாக முகப்பில் தருவார்கள். சமீபத்திய பதிவுகளுக்கு கொஞ்சம் முக்கியத்துவம். சமீபத்தில் அதிக வாக்கு வாங்கியதற்கு கொஞ்சம் முக்கியத்துவம். வாக்கு மிகக் குறைவாக வாங்கினாலும், புதிதாக நுழைந்தவருக்கு இடம்.

இணையத்தில் தேடினால் நிறைய துப்புகள் அகப்படும். அந்த மாதிரி நுட்பத்தை (குறைந்தபட்சம் Putvote! மாதிரி) புகழ்பெற்ற, பொதுவில் கிடைக்கக்கூடிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே, தரம் பிரித்தல் மிக எளிதில் சாத்தியப்படும்.


---பதிவுகள் எண்ணிக்கை 10,000 தாண்டும்போது---

தற்போது செய்திகள் இந்த எண்ணிக்கையைத் தொடுகிறது. எப்படி படிக்கிறோம்! ;)

பாபா,

வருசா வருசம் எதுனா ஒரு அறிவிப்பு வர்றதும், உடனே அதுக்கு ஆதரவா நாலு பேரு அங்கலாய்ப்பா நாலு பேருன்னு குரல் உடுறதும், இதுக்காகவே வெயிட் பண்ணிகிட்டு இருந்தாப்புல என் ஆலோசனைகள்னு நீங்க உங்க பங்குக்கு பாயிண்டுகள் அடுக்குறதும் (எங்கூர்ல ஒரு தாத்தா இப்படித்தான், எவனாவது நம்ம பேச்ச கேக்குறானா இல்லையான்னு எல்லாம் கவலப்படாம ஆலோசனையா சொல்லிகிட்டு திரிவாரு) புத்தக கண்காட்சி, டிசம்பர் கச்சேரி மாதிரி இந்த கூத்தெல்லாம் ஒரு வருசாந்திர சடங்காவே ஆயி (ப்) போச்சி...

(இப்ப இன்னொரு வசதி, 30 லிமிட்ங்கிறதால முக்கியமான பின்னூட்டத்துக்கு இடம் அளிக்கும் வகையில் உங்க பின்னூட்டத்த அனுமதிக்க முடியலைன்னு சொல்லி இத்த ரிஜக்ட் பண்ணிடலாம் :))

@முகமூடி

அன்புள்ள இயக்குனர் அய்யாவிற்கு... என்று அனேகமாய் (சிக்ஸ் சிக்மா வாய்ப்பு) படிக்க முடியாதவர்களுக்கு, கடிதம் வரையாமல், அணுகக் கூடியவர்களுக்குத்தானே (அணுக்கம் என்று நினைப்பவர்களுடன்தானே) எழுதுகிறேன் ;)

அக்குவேறு ஆணி வேறுன்னு பீராயறது சொல்றாங்களே......... இதைத்தானா?

// அணுகக் கூடியவர்களுக்குத்தானே // அப்படீன்னா சொல்றீங்க... எனக்கென்னவோ என் கடுதாசியும் உங்க கடுதாசியும் ஒரே டைப்பு மாதிரிதான் தெரியுது...

நானாவது நாலணா கார்டுல அட்ரஸ் இல்லாம எழுதிப்போடுறேன்... போற வழியில போஸ்டு மேனுக்காவது ஆவுது... நீங்க 'அயல்நாடு சென்று படித்து வரும் அன்பு சிங்கம் அஞ்சாநெஞ்சம் அறிவுகொழுந்து அவர்களே வருக வருக' டைப்பு போஸ்டர் அடிக்கிறீங்களோன்னு தோணுது...

@துளசி __/\__

புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு. அது சரி உங்க பக்கத்தில் ஒரே தடவை படித்து புரிந்து கொள்ள முடியுமா என்ன? ;-)

@சுரேஷ் __/\__

---பின்னூட்டங்கள் எங்கே சுமார், எங்கே அரட்டை, எங்கே மேற்சென்று செறிவூட்டும் என்பதை தானியங்கித் திரட்டிகள் தீர்மானிக்க எதேனும் வழி?---

பதிவுகளின் தராதரத்தை மனிதர்கள் சொன்னாலே, எனக்குக் கோபம் வரும். இதில், தானியங்கி எப்படி தரத்தை நிர்மாணிக்க முடியும் ;)

ஆனால், பதிவுகள் படிக்க வேண்டுமா அல்லது நேரவிரயமா என்று நாம்தான் முடிவெடுக்கிறோம்.

எப்படி?
- தலைப்பை பார்த்து,
- இட்டவரின் பெயரைப் பார்த்து,
- முன்னூட்டமான ஒரு சில வரிகளை மேய்ந்து,
- தேன்கூடு போன்ற இடங்களில் புகைப்படங்களைப் பார்த்து
- சற்றுமுன் போன்ற பதிவுகளில் இத்தனை எண்ணிக்கை இருக்கிறதே; ஒன்றாவது உருப்படியான விஷயமாக இருக்குமோ என்னும் நம்பிக்கை கொண்டு

இதே போன்ற முடிவெடுக்கும் அதிகாரத்தை வாசகர் கண்ணில் தந்து விட்டு, திரட்டி திரை போடாமல் இருக்கலாம்.

@சிவா __/\__

---புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு---

மேட்டர் ரொம்ப சிம்பிளுங்க... technology should be an enabler, not an obstacle; logic cannot be stuck in legacy systems.

//தமிழ்ப் பதிவுலகம் சரியில்லை என்று யாரும் சொல்ல வில்லை. தமிழ்மணம் சரியில்லை என்று தான் சொல்கிறார்கள் என்கிற போது தன் brand name குறித்து தமிழ்மணம் கவலைப்பட வேண்டும்.
//

கெட்ட பேர்னா தமிழ்மணம். நல்லபேர்னா அது நாங்க. நல்ல கொளுகை மேடம்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு