புதன், ஜூன் 30, 2004

தேர்வு எழுத வருகிறீர்களா?

WSPQ Results: Your Political Philosophy: Libertarian - "Libertarians are self-governors in both personal and economic matters. They believe government's only purpose is to protect people from coercion and violence. They value individual responsibility, and tolerate economic and social diversity."



Tickle: IQ and Personality Tests - Tickle.com: The Classic IQ Test: "Your IQ score is 133.

This number is based on a scientific formula that compares how many questions you answered correctly on the Classic IQ Test relative to others.

Your Intellectual Type is Word Warrior. This means you have exceptional verbal skills. You can easily make sense of complex issues and take an unusually creative approach to solving problems. Your strengths also make you a visionary. Even without trying you're able to come up with lots of new and creative ideas."

Just for fun you can take once. Little bit similar to the ones we would have seen in CSR for the BSRB & Railways!

தேவை: விடை (மற்றும் அமெரிக்கப் பத்திரிகைகளில் இந்தியா)

இது நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்வி. எனக்கு விடை தெரியாது.

இரண்டு குச்சிகள் இருக்கிறது. இரண்டையும் எரித்தால் (தனித்தனியே) ஒரு நிமிடத்துக்கு எரியும். இந்தத் தகவலை மட்டும் வைத்துக் கொண்டு 45 விநாடிகளை எவ்வாறு கணக்கிட முடியும். இரண்டு குச்சிகளும் எரிந்து முடிக்க அறுபது விநாடிகள் எடுத்துக் கொண்டாலும், ஒரே மாதிரி இருப்பவை அல்ல. அந்தக் குச்சிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் - சதுரம், முக்கோணம், வட்டம், கோணல், மானலாக.... எந்த முறையற்ற வடிவத்தில் இருந்தாலும் நாற்பத்தைந்து நொடிகளைக் கணக்கு பண்ண வழி சொல்லவேண்டும்.

எப்படி? தெரியுமா.....???



சமீபத்தில் படித்ததில் நெஞ்சை விட்டு அகலாதது.
The New Yorker: In the Magazine: "Katherine Boo's Letter from India - The Best Job in Town: What an American firm is offering."

நேரம் கிடைக்கும்போது, பகுதிகளாக மொழியாக்கம் செய்ய விருப்பம். புத்தகக்கடைப் பக்கம் ஒதுங்கியோ அல்லது லைப்ரரியில் இருந்து படிக்க சான்ஸ் கிடைத்தாலோ, தவறவிடாதீர்கள். சென்னைவாசி ஒருவரின் வாழ்க்கையை வைத்துக் கொண்டு இந்தியாவை அலசி, அமெரிக்காவோடு ஒப்பிட்டு, அட்வைஸ் தொனி தெறிக்காமல் ஆராய்ந்து, inferenceகளை வாசகனிடம் விட்டுவிடும் கட்டுரை.


இந்திய நுகர்வோரை மனதில் கொண்டு எழுதப்பட்டிருக்கும் பிஸினஸ் 2.0 மேட்டர் படிக்க சுவையானது. அமெரிக்க மல்டிநேஷனல்கள் ஏற்கனவே சுறுசுறுப்பாக களமிறங்கி இருக்கிறார்களே!
Business 2.0 - Magazine Article - The New Land of Opportunity: It's a global economy -- so quit whining about outsourcing. India's booming middle class has $420 billion to spend. Here's how to grab your share.


தெரிந்த விஷயம்தான்... :-)
Economist.com | India and Pakistan: Though détente survives India's election, a Kashmir peace is still elusive.

செவ்வாய், ஜூன் 29, 2004

படித்தவை

சாராயமும், லாட்டரியும் - ஹரி:

தமிழக முதல்வர் லாட்டரி சீட்டுக்களுக்குத் தடை விதித்திருக்க வேண்டாம். அரசுக்கும் நல்ல வருமானமாக இருந்திருக்கும். மேலும், நீங்கள் (ஹரி) சொல்வது போல், இத்தகைய விவாதங்களை மக்களிடமே எடுத்து சென்று referendum கோரி, பெரும்பான்மை மக்களின் முடிவை சட்டமாக்கலாம். இதன் மூலம், நீதிமன்றங்களின் பலுவும் குறையும். சட்டமன்றம் ஒரு விஷயத்தை விவாதித்து சட்டமாக்க, அதை மக்கள் எதிர்த்து ரிட் போட, செஷன்ஸ் கோர்ட் அதற்குத் தடை விதிக்க, உயர்நீதிமன்றம்.... என்று endless loop கொஞ்சம் சீர்படுத்தபடலாம்?!



மன்மோகன் சிங்கின் மனக்கவலை - கி.கஸ்தூரி ரங்கன்: "யார் அமைச்சராக வேண்டும், என்ன இலாகாவைத் தரவேண்டும் என்பதையெல்லாம் கூட்டணிக் கட்சித் தலைவர்களே முடிவு செய்துவிட்டனர். லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் லஞ்ச ஊழல் மற்றும் கொலை கொள்ளை போன்ற கொடூர குற்றச்சாட்டுகளின் பேரில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர்கள்.

ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார்: 1984-ல் தில்லியில் 2000க்கு மேல் அப்பாவி சீக்கியர்கள் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களைப் பின்னணியிலிருந்து இயக்கியவர்களில் இந்த இருவரும் உண்டு என்று சீக்கியத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

கூட்டணி ஆட்சிக்கு வெளியே இருந்துகொண்டு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவை ஏற்று அமைக்கப்பட்ட எந்த ஆட்சியும் நிலைத்ததில்லை. 'சூப்பர் பிரதமர்' என்று கருதப்படும் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டுமல்ல. 19 கட்சிகள் கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர். காபினட் அந்தஸ்துடன் கூடிய தேசிய ஆலோசகர் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ம¦றி பிரதமர் செயல்பட முடியாது. கம்யூனிஸ்ட் தலைமை மற்றொரு அரசியல் அதிகார மையமாக இருக்கும் நிலையில் மன்மோகன் சிங் சுதந்திரமாக செயல்பட முடியாது."


The Maanga, Reloaded.: ICC's Rule Changes:
"
  • The idea of playing 12-a-side cricket, with 11 batsmen and 11 on the field at any time.
  • Gaining two dismissals with one ball.
  • Giving the umpires a ear-piece attached to Stump Camera.
  • Wireless aid for determining whether the ball pitched in line."

  • திங்கள், ஜூன் 28, 2004

    சொல்லாமலே போன கதை

    'செயின்ஃபில்ட்' (Seinfeld) அமெரிக்காவில் புகழ்பெற்ற காமெடித் தொடர். அதில் வரும் ஒரு காட்சியை இந்தப் படம் நினைவுக்குக் கொண்டு வந்தது.

    Seinfeld: 'அந்த சினிமாவுக்குப் போகலாம்... ரெடியா?'
    நண்பர்கள்: 'ஐயோ... அந்தப் படமா! படு மோசமாச்சே... நான் வர மாட்டேன்!'
    Seinfeld: 'மோசமான படத்துக்குத்தான் கூட ஆள் வேண்டும். தனியாக காமெண்ட் அடிக்கமுடியாது; கிண்டல் செய்வதை ரசிக்க துணைக்கு ஒருத்தர் வேண்டும்!'

    'லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷனை' (Lost in Translation) பார்த்த சோகத்தைப் பகிர்ந்து கொள்ள மனைவி இருந்தது ஆறுதல். படத்தின் அறிமுகம்+விமர்சனத்தை இங்கேயே நிறுத்திக் கொள்ளலாம். இருந்தாலும் இன்னும் கொஞ்சம்....

    அமெரிக்கர்கள் இருவர், ஜப்பானில் சந்தித்து நட்பு பாராட்டுகிறார்கள். நடு வயது போராட்டத்தில் தத்தளிக்கிறோமோ என்று குழம்பும் ஹீரோ 'பில் முர்ரே'. இளவயது உளவியல் பட்டதாரியாக அழகு ஹீரோயின் 'ஸ்கார்லெட் ஜோஹான்ஸன்'. தொலைபேசியில் ரிப்போர்ட் கொடுக்கும் மனைவியை காதில் வாங்கிக் கொண்டு, குழந்தைச் செல்வங்களிடமிருந்து தப்பித்து, வாழ்க்கையை தள்ளி வருகிறார் ஹீரோ. புகைப்பட பிடிப்பு மேல் பெரும்பிடிப்பு கொண்ட காதல் கணவனிடம் பிடிப்பில்லாமல், போரடிக்கிறது ஹீரோயினுக்கு. விஸ்கி விளம்பரத்திற்காக டோ க்யோ வந்து சேருகிறார் 'எண்பதுகளின் மார்க்கெட் இழந்த சிவாஜி கணேசன்' போன்ற ஹீரோ.

    சாதாரணமாக தனிமையில் வாடும் ஆண்-பெண் சந்தித்தால், ஒரு முத்தம், ஒரு நிலவு, ஒரு விருந்து, பிறகு படுக்கை என்று நிறையப் படங்கள் முன்னேறும். (படுக்கையில் எவ்வளவு தூரம் முன்னேறுகிறார்கள் என்று காட்டப்படுவதை பொறுத்து, PG-13, R, NC-17 என்று சான்றிதழ் தந்து விடுவார்கள்.) இங்கு இயக்குநர் சோஃபியா வித்தியாசப் படுகிறார். நிஜ வாழ்வில் எவ்வாறு நடந்து கொள்வோமோ, எவ்வாறு சும்மா, சாதாரணமாக அளவளாவுவோமோ, அவ்வாறே டயலாக்+காட்சியமைப்பு வைத்தது ஆச்சரியம்தான்.

    ஹீரோ, ஹீரோயின் இருவரும் ஜெட்-லாஃக்கினால் அவதிப்படுகிறார்கள். (இவ்வளவு நாள் ஜெட்-லாஃக் நீடிக்கும் என்று எந்த மறத்தமிழனும் ஒப்புக் கொள்ளமாட்டான். கிடைக்கும் இருபது நாள் விடுமுறையில் இவ்வளவு நாள் 'இது இரவா... இல்லை பகலா' என்று கஷ்டப்பட்டால் வெகேஷன் கோவிந்தா.... கோவிந்தா....). ஜப்பானிய மொழி தெரியாமல் சிற்றுண்டி முதல் ஆஸ்பத்திரி வரை அல்லல்படுகிறார்கள். (முப்பது நாளில் ஜப்பானிய மொழி புத்தகங்களையும் நக்கலடிக்கிறார்கள். காதலியிடம் சொல்லும் 'நான் உங்கள் குடும்பத்துக்கு அறிமுகமாக விரும்புகிறேன்' போன்ற சொற்றொடர்களை எசகுபிசகாக ஓட்டல் மேனேஜரிடம் சொல்லி ரியாக்ஷன் பார்த்து சிரிப்பது... சொக்கன் இப்பொழுதுதான் ஜப்பானில் இருந்து திரும்பியுள்ளார்... அவ்வளவு கஷ்டமா இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்).

    இந்தப் படத்தை இயக்கியவர் 'காட்ஃபாதர்' புகழ் கோப்போலாவின் மகள் சோஃபியா. அவரின் நிஜ வாழ்க்கையை கிட்டத்தட்ட பிரதிபலிப்பவராக ஹீரோயின் கதாபாத்திரம். தனக்கும், தன் முன்னாள் கணவனுக்கும் இடையிலே இருந்த பிஸினஸ் ஒப்பந்தத்தை ஒத்த திருமணம், கணவனுக்கும் 'There's Something About Mary' கேமரான் டையாஸுக்கும் உள்ள உறவு போன்றவற்றின் தாக்கம் நிறைந்திருப்பதாக விஷயமறிந்த IMDB வட்டாரங்கள் சொல்கிறது.

    படத்தின் இறுதியில் பில் முரே, ஹீரோயினின் காதில் ஏதோ கிசுகிசுப்பார். அவர் என்ன சொன்னர், அவள் ஏன் மெல்ல சிரித்தாள் என்பது மிகவும் அலசப்பட்டது. அது என்ன என்பது நமக்குத் தெரியாது. கிட்டத்தட்ட படம் முழுக்கவே, அது போல் பூடகத்தன்மை.

    மரத்தடி குழுமத்தில் ஷக்தி எழுதியதுபோல் ஸ்ல்ல்ல்ல்லோ படத்திலும் இதை சேர்க்கமுடியாது. ஆனால், மாறுபட்ட எதையோ சொல்ல வரும் கதாசிரியர், வித்தியாசமான தாக்கத்தைக் கொண்டு வர நினைத்து ஏமாற்றிக் கொள்கிறார் என்றே தோன்றியது! கவிதையில் சப்-டெக்ஸ்ட் பார்த்திருக்கிறேன். கதைகளில், திரைப்படங்களில் கூட ரசித்திருக்கிறேன். வெளிப்படையாய் ஏதும் புரியாமல், பூடகத்தனமை மட்டுமே குடிகொண்டு, ஆஸ்கார் விருது தேர்வாளர்களுக்கு மட்டுமே விரும்பக்கூடிய படம்.

    ஞாயிறு, ஜூன் 27, 2004

    விருப்பப் பட்டியல் - வைரமுத்து

    கேள் மனமே கேள்

    சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
    சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
    ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
    ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
    சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
    சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
    யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
    உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்

    கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
    கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
    பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
    பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
    வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
    விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
    மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
    மின்சாரம் போகாத இரவு கேட்பேன்

    தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
    தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
    விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
    விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
    மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
    மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
    பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
    போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்

    கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
    குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
    மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
    மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
    வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
    வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
    பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
    பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்

    அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
    அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
    உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
    உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
    முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
    மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
    பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
    பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்

    முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
    முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
    எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
    இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
    தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
    தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
    இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
    இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்

    வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
    வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
    தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
    தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
    மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
    மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
    ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
    ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்

    1995

    பெரியகுளம் - திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர் ஒருவர். அது ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. நல்ல வெள்ளிதானா என்று தேய்த்துப் பார்க்கிறார் இன்னொரு நண்பர். "விளக்கை அதிகம் தேய்க்காதீர்கள்; பூதம் வந்துவிடப் போகிறது" என்று சிரிக்கிறேன் நான். அப்படி பூதம் வந்துவிட்டால் யார் யார் என்னென்ன கேட்பார்கள் என்ற சுவையான கற்பனை தொடங்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்கிறார்கள். கடைசியில் கேள்வி எனக்கு வருகிறது. காரை நிறுத்துங்கள் என்கிறேன். ஒரு புளிய மரத்தடி. தாள் கொடுங்கள் என்கிறேன்; தாள் இல்லை. அழைப்பிதழ்களின் வெள்ளைப் பக்கங்களில் எழுதத் தொடங்குகிறேன். எழுத வசதி எண்சீர் விருத்தம், புளிய மரத்தடியில் பூத்த கவிதை இது.
    -வைரமுத்து

    நோட் #1: 'அமர்க்களம்' படத்தில் இந்தப் பாடல் இன்னும் கொஞ்சம் கூட்டல் கழித்தலோடு இடம்பெற்றது.
    நோட் #2: அதே படத்தில் இடம்பெற்ற 'மேகங்கள் எனைத் தொட்டுப் போனதுண்டு', எனக்கு இந்தப் பாடலை விட மிகவும் பிடிக்கும்.
    நோட் #3: பவித்ராவின் ஆங்கில வலைப்பதிவில், அவருடைய விஷ்-லிஸ்ட் படித்திருக்கிறீர்களா?

    வெள்ளி, ஜூன் 25, 2004

    ஊடகப்போக்கன் (க்விஸ்)

    1. 1920s National Dairy Council publication declares, "The people who have achieved, who have become large, strong, vigorous people, who have reduced their infant mortality, who have the best trades in the world, who have an appreciation for art, literature and music, who are progressive in science and every activity of the human intellect are the people who have used liberal amounts of
    a. Milk
    b. Sex
    c. Money
    d. Alcohol

    2. In 'My Life' President Bill Clinton writes 'I hated to leave this place'. Which place is he referring to?
    a. Monica Lewinsky
    b. White House
    c. Taj Mahal
    d. Arkansas

    3. What is ‘The Icarus Project’?
    a. ஐகாரஸ் ப்ரகாஷ் ஆரம்பிக்கப் போகும் புதிய இணையப் பத்திரிகை.
    b. 'இருமுனை ஒழுங்கின்மை' உள்ளவர்களுக்கான இணையத் தளம்.
    c. அமெரிக்கா சூரியனுக்கு அனுப்பப்போகும் விண்கலத் திட்டம்.
    d. ஏதன்ஸ் ஒலிம்பிக் கட்டுமானப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிப்பதற்கான பெயர்.

    4. Dalian, a port city in northeastern China, has become the Bangalore of China. Why?
    a. Starting salary: $90 a month
    b. G.E., Microsoft, Dell, SAP, H.P., Sony and Accenture, are setting up offices
    c. Due to its beautiful green spaces and nexus of universities, technical colleges.
    d. More than half graduate with engineering or science degrees, and even those who don't spend a year studying English and computer science.

    5. மனேகா காந்திக்கு வருத்தம் தரும் போன வார நிகழ்வு எது?
    அ. கோவில்களில் பிராணிகள் பலி கொடுப்பதை தடுக்கும் சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்தது.
    ஆ.ஃப்ரெஞ்ச் டிவி நிஜ நாடக நிகழ்ச்சி ஒன்றில் கோழிகள் நிஜமாகவே இறந்தது.
    இ. லஷ்மி மித்தல் திருமணத்திற்காக வருகை தந்த ஆயிரம் விருந்தினருக்கான மெனு.
    ஈ. உக்ரேனியர்களின் புதிய பதார்த்தம் பிரபலமடைந்தது: சாக்லேட்டில் முக்கியெடுக்கப்பட்ட வராகத்தின் கொழுப்பு.

    6. எது பெரிய ஊழல் குற்றச்சாட்டு?
    அ. சைனாவின் ஒலிம்பிக் திட்டப் பணங்கள், கிராமப்புற விவசாயிகளை சென்றடையாதது.
    ஆ. மாஸ்கோவில் சொந்தவீட்டுக்காரர்கள் காணாமல் போக்கப்பட்டு, அவர்களின் வீடுகள், அடுக்கு அகங்களாக சத்தமில்லாமல் மாறுவது.
    இ. கனெக்டிகட் மாகாண கவர்னர் ஜான் ரௌலண்டை ராஜினாமா செய்ய வைத்த பின்புலங்கள்.


    7. எவை நிஜமாகவே நடக்கிறது?
    அ. தூத்துக்குடியில் தலித்கள் நாய் வளர்க்க தடை. தலித்துகளின் நாய்கள், மேல்ஜாதியினர் வளர்க்கும் நாயுடன் உறவு கொள்ளும் அபாயத்தினால், இந்த உத்தரவு கொண்டுவரப் பட்டது.
    ஆ. திரையரங்குகளில் திருட்டுத்தனமாக ஆங்கிலப் படங்களை பதிவு செய்வோரை அடையாளம் காட்டினால் ஐநூறு டாலர் தரப்படும்.
    இ. ஜெர்மனியின் ஐந்து வயது சூப்பர்மேன் குழந்தையால், ஏழு பவுண்ட் எடையைத் தூக்க முடிகிறது; சகவயதுக் குழந்தைகளை விட பாதி கொழுப்பு சத்து மட்டுமே கொண்டிருந்தாலும், அவர்களை விட இரண்டு மடங்கு தசைகளைக் கொண்ட பலசாலி.
    ஈ. ஹார்வார்ட் போன்ற பல்கலைகளில், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் தீவிரமாக சேர்த்துக் கொள்ளப்பட்டலும், அவர்களில் பெரும்பான்மையானோர், வெஸ்ட் இண்டீஸ் போன்ற வெளிநாட்டை சேர்ந்தவர்கள்தான்; அமெரிக்காவில் வாழ்பவர் இங்கும் சிறுபான்மையில்தான் இருக்கிறார்கள்.

    8. ஜனாதிபதி கலாமுக்கு துப்பாக்கி மடல் அனுப்பியவர் யார்?
    அ. முஷாரஃப்
    ஆ. ஒஸாமா
    இ. வீரப்பன்
    ஈ. சோனியா
    உ. மன்மோஹன்
    ஊ. மஹேஷ்

    9. ஐரோப்பாவில் குழந்தைகளின் இறப்பிற்கான #1 காரணம் எது?
    அ. சாலை விபத்துகள்
    ஆ. சுற்றுப்புற சுகாதாரக் கேடு
    இ. மாசுள்ள அகங்கள்
    ஈ. தீ விபத்துகள்
    உ. நீரில் மூழ்குதல்

    காலச்சுவடு - ஜூன் 2004 (My Takeaways)

    கடவுளுக்குத் தெரியாதவர்கள் - ஆதவன் தீட்சண்யா: "அவனது ஒன்பதாவது படமிது. நான்கிற்கு உள்நாட்டிலும் அயலிலுமாகப் பல்வேறு விருதுகள். விருது வழங்குவோரின் சம்பிரதாயப் புகழுரைகளால் விவரிக்க முடியாத மேட்டிமை படிந்து படைப்பின் நோக்கம் திரிபட்டு மக்களிடமிருந்து அன்னியமாகி விடுவதாகச் சலிப்புறுவான். நடைமுறை வாழ்வில் காணக்கிடைக்கும் மறுக்க முடியாத உண்மை நிகழ்வுகளை முன்பின்னாய்க் கோர்த்துத் தொகுத்தெடுப்பதில் கையாளும் நுட்பகதியிலான அணுகுமுறை பார்வையாளனை ஏதேனுமொரு பக்கம் சாய்ந்து வாதிட நெம்பும். உள்ளதை உள்ளவாறே முன்வைத்து விரியும் காட்சிகளின் நேரடியர்த்தம் அதன் பின்புலத்தில் சொல்லப்படாத வேறொன்றிற்கான சிந்திப்பைக் கோரி நகரும்.

    அவன் வெளிப்படையாகவே யாவற்றையும் சொல்வதாகவும் அதனாலேயே அவை கலைத்தன்மையற்றுச் சக்கையாய் இருப்பதாக ஒரு சாராரும் கலையுலக ஒளிவட்டங்களின் கவனிப்புக்காக மிகுந்த பூடகத்தை முன்னிறுத்துவதாய் மற்றாரும் குற்றமேற்றுவதுண்டு. உங்களது அளவுகோலால் அடுத்தவனை அளக்காதீரென்று முகத்திலடித்துச் சொல்ல நாத்துடிக்கும் எனக்கு. அவனோ பூடகமென்று புரியுமளவு அதில் வெளிப்படைத் தன்மை பொதிந்திருப்பதாயும் நேரடியாய்த் தெரிபவை ரகசியங்களற்றே கிடப்பதாய் நினைக்க வேண்டியதில்லை என்றும் குறைவான சொற்பிரயோகங்களில் சாந்தமாக மறுப்பான். ஒப்பாரியிலும் தாலாட்டிலும் ராகம் தாளம் தேடும் கோட்பாட்டு வாத்திகளைப் போலவே படைப்பின் ரகசியங்களறிந்திடும் சிரத்தையற்ற எளிமை விரும்பிகளும் எனது அனுதாபத்திற்குரியவர்களே என்பான். பால்யத்தில் நாம் கண்டும் காட்டியும் வந்த நிர்வாணத்தைத்தான் வாழ்நாள் முழுதிலுமே ரசசியமெனப் பொத்திக்கொள்வதும் அதை அறியத் துடிப்பதுமாகத் தவித்து மாய்கிறோம் என்று கூறியது எத்தனைப் பேருக்குப் புரிந்ததெனத் தெரியவில்லை.

    ஒரு பெண்ணின் மனதுக்கும் உடலுக்கும் அவளே எஜமானி என்றும் அதில் எதன் பேராலும் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதையும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதே எனது நோக்கமாயிருந்தது. உடல்தேவையின் பொருட்டோ கலக மனப்பான்மையினாலோ பழிவாங்கும் உணர்வினாலோ - எதனால் அவ்வாறு நடந்துகொண்டேன் என்பதை இதுவரையிலும் நான் ஆராய வில்லை. ஆனாலும் என் காரியம் என்னளவில் குற்றமற்றது என்று இன்றளவும் நம்புகிறேன்."
    நல்ல வாசிப்பை காட்சியாக்கும் கதை.



    குவளைக் கண்ணன் - இடைப்பட்ட பொழுது:

    பாட்டி வீட்டுக்குப் போனான்
    ஒரு விடுமுறையில்

    சலிப்படைந்த தினமொன்றில்
    அந்தச் சிற்றூரில்
    ஆடுகளைப் பின்தொடர்ந்து
    காட்டினுள் நுழைந்தான்

    கோடைப் பகலில்
    பின்மாலைபோல
    இருண்டிருந்த அந்தக் காட்டில்
    விசித்திர இலைகளைக் கொண்ட
    மரமொன்றுடன் நட்பானான்,
    விடைபெறும் நாளில்
    இலையொன்றைத்
    தனது நினைவாகத் தந்தனுப்பியது மரம்.

    விடுமுறை கழிந்து பள்ளி சென்றான்
    புதிய
    மொழியாசிரியை
    அந்த மரத்தின் பூவையும்
    உடற்பயிற்சி ஆசிரியர்
    மரத்தின் பட்டைகளையும்
    நினைவூட்டினார்கள்

    தனது ஜியோமிதிப் பெட்டியில்
    காட்டை எடுத்துக்கொண்டு
    சிற்றோடை போல
    ஓடிக்கொண்டிருக்கும் அவன்
    வரிகளுக்கு இடையில்
    மறைந்திருக்கும் வன்மிருகங்களைப்
    பார்க்கவில்லை இன்னும்


    நீரோட்டம் - கண்ணன்: "நான் சந்திக்கும் பலர் எதற்காக இவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. பல சமயம் பொய் வெளிப்படும்போதே பொய் எனத் தெரிவித்தபடி வருகிறது. அல்லது இரண்டொரு நாட்களில் பொய் என ஊர்ஜிதமாகிறது. மீண்டுமொரு முறை பேச நேரும் போது முன்னர் கூறிய பொய்கள் மறைந்து புதிய பொய்கள் வெளிப்படுகின்றன. இவர்கள் எல்லோரையும் மோசமானவர்கள் எனக் கருத முடியவில்லை. பலர் நல்லவர்கள். நண்பர்கள். இந்தப் பொய்களுக்கு அற்பத்தனத்தைவிடப் பெரிய காரணம் எதையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. நான் பொய் சொல்லாதவன் அல்லதான். சத்திய சீலன்களைத் தேடி உறவுகொள்பவனும் அல்ல. இருப்பினும் அன்றாடம் பல சில்லறைப் பொய்களைச் சந்திக்க வேண்டியிருப்பது, வழக்கமான தமிழ் சினிமாவைப் பார்ப்பதுபோல, அவமானமாக இருக்கிறது. நம் அறிவை, புரிதலை, உள்ளுணர்வை இப்பொய்கள் தொடர்ந்து அவமதிக்கின்றன. இக்காலகட்டத்தில் "பொய்யானாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்' என்ற பழமொழி என் மனத்தில் புதிய பொருள் கொண்டு ஒளிரத் தொடங்கியுள்ளது."


    பேராசிரியர் தொ. பரமசிவன்: "சங்க இலக்கியப் பாடல் தொகுப்புகளின் பெருமைகளில் ஒன்று அவை சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் படைக்கப்பட்டவை என்பதாகும். கூல வணிகன் (தானிய வணிகன்), வண்ணக்கன் (பொன்னின் மாற்று அறிந்து சொல்பவன்), அறுவை வணிகன் (துணி வாணிகன்), கணக்காயன் (ஆசிரியன்), காமாக் காணி (சோதிடம் வல்லவன்), குயத்தி, குறமகள் என்று அனைத்துத் தரப்பினரும் "செய்யுள்' செய்யும் போது, அரசதிகாரம் பெற்ற கிழார்களும் அரசன் மனைவியரும் அரசர்களும் ஏன் பாடியிருக்கக்கூடாது?"


    பெருமாள்முருகன்: "குறையை "மக்கள் மன்றத்தில்' வைப்பதன் மூலமாக இரு நன்மைகள் ஏற்படும். அவை:

  • க. நூலைப் பயன்படுத்தும் வாசகர்கள் இக்குறைகளை மனத்தில் கொண்டு அவற்றைக் களைந்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனெனில் எல்லா வாசகர்களும் இக்குறைகளைக் கண்டுபிடிப்பவராகச் செயல்பட முடியாது.

  • உ. பல்கலைக்கழகம் இனி வெளியிடும் நூல்களில் கூடுதல் கவனம் செலுத்தலாம். தகவல் தொடர்புச் சாதனங்களில் ஒரு செய்தி வெளியிடப்படும்போது கிடைக்கும் கவனம், தனி நபர் கடித வெளிப்பாடுகளில் கிடைக்காது என்பது இன்றைய கால விதி."

  • வியாழன், ஜூன் 24, 2004

    தேர்தல் வருது!

    நான் வலைப்பூ ஆசிரியராக இருந்தபோது இந்திய வலைப்பதிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழின் சார்பாக பத்ரியும், வெங்கட்டும் போன வருடத்துப் பட்டியலில் இடம்பிடித்திருந்தார்கள். சென்ற வருடத்தில் வாகை சூடியவர் நம்ம வெங்கட்.

    இந்த வருடத்திற்கான முஸ்தீபு வேலைகளை சுறுசுறுப்பாக துவங்கி விட்டார்கள். நம்மிடம் எவ்வாறு நடத்தலாம், எந்த தலைப்புகளில் கருத்து கணிப்பு நடத்தலாம் என்று கேட்டிருக்கிறார்கள்: அறிவிப்பு

    தமிழ் பதிவுகளில் என்னுடைய பரிந்துரையில் இடம்பெறுபவர்கள்:

    1. அருண்
    2. பத்ரி
    3. ஹரி கிருஷ்ணன்
    4. மதுரபாரதி
    5. பவித்ரா
    6. பா ராகவன்
    7. பிகே சிவகுமார்
    8. சுந்தரவடிவேல்
    9. வெங்கடேஷ்
    10. வெங்கட்

    ரெண்டு வரி நோட்

    முத்துராமன் - ராயர் காபி க்ளப்

    1. தொடரும் நேசம் - 7837
    2. ஒற்றை மரம் - 7762
    இரண்டு அப்பா கதைகளில், 'தொடரும் நேசம்' ரொம்ப பிடித்திருந்தது.
    • 'சிங்கம், புலி போல அப்பாவுக்கு சைக்கிள்'
    • 'சைக்கிளில் பட்ட வெயில் வெளிச்சம், மிதமான ஒளியில் மின்னியது'
    • 'நிஜம் குற்றுயிராய்க் கிடந்தது. நிழல் பார்க்கத் தூண்டுவதாய் இருந்தது'
    • 'நடக்கத் துவங்கிய குழந்தையை, கவனமாய் கையைப் பற்றி அழைத்துச் செல்வது போலிருக்கும்'
    • 'அப்பா 'மவுத்' ஆன பிற்பாடு'

    முல்ஹோலண்ட் ஃபால்ஸ்

    'ஜெனிஃபர் கானலி'யைப் பார்த்தால் மகாத்மாவே சபலப்பட்டு போவார் - IMDB-இல் துழாவியபோது 'பிதாமகனில்' ஒரு பாடலுக்கு வந்துபோகும் சிம்ரன் போன்றவரை குறித்து ஒருவர் எழுதியிருக்கிறார். படத்தின் கதாநாயகி மெலனி கிரிஃபித்துக்கு, மோசமாக நடிப்பவர்களுக்காகத் கொடுக்கப்படும் ராஸ்ப்பெரி விருது வழங்கப்பட்டிருக்கிறது. 1950களின் லாஸ் ஏஞ்சலீஸை கண்முன்னே கொண்டு வருகிறது. ஹாலிவுட்டின் சத்யராஜ் 'ஜான் மால்கோவிச்' நடித்திருக்கிறார். எஸ். ராமகிருஷ்ணனை கேட்டால் 'காக்க... காக்க'வின் ஆங்கில ஒரிஜினல் இதுதான் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்.

    என்னதான் சிறப்பான நடிகர்களை பொருத்தமான வேடங்களுக்குப் போட்டாலும், கதாபாத்திரத்தின் சித்தரிப்பு தெளிவாக இல்லாவிட்டால், படம் மக்களை சென்றடையாது என்பதற்கு, இந்தப் படம் நல்ல உதாரணம். நான்கு எல்லே போலீஸ். சட்டத்தை துச்சமாக மதித்து, சட்டத்தை நிலை நாட்டுபவர்கள். ஹீரோ, மனைவியுடன் மகிழ்ச்சியான வாழ்வில் இருக்கிறார். அப்பொழுது அங்கு நிகழும் ஒரு பெண்ணின் மரணம் எவ்வாறு அவர்களைப் பிரிக்கிறது என்பதை குழப்பாமல் சொல்லியிருகிறார்கள்.

    படத்தின் தலைப்பு ஒரு காரணப் பெயர். மாஃபியாத் தலைவர்களும், போதை ராஜக்களும் எல்லேயில் கால் வைத்தால், நால்வர் அணி அவர்களைத் தள்ளிவிட்டு விடும் இடத்தின் பெயர்தான் 'முல்ஹோலண்ட் ஃபால்ஸ்'. என்கவுண்டர், ஜெயில், வாய்தா, வக்கீல், மனித உரிமை என்று எல்லாம் சிரமப்படாமல், ஒரேயொரு தள்ளு. ஹாலிவுட் படங்களின் எதிர்பார்ப்புக்குரிய தரத்தை 1950ல் உலாவந்த மகிழுந்துகளின் மூலமும், ஆடைகள் மூலமும் சிறப்பாக காட்டுகிறார்கள். குற்றம் செய்பவர்களை தண்டிக்கும் நால்வரின் தலைவரே சபலப் படுவது, பெரிய மனிதர்களின் சிறுமைத்தனம், கணவன்-மனைவி இடையே நிகழும் புரிதல், கோவலன் ஹீரோவின் குற்றவுணர்ச்சி என்று மன அலசல்களை நிறைய கோடிட்டு காட்ட வாய்ப்பிருந்தும் 70-எம்எம் அளவுக்குக் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

    ஜெனிஃபர் கானலியின் படங்களாக பார்த்து வரும் எனக்கு, அவருடைய மிகச்சிறிய காரெக்டர் வருத்தத்தைத் தந்தது. ஜான் மால்கோவிச்சும் கலக்கல் நடிகர். அவருக்கு சில சுவாரசியமான வசனங்கள் தரப்பட்டுள்ளன. அணுவை குறித்து ஐந்து வரிகளில் சிறுகுறிப்பு கொடுத்து, வாழ்க்கையின் பெருங்குறிப்பு வரைகிறார். அவருடைய வசனங்களில் இருந்து சில....

  • 'ஆயிரம் பேர் நலமாக வாழ்வதற்கு, நூறு பேர் இறக்கத்தான் வேண்டும்'. (A hundred die so that a thousand may live.)
  • 'நாகரிகத்தின் அடையாளமாக சிலர் தங்களின் வாழ்க்கையை சீக்கிரமாக முடித்துக் கொண்டு, மற்றவர்களை வாழவைப்பார்கள்'. (Some people die before their time so that others can live. It's a cornerstone of civilization.)

    ஹீரோயின் மெலனி கிரிஃபித் தூக்கம் வராமல் கணவனுக்காக காத்திருக்கும்போது கையில் வைத்திருக்கும் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் 'A Farewell to Arms'ஐ யாராவது வாசித்திருக்கிறீர்களா?


    ஏ.எம்.சி.யில் ஒளிபரப்பாகும்போது அவசியம் ஒரு முறை பார்க்கலாம்.

  • புதன், ஜூன் 23, 2004

    ஹிந்திப் பட வருமானம்

    ஹிந்திப் படங்களின் வருமானம்: 1999 முதல் தற்போதைய 'யுவா' வரை அமெரிக்காவில் எவ்வளவு சம்பாதித்துள்ளது? வெற்றிகரமான ஆங்கிலப் படங்கள், அமெரிக்காவிலும், மற்ற இடங்களிலும் எவ்வளவு ஈட்டுகிறது? இந்தியர்கள், அமெரிக்காவில் இருந்து பெருமளவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டதால், படங்களின் வரும்படி குறைந்துள்ளதா? ஹிந்தி 'அலைபாயுதே', 'ஹே ராம்' அமெரிக்காவில் மட்டுமாவது வெற்றிபெற்றதா? 'கிலாடி 420' போன்ற அமெரிக்க இந்தியர்களிடம் எடுபடாத படங்களுக்கு, எவ்வளவு பணம் வருகிறது? தெரிந்து கொள்ள...

    நன்றி: The Numbers - Box Office Data, Movie Stars, Idle Speculation

    குறிப்பு: அட்டவணையை இங்கு போட்டால் ப்ளாஃகர் தகராறு செய்வதால் ஜியோசிடிஸ் மூலம் கொடுத்துள்ளேன். (Blogger Help : When I put a table in my posts, there are extra blank lines. How do I get rid of these?)

    செவ்வாய், ஜூன் 22, 2004

    ரெண்டு வரி நோட்ஸ்

    எண்பதுகளின் சென்னை: டீன்களில் தமிழருக்கு வரும் அனுபவங்களை பாப் இசையில் சொல்லியிருக்கிறார்கள். பாடகர் இன்னும் கொஞ்சம் காம்ப்ளான் குடித்துவிட்டு வந்திருக்கலாம். வீட்டில் இருந்து தொலைபேசும் நண்பிகள் கிசுகிசுப்பது போல் இல்லை; ஆனாலும், துள்ளலான வரிகளுக்கு, ஷாகுல் ஹமீது பாய்ச்சல் கொடுத்திருக்கலாம்?! ஜோரான விசிலடிப்புடன் ஆரம்பிக்கும் இசை, மிரட்டாமல் கலக்கி இருக்கிறது. ஸ்ரீகாந்தின் மற்ற பாடல்களையும் கேட்க வேண்டும்! (தேவையில்லாத நோட்: எல்.சுப்ரமணியமின் மகள் ஒரு தமிழ் பாப் ஆலபம் வெளியிட்டிருக்கிறார். குட்டி பதினாறடி பாய்ந்திருப்பதாக 'இந்தியா டுடே' சொல்லியிருக்கிறார்கள்.)

    क़्युन ङॊ ग़या ना - ஹிந்தி: 'மிஷன் காஷ்மீ'ரின் 'ரிண்ட் போஷ் மால்' பாடல் கேட்டிருக்கிறீர்களா? பிடித்திருந்ததா? அதே மாதிரி ரெண்டு மூணு ரீ-மிக்ஸில் ஷங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைத்திருக்கிறார்கள். ஐந்து பாடல்களில், நான்கு பாடல்களை ஷங்கர் பாடியிருப்பது டூ மச். வேறு பாடகரை போட்டிருந்தாலாவது வெரைட்டி கிடைத்திருக்கலாம். (தேவையுள்ள நோட்: எனக்கு ஹிந்தி கொஞ்சம் மட்டுமே தெரியும். சாஸ்திரீய/கர்நாடக/தமிழ்/ஹிந்துஸ்தானி இசை கொஞ்சம் கூடத் தெரியாது. :)

    விருப்பப் பட்டியல் (2)

    தமிழோவியம்:


    1. default='blank' போடாமல் இருக்க வேண்டும்.
    2. மரத்தடி.காம் போல் எழுத்தாளர் பட்டியலிட்டு, ஒருவரின் அனைத்து படைப்புகளையும் எளிதில் படிக்கும் வசதி வேண்டும்.
    3. தொடர்கள் முதல் புதுக்கவிதைகள் வரை பொறுத்தமான ஓவியங்கள், படங்கள் போட வேண்டும்.
    4. 'வேர்கள்' தொடர வேண்டும்.
    5. வாரம் ஒரு குறுக்கெழுத்துப் போட்டி வேண்டும்.
    6. இன்னும் நிறைய படைப்பாளிகளின் வாராந்தர column அறிமுகம் செய்யவேண்டும்.
    7. தமிழில் வெளிவந்த மற்றும் வெளிவரும் தரமான வேறு புத்தகங்களையும் அடிக்கடி ஈ-புத்தகங்களாக கொடுக்க வேண்டும்.
    8. கோப்புகள் well-organizedஆக, எளிதில் தேடி கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
    9. வாரம் ஒருமுறை புதுப்பித்தல் தவிர, அன்றாட முக்கிய நிகழ்வுகளை குறித்து தராசு எழுத வேண்டும்.
    10. இசை உலா வேலை செய்ய வேண்டும்.

    7G ரெயின்போ காலனி - கனாக் காணும் காலங்கள் (1)

    பாடகி:மதுமிதா
    இசை: யுவன் ஷங்கர் ராஜா
    பாடலாசிரியர்: நா முத்துக்குமார்

    கனாக் காணும் காலங்கள்
    கரைந்தோடும் நேரங்கள்
    கலையாது கோலம் போடுமா?

    விழி போடும் கடிதங்கள்
    வழி மாறும் பயணங்கள்
    தனியாக ஓடம் போகுமா?

    இது இடைவெளி குறைகிற தருணம்
    இரு இதயத்தில் மெல்லிய சலனம்
    இனி இரவுகள் இன்னொரு நரகம்
    இளமையின் அதிசயம்

    இது கத்தியில் நடந்திடும் பருவம்
    தினம் கனவினில் அவரவர் உருவம்
    சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்
    கடவுளின் ரகசியம்

    உலகில் மிக இனித்திடும் பாஷை
    இதயம் இரண்டு பேசிடும் பாஷை
    மெதுவாய் இனி மழை வரும் ஓசை...

    நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
    நான் வேறு நீ வேறென்றால் நட்பு என்று பெயரில்லை
    பறக்காத பறவைக்கெல்லாம் பறவையென்று பெயரில்லை
    திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை

    தனிமையில் கால்கள் எதைத் தேடிப் போகிறதோ?
    திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ?

    தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும்
    தோழமையில் அது கிடையாதே
    தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
    தடுத்திடவே இங்கு வழியில்லையே....

    இது என்ன காற்றில் இன்று
    ஈரப்பதம் குறைகிறதே
    ஏகாந்தம் பூசிக் கொண்டு அந்திவேளை அழைக்கிறதே
    அதிகாலை நேரம் எல்லாம்
    தூங்காமல் விடிகிறதே
    விழி மூடி தனக்குள் பேசும்
    மௌனங்கள் பிடிக்கிறதே

    நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
    நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
    படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்
    பனித்துளியாய் அது மறைவது ஏன்
    நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை
    மன நடுக்கம் அது மிகக் கொடுமை

    பாடல் கேட்க: RAAGA - 7G Rainbow Colony

    'இம்' என்றால் திருட்டு... 'இச்' என்றால் திருட்டு!

    எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் முதன் முதலாக குப்புற படுத்துக் கொண்டது, நீஞ்ச ஆரம்பித்தது, தவழத் தொடங்கியது, உட்காரத் தெரியாமல் படுக்கையில் அடிக்கடி விழுந்தது, பின் ஒருவாறாக உட்கார கத்துக் கொண்டது என பலவற்றையும் வீடியோவில் பதிவு செய்திருக்கிறேன். அவளுக்கு 'அ, ஆ..', சொல்லிக் கொடுப்பது, ஆங்கில சொற்றொடர்களின் தமிழ் அர்த்தம் என எல்லா வீட்டிலும் எல்லாரும் சொல்லிக் கொடுப்பதை முடியும்போது பயிற்றுவிக்கிறேன். இவற்றின் போது எனக்கு நிகழும் அனுபவங்களை, நண்பர்களின் வாரயிறுதி டின்னர் விருந்துகளிலோ, இந்தியாவுடன் தொலைபேசியில் பேசும் நள்ளிரவுகளிலோ ஆர்வத்துடன் விவரிப்பேன்.

    போன ஞாயிற்றுக்கிழமை அதிசயமாக சில வேலைகளைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். பாத்ரூம் முழுக்க சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது, பழைய படித்த புத்தகங்களில் இருந்து உபயோகமான பக்கங்களை மட்டும் கிழித்து வைத்துக் கொண்டு மற்றவற்றை தூக்கிப்போட்டது, ரொம்ப நாளாக உபயோகிக்காத என்றோ பயனளிக்கக்கூடிய சில சாமான்களை பரணில் பத்திரபடுத்தியது என்று ஒரு மணி நேரம் சென்றிருக்கும். சமையலில் வழக்கம்போல் மும்முரமாய் இருந்த அம்மாவிடம், என் மகள் சென்று, 'அப்பா, ரொம்ப வேலை பண்றாம்மா' என்று சொன்னது ஆச்சரியமாக, கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.

    என் குழந்தை சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதன் ஆழ்மனதில் எவ்வாறு சில ஆணாதிக்க (இந்திய) பிம்பங்கள் விழுந்தது என்று ஓரமாக வருத்தப்பட்டது. அவற்றை மாற்ற என்ன செய்யலாம் என்று தனியாக யோசிக்கவேண்டும். அமெரிக்கப் பெற்றோரின் குழந்தைக்கு, சனியோ, ஞாயிறோ, தந்தை களத்தில் இறங்கி பெயிண்ட் அடித்தாலோ, களை பிடுங்கி செடி நட்டாலோ, பெரிய விஷயமாக இராது. ஆர்வத்துடன் கூடமாட உதவிகள் செய்வாளாக இருக்கும். இல்லை, தோழர்களோடு விளையாட ஓடிப் போய்விடுவாளாக இருக்கும். தந்தை முழுச் சோம்பேறியாக இருந்து, திடீரென்று ஒரு நல்ல நாளில் கலப்பை தூக்கினால், எந்த நாட்டிலும் குழந்தை வியக்கும்.

    எஸ்.ராமகிருஷ்ணனின் தமிழில் சுட்ட படங்களை விமரிசித்ததை பார்த்தவுடன் ஒவ்வொரு நாட்டு குழந்தைகளின் மனோபாவத்தோடு ஒப்பிடத் தோன்றியது. பிற மொழிகளில் வெளிவந்த படங்களை ஆங்கிலத்தில், உள்ளூர் கலாசாரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொடுக்கிறார்கள். நியு யார்க் டைம்ஸ் முதல் லோக்கல் பத்திரிகை வரை, முன்னுமொரு காலத்தில் எழுதப்பட்ட ரோமியோ-ஜூலியட் கதைகளை காலத்திற்கேற்ப முலாம் பூசி கொடுத்தால் கூட வியந்து பாராட்டுகிறது. ஆங்கிலத்தில் முன்பு வெளிவந்த 'Around the world in 80 days', '12 Angry Men' என பத்து வருடத்திற்கொரு முறை போதிய இடைவெளி விட்டுவிட்டு மறுபதிப்பு தந்து கொண்டேயிருக்கிறார்கள்.

    'மகளிர் மட்டும்' படத்தையும் அதன் ஆங்கில பதிப்பையும் ஒரு சேர பார்க்கலாம். நமது மொழிக்கு ஏற்ப, தமிழ் பழக்கவழக்கங்களுடன் திரைக்கதை, வசனம் அமைத்து, மனதில் நிற்கும் காட்சியமைப்போடு படத்தைத் தந்ததற்கு பாராட்ட வேண்டாம். அட... இது மொழி மாற்றம்தானே... என்று டப்பிங் படத்தை பார்க்கும் முன்-நிர்ணயித்த பார்வையுடன் படம் பார்க்கும் கலர் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொள்ளலாம். Sense & Sensibility என்னும் ஆங்கில படம் மிகவும் ரசிக்கத்தக்கது. 'ஒன்றி பார்க்க முடியுமா?' என்று கேட்டால் என்னால் முடியாது. ஆனால், 'கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்'-இல் தபுவின் நடுத்தர வர்க்க சமன்பாடுகள் மனதைப் பிசையும். 'Godfather'-தான் 'நாயகன்' என்பது எல்லாப் படங்களுக்கும் வார்ப்புரு தேடும் நோக்கோடு ஒப்பிடுவதை சொல்கிறது. ஒரே genre திரைப்படங்களா? ஆம்... தழுவலா? நிச்சயம் இல்லை.

    புத்தகங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படங்கள் ஆஸ்கார் தேர்வாகிறது. அவை கூட அக்மார்க் ஒரிஜினல் இல்லை என்பதால் உலக அரங்கின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என சொல்லலாம். 'சதி லீலாவதி' தத்து எடுக்கப் பட்ட தமிழ்ப்படமாகவே இருக்கட்டும். அதை தமிழர்களின் குணத்திற்கேற்ப எவ்வாறு மாற்றப்படவில்லை என்பதை விவரிக்கவேண்டும். சண்டைக் காட்சிகளைப் பார்த்தால் இது ஏற்கனவே ஆங்கிலப் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் செய்வது போல் இருக்கிறது என்று அங்கலாய்ப்பது எனது நுண்ணிய கிரகிப்புத்தன்மையையும், அனேக படங்களை பார்த்தையும் சுட்டலாம். ஆனால், அந்த சண்டை எவ்வாறு நம்பமுடியாமல் இருக்கிறது என்று ஃப்ரேம் பை ஃப்ரேம் அலசுவதை விட்டு விட்டு, 'உன் குழந்தை ஏற்கனவே பக்கத்து வீட்டுப் பையன் எழுதிய ABCDதானே எழுதுகிறது' என்பதுதான் பலரின் கூற்றாக இருக்கிறது.

    எனக்கு இரண்டு பேரும் அ..ஆ..இ...ஈ, எழுதுவதில் பிரசினையில்லை. இருவரும், அதை அவர்கள் கையெழுத்தில் எழுதினார்களா என்பதில்தான் எனக்கு ஆர்வம்.

    திங்கள், ஜூன் 21, 2004

    விருப்பப் பட்டியல் (1)

    மரத்தடி & .com:


    1. நினைவலைகள் முதல் புதுக்கவிதைகள் வரை பொறுத்தமான படங்கள் போட வேண்டும்.
    2. 'எழுத்தாளரைக் கேளுங்கள்' தொடர வேண்டும்.
    3. பட்டிமன்ற தீர்ப்பு வேண்டும்.
    4. இந்த ஆண்டுவிழாவில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு பதிவின் மூலமாவது பங்கு பெற வேண்டும்.
    5. அடுத்த சுவாரசியமான அறிவிப்பு வேண்டும்.
    6. காணாமல் போன ஆனந்த் ராகவ் முதல் ரமேஷ் அப்பாதுரை வரை அனைவரும், நேரத்தை எங்கிருந்தாவது கண்டுபிடித்தாவது எழுத வேண்டும்.
    7. ஆசாத் முதல் நம்பி வரை மேலும் பலரும் வலைப்பதிவுகள் ஆரம்பித்து, இரண்டிலும் தொடர்ந்து எழுத வேண்டும்.
    8. 7-ஜி ரெயின்போ காலனி பாடல்களையும் பிரசன்னா முதல் பரி வரை எல்லாரும் விமர்சிக்க வேண்டும்.
    9. கோடைகால போட்டியில் பரிசு எனக்கு கிடைக்க வேண்டும் ;)

    மீண்டும் மீண்டும் வா....

    திரைக்கு வந்து சில வாரங்களே ஆன தமிழ்ப் படங்களை திருட்டு விசிடியிலும், திரைக்கு வந்து சில மாதங்களே ஆன ஆங்கிலப் படங்களை திருடாத டிவிடியிலும், பார்த்து விடுவதால், சன் டிவி, கே டிவி, என்.பி.சி. ஹெச்.பி.ஓ., டி.என்.டி. இன்ன பிற முப்பது சொச்ச தொலைக்காட்சிகளில் காட்டப்படும் படங்கள், பார்த்த படங்களாவே இருக்கின்றது. இந்த மாதிரி channel-surfing செய்துகொண்டு, பார்க்காத படம் தெரிகிறதா என்று தேடும்போது, கிடைக்கும் சில காட்சிகள் சுவாரசியம். கடந்த சில வாரங்களாக இந்த மாதிரி தடுக்கி விழுந்து மீண்டும் ஆங்காங்கேபார்த்த படங்கள், வாட் வுமன் வாண்ட்; சதி லீலாவதி; மின்சாரக் கனவுகள்; ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் டைரி; பாட்சா.

    What Women Want சிரிப்பதோடு நிறுத்தாமல் கொஞ்சமாய் சிந்திக்கவும் வைக்கும் படம். விவேக் முதல் 'செம ரகளை' சத்யராஜ் வரை தமிழில் சரியாக உல்டா செய்யாத கதாநாயகனாக மெல் கிப்ஸன். பெண்களை போகப் பொருளாக மட்டும் நினைப்பவர். திடீரென்று பெண்கள் மனதில் நினைப்பதை அறியும் சக்தி பெறுகிறார். (ஆண்கள் நினைப்பதை இன்னும் அவரால் கிரகிக்க இயலாது. ஆண்கள் ஏதாவது நினைக்கிறார்களா என்று கேட்டால், எனக்கு பதில் தெரியாது.)

    அந்தக் காலத்து விக்ரமாதித்தனுக்குத் தெரிந்த ஆய கலைகள் அறுபத்து நான்கில், பிறர் மனதில் இருப்பதை அறிவதும் ஒன்று. விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கும் மெல் கிப்ஸன், எவ்வாறு, பெண்களின் மனதை அறிந்து, Nike காலணி விளம்பரம் முதல் ஹீரோயினின் காதல் வரை கவர்கிறார் என்பதே திரைக்கதை. பெண்கள் எதைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்பதை கொஞ்சம் politically incorrect-ஆக சொல்லும் தத்துவப் படம். தகப்பனாக, மகளின் சிந்தனைகளை கேட்பது, மேலாளராக, சகாக்களின் எண்ணங்களை அறிந்து கொள்வது, அவரை மெல்ல மாற்றி, male chauvinismஐ குறைக்கிறது.

    Bridget Jones Diary கொஞ்சம் வழவழா கொழகொழா வகையைச் சார்ந்தது. சுவாரசியமான Chick-flick என்பது எப்படிப்பட்ட வகை என்று கேட்டால் இப்படத்தை தைரியமாக நான் உதாரணம் சொல்வேன். டைரி என்பது டைட்டிலிலேயே இருக்கிறதே, படம் முழுக்க டைரி வடிவில் சொல்லப்படுகிறதோ, என்று எண்ணினால், ஆங்காங்கே கொஞ்சம் டைரி டெக்னிக் உபயோகப்படுத்திக் கொண்டார்கள். Streetsmart நடிகரான Hugh Grant-ஐ, கிட்டத்தட்ட வில்லனாக காண்பித்ததால் மட்டும் எனக்குப் படம் அவ்வளவாக ரசிக்கவில்லை.

    மனதில் நினைத்ததை, உள்ளது உள்ளபடியே பேசும் ஒருத்திக்கு, உற்ற துணை கிடைக்குமா? கிடைத்தாலும், அதை கெடுப்பதற்கு ஒருவன் எவ்வளவு தூரம் முயல்வான் என்பதுதான் கதையின் அடிநாதம். அம்மாவால் பெண் பார்க்க வைக்கப்படும் முதல் காட்சியில் ஆரம்பித்து கடைசி காட்சியில் காதலனிடம் டைரியை விளக்குவதற்காக ஓடும் காட்சி வரை ரெனீ ஜ்வெல்கர் இனிப்பான அடுத்த வீட்டுப் பெண்ணாக வந்து போகிறார். வித்தியாசமான படம். படம் பார்க்கும்போது 'ஐய்யயோ... இவ்வாறு செய்யாதே' என என்னை நானே தர்மசங்கடத்தில் ஆழ்த்தி கொள்வதே படத்தின் வெற்றி. உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம்; ஆனால், பார்க்கவேண்டிய படம்.

    சதி லீலாவதி - ஆங்கில மூலம் எது என்பது குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து ரசிக்கும் படம்;

    மின்சாரக் கனவுகள் - வானொலியில் வரும் ஞாயிற்றுகிழமை ஒலிசித்திரம் போல் கேட்டேன். எவ்வளவு பார்க்காத காட்சிகள்! விசிடிக்காரர்கள் அழகாக எடிட் செய்கிறார்கள்;

    பாட்சா - 'எனக்கு இன்னொரு பெயர் இருக்கு' என்பதற்காக முதல் பகுதியை இண்டெர்வல் வரை மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.

    நம்மில் ஒருவன்.. நமக்காக ஒருவன்! - ஷங்கர் பேட்டி

    ஆனந்த விகடன்:

    "இத்தனை வருட சினிமா அனுபவம் தந்த படிப்பினை என்ன?"

    "ரொம்பக் கஷ்டப்பட்டு 'செட்டில்' ஆயிட்டோம் என்று நினைத்தால், அது உண்மையில்லைன்னு தெரியுது! 'செட்டில்' ஆவது ஒன்றுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும். ஆனால், நடக்கிறது என்ன?

    இந்த வாழ்க்கை கடைசிவரைக்கும் உழைப்பைக் கேட்டுக்கிட்டே இருக்கு. அதுவும் சினிமா... குறைந்தபட்ச தர்மத்தோடு இருக்கிறவங்கதான் நிலைக்க முடியுது. இது நண்பர்கள் யாரு, எதிரிகள் யாருன்னு தெரிஞ்சுக்க முடியாத உலகம். ஆனா அந்த ரெண்டு பேருமே கண் முன்னாடி சிநேகமா சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. அதுதான் விசேஷம்!"

    "விமரிசனங்களை எப்படி எடுத்துப்பீங்க?"

    "நல்லாயிருக்குன்னு சொல்லும் போது சந்தோஷப்படறோமே... அதுமாதிரி நெகட்டிவ் விமரிசனம் கேட்கும்போதும் 'லைட்'டாக எடுத்துக்க வேண்டியதுதான்.

    நானே குத்தம் பண்ணியிருக்கலாம். ஆனால், 'பாய்ஸ்' படத்துக்கு விகடன் எழுதின விமரிசனம்... தப்பிருந்தா தலையில் குட்டலாம். ஸ்கேலில் ரெண்டு தட்டு தட்டலாம். முட்டிப்போட வைக்கலாம். கத்தியை எடுத்துச் செருகலாமா? அந்தக் காயம் அதிகமாக வலித்தது.

    என்னை வளர்த்துவிட்டு, என்னைக் கொண்டாடிவிட்டு, திடீர்னு தோளிலிருந்து தூக்கிப் போட்டால் என்ன செய்வேன், சொல்லுங்க. பரவாயில்லை.. இப்போ அந்தக் காயம் ஆறிவிட்டது!"

    ரெண்டு வரி நோட்: இவை மென்பொருள் எழுதுபவர்களுக்குக் கூட பொருத்தமாக பட்டது.

    ஞாயிறு, ஜூன் 20, 2004

    வெறும் பொழுது - உமா மகேஸ்வரி

    சுயம்

    அடுப்படியின்
    அழுக்கு மொஸைய்க்.
    விரலிடுக்கில் பாத்திரக் கரி.
    காற்றிலாடு துணிக்கொடியும்,
    நேற்றிருந்த கனாக்களும்
    வாழ்க்கையாச்சு.
    இருப்பின் அவஸ்தை மறைக்க
    இயல்பாகிப் போனதோர்
    சந்தோஷ முகமூடி.
    சுயத் திமிர் வேறு.
    தன்னைத் தான் ஆய்வதோடு
    பிறர் குணமும் கூறு போடல்
    தொடரத் தொடர வேதனை மிகும்.
    தொலைதூரத்தில் விசும்பும் நிலவும்,
    கேள்விகள் இன்றி சதா
    புல் தின்னும் ஆடுகளும்
    மனம் உறுத்தும்.
    பேச்செல்லாம்
    சவ ஊர்வலத்தின் சங்கொலி போல்
    வெறுமை.
    இவை தவிர்த்து எப்போதும்
    கடல் துப்பிய சிப்பியாய்
    கரை மணலில்
    நான் தனித்து



    விடுமுறைக்குப் பின்னான வீடு
    விரிகிறது தனது
    அலாதியான சிக்கல்களோடு
    ஒரு மாபெரும் சிலந்தி வலையாக.

    அதன் தற்காலிகமான கலகலப்பை,
    மழலை கூடிய குரல்களை
    வேடிக்கை விளையாட்டுக்களை
    மிருதுவான களங்கமின்மையைத்
    திணித்து எடுத்துப் போனார்கள்
    பிள்ளைகள் தங்கள் பள்ளிப்பைகளில்.

    ஸ்கூல் பஸ் நகர்கிறது
    சிரிப்பொலிகளோடும்,
    அழுகைத் துளிகளோடும், ஆடும் கைகளோடும்.

    முடிக்கப் படாத குழந்தை ஓவியத்தின்
    வர்ணங்கள் வாசற்படியில்
    வடிந்திருக்கின்றன.

    பாதாளத்துடன் இறங்கிவிட்ட
    வீட்டின் தலையைப் பிளந்து
    என் தனிமையோடு
    உள் நுழைகிறேன்

    என்னைப் பிய்த்துத் தின்னத்
    தயாராகக் காத்திருக்கிறது
    அசையாத குரங்கு பொம்மையின்
    ஒற்றைக் கை

    தமிழினி - 224 பக்கங்கள் - ரூ. 100/-

    சனி, ஜூன் 19, 2004

    விக்ரமாதித்யனும் வேதாளமும்

    அபராஜிதா

    வேதாளத்தை
    விக்ரமாதித்யனுக்குப் பிடிக்கும் நிரம்பவே
    விக்ரமாதித்யனை
    வேதாளத்துக்குப் பிடிப்பது போலவே

    விக்ரமாதித்யனுக்கு
    வேதாளத்தின் விண்ணானமும் விருப்பம்தான்
    விக்ரமாதித்யன் விருப்பம் தெரிந்துதான்
    வேதாளமும் விண்ணானம் பேசுகிறது விடாமல்

    வேதாளத்தை எப்போது வேண்டுமானாலும்
    வெட்டிவிட்டுப் போகமுடியும் விக்ரமாதித்யனால்
    வேதாளத்தை நம்பியில்லை
    விக்ரமாதித்யன்

    வேதாளத்தின் தயவு
    வேண்டியதில்லை விக்ரமாதித்யனுக்கு
    வேதாளம் கதை
    தெரியாதவனில்லை விக்ரமாதித்யன்

    வேதாளத்தின் முடிவும்
    அறிந்தவன்தான் விக்ரமாதித்யன்

    விக்ரமாதித்யன் வாழ்வில்
    வேதாளங்கள் அநேகம்

    வேதாளத்துக்கோ ஒரே ஒரு
    விக்ரமாதியன்தான்

    இனிய உதயம் - ஏப்ரல் 2004

    வெள்ளி, ஜூன் 18, 2004

    ஊடகப்போக்கன்

    Algerian chefs put the finishing touches to giant couscousபோன வாரத்தில் என் மனதில் நின்ற இணையச் செய்திகள்

  • 22,000 பேர்கள் சாப்பிடக்கூடிய உலகின் மிகப்பெரிய couscous (??) செய்து அல்ஜீரியா சாதனை படைத்துள்ளது. நூறு ஆடுகள், ஒன்றைரை டன் காய்கறிகள், 2600 கிலோ semolina (??) கொண்டு செய்யப்பட்டது. (BBC)

  • எழுதி முடித்தவுடன் அச்சிட்டு புத்தகமாக வெளிக் கொணர்ந்து விடலாம். நியு ஜெர்ஸியில் இருக்கும் Bookends என்னும் கடைக்கு ஃப்ளாப்பியைக் கொடுத்தால், பதினேழு நிமிடங்களில் தயார். (NYT)

  • இணையத்தின் ஆரம்ப காலத்தில் வாசக சுதந்திரம் கிட்டியது; அனைத்து உலகப் பத்திரிகைகளும் கிடைத்ததால். அடுத்து, படைப்பாளிகளுக்கு; வலைப்பக்கம், வலைப் பதிவு போன்றவற்றால். கூகிளின் விளம்பர தொழில்நுட்பம் மூலம் "freedom of the press is guaranteed only to those who own one" என்னும் பொன்மொழி பொய்யாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. (NYT)

  • இணையத்தின் மூலம் அதிகாரபூர்வமாக புதிய படங்களை பார்க்கலாம்; வலையிறக்கலாம். மாதத்திற்கு 12.95 டாலர் மட்டும் கொடுத்தால் போதும். (இணையமெங்கும்)
  • கல்லூரிகளில் இருந்து பட்டம் பெறுவதற்கு, சமூக சேவையை கட்டாயமாக்க வேண்டும். வருடத்திற்கு இருபத்தி ஐந்து மணி நேரமாவது பொதுத் தொண்டு புரிந்தால்தான் டிகிரி கையில் கிடைக்கும் என்பதை சட்டமாக்க, பென்சில்வேனியா எம்.எல்.ஏ மைக்கேல் மசோதா கொண்டு வந்துள்ளார். (NYT)

  • 1981-இல் பதவியேற்றவுடன் ரோனால்ட் ரேகன் வருமான வரியைப் பெருமளவு குறைத்தார். அதன் பிறகு அவரது பதவிக்காலம் முடியும் வரை குறைத்த வரியை ஏற்றினார். (Democrats)

  • பெங்களுரை விட சென்னையில் விலைவாசி அதிகம். லாஸ் ஏஞ்சலீஸை விட நியு யார்க்கில் வசிக்க அதிக செலவாகும். பே ஏரியாவை விட சிகாகோவில் குடியிருப்பதற்கு பணம் நிறைய வேண்டும். (இணையமெங்கும்)

    Indian Prime Minister Indira Gandhi
  • ஜூன், 12, 1975: தேர்தலில் ஊழல் புரிந்த குற்றத்திற்காக இந்திரா காந்தியை ஆறு வருட காலத்திற்கு எந்தப் பதவியும் வகிக்க கூடாது என தீர்ப்பாகிறது. (இந்த நாள்... அந்த வருடம்: BBC)
  • ஏழு வருடக் குழந்தைகளினால் பதியப்பட்ட பயனுள்ள வலைப்பதிவுகள். (BBC)

  • குணப்படுத்தக் கூடியதாக இருந்தாலும், 2000-த்தில் மட்டும், 600,000 பேருக்கு தொழுநோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. (BBC)

  • ரேகனுக்கு இரங்கல் கூறும் வாக்கெடுப்பு விவரம் - 355:0;
    கம்யூனிசத்தை அழிப்பதிலும், உலகத்தின் அனைத்து மூலைகளிலும் சுதந்திரம் பரவ பாடுபட்டதற்கும் பாராட்டு வாகெடுப்பு - 375:0;
    அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 435. (Sun Papers)

  • வாஷிங்டன் நகர ரெயில்வே அறிவிப்பு: ரேகன் இறந்ததன் நினைவாக, இன்று வழக்கம் போல் வண்டிகள் ஓடும். (In remembrance of President Reagan, we will be operating on our normal schedule.)

    Boris Becker, AP
  • குடியரசு கட்சியின் அவைத் தலைவர் மேல் குற்றச்சாட்டு: தேர்தல் நிதி கொடுத்த நிறுவனத்தை சட்டங்களிலிருந்து விலக்கு கொடுத்தார்; மறைத்து, கடத்தி வைக்கப்பட்டிருந்த டெக்ஸாஸ் (டெமொக்ராடிக்) எம்.எல்.ஏ.க்களை கண்டுபிடிக்க தேசிய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டது. (இணையமெங்கும்)

  • சொந்த வீட்டைக் கட்டித்தர லஞ்சமாக அரசு ஏலங்களை கொடுத்த புகாரில், கனெக்டிக்ட் மாகாண கவர்னர் மீது impeachment (தமிழில் என்ன?) நடவடிக்கை ஆரம்பம். (இணையமெங்கும்)
  • சவூதியில் மேலைநாட்டுக்காரர்கள் கூட பர்தா போட ஆரம்பித்துள்ளார்கள். ஷாப்பிங் போவதற்கு அஞ்சுகிறார்கள். உலகின் மிகப் பணக்கார நாட்டில் பிச்சை எடுக்கும் ஏழ்மை எட்டிப் பார்க்கிறது. (கதை அல்ல நிஜம்: BBC)

  • டான்சானிய நாட்டில், மனிதர்களை சாப்பிடும் சிங்கத்தைக் கொல்ல, சொந்த மனைவியின் உடலுக்கு விஷம் வைத்தார். (BBC)
  • அனில் அம்பானி ராஜ்யசபா எம்பி ஆகிறார். சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுடன் உபியில் நிற்கிறார். (இணையமெங்கும்)

  • தேசபந்து சி.ஆர்.தாஸ் நினைவு நாள் - ஜூன் 16 (எனது நாள்-காட்டி)
  • நியு ஹாம்ப்ஷைர் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் பதவி விலகினார். அரசு சார்பாக நடந்த மனையியல் வன்முறை (domestic-violence ?) கூட்டத்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். (NYT)
  • விம்பிள்டனில் இனி லீனக்ஸ் கோலோச்சும். பெக்கர் முதன்முறையாக வென்றபோதுதான், விம்பிள்டனில் கணினி எட்டிப் பார்த்திருக்கிறது. (BBC)

  • அழும் ஒட்டகத்தின் கதை ('The Story of Weeping Camel') என்னும் பார்க்க வேண்டிய படம், ஸ்டீவன் ஸ்பில்பெர்க்+டாம் ஹான்க்ஸ் இருக்கும் 'தி டெர்மினல்' படத்துடன் அமெரிக்காவெங்கும் வெள்ளித் திரைகளில் வெளியாகிறது. (Boston Metro)
  • தாகம் ('Thirst') என்னும் குறும்படமும் நிறையப் பேசப்படும். இந்தியா, ஜெர்மனி, பொலிவியா என்று மூன்று நாடுகளில் நடக்கும் மூன்று பிரச்னைகளுக்கும் உள்ள தண்ணீர் தனியார்மயமாக்கல் திரியை கொளுத்திப் போடுகிறார்கள். (IMDB)

  • Moroccan author Tahar Ben Jelloun's novel, This Blinding Absence of Light, won the 100,000 euro International Impac Dublin Literary Award 2004. (BBC)

  • கிஸ்வாஹிலி மொழியில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மற்றும் விண்டோஸ் வெளிவரும். அதிக அளவில் தாய்மொழி பேசும், ஆனால் குறைந்த அளவில் கணினி ஊடுருவிய மொழிகளில் இனிமேல் மைக்ரோசாஃப்ட் கவனம் செலுத்தும் என்று அறிக்கை. (BBC)

  • வியாழன், ஜூன் 17, 2004

    Irrational Exuberance

    'Gattacca' படம் எதிர்கால மக்களை குறித்தது. அறிவியல் புனைகதை வகையை சேர்ந்தது. வருங்காலத்தில் அனைத்து குழந்தைகளும் செயற்கை முறையிலேயே கருத்தரிக்கப்படுகின்றது. பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பது முதல், அறிவாளியா, விஞ்ஞானியா, விளையாட்டு வீரனா, அறிவியல் மேதையா, பங்குச்சந்தை வித்தகரா, எவ்வளவு வயது வாழலாம், என்ன கலர் கண், எவ்வளவு உயரம், முக்கிய உறுப்புகளின் அங்க அளவுகள் வரை அனைத்தும் தீர்மானிக்கப்பட்ட பின்பே செய்ற்கை முறையில் குழந்தை பிறக்கிறது. இவ்வாறு பிறப்பவர்களின் தகுதியை முன்கூட்டியே நிர்ணயித்து, என்ன வேலை, என்ன படிப்பு, எப்பொழுது ப்ரோமஷன் என்பது வரை கருவிலேயே அட்டவணை போட்டு பெற்றோர், பள்ளி, கல்லூரி, கம்பெனி, கோல்·ப் க்ளப் என அனைவருக்கும் அப்பாயிண்ட்மண்ட் கொடுத்து விடுகிறார்கள்.

    இந்த மாதிரி செயற்கை குழந்தை வேண்டாம், இயற்கையான கருத்தரிப்பே வேண்டும் என்று பிறக்கும் குழந்தைகளுக்கு சமுதாயத்தில் மவுசு கிடையாது. ஈனப்பட்டவ்ர்களை போல் பார்க்கப்படும் அவர்கள், தகுதியிருந்தாலும் தாழ்த்தியே வைக்கப் படுகிறார்கள். கதையின் நாயகன் இயற்கை முறையில் பிறந்தவன். வில்லனாக வருபவன் அவனுடைய தம்பி. செயற்கை முறையில் பிறந்தவன். முன்கதை சுருக்கம் போதும்.

    கதையில் ஒரு காட்சி: அண்ணன், தம்பி இருவரும் சிறு வயது முதலே, ஆற்றில் நீச்சல் போட்டி நடத்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் இயற்கை முறையில் பிறந்து சாதாரண மானுடர்களுக்கு வரும் நோய்களால் தாக்கப்பட்டு, கண் பார்வை குறைச்சலினால் கண்ணாடி போட்டுக் கொண்டு, மலேரியா முதல் ஜாண்டிஸ் வரை எல்லா வைரஸ்களும் குடியிருக்கும் அண்ணனே வெல்கிறான். அற்புதமான உடற்கட்டு, மனநலன், திரண்ட தோள்கள், நல்ல பாக்டீரியாக்கள் மட்டுமே உடலில் வைத்த செயற்கை தம்பி எல்லா நீச்சலோட்ட போட்டிகளிலும், அனைத்து வயதிலும் தோற்கிறான். எப்படி??? படத்தின் இறுதியில் தம்பி, அண்ணனிடம் கேட்கும் இந்த கேள்விக்கு விடை சொல்கிறான்:

    "நான் திரும்பிச் சென்று கரையைத் தொடுவதை குறித்து கவலைப் படுவதில்லை. என்னுடைய இலக்கு எல்லாம் அதிக தூரம், மிக வேகமாக நீஞ்சி ஒரு வழிப் பாதையில் வெல்வதுதான். வென்ற பிறகு, திரும்பக் கரையை அடைவதை குறித்து கருத்தில் கொள்ள மாட்டேன்".

    ஜி-மெயிலுக்குப் போட்டியாக யாஹூ குதித்தது. இன்று ரீடிஃப் ஒரு GB-யாக இடவசதியை அதிகரித்து இருக்கிறது. இவர்களும் இந்த மாதிரி 'கெட்டாக்கா' அண்ணனின் மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள்.

    ஜி-மெயிலிடம் ஒரு திட்டம் இருந்தது.

  • சிலருக்கு மட்டுமே இந்த கிகா பைட் மடல் சேவை. யாருக்கு வேண்டுமானாலும் எளிதில் கிடைக்காது.
  • அவர்களின் மடல்களும் ஆராயப்பட்டு, விளம்பரங்கள் கொடுக்கப்படும். காட்டாக, நான் நண்பனிடம் ·ப்ளோரிடா வருவதாக மின்னஞ்சல் கொடுத்தால், அவனுடைய பதிலில், டிஸ்னி வோர்ல்டுக்கு டிக்கெட் வாங்குவதற்கான சலுகைக் கூப்பானும், விமானப் பயண கம்பெனியின் சிறப்பு விலைப் பட்டியலும் கொடுக்கப் பட்டிருக்கும்.

    இப்போது களத்தில் குதித்திருக்கும் யாஹூ, ரிடிஃப் போன்றோரிடம் இது போல் எல்லாம் எதுவும் கிடையாது. 'அவன் செய்து விட்டானா... நானும் copycat-ஆக செயல்படுகிறேன்' என்னும் தொலைநோக்கு பார்வை மட்டுமே தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாள் கழித்து ஜி-மெயில் 'எங்களின் சோதனை முடிந்து விட்டது. இனி அனைவரும் மாதம் பத்து டாலர் சந்தா கட்டவேண்டும்' என்று அறிவித்தால், யாஹூவும், ரீடிஃப்-உம் வழிதொடரும்.

    தொண்ணூறுகளின் இறுதியில் இணையம் ஒரு பொற்களஞ்சியமாக விளங்கியது. இலவச இடவசதி, இலவச முத்து மாலை, வங்கியில் அக்கவுண்ட் திறந்தால் நூறு டாலர், ஷாப்பிங் தளத்தில் கணக்கு தொடங்கினால் டிவி என்று 'பிதாமகன்' சூர்யாவாக அள்ளி விட்டார்கள். அப்போதைக்கு ஐ.பி.ஓ. கொடுத்த பணம் இருந்தது. வரவுக்கு மேலே (சொல்லப் போனால், வரவே இல்லாமல் கூட) செலவழிக்க பங்குச்சந்தை ஆதரவளித்தது. அன்றும், இன்றும் (என்றும்?) அமெரிக்காவின் பொருளாதாரத்தின் உயிர்நாடியைக் கையில் வைத்திருக்கும், ஆலன் க்ரீன்ஸ்பான் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்து அவஸ்தைபடுத்துகின்றன: 'Irrational Exuberance'

    என்னுடைய கவலை 'எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; எதிர்த்த வீட்டுக்காரனுக்கு இரண்டு கண்ணும் அவியட்டும்' என்னும் கதையாக யாஹூவும், இன்ன் பிறரும், கூகிள் வாரி வழங்கும் இடத்தையும் காலி செய்ய சொல்லாமல் இருப்பதுதான்.

    (பாலாஜி)

  • உயிரெழுத்து குழுமம்- அம்புலி மாமா... அம்புலி மாமா...

    சேவியர் - #5258: சதுரங்கம் படத்துக்காக யுகபாரதி ஒரு பாடல் எழுதினார்,

    அம்புலி மாமா அம்புலி மாமா
    ஆசை தீர முத்தம் தாதா
    கன்னக் சிவப்பில்
    பின்னம் கழுத்தில்

    என்று போகும் அந்தப் பாடல். இந்தப் பாடலில் பல்லவியை நண்பர் பழனிபாரதியிடம் இவர் சொல்ல. பிரமாதமாக இருக்கிறதே என்று பாராட்டியவர்.... பேரழகன் படத்துக்காக பாடல் எழுதும் போது அதைக் காப்பியடித்து

    அம்புலிமாமா அம்புலிமாமா
    அம்புலிமாமா நாந்தானே....

    என்று பாட்டை எழுதிவிட்டார். பாடலைக் கேட்ட யுகபாரதி அதிர்ச்சியாகி... இப்படியும் இருக்கிறார்களா கவிஞர்கள் என உள்ளுக்குள் உடைந்தே போனார். பழனி பாரதி ஒரு பாடலைச் சம்பாதித்தார்.... ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டார். இப்போது என்னுடைய கேள்வியெல்லாம்..... எத்தனை (பிரபலமாகாத) கவிஞர்களின் கற்பனைகள் இப்படி திரைப்படப் பாடலாசிரியர்கள் சிலரால் திருடப்பட்டு விற்பனையாகிறதோ ?

    புதியமாதவி - #5264: கவிஞர் இன்குலாப் என்னிடம் சொல்லியிருக்கின்றார்.. " என் கவிதைகளில் சில உருவகம், படிமம், சொல்லாடல் எல்லாம் சீவகசிந்தாமணியில் இருப்பதை என் கவிதைகளை நான் எழுதியப் பிறகு நான் மணிமேகலை நாடகத்திற்காக சீவகசிந்தாமணியை முழுமையாக வாசிக்கும்போது உணர்ந்தேன்..இப்போதெல்லாம் ஏதாவது புதிய கற்பனை, படிமம் வந்து விழுந்தால் நமக்கு முன் எழுதிய சீவகசிந்தாமணியில் இருக்கின்றதா என்று புரட்டிப் பார்க்கின்றேன்..!!!"

    என் கவிதை "போராளியின் பயணத்தில் " நான் எழுதியிருந்தது..

    கதறினாள் சின்னாத்தா-எந்தக்
    கண்ணனும் வரவில்லை

    "பாஞ்சாலிக்குப்
    பட்டுச்சேலைக் கொடுத்த
    கண்ணபிரானின் கரங்கள்
    சின்னத்தாயின்
    நிர்வாணத்தில்
    சிறைப்பட்டுப்போனது"

    ஆனால் அச்சில் வரும்போது இந்த வரிகள் நீக்கப்பட்டு அவசரம் அவசரமாக எழுதிக்கொடுத்தேன்

    "அவள் கதறுலுக்கு ஓடிவர
    அவள் என்ன
    ஐவருடன் படுத்த
    தர்மராஜனின் தர்மபத்தினா..?"
    என்று.

    ஏன் தெரியுமா,, என் பட்டுச்சேலை வரிகளின் கருத்து அப்படியே கவிஞர் இன்குலாப் எழுதி மிகவும் பேசப்பட்டு விமர்சிக்கப்பட்ட வரிகள் என்று. என் கவிதைகளை வரிவிடாமல் வாசித்து பிழைத்திருத்தமும் செய்த அய்யா இன்குலாப் அவர்கள் ஏன் என்னிடம் இதைச் சொல்லவில்லை..? விடுவேனா சொல்லுங்கள்.. கேட்டேன்.. அய்யா சொன்னார்.. நீ என் கவிதையை வாசிக்கலை. உனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாதுனு எனக்குத் தெரியும்.

    தந்தையர் தினம்

    ஞாயிற்றுக்கிழமை 'அப்பாக்களின் தினம்'.



    ஆதர்ச அப்பா என்றல் கண் முன் நிழலாடுபவர் ரேமண்ட் விளம்பரங்களில் வருபவர்தான். ஆபீஸில் இருந்து சோர்ந்து வந்தாலும் 'ரீ-வைடால்' மாத்திரை விளம்பரத்தில் வருபவர் போல் 'முடியலே' என்று புலம்பாமல், செல்ல மகளுடன் விளையாடுபவர். காலில் வைத்துத் தூக்கிப் போடுவது, தோளில் உப்பு மூட்டை தூக்குபவது, ஓடிப்பிடித்து விளையாடுபவது, கண்ணாமூச்சி ஆடுவது, குழந்தையைத் தூக்கிப் போட்டு பிடிப்பது என்று உற்சாகமாக வளைய வருபவர்.

    இன்னொரு (பழைய) ரேமண்ட் விளம்பரத்தில் மகனை காடு, மலைக்குக் கூட்டி சென்று கதை பேசுவார். ஒரு டிபிகல் அப்பா என்றால், வனத்துக்கு சுற்றுலா கூட்டிச் சென்றாலும், அம்மாவிடம் பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு, பெட்டி மட்டும் தூக்குபவர் என்னும் பிம்பத்தை உடைத்த விளம்பரம். திரைப்படங்களில் காட்டப்படும் எஸ்.வி.ரெங்காராவ் முதல் 'பிரமிட்' நடராஜன் வரையினாலான (இதை வைத்து கூட தந்தையர் தின ஸ்பெஷல் கட்டுரை ஒன்று செய்யலாம் போல் இருக்கிறதே... :) அப்பாக்களிடம் இருந்து வித்தியாசப்படும் சித்தரிப்புக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    ஆனால், என்னதான் குழந்தைகள் விரும்பினாலும் வேர்வைகளின் தலைநகரம் சென்னையில் இருந்து கொண்டு கோட்-சூட் எல்லாம் மாட்டிக் கொண்டு திரிய முடியாது. நமக்கு சௌகரியம் காட்டன் பனியன்+ஜீன் ஷார்ட்ஸ் மட்டுமே. விளம்பரத்தில் மட்டுமே கோட் போட்ட மாடல் அப்பாவை ரசிக்கலாம்?

    புதன், ஜூன் 16, 2004

    வலைப்பதிவாளர்களுக்கு வழிகாட்டல் நெறிகள்

    பாராவின் கட்டளைகளைத் தொடர்ந்து வலைப்பதிவுகளுக்கு என்று ஏதாவது தார்மீக நெறிகள் இருக்கிறதா என்று தேடியபோது, இந்த வழிகாட்டுதல்கள் கிடைத்தது.

    அவர்கள் கட்டளைகளின் சாராம்சம்:
    நேர்மை + நியாயம்

  • திருடாதே!
  • ஆதாரம், நன்றி, சுட்ட இடம் எங்கே என்பதை சொல்லி விடுங்கள்.
  • பரபரப்பு தவிர்.
  • வதந்தி வேண்டாம்.
  • எது உங்கள் கருத்து, எது பட்டாங்கு (fact) என்பதை தெளிவாக்கவும்.

    தீங்கின்மை
  • பாதிக்கப்படுபவர்களை கருத்தில் கொள்.
  • தனி மனித சுதந்திரத்தில் தலையீடு கூடாது.

    பொறுப்பு
  • தவறுகளை திருத்திக் கொள்.
  • விளம்பரதாரர்களுக்காக பதிவுகளை மாற்றாதே.
  • சக வலைப்பதிவர்களின் ஒழுங்கீனமான செய்ல்பாடுகளை அம்பலப் படுத்து.
  • மற்றவர்களுக்கு சொல்லும் உயரிய நியதிகளை நீ முதலில் பின்பற்று.

    கொசுறு: பாரா முன்பொரு நாள் கொடுத்த பிடிக்காத பத்து

  • 0.004" வாமன வித்தியாசம்

    இந்தப் பதிவு வயது வந்தோர்களுக்கு மட்டுமே ஏற்றது. கணேஷ் சந்திரா போல் இருபத்தொன்று வயதுக்குக்குக் கீழ் இருப்பவர்கள் தவிர்த்து விடலாம்.


    Viveka Babaji -வீட்டில் இருக்கும் கருப்பு-வெள்ளை டிவியில் அந்த விளம்பரம் வந்தால் அணைத்து விடுவார்கள். செய்திகளுக்கு முன் வரும் 'நிரோத்' விளம்பரம் சில காலத்துக்குப் பின் அனுமதிக்கப் பட்டது. என்ன சொல்ல வருகிறார்கள், எதற்கு பயன்படுத்தலாம் என்பது ஓரளவு புரிந்திருந்தாலும், சுய தேடலும் ஆர்வமும் மிகுந்தது மட்டுமே மிச்சம். செய்தித்தாள்களில், விளம்பரப் பலகையில் என்று நிறைய இடங்களில், இருவர் கை கோர்த்து - பீச் மணலில் அந்தி மயங்குவதை, ரசிப்பதை பார்க்கலாம். அதற்கும் நிரோத்துக்கும், குடும்ப கட்டுபாடுக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்காத அப்பாவிகளாக நாங்கள் மூவரும் இருந்தோம். இந்த மாதிரி விஷயங்களை விளக்குவதற்காகவேனும் ஆறாம் வகுப்பில் இருந்தே செக்ஸ் எஜுகேஷன் வர வேண்டும் என்று காரசாரமாக விவாதிப்போம். எங்களுடன் வம்பு செய்யும் 10-டி பசங்களுக்குக் கூட அதில் கருத்தொற்றுமை நிலவியது.

    ஸ்கூலில் இருந்து திரும்பிவரும் வழியில் உள்ள பெட்டிக்கடையில் நிரோத்தை கேட்டுப் பெறுவது என்று நண்பர்கள் முடிவெடுத்தோம். ஸ்டிக்கர்களுக்கும், ஐஸ்-க்ரீம்களுக்கும் மட்டும் செலவு செய்யும் பணத்தை சேமித்து, ஒரு பாக்கெட் வாங்கி மூவரும் அலசலாம் என திட்டம். கடைக்காரன் கை விரித்து விட்டான். ·பார்மஸியில் விசாரித்து பார்த்தவுடன், அவர், என்னுடைய அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். அந்த ·பார்மஸி எங்களுக்கு ராசியானது இல்லை. வீட்டை விட்டுத் தள்ளி மெயின் ரோடில் இருப்பதாலும், அங்கு மருந்து வாங்கிய ஒரு முறை - எனக்கு நோய் குணமாகததாலும், அந்தப் பக்கம் ·பைவ் ஸ்டார் வாங்கக் கூட கால் வைக்க மாட்டோம். அவருக்கு எப்படி என்னையும், என்னுடைய அப்பாவையும் அடையாளம் தெரிந்தது என்பது, இன்னும் எனக்குத் தெரியாது.

    பிலானி போய் இறங்கி, 'மோகம் முப்பது நாள்' ராகிங் முடிந்து, சீனியர்களுடன் சமபந்தி போஜனம் ஆரம்பித்த பிறகு, என்னுடைய நெடுநாள் ஆசையை நிறைவேற்றும் வாய்ப்பு அரங்கேறியது. நிரோத் என்ற் அல்பதனமாய் சிந்திக்காமல், மூட்ஸ் வாங்கி ஆளுக்கொரு ஆராய்ச்சியில் ஈடுபட்டது குறித்து சொல்ல வெட்கமாய் இருக்கிறது. பூஜா பேடிகளும், தீப்தி பட்நாகர்களும் இருந்தால்தான் பயன்படும் என்பது வாங்கிய பிறகுதான் தெரிகிறது. இப்பொழுது இங்கு எழுத வந்தது அது குறித்து அல்ல.

    ஆணுறைகளில் நடக்கும் புரட்சியை குறித்து அறிமுகம் செய்வதே இந்தப் பதிவின் நோக்கம். ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. வழக்கமான அமெரிக்க என்.பி.ஏ கூடைப்பந்து, சவுத் பார்க் சிலாகிப்பு எல்லாம் முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் ஸ்வீடனில் ஆணுறை வழங்கும் அரிய திட்டத்தை சொன்னார்கள். அமெரிக்காவின் கல்லூரிகளிலும் இது போன்ற திட்டங்கள் இருக்கிறது. இலவச ஆணுறை, சல்லிசான விலையில் கருத்தடை சாதனங்கள் என அனைத்தையும் விடுதியின் வாசலிலேயே டெலிவரி கொடுத்து விடுவார்கள். இலவசமாகக் கொடுக்கும் ஆணுறையின் அகல, நீளங்களை ஹார்வார்ட் மாணவர்களின் H-Bomb நடத்திய அலசலுக்குப் பேச்சு தாவியது. இலவசமாக தரப்படும் ஆணுறை 0.007 இன்ச் தடிமனாக இருக்கிறது என்பதே அந்தக் கட்டுரையின் முக்கிய புலம்பல். அவர்களுக்கு உலகின் தலை பத்து காண்டம் பட்டியலில் இருந்து சில ஆணுறைகள் மட்டுமாவது சகாய விலைகள் விற்கப்பட வேண்டும் என்று முழங்க ஆரம்பித்தனர். சராசரி ஆணுறையின் தடிமன் 0.003" மட்டும்தான்.

    எனக்குத் தெரிந்து எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்காக, முள் வைத்து, கொம்பு கொடுத்து, முனை நீட்டி, கோடு போட்டு, இருட்டில் தகதகத்து, கலர் கலராய், டிஸைனர்களின் வரிகள் போட்டு, யானை போல், குதிரை போல் விதவிதமான வடிவங்களில் விற்பதை லோக்கல் ·பார்மஸியில் அலசியிருக்கிறேன். பாட்டுப் பாடும் ஆணுறைகள் கூட பார்த்திருக்கிறேன். சமீபத்தில் பாக்கெட் வைத்தவை கூட விற்பனைக்கு வந்ததாக கேள்பட்டிருக்கிறேன்.

    ஆனால், 0.004" கொடுக்கும் அனுபவத்துக்கும்; 0.007" பயன்படுத்தினால் கிடைக்கும் அனுபவத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம், இருவருக்கும் இடையே இருந்துவிடப் போகிறது!?! தெரிந்தால் ஒரு பதில் போடுங்க :)

    செவ்வாய், ஜூன் 15, 2004

    கோலையாத்தின் சறுக்கல்

    லாஸ் ஏஞ்சலீஸ் வாசிகளே கலக்கல் பேர்வழிகள். எடுத்த காரியத்தை அசால்ட்டாக முடிக்கும் திறமை உடையவர்கள். அமெரிக்கக் கூடைப்பந்தாட்டத்தின் ராஜாக்கள் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸை சொல்லலாம். (இதே ஊரில் இருக்கும் க்ளிப்பர்ஸ் மகா சோடை டீம்). லேக்கர்ஸின் காப்டன் 'ஷக்கீல்-ஒநீல்' ஏழடிக்கு மேல் உயரம். கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்துக் கொண்ட மாதிரி இருக்கும். எதிரணிக்காரர்களை லங்கேஸ்வரனின் வீரர்களைப் போல் ஊதித் தள்ளிவிடுவார். அவருடை முக்கியமான சகா 'கோபி ப்ரையண்ட்'. வாலி போன்ற பலத்துடன் எதிராளியை 'தூசு' என்று சிம்பு வசனம் பேசிக் கொண்டே வீழ்த்துவார். இவர்கள் போதாது என்று ஜாம்பவான் (வயதிலும்+அனுபவத்திலும்) 'கார்ல் மாலோன்'. அங்கதன் 'பேட்டன்' அமைதியாக பந்தை அனைவருக்கும் நகர்த்துபவர். NBA இறுதியாட்டத்திற்கு அணியை தேர்வு பெறச் செய்தவர்கள்.

    இப்பேர்பட்ட goliath-களுக்கு அடி சறுக்கியிருக்கிறது. ஒரு ஆட்டம் மட்டுமே தோற்பார்கள், போனால் போகிறது என்று இரண்டு விட்டுக் கொடுப்பார்கள் என்றெல்லாம் ஆருடம் சொன்னவர்களே அசந்து போயிருக்கிறார்கள். கிரிக்கெட்டில் கென்யாவைப் போன்ற டெட்ராயிட்டை (Detroit) சேர்ந்த பிஸ்டன்ஸ் வெற்றி வாயிலில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏழு ஆட்டம் கொண்ட சீரிஸில் மூன்றை வென்று விட்டார்கள். இன்று மாலையும் வென்றால், கோப்பை கிடைத்து விடும். இதுவரை எவருமே 3-1 என்ற நிலையிலிருந்து தோற்றதில்லை. டெட்ராயிட் மீதமிருக்கும் மூன்று ஆட்டங்களில் ஒன்றை வென்றால் கூட போதும்.

    ஆட்டத்தைத் தொடர்ந்து பார்க்கும் பலருக்கும் டெட்ராயிட் ஜெயிக்க வேண்டுமே என்னும் எண்ணம் உள்ளூர இருக்கும். ஆனாலும், எல்லே லேக்கர்ஸ் வீறு கொண்டு எழுந்தால் யாராலும் தடுக்க முடியாது என்பது உறுதி. ஒரே ஒரு சக்தியை தவிர... முன்பே சொன்னேனே 'வாலி' கோபி ப்ரையனுக்கும் அனுமார் ஷக்கீலுக்கும் நடக்கும் நிழல் யுத்தம் நடு அரங்குக்கு(ம்) மீண்டும் எழாத வரை; லாஸ் ஏஞ்சலீஸ் நிச்சயம் மிச்சம் இருக்கும் மூணு மாட்சிலும் டெட்ராயிட்டை துவம்சம் செய்து விடும்.

    பிகு: யாராவது யூரோ 2004 பார்க்கிறீங்களா??

    காணவில்லை - இந்தியாவின் நைட்டிங்கேல்

    இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் ராஜ்ய சபா எம்.பி.யாக இருப்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் பாடுவதற்கு அப்பாயிண்ட்மண்ட் கிடைப்பதே பெரிய விஷயம். இன்ன பிற நேரங்களில், ஆஷா போன்ஸ்லே, வாணி ஜெயராம் போன்ற கலைஞர்களை வளர்வதற்கு முன் கிள்ளிவிட துடிப்பவர். தேசபக்திப் பாடல்களையும் உணர்ச்சி ததும்பப் பாடுவார். இப்பொழுது பொழுது போக்காக எம்.பி.பதவி. பொழுது போக்கக் கூட அரசவை மட்டும் எட்டிப் பார்க்கவில்லை.

    பேருக்குப் பின்னால் போட்டுக் கொள்ள இரண்டு இனிஷியல் கிடைக்கும் என்னும் எண்ணத்தில் பதவியை ஒப்புக் கொண்டாரோ என்னவோ? (இந்த நேரத்தில் காரணமில்லாமல் 'சோ' நினைவுக்கு வருகிறார். பதவியை தங்கத்தட்டில் வைத்து கொடுத்தபோது கூட, தன்னால், ரெகுலராக பங்கேற்க முடியாது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டு எம்.பி.யானார்).

    திரைப்பட உலகத்தை மொத்தமாக குறை சொல்லலாம் என்று ஆர்வத்துடன் சத்ருகன் சின்ஹா முதல் சுனில் தத் வரை லிஸ்ட் போடுவதற்கு முன்பே ஷபனா ஆஸ்மி சிவப்புக் கொடி தூக்குகிறார். மாநிலங்களவையில் இந்த பிரசினையை எடுத்து வைத்ததே ஷபனாதான். எம்.பி3 திருட்டு, கர்நாடக/ஹிந்துஸ்தானி இசை பாரம்பரிய பராமரிப்பு, பாடல் வரிகளுக்கான ரேட்டிங், சென்ஸார் சர்டிபிகேட் போல் திரை மற்றும் இசை ஆல்பங்களுக்கும் சான்றிதழ், புதிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் தனியார் நிறுவனங்களுக்கான திட்டங்கள் என குரல் கொடுக்க ஆயிரம் விஷயம் இருக்கிறது. அதை எல்லாம் விட்டு விட்டு இசைத் தொண்டும், பள்ளி திறப்பு விழாக்களுக்கும் (சவுரவ் கங்குலியின் மனைவி நடத்தும் நடனப் பள்ளி திறப்பு போன்ற விழாக்களினால் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு ஆஜர் கொடுக்க முடியவில்லை - லதாவின் அதிகாரபூர்வ அறிக்கை) செல்வதே தலையாய கடமை என்றால் கலை சேவை மட்டும் செய்து கொண்டு இருக்க வேண்டியதுதானே?

    எதற்காக தேச சேவைக்கு வருகிறார்?

    ஜே. ஜே.: சில குறிப்புகள்: சிறு குறிப்புகள்

    பெயரிலி:
    நாவலுக்கு இலக்கணம் வலிந்து அதன்படி தமிழின் சென்ற நூற்றாண்டின் சிறப்பான பத்து பட்டியல் வகுத்து, தனது இரண்டு புதினங்களை முன்னுக்கு வைக்கின்ற எழுத்தாளத்திறனாய்வுக்குழவிகள் தொடங்கி, (தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு - ஜெயமோகன்.) தாள் தேர்ந்து நூல் வாசித்து பிடித்தபத்து பொறுக்கும் பெரும்பாலான சாதாரண வாசகர் வரைக்கும் எவருமே தமது பத்துக்குள் ஜேஜேயின் குறிப்புகளைத் தவிர்க்கமுடியாமற்போனதற்கு, குறிப்புகளின் கருவும் பாத்திரப்படைப்பும் சொற்செதுக்கலும் இழை மேவிச் சீராய் ஊடுபாவி அமைந்துகொண்ட விதமே காரணமாக இருக்கின்றது என்று தோன்றுகின்றது. எழுத்தாளர்-திறனாய்வாளர்-வாசகர் என்ற முக்கோணமுடுக்கிலே கதையின் பாத்திரங்கள் மாற்றி மாற்றி தம்மை இடம் பெயர்த்துக்கொள்கின்றன. அதே நேரத்திலே, குறிப்புகளை வாசிக்கின்றவர்களும்கூட தெளிவாக விளக்கமுடியாத காரணங்களின் உந்தலால், தம்மை ஏதோவொரு பாத்திரத்தால் ஆரம்பத்திலே அடையாளம் கண்டுகொண்டு, தாமும் கதையோட்டத்துடன், ஜேஜேயின் குறிப்புகள் மேலான பாலுவின் குறிப்புத்தளத்துக்குச் சமாந்திரமான இன்னொரு தளத்திலே, வேறொரு கோணத்திலே அதே பாத்திரங்களோடு தமக்கான சொந்தக்கதையைக் கோலாட்டி வழிநடத்திச் செல்ல நேரிடுவதாகின்றது. இந்தவிதத்திலே, பதிவாளன் பாலுவூடாக ஆசிரியர் என்ன சொல்லவந்தார் என்பதிலும், வாசகனின் பிறிதான பதிவாடியிலான தெறிப்புகளும் முக்கியமாகின்றன. இதன் காரணமாக, ஆசிரியரின் காலடியொற்றிப் பாதம் பதித்தாடும் கட்டாயத்திலிருந்து வாசகன் தளர்த்தப்படுகின்றான்; விடுவிக்கப்படுகின்றான். இஃது இந்தப்புதினத்துக்கு மட்டுமேயான சிறப்பில்லையெல்லையென்றாலும், எல்லாப்புதினங்களுக்கும் இச்சாத்தியம் ஏற்படுவதில்லை.

    இந்தச்சாத்தியம் நிகழ்வதற்கு பாத்திரப்படைப்புகளின் முளைப்பும் அமைப்பும் செதுக்கலும் விவரிப்பும் ஆசிரியனாலே முழுமையாக வரையறுக்கப்படாது, வாசகனுக்கு வேண்டியபோதிலே கைகொடுத்து விழையாப்பொழுதிலே விலகி நின்று கவனித்து, இன்னொரு பொழுது படைப்பும் தெறிப்பும் மீள ஒட்டிக் கொள்ளும் வண்ணம் நிகழ்த்தல் வேண்டும். இது மண்டையோடு பிளந்து மூளை அறுவைச்சிகிச்சை செய்யும் கலை; சற்றே நெருங்கினால், வாசகனின்மீது பாத்திரத்தின் செறிவின்மீதான திணிப்பும் சற்றே விலகினால், கதைமீதான ஈடுபாட்டு விலகலும் நிகழும் என்ற கம்பியிலே எம்பிக்குதித்துக் கால் தந்தியாடும் நிலை. ஜேஜேயின் பதிவு மட்டுமல்ல, அரவிந்தாட்சமேனன், எம்.கே.ஐயப்பன், முல்லைக்கல் மாதவன் நாயர், திருச்சூர் கோபாலன் நாயர் என்று மட்டுமின்றி, சாராம்மா வரைக்கும் இதே காட்டியும் காட்டாமலும் வாசிப்பவர் கற்பனைக்கும் இடங்கொடுத்து கவர்ச்சி தரும் செயல் நிகழ்கின்றது. தமிழ் எழுத்துமட்டத்தின் முந்தநாளையும் நேற்றினையும் இன்றினையும் வாசிப்பாகப் பாதி, ஊர்வம்பூசியேறிய செய்தியாக மீதி கண்டு நடக்கும் தினசரி வாசகன் மட்டுமேயானவனுக்கு, ஆசிரியரின் பாத்திரங்கள்மீதான அறிமுக விவரணங்கள் - இது மலையாள இலக்கிய உலகத்தின்மீதான பார்வையா தமிழ் இலக்கிய உலகத்தின்மீதான பார்வையா என்பதற்கு ஆசிரியர் ஆங்காங்கே கொடுக்கமுயற்சித்த விளக்கங்களை அவரின் விரிவும் ஆழமும் தேடியிலே அங்கும் இங்கும் காணமுடிந்தபோதும்- 'யாரோ, இவர் யாரோ? இவரோ? அவரோ?' என்ற உருவகிப்பினை ஏற்படுத்தினாலும், கதை விரியுமிடத்திலே அந்தத் தனியாளை இந்தப் பாத்திரமாய் ஒட்டிவைக்கும் சுதை கழன்று அரூபம் மட்டும் வாசகனோடு நேரத்துக்கேற்ப இரசத்துளி உருளலும் வடிவமுமாய் -ஆனால், தானானது உள்ளே மாறாமற் போகின்றது.

    முழுவதும் படிக்க - பெயரிலி கோப்புகள்

    திங்கள், ஜூன் 14, 2004

    ஜே.ஜே : சில குறிப்புகள்

    சுந்தர ராமசாமி

    'இலக்கியப் போக்கையே தலைகீழாக மாற்றிவிட்டார்களே இங்கு. மூன்று வேளை சாப்பிடுகிறவனைப் பற்றி இப்போது இலக்கியத்தில் நாம் ஒரு வார்த்தை பேசக்கூடாது. செம்மான், தோட்டி, வெட்டியான், நாவிதன், வேசி, பிச்சைக்காரன், கோடாலிக்காரன், கசாப்புக் கடைக்காரன், மீன்காரி, பூட்ஸ் துடைக்கும் சிறுவர்கள், கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் யார் வேண்டும் என்றாலும் வரலாம். இலை போட்டுச் சாப்பிடுகிறவன் வரக்கூடாது. .....
    ....
    'புதிதாக இன்னும் எழுதித் தா' என்று அரிக்கிறான் என் வெளியீட்டாளன். பாலு, நான் சரித்திரத்துக்கு எங்கே போவேன்? என் நாவல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததும், 'பட்சி சாஸ்திரம்', 'பெண்களை வசீகரிப்பது எப்படி?', 'படுக்கை அறை ரகசியங்கள்', 'வாகட விளக்கம்', 'எண்பது வயதுக்குப் பின் இளமை' என்று எழுதிக் கொண்டிருந்த பயல்கள் எல்லாம் சரித்திரத்தின் மேல் ஏறி விழுந்து பிச்சுப் பறக்கவிட ஆரம்பித்து விட்டார்கள். பாலு, உனக்குத் தெரியும். எங்களுக்குக் கொஞ்சம் போல்தான் சரித்திரம் இருக்கிறது. உங்களுக்கு என்றால் முக்குளித்து விளையாடலாம். இடிந்துபோன கோட்டை கொத்தளங்கள், பழுதடைந்த அரணமனைகள், மண் மூடிவிட்ட சுரங்கப் பாதைகள், சாய்ந்த கோபுரங்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதிவிட்டோ ம். பாலு, கோட்டாற்றில் ஒரு சண்டை நடந்ததாமே, உனக்கு அது பற்றி, ஏதாவது விபரம் தெரியுமா? ஒரு பழைய பாடல், பழைய பாடலின் வாய்ப்பான வரி, கிடைத்தால் போதும். அதை ஒரு பிடி பிடித்தேன் என்றால் தொள்ளாயிரம் பக்கத்துக்கு எழுதிவிடுவேன். ஜே.ஜேயும் அவனுடைய வானர சேனைகளும் புலம்பிக்கொண்டு இருக்கட்டும். எனக்கு என் வசகர்கள்தான் முக்கியம். இலக்கிய தர்மத்தை ஒருநாளும் நான் கைவிட மாட்டேன்.'



    பிறமொழி எழுத்தாளர்கள் மாதிரித்தான் நம் மொழி எழுத்தாளர்களும் என்பதை நாம் மறந்துவிடலாம்? தரத்தில் வேண்டும் என்றால் கூடுதல் குறைவு இருக்கலாம். குணத்தில், நடத்தைகளில், பழக்க வழக்கங்களில், போட்டி பொறாமைகளில், குழு மனப்பான்மைகளில், குழி பறிப்பதில், காக்காய் பிடிப்பதில் ஏகதேசமாக ஒன்றுதான். வெவ்வேறு மொழி பேசினாலும் நாம் எல்லோரும் இந்தியர்கள்தானே? நமக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்குமா?


    'தமிழ் வாசகன் எவனும் பிறமொழி இலக்கியம் படிக்க முடியாவிட்டால் உயிரை விட்டுவிடுவேன் என்று சொல்லவில்லையே' என்றார். எனக்கு முகத்தில் அறைந்தாற்போல் ஆயிற்று. 'நீங்கள் எழுதவில்லை என்று உண்ணாவிரதம் இருக்கும் வாசகன் எவன்?' என்று நான் திருப்பிக் கேட்டிருக்கலாம். அந்த நிமிஷத்தில் எங்கள் உறவு முறிந்து போய்விடும். 'எவரும் அவர் விரும்பும் கருத்தை வெளியிடுவதுதான் இலக்கிய உலகின் நிர்த்தாட்சண்யமான நியதி' என்று சொல்லிக் கொண்டே கடைசி வரையிலும் என்னிடம் பேசாமல் இருந்துவிடுவார். இவரும் பேசாதாகிவிட்டால், அப்புறம் நான் தனியே பேசிக் கொள்ள வேண்டிய நிலை இன்று.


    'கால்பந்தாட்டக்காரனின் நினைவுகள்' என்ற தலைப்பில் அவன் எழுதியுள்ள நூலில், "தோவிகளுக்குப் பின் நாம் எப்போதும் காணும் பலவீனம், குழு அல்ல, நான்தான் முக்கியம் என்ற விளையாட்டுக்காரனின் மனோபாவமே. காலடியில் வந்துசேரும் பந்து என்னுடையதல்ல, என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. உனக்குக் கொண்டுபோவதற்குச் சாத்தியமானதற்கு மேல் ஒரு அங்குலம் கூடப் பந்தைக் கொண்டுபோக முடியும் என்று நினைக்காதே. நீதான் 'கோல்' போட வேண்டும் என்று ஒரு போதும் நினைக்காதே. உனக்கு பெரும் தடைகள்சூழ்ந்து வரும்போது, பந்தை மேலெடுத்துச் செல்ல, வசதியுடன் உன் சக ஆட்டக்காரன் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே' என்றெல்லாம் ஜே.ஜே. எழுதியிருக்கிறான். கால் பந்தாடத்தை அடிப்படையாக வைத்து விரிவாக ஜே.ஜே. எழுதியுள்ள குறிப்புகள், கால் பந்தாட்டத்தை பற்றியது மட்டும் அல்ல என்று விமர்சகர்கள் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். எங்கும் பலவீனத்தின் ஊற்றுக்கண்ணுக்கான காரணம் மனிதன், அவனுக்கும் அவன் ஆற்றும் பங்குக்கும் உள்ள உறவில் கோணல் ஏற்படுத்திக் கொண்டு விட்டதே என்றும், இந்தக்கோணல் சுய பிமானத்திலிருந்து தோன்றுகிறது என்றும் ஜே.ஜே. கூறுவதாக விமர்சகர்கள் குறித்திருக்கிறார்கள்.


    காலச்சுவடு - ரூ. 75/-

    திண்ணையின் Take-aways

    இசை கேட்டு... : சந்திரலேகா வாமதேவா
    1997 ம் ஆண்டில் எலிகளை வைத்து இசைப் பரிசோதனை செய்யப்பட்டது. சாஸ்திரீய இசையை அதாவது classical இசையை மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்ட எலிகள் 90 விநாடிகளiல் தமது அடைப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றன. கடும் இசையைக் (heavy Metal) கேட்ட எலிகள் தப்பிச் செல்வதற்கு 30 நிமிடங்கள் எடுத்தன.



    சமீபத்தில் வாசித்த நூல்கள் : ஜெயமோகன்

    தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் - மூவாலூர் ராமமிர்தத்தம்மாள்
    இந்நாவல் ஒரு சமூக ஆவணமாக இன்றும் மிக முக்கியமானது. இதில் நாம் ஏறத்தாழ முற்றாக மறந்துபோன ஒரு காலகட்டத்தின் எளிய சித்திரம் உள்ளது. தாசிகள், அவர்களின் தாய்மார்கள், டாபர் மாமாக்கள், மைனர்கள், கிரிமினல் வக்கீல்கள் அடங்கிய ஓர் உலகம். 'தில்லானா மோகனாம்பாள்' [கொத்தமங்கலம் சுப்பு] போன்ற நாவல்களில் நாம் ஓரளவு கலைப்பூர்வமாகவும் விரிவாகவும் காணும் உலகம்தான் அது. அந்தக் கோணத்தின் மறுபக்கம் இந்நாவலில் உள்ளது. தாசிவாழ்க்கையில் உள்ள இழிவுகள் அனைத்தையுமே தார்மீகமான கோபத்துடன் ஆசிரியை சொல்லிச்செல்கிறார். அவ்விழிவை உருவாக்கி நிலைநிறுத்தும் சமூக நம்பிக்கைகள், மதநம்பிக்கைகள், அதை வைத்து சுரண்டிப் பிழைக்கும் தனவந்தர் மற்றும் புரோகிதர் சோதிடர்க் கும்பல், அதன் பொருளியல் உள்ளடக்கங்கள் என ஒர் அர்ப்பணிப்புள்ள சமூக சேவகியின் சீற்றம்கொண்ட குரலை நாவல் நெடுகிலும் கேட்க முடிகிறது.

    இரண்டாவதாக இந்நாவலின் சிறப்பாகச் சொல்லவேண்டியது இதில் தாசிகளின் உலகின் தந்திரங்கள் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் நுட்பமான உளவியல் அவதானிப்பு உள்ளது என்பதுதான். குணபூஷணி செய்யும் நீண்ட சொற்பொழிவில்கூட தாசிகள் செய்யும் தந்திரங்கள் விவரிக்கப்படுகையில் ஆண் பெண் உறவின் ஆழங்களும் ஜாலங்களும் வௌதவருகின்றன. உதாரணமாக பெரியமனிதர்களை நக்கல்செய்து பேசி இழிவு செய்தும், குற்றேவல்கள் செய்யவைத்தும் அவர்களுடைய உள்ளார்ந்ந்த மசோக்கிய இயல்பைத்தூண்டி விசித்திரமான இன்பங்களை அளிக்கிறார்கள்.தாசி கற்புடன் தன்னையே நினைத்து உருகி வாழ்வதாகக் கற்பனைசெய்ய விழைகிறார்கள். அதை அவர்கள் உள்மனம் நம்புவதில்லை. ஆகவே மனப்போராட்டம், அலைக்கழிப்பு. இந்த மன அலைகளே அவ்வுறவின் முக்கியக் கவர்ச்சியாக அமைந்து அவர்களை மூழ்கடிக்கின்றன.


    தமிழ்ப் புதுக்கவிதை வரலாறு - ராஜமார்த்தாண்டன்
    தமிழ் புதுக்கவிதையின் வரலாறு குறித்துப் பேசும் நூல்களில் முக்கியமாக இதுகாறும் குறிப்பிடப்பட்டது வல்லிக் கண்ணன் எழுதிய 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' [இந்நூலுக்காக அவர் சாகித்ய அக்காதமி விருது பெற்றார்] . அக்கினிபுத்திரன் [கனல் மைந்தன்] எழுதிய புதுக்கவிதைவரலாறு மிதமிஞ்சி வானம்பாடி இயக்கப் புகழ்பாடுவதாகையால் பொது வரலாறாகப் பொருட்படுத்தப்படுவதில்லை. சி சு செல்லப்பாவே புதுக்கவிதை குறித்து எழுதியிருக்கிறார். அது எழுத்து இதழ் சார்பான பார்வை.

    1950களில் சி சு செல்லப்பாவால் வெளியிடப்பட்ட எழுத்து இதழ் உருவாக்கிய கவிதைநோக்கின் இயல்புகளாக கீழ்க்கண்ட அம்சங்களைச் சொல்லலாம்.
  • கவிதையின் மறைபிரதிக்கு [subtext] முக்கியத்துவம் தந்து வாசகனின் கற்பனையை தூண்டும் விதமாக எழுதுவது
  • கவிதைமொழியை ஆர்ப்பாட்டமில்லாமல், அணிகளோ அலங்காரங்களோ இல்லாமல், முடிந்தவரை எளிமையாக, பேச்சுமொழிக்கு அருகேவரும்விதமாக அமைப்பது
  • கவிதைவடிவில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக சொற்களை பயன்படுத்துவது
  • இசையமைதியைத் தவிர்த்துவிடுவது
  • கவிஞனின் அந்தரங்கமான குரலையே கவிதையில் வௌதப்படுத்துவது. பொதுவான கருத்துக்களையும் குரல்களையும் தவிர்த்துவிடுவது .

    இதற்கு மாறான அமைப்பாக உருவானது வானம்பாடி இயக்கம்.
  • வெளிப்படையான, நேரடியான, மறைபிரதி ஏதும் இல்லாத குரல்
  • தளர்வான கட்டுப்படில்லாத வடிவம்
  • பொதுவான அரசியல் சமூகக் கருத்துக்கள் மற்றும் அறைகூவல்கள்
  • அணிகள் சொல்விளையாட்டுக்கள் கொண்ட மேடைப்பேச்சு நடை ஆகியவை கொண்டது.


    தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா

    சுஜாதா கதைகள் நான்குவகை.
  • நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை.
  • நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல்சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம்.
  • மூன்றாவதாக உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள்.
  • நான்காவது வகை ஒரு வகையான பகீரடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை.

  • ஞாயிறு, ஜூன் 13, 2004

    தோணியும் அந்தோணியும்

    சைதன்யா:

    அவை எங்களுக்கான கணங்களாய் அமைந்தன. விளக்க முடியாதவை அவை. மேலே வானம். சுற்றிலும் கடல். வானத்திலிருந்து நீலம் வழிந்து கடலில் இறங்கியிருக்கிறது. மெல்லிய குளிர். சல்லாத் துணி போலும் இருள். நிலக்கடலையின் பாதித்தொலி போல் சிறு படகு. கூட மைக்கேல். நாங்கள் பேசிக் கொள்ள எதுவும் இல்லாமல் கிடந்தோம். எங்கள் உள் மௌனங்கள் ஒன்றையொன்று தழுவிக் கிடந்தன. பேசி அந்தக் கணத்தைக் கொச்சைப்படுத்திவிட வேண்டாமாய் இருந்தது. உணர இயற்கை ஆயிரம் விஷயங்களை உள்ளே நிரப்பிக் கொண்டே இருக்கிறது. பிரமிப்போ, மயக்கமோ கூட சிறு வார்த்தையாடலோ கூட அதை அசக்கி விடும். குறிப்பாக, அந்தக் கணம் தன் பவித்திரத்தினை இழக்க நேர்ந்து விடும். இயறகை என்பது பூதம். வார்த்தை என்பது குப்பி. பூதம் சீசாவுக்குள் மாட்டிக் கொள்பதாவது...? என்ன குரூரம்? இருவருமே அதை விரும்பவில்லை. மனதின் அந்தரங்க வளாகங்களையும் சற்று இறுக்கம் தளர்த்திக் கொள்ள, ஆசுவாசப்பட வேண்டித்தானே இருக்கிறது? திருமணம் என்கிற அளவில், மனதுக்கினியவர்கள் பெரியவர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக் கொள்வது போல... நாங்கள் இயற்கை முன் அதை வழிபாடுணவுடன் அடிபணிந்து நிற்கிறோம். எங்கள் இருவருக்குமாய் இயற்கை தன் காருண்யத் தழுவலை நிகழ்த்துகிறது. நாங்கள் அதன்முன் ஒட்டிப் பிறந்த ரெட்டைப் பிள்ளைகளாய் உணர்கிறோம். ஒரு தாயின் இரு தனங்களையும் பற்றி ஆளுக்கொரு பக்கம் அமுதுண்கிறோம். அவன் பெற்ற தட்பநுட்பம் எனக்கானதாகவும் என் அனுபவம் அவனுடையதுமாகவும் அமைகிறது. மொழியால் இதை விளக்க முடியுமா? கூடுமா? இணக்கமான மௌனத்திலும் ஆழங்காற்பட்டு உள்ளிறங்க வேறு ஏதாலும் இயலுமா? அன்பின் பரிமாற்றத்தினை ஒரு மௌனம் விளக்கும் அளவு, சிறு புன்னகை தெளிவிக்கும் அளவு மொழி தெரிவிக்க எந்நாளும் சாத்தியப்படாது. உணர்வுக் கடலுக்கு பாத்தி வெட்டி விடுகிறது மொழி.

    காலம் உறைந்து கிடந்தது எங்களுக்கு வெளியே. அலைக்குதிரைகள் கட்டிக் கிடக்கின்றன. நாங்கள் மல்லாக்கப் படுத்திருந்தோம். மேலே வானம் - பயமுறுத்த வேணாமோ அந்த வானத்தின் முகம். நான் தனியே இப்படி வானத்தைப் பார்த்துப் படுத்துக் கிடக்கவும் கூடுமோ? வெப்பம் வெளிக்கசிய குளுமையைத் தக்கவைத்துக் கொள்ளும் மண்பானை போல அந்த இணக்கமான நல்லமைதி, நிசப்தம் பிரம்மாண்டத்தோடு தொப்புள்கொடி சுற்றிக் கிடந்தது. ஆ... கூட அவன். நாங்கள் எங்கள் ஆத்மாக்களை இதோ, இந்தக் கடலில் வானத்தின் நீலம் போலும் அலசிக் கொண்டிருக்கிறோம் ஒருசேர. எங்கள் மௌனம் ஒருவருக்கொருவர் சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொண்டேதான் இருக்கிறது. நாம் அதை உணர்வதில்லை. அதை உணர்த்த - உணரக்கூட யாராவது வேண்டியிருக்கிறது. அவரும் வெளிப்படையான மனதுடன், பரிமாறும் பெருவிருப்புடன் அதை வெளிப்படுத்த எந்தவிதக் கட்டாயத்தையும் நிர்ப்பந்தத்தையும் சுயநலமான எதிர்பார்ப்பையும் கொள்ளாதவராய் அமைய வேண்டியிருக்கிறது.

    எத்தனை ifs and buts, provideds - அப்படி நட்பும் சாத்தியப்பாடுகளுமே வெகு அரிதாகவே கிடைக்கின்றன. பேசி அதை இழத்தல் தகாது. விளக்கியுரைத்து அதைக் குழப்பிவிடுதல் மகாபாவம்.

    பாற்கடலில் துயில்கொண்ட பரமன். மகாலெட்சுமி. அருகே செல்லமோ செல்லமான மனைவியில்லாமல் பரந்தாமனால் அப்படிக் கண்மூடிக் கிடந்திருக்க முடியுமா என்ன? ஐயோ, நான் ஏன் இந்தக் கணங்களுக்காய் வார்த்தைகளைக் குதப்பிக் கொண்டிருக்கிறேன் எனக்குள்? அவரவர் உள்வாசனையை அவரவர் எட்டிப் பிடிக்க நான் ஒதுங்கி வழிவிட வேண்டும். அதற்கு சகமனிதனை நம்பு. நேசி. கைப்பிடித்துக் கொள். சிரி. ரசி. மனதை - நுழையீரலை விரியத் திற. ஏதாவது உள்நுழையக் காத்திரு. வசதி பண்ணிக் கொடு. வானத்தின் நீலம் இறங்க இறங்க வெளிற வேணாமோ? வானம் மேலும் அடிவண்டலாய்க் கலங்கி, கெட்டிப்பட்டு, நீலம் கருநீலமாகி, கருப்பாகிவிட்டது.

    (பழைய இந்தியா டுடேயில் வெளியான சிறுகதையில் இருந்து எனக்குப் பிடித்த சில பகுதிகள்)


    வெள்ளி, ஜூன் 11, 2004

    கேள்வியும் நானே... பதிலும் நானே!

    1. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் ப்ளீஸ்.

    அது சொன்னால் எனக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்து விடுவார்கள். தனியாகக் கேளுங்க சொல்றேன். கொசுறாக நெட்டில் படித்த ஒரு ஜோக்கில் காரெக்டர்களை மாற்றிப் பார்க்கலாம்.

    வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜெயேந்திரர், ஜெயலலிதா, சுப்பிரமணிய சுவாமி மூவரும் குஜால்சாகத் தண்ணியடித்துவிட்டு எக்குத்தப்பாக சிறையில் விழிக்கிறார்கள். தாங்கள் எலெக்ட்ரிக் சேரில் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. ஏன், எதற்கு, எப்படி ஒன்றும் புரியலை.

    "நீங்கள் கடைசியாக என்ன கேட்க வேண்டுமோ சொல்லுங்கள்" என்னும் உத்தரவுடன் ஸ்விட்சில் கை வைத்திருக்கிறான் ஒருவன்.

    முதலில் ஜெயேந்திரர் "நான் தெய்வங்களை வணங்கியதும், ஸ்லோகங்கள் சொன்னதும் உண்மையானால், நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது." என்கிறார். என்ன ஆச்சிரியம்... ஸ்விட்ச் திருகினதும் அவருக்கு ஒண்ணும் ஆகவில்லை. அவரின் கடவுள் நம்பிக்கை மெச்சப்பட்டு விடுவிக்கப் படுகிறார்.

    அடுத்து ஜெயலலிதா "நான் மதிக்கும் சட்டங்களும், மக்களுக்கு செய்த தொண்டுகளும், உண்மையானால் தர்மதேவதை காப்பாள்.". இவரையும் எலெக்ட்ரிக் சேர் எதுவும் செய்யவில்லை. தர்மம் தலை காக்கிறது.

    கடைசியாக சுவாமி, "அந்த ரெண்டு வொயரையும் சேர்த்து கனெக்சன் கொடுங்கோ... அதுவரைக்கும் யாரும் சாக மாட்டா" என்றார்.



    2. சாயாசிங், சதா, கோபிகா, ப்ரியாமணி, அபர்ணா - யார் அடுத்த சிம்ரன்?

    சதா - ஓவர் ஆக்டிங் ஜோதிகா.
    ப்ரியாமணி - 'பாலு' மணம் மாறா லைலா
    அபர்ணா - அடுத்த வீட்டுப் பெண் ரோஜா
    கோபிகா - மலிவு விலை ஸ்னேஹா
    சாயாசிங் - இடுப்பு ஒடிக்கும் சிம்ரன்


    3. பின்னூட்டம் கொடுக்கும் உனக்கே, பாரா மாதிரி ஒன்பது கட்டளைகள் கொடுத்துக் கொள்ள முடியுமா?

    அ. உங்களுக்குக் காமெண்ட் கொடுத்தார் என்பதற்காக, அவருடைய பதிவில் சென்று எதிர் மரியாதை புரிய வேண்டாம்.

    ஆ. RBF, ஈஸ்வரி, ரமேஷ் கார் கொடுத்த வட்டிப் பணம் போல் மறுமொழி கொடுக்காமல், IOB, SBI, BOB போன்ற சேவிங்ஸ் அக்கவுண்ட்டில் ஏறும் சொல்ப தொகையாக கொடுத்தாலும், நீடித்த காலத்திற்கு, தொடர்ச்சியாக கொடுக்கவும்.

    இ. காலையில் காபியுடன் ஆபீஸ் செல்லும் அவசரத்தில் பேப்பர் புரட்டுவது போல் தலைப்புகளை மட்டும் படித்து விட்டு மறுமொழிய வேண்டாம்.

    ஈ. இதுவரை வந்திருக்கும் மறுமொழிகளை மட்டும் பார்த்துவிட்டு நீங்களும் அட்டெண்டன்ஸ் கொடுக்கக் கூடாது.

    உ. நீங்கள் ஒரு முறை சொன்னால் பத்து மில்லியன் முறை சொன்ன மாதிரி! அதற்காக ஒரே விஷயத்தை பத்து தடவை பேஸ்ட் செய்து நூறு மில்லியன் முறை சொல்லாதீர்கள்.

    ஊ. உங்கள் கிண்டல், நகைச்சுவை, வருத்தம், அங்கதம் எல்லாம் எழுத்தில் வரவேண்டும், முறையே :P, :), :(, ;) ஸ்மைலி மூலம் வந்தால் எங்கோ மிஸ்டேக்.

    எ. ஸ்ரீராமஜெயம், 786, PTO மாதிரி அல்ல ஸ்மைலி பொம்மைகள். கொஞ்சம் கரிசனம் கொடுத்து உபயோகியுங்கள்.

    ஏ. வீட்டு வாசலில் நின்று நலம் விசாரிப்பது போன்றவை பின்னூட்டங்கள். ஷேமலாபங்கள், குசலம் விசாரிப்பன போன்றவற்றிற்குத் தனிமடல் போடுங்கள்.

    ஐ. 'தமிங்கிலத்துக்கு மன்னிக்க', 'விவரமாக பிறகு என் பதிவில் எழுதுவேன்', 'நான் எழுத நினைத்தேன்...', போன்றவை விஜய்காந்த் படத்தில் வரும் சண்டைக் காட்சியில் யார் ஜெயிப்பார் என்பது போல் ஊரறிந்த விஷயம். மீண்டும் மீண்டும் ரசித்துப் படிக்க முடியாது. தவிர்க்கவும்.


    4. ஒட்டக்கூத்தருக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்கிறார்களே... ஏன்?

    அது ஒரு பெரிய கதைங்க. குலோத்துங்க சோழ ராஜாவுக்குப் பெண் எடுக்க அரசவைப் புலவர் ஒட்டக்கூத்தர் பாண்டிய மன்னரிடம் தூது போகிறார். அங்கே தன்னுடைய அக்மார்க் குசும்பைக் கொண்டு வஞ்சப் புகழ்ச்சியில் பாண்டியனைத் தாளித்து விடுகிறார். பாண்டிய அரசவைப் புலவர் புகழேந்தியும் சளைக்காமல் எசப்பாட்டில் ஒட்டக்கூத்தரை கவுத்துடறார். 'சமயம் வரும்போது வெச்சுக்கலாம்' என்று சிரித்துப் பேசி நிச்சயதார்த்தம் நடந்தேறுகிறது. சோழனுடன் திருமணம் முடிந்தவுடன் பெண்ணுடன் அனுப்பும் சீராகப் புகழேந்தியைக் கேட்க சொல்கிறார். 'ஆகா... அங்கு பெண்ணை எவ்வாறு நடத்துகிறார்கள் என்று அறிவதற்கு சரியான ஆள்' என்று சந்தோஷத்துடன் அனுப்பி வைத்து விடுகிறார் பாண்டிய ராஜன். அந்தப்புரமே கதி என்று புது மாப்பிள்ளை சோழர் இருக்கிறார். சீதனமாக வந்த புகழேந்தியை சிறையில் தள்ளி குதூகலிக்கிறார் ஒட்டக்கூத்தர். மோகம் முப்பது நாள் கழிந்தவுடன், ராஜாவுக்கும் ராணிக்கும் நடுவில் ஊடல். ராஜாவை அந்தப்புரத்தை விட்டு வெளியேற்றி தாழ்ப்பாள் போட்டு விடுகிறார். சமயம் பார்த்துத் தோழிகளும் ஒட்டக்கூத்தரின் பழிவாங்கலை நினைவுறுத்துகிறார்கள். பாண்டிய அரசி 'ப்ரேக்கிங் பாயிண்ட்டில்' இருக்கும்போது 'அம்மா... குழந்தே' என்று வாயில் கதவை தட்டுகிறார் ஒட்டக்கூத்தர். கோபத்தின் உச்சியில், மேல் தாழ்ப்பாள், கீழ் தாழ்ப்பாள் எல்லாம் சேர்த்து 'இரட்டைத் தாழ்ப்பாள்' போட்டு விட்டதாக வெண்பா-டுகிறாள்.

    (புகழேந்தியும் ஒட்டக்கூத்தரும் பாடிய வஞ்சப் புகழ்ச்சி பாடல்கள், சிறையில் இருந்து விடுதலையாகி பாண்டிய குமாரியை சாந்தப்படுத்திய புகழேந்தியின் பாடல் எல்லாம் மரபிலக்கியத்தில் கேளுங்க... சொல்லுவாங்க...!)


    5. குறைந்த செலவில் வித்தியாசமான குறும்படம் எடுப்பது எப்படி?

    வீட்டில் இருக்கும் உங்கள் மூன்று வயது செல்ல மகனை கூப்பிடுங்கள். ஆன் செய்யப்பட்ட ஹாண்டிகேமை கொடுத்து, ஒரு மணி நேரமாவது - ஊர் சுற்றி, விளையாட சொல்லுங்கள். படத்தொகுப்பை உங்கள் மனைவியிடம் ஒப்படையுங்கள். பிண்ணனிக்கு சிவமணியின் ஃப்யூஷன், எல். சுப்ரமணியத்தின் இசை இரண்டையும் போதிய அளவில் கலக்குங்கள். 'அனுதினம்', 'தரையில் ஒரு தாமிரம்' என்பது போல் இலக்கணமாய் பேர் சூட்டுங்கள். அருமையான ஆர்ட் ஃபிலிம் ரெடி.


    6. Virus, Adware, Spyware, Hackware, இவர்களை நிறுத்துவதற்கு நாதியே கிடையாதா?

    திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் என்பது போல் இவர்களாய் நிறுத்தாவிட்டால், எதுவும் செய்யமுடியாது. இன்னும் சிலர் நாங்கள் ராபின் ஹுட் என்று வேறு பம்மாத்துகிறார்கள். 'இராமநாராயணன் படத்தைப் போட்டால் டிவியை ஆஃப் பண்ணு' என்பது போல் நாம் சிலவற்றை அறிவுறுத்தலாம். இப்போதைய நிலையில், கமல் ஸ்னேஹாவிடம் இதழ் பதிக்க ஆரம்பித்த பின்புதான் விழித்துக் கொண்டு, சேனல் மாற்ற ரிமோட்டைத் தேடுகிறோம். 'உங்கள் கணினியில் ட்ரோஜன் புகுந்துள்ளார்' என்றபின் சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினியை துவக்குகிறோம். இதற்கு பதிலாக தீநரி உலாவி, நோட்பேட், ஈ-கலப்பை தவிர வேறு எதையும் என் கணினியில் இயக்காதே என்று நாம் சொல்வதை கேட்டால் போதும். உத்தரவின்றி எதுவும் உள்ளே நுழையாது. இது போன்ற முயற்சியை பலர் ஆரம்பித்துள்ளார்கள். சாம்பிளுக்கு : Antivirus Software Turned Upside Down - Windows Developer Network


    7. ஏன் இந்த விபரீத கேள்வி-பதில் பகுதி?

    இது என்னுடைய நானூறாவது பதிவு. இது மட்டுமாவது சுத்தமான நெய்யில் வார்த்தது போல் சொந்தமாக எழுதியதாக இருக்கட்டுமே என்னும் ஆர்வக் கோளாறுதான்.

    பின்னூட்டம் (ரா.கா.கி)

    லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்: கதையை விரும்பி படிப்பதற்கு வாசகனின் ஆர்வம், மொழிப்புலமை, வயது, கிடைக்கும் ஓய்வு நேரம், ஆசிரியரின் பிரபலம், படிக்க பத்திரிக்கை கிடைக்கிற வாய்ப்பு, படித்து ஏற்பட்ட தேர்ச்சி, கதையைப் பற்றிய விளம்பரம்.

    இப்படி பல காரணங்கள் இருக்கு.

    ஆர்வம்: "அந்தப் பொண்ணை விவரிக்கறான் பாரு..சூப்பர்"
    ஆர்வமின்மை: "ஆறு பக்கம் படிக்கணுமா?"
    மொழிப்புலமைஇன்மை :"டமில் ரொம்ப படிக்கல சார்..பிரெஞ்சு படிச்சேன்.. இதுதான் 'கா'னாவா?"
    வயது: பழம் தின்னு கொட்டை போட்டாச்சு. இந்த வயசுல எனக்கு காதல் கதை வேணுமா சார்?

    பத்திரிக்கையின் மெத்தனம்:
    இன்றைக்கு பல பத்திரிக்கைகள் போட்டியிலே இயங்கும்போது வரும் கதைகளை நன்கு பரிசீலித்து, வெட்டி ஒட்டி போட சரியான ஆசிரியர் குழு இல்லாத நிலையில், கதை போடுவது ஒரு சடங்காக ஆகிவிடுகிறது.

    "ரெண்டு பக்கத்துக்கு எதாவது மேட்டர் வேணுமில்ல, போட்டுத் தொலைங்க"

    படித்து ஏற்பட்ட தேர்ச்சி:
    வாசகன் கொஞ்சம் விசயம் தெரிஞ்சவன், இல்ல அவனே கதை எழுதறவன்னா, படிக்கறச்சே சீக்கிரம் சலிப்பு வந்திரும்.

    "கைநாடியைத் தொட்டவுடனே அவனுக்கு லிவர் கேன்சர் இருப்பது தெரிந்தது", "சோழன் எக்ஸ்பிரஸ் சரியான நேரத்தில் வந்திருந்தது", "கூட்டமில்லாத பேருந்தில் ஏறினான் பெரியசாமி" -- இதை படிச்ச ஒடனே என்னங்கடா புரூடா விடறானுகன்னு மூடிடுவான்.

    ஆசிரியரின் பிரபலம்:
    பிரபல ஆசிரியர் சுஜாதான்னா படிச்சுரணும்னு படிப்பான். சரி ஒழிஞ்சு போறது, இரா.முருகன், லாவண்யா இப்படி சில பேரு எழுதினா படிப்பான்.. ஊர் பேர் தெரியாத ஆள்னா சந்தேகம்தான்..

    கதையைப் பற்றிய விளம்பரம்: "இந்தக் கதையில எத்தினி தடவை ரஜினின்னு வருதுன்னு சரியா சொன்னா வைரமோதிரம் தருவாங்களாம்"

    பத்திரிக்கை படிக்க வாய்ப்பு:
    "காப்பி மட்டுமில்ல, குமுதம், விகடன் எல்லாம் நிறுத்தியாச்சு"
    "இந்த கதை புத்தகமா ஒனக்கு சோறு போடும்? போய் பாடத்தை படிறா"

    ஓய்வு நேரம்: "படிக்கணுனு பாக்கறேன்..ஆபீஸ்ல ஆடிட்.."
    "புத்தகத்தை திறந்தேன்...டிவில டிஸ்கவரி சானல்ல முதலை காட்டினான்."
    "எவ்ளொ பெரிசு...மூடிட்டேன், புத்தகத்தை.."
    "படிக்க உட்கார்ந்தா கரண்ட் போயிடுச்சு"

    படிக்கறதுக்கு இவ்வளவு இடைஞ்சல்..........

    இத்தனையும் மீறி இன்னிக்கும் படிக்கறவன் இருக்கான். ராகவன் சொன்னாப்புல ஆசிரியருக்கு கடிதம் போடறான் "சுமதியின் தியாகம் கண்ணில் நீர் வரவழைத்தது"ன்னு. தன் பேராவது பிரிண்டுல வராதான்னு..

    ஆனால் முழு கவனத்தோட வாசிக்கறவன் ரெண்டு பேர்தான்..ஒருத்தன் எழுதினவன், இரண்டாவது அதை பத்திரிகைக்கு அச்சுக் கோக்கிறவன்..



    சிஃபி ராயன்: இந்தக் கடுதாசி போடறவன் ஒருத்தன் இருக்கான் பாருங்க.... பயங்கர விசேஷமானவன். எனக்குத் தெரிஞ்சு ஒழுங்கா படிக்கற யாரும் கடுதாசியே போடுவதில்லை. படிக்கறதே பெரிசு. இதில கடுதாசி வேறயா?

    ஆனால் பத்து பாயிண்டு போல்டில் அயன்புரம் சத்தியநாராயணன், அரவக்குறிச்சி அசோக்ராஜா, ஐயாறு வாசுதேவன் என்று எந்த பத்திரிகையிலேயும் சில பிரஹஸ்பதிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

    இதிலும் சில விசேஷப் பிரபுக்கள் உண்டு. தினமணியில் கடிதம் எழுதுபவர்கள் ஒருவிதம் என்றால், வாரப் பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதுபவர்கள் ஒருவிதம். இவர்கள் எழுதாத விஷயமே இருக்காது.

    1. அனைத்துப் பத்திரிகைகளிலும் கேள்வி கேட்பார்கள்
    2. ஆங்கில பத்திரிகை/நாளிதழ்களில் இருந்து சுட்டு துணுக்கு எழுதுவார்கள்
    3. காலட்சேபம், கூட்டம் என்று போய் சுவாரசியத் தகவல் என்று பிட் எழுதுவார்கள்
    4. அப்புறம் நிச்சயம் வாசகர் கடிதம் எழுதுவார்கள்

    வாசகர் கடிதம் பற்றி நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் ஒரு சுவாரசியமான தகவல் சொன்னார். ஒரு பதினைந்து பைசா (இப்போ இன்னா வெல சார்...) தபால் கார்டில் நடுவில் ஒரு போடு போட்டுவிட்டு, மேல் பகுதியில்,

    அன்புள்ள ஆசிரியருக்கு
    ...........தேதியிட்ட இதழில் வெளிவந்த எழுத்தாளர்
    .....................கதை பிரமாதம். அற்புதம். இதுபோல்
    எழுத்தாளர்களை ஊக்குவியுங்கள்.

    கீழ்ப் பகுதியில்

    அன்புள்ள ஆசிரியருக்கு
    ....................தேதியிட்ட இதழில் வெளிவந்த
    எழுத்தாளர்....................கதை படு திராபை. எப்படி
    இப்படிப்பட்ட கதையைப் பிரசுரிக்கிறீர்கள். இனியாவது நல்ல கதைகளைப்
    பிரசுரியுங்கள்.

    என்று எழுதி மறக்காமல் ஊர்பெயருடன் தன் பெயரை வேறு வண்ண பால்பேனாவில் எழுதுவாராம்.

    இதுவாவது பரவாயில்லை. வேறொரு சுவாரசியம் அப்புறம் சொல்கிறேன். மின் இதழ் வாசகர் கடிதங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?


    சொக்கன்: ஆமாம், மின் இதழ்களுக்கெல்லாம் வாசகர் கடிதங்கள் வருகிறதா என்ன ? நம் மின் வாசகர்களெல்லாம் தெய்வத்துக்கு நிகரானவர்களாயிற்றே, படிப்பதே பெரிய விஷயம், இதில மின்னஞ்சல் வேற கேட்குதா என்று கண்களை உருட்டி உறுமுகிறவர்களாயிற்றே!

    'தினம் ஒரு கவிதை' அனுபவத்தில் சொல்கிறேன் ... இணையத்தில் பிரசுரமான எதையாவதுபற்றி அரை பேர் கடிதம் எழுதினால், ஆயிரம்பேர் படித்திருக்கிறார்கள் என்று அர்த்தம்,

    அதில் எத்தனைபேர் ஊன்றிப் படித்தார்கள் என்பதை பா. ராகவரிடம்தான் கேட்கவேணும்!

    வியாழன், ஜூன் 10, 2004

    ஆர். வெங்கடேஷ்

    ரா.கா.கி.: கவிதையில் எனக்குக் குரு ஞானக்கூத்தன். பல செய்திகளை அவரிடமிருந்துதான் நான் அறிந்துகொண்டேன். அறிந்துகொண்டிருக்கிறேன். வண்ணநிலவன் கவிதைகளில் முக்கியமாக என்னைக் கவர்ந்தது, நேரடித்தன்மை. கூடவே ஒரு கமெண்ட். கவிதையைச் சட்டென உயர்த்தி, ஞாபகமண்டலத்தில் இருத்தி வைப்பது கமெண்ட்தான். பல கவிதைகளில் இந்தக் கமெண்ட் வண்ணநிலவனிடத்தில் பயங்கர உயிர்ப்புடன் இருக்கிறது.

    என் டெஸ்க்டாப்
    கொஞ்ச நாள் சே குவேரா
    அழகு தொப்பியும்
    குறுந்தாடியும்
    கொள்ளை கொண்ட நாள்கள் அவை.
    அப்புறம் மாவோ
    கிறுகிறுக்க வைத்தவை
    அழுக்குக் காக்கியும்
    கூர்மைக் கண்ணும்
    கீழை மார்க்சியமும்.
    சிறிது நாள் மார்க்குவெஸ்
    சில நாள்கள் குந்தர் க்ராஸ்
    அப்புறம் சட்டென
    ஒரு நாள் பாரதி,
    வீரக்கொம்பூன்றி
    செல்லச் செல்லம்மாளோடு.
    அன்னையும் அரவிந்தரும்
    அலங்கரித்தது
    பின்னொரு நாள்.
    சில நாள் சாமி
    சில நாள் கோவில்
    சில நாள் குடும்பம்
    அலங்கரித்த எவரும்
    அதிக நாள் நீடித்ததில்லை
    எப்போதும்போல்
    சுகமாய் இருக்கிறது
    சுத்தமாய் இருக்கும்
    டெஸ்க்டாப்.

    எஸ்.பொவுடன் மூன்றரை மணி நேரம் 1

    Thanks to eelam Arts & literature Yahoo Groupசமீபத்தில் கனடாவில் இருந்து வெளிவரும் காலம் என்ற இதழ் ஏ.ஜே.கனகரட்னா சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறது. ஏ.ஜே.வோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் எஸ்.பொவும் ஒருவர். ஏ.ஜே. லேக் ஹவுஸ் நிறுவனத்தினரின் Daily News பத்திரிகையில் வேலை பார்த்து வந்த நேரம். முதலில் துணை ஆசிரியராக அங்கே பணிக்குச் சேர்ந்தார். பின்னர், அவரது வேலைத் திறத்தினைக் கண்டு, நிர்வாகம் அவரை Special Features Editor ஆக பதவியளித்ததாம். ஒரு சமயத்தில்
    அதன் முதலாளி (இவர் இன்றைய ரணில் விக்ரமசிங்கேவின் தகப்பனார்) கல்வித்துறை சம்பந்தமாக ஒரு தகவலைத் தெரிவித்து, அதன் மேல் விவரங்களைத் திரட்டிக் கட்டுரை எழுதச் சொன்னாராம். ஏ.ஜே.வும் அத்தகவலை ஒட்டி தன் வழியில் விவரங்களைத் தேடிப் போயிருக்கிறார். ஆனால், அரசாங்கத் தகவல்கள் முற்றிலும் வேறாக நல்லவிதமாக இருந்திருக்கிறது.

    பின்னொருநாள் கட்டுரை பற்றி சேர்மன் கேட்க, மிக தைரியமாக, நேர்மையாக, "நீங்கள் குறிப்பிட்டபடி தவறுகள் ஏதும் கல்வித்துறையில் நடைபெறவில்லை. அதனை என் வழியில் நான் உறுதிசெய்துவிட்டேன். அதனால் நான் அந்தக் கட்டுரையை எழுதுவில்லை" என்றாராம்.

    மறுநாள் அலுவலகம் போனால், அவரை பாராளுமன்ற நிருபராக பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தாராம்.

    இரண்டொரு நாள்கள் அங்கேயும் போய்விட்டு, பின் சேர்மனுக்கு ஒரு கடிதம் அளித்தாராம். அதில், என்னை துணை ஆசிரியராகப் பணிக்கு அமர்த்தினீர்கள். பின்னர் என்னை features editorஆகவும் உயர்த்தினீர்கள். இப்போது என்னை நிருபராக மாற்றியுள்ளீர்கள். இது சரியெனப் படவில்லை. என்னை மீண்டும் துணை ஆசிரியராகவே மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியிருந்தாராம்.

    சேர்மன் கூப்பிட்டனுப்பினார். பேச்சினூடே, சேர்மன், "நாங்கள் சில கொள்கைகளை வைத்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பணம் செலவு செய்து பத்திரிகை நடத்துகிறோம். இதில் எங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதே முக்கியம். நீங்கள் கொஞ்சம் வளைந்துபோக வேண்டும். அப்படிச் செய்வதென்றால், துணை ஆசிரியராகத் தொடர்வது சாத்தியம். இயலாது என்றால், பாராளுமன்ற நிருபராக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்றாராம்.

    சற்றும் மனந்தளராத, ஏ.ஜே. கொஞ்சம் பொறுமை காத்துவிட்டு
    "மூன்றாவது வழி ஒன்று இருக்கிறது ஐயா"
    "என்ன அது"
    "நான் என் ராஜினாமாவைக் கொடுத்துவிடுகிறேன். அது ஒரு சாத்தியம் தானே"

    முப்பத்தைந்தாவது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்

    புதன், ஜூன் 09, 2004

    லீனா மணிமேகலை

    பெண்ணே நீ - Sify.com: 'அமெரிக்காவில் "எச்' விசாவில் இருப்பவர்கள், இந்தியாவுக்கு வந்து பெண்களைத் திருமணம் செய்து கொண்டு போகின்றனர். அப்போதுதான் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அமெரிக்காவில் கிடைக்கும். அங்கு சென்றவுடன் நமது பெண்களை வெளியுலகமே தெரியாத அளவுக்கு கூண்டுக்கிளியாக்கி வருகின்றனர். திருமண பந்தத்தைத் தொடரவும் முடியாமல், துண்டிக்கவும் வழியில்லாமல் நாளுக்கு நாள் இந்திய அபலைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. பாதிக்கப்பட்ட அமெரிக்கா வாழ் பெண்களின் துயர் துடைக்க பல சங்கங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களைப் பற்றியே ஒரு டாகுமெண்டரி எடுக்கலாம் என்ற எண்ணம்கூட ஏற்பட்டது. அவ்வளவு சோகம் ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் இருக்கிறது.'

    குமுதம் ஜங்ஷன்:
    "மக்களோட கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பதிவு செய்ற எத்னோகிராபிங்கிற செக்ஷன்ல என்னோட மாத்தம்மா படத்தைத் திரையிட்டாங்க. இண்டர்நேஷனல் கமாடடீஸ்'ங்கிற செக்ஷன்லதான் என்னோட பறை டாக்குமென்டரியை திரையிட்டாங்க. உலகம் முழுக்க பெண்களை எப்படி போகப் பொருளாகப் பார்க்கறாங்க, பல்வேறு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்படறாங்கன்னு அழுத்தமா சொல்ற படங்களை இந்த செக்ஷன்ல பார்த்தேன்."

    Belief without Facts: பத்துப் பாட்டு

    1. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
    நட்டார்கட் செய்தலிற் றீது.

    பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

    2. ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

    செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

    3. செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
    உற்றால் உறாஅ தவர்.


    நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?

    4. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.


    சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

    5. அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
    வல்லார்நட் பாய்ந்து கொளல்.


    தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.

    6. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது.


    இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

    7. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
    பாற்பட் டொழுகப் பெறின்.


    பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

    8. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
    அவையகத் தஞ்சா தவர்.


    அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

    9. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
    வியந்தான் விரைந்து கெடும்.


    மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

    10. இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
    கெடுக்குந் தகைமை யவர்.


    இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?

    நன்றி: திருக்குறள் - கலைஞர் உரை

    எஸ். வைத்தீஸ்வரனின் இணையத்து சுவர்கள்

    EXPECTATION: she is waiting for the call in the jungle



    நன்றி: Vaidheeswaran's Art Gallery

    இந்திரா பார்த்தசாரதி: ஆறாம்திணை.காம்

    தெ. மதுசூதனன் :

    எழுதிய முதல் நாவல் 'காலவெள்ளம்', இதில் அரசியல் அரங்கில் நிகழும் சதுரங்க விளையாட்டை நாவல் களத்துக்குள் கொண்டு வந்தார். குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திரபூமி ஆகிய நாவல்களும் அரசியல் சார்பு வகைப்பட்ட படைப்புகளாகவே வெளிவந்தன.

    இந்திரா பார்த்தசாரதியின் நாவல்கள் பலவும் நகர வாழ்வின் பாசாங்குகளை விமரிசிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இளம் வயதிலேயே டெல்லியில் இருக்க நேர்ந்ததால் நகரவாழ்வியல் மீதான மதிப்பீடுகள் விழுமியங்கள் குறித்த விசாரணையை தனது படைப்புகளில் வெளிப்படுத்தினார். டெல்லி வாழ்வில் பல கலாசார அதிர்ச்சிகளை சந்தித்தார். குறிப்பாக தமிழ் மத்தியதரக் குடும்பங்களில் உள்ள போலித்தன்மைகள் பாசங்குகள் இவரது படைப்பில் தனித்தன்மை பெற்றது. இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் உரையாடல்கள் மிகுந்து இருக்கும். பாத்திரங்கள் பெரும்பாலும் உரையாடல்கள் வழியே உருவாகும். உளவியல் சார் அணுகுமுறை இவரது எழுத்தில் முக்கியமாக இழையோடிக் கொண்டிருக்கும்.

    குருதிப்புனல் நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசும், இராமனுஜர் நாடகத்துக்காக சரஸ்வதி சம்மான் விருதும் பெற்றுள்ளார். 1991ல் சிறந்த இந்தியபடமாய் தேசிய விருது பெற்ற முதல் தமிழ் படமான 'மறுபக்கம்' படத்தின் கதை இந்திரா பார்த்தசாரதி எழுதிய உச்சிவெயில் என்ற குறுநாவலே. இ.பா. போலந்து நாட்டு வார்சா பல்கலைகழகத்திலும் சிலகாலம் பணியாற்றியவர். கணையாழி இதழின் கெளரவ ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் எழுதிய நாடகப்பிரதிகளில் ஒன்று 'ஓரளங்கசீப்'. சரித்திர நாடகம் சமகால அரசியலின் ஒத்திசைவைப் பெற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்.


    படைப்புகள்

    நாவல்கள்

    தந்திரபூமி
    சுதந்திரபூமி
    ஹெலிகாப்டர்களும் கீழே இறங்குகின்றன
    குருதிப்புனல்
    உச்சிவெயில்
    கிருஷ்ணா கிருஷ்ணா

    நாடகம்

    போர்வை போத்திய உடல்கள்
    மழை
    இறுதியாட்டம்
    கொங்கைத் தீ
    ஔரங்கசீப்
    இராமானுஜர்

    கட்டுரை

    தமிழ் இலக்கியத்தில் வைணவம்
    என்றுமுள்ள தமிழ்


    புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு